திருவில்லிபுத்தூர் இராசபாளையம் மதுரைச் சாலையில் இராசபாளையத்திலிருந்து 10கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கல்வெட்டுகளில் இவ்வூர் ‘மல்லிநாட்டுப் பிரம்மதேயம் திருவில்லிபுத்தூர்’ என்று அழைக்கப்படுகின்றது. 1200 ஆண்டுகளுக்கு முன்னரே திருவில்லிபுத்தூர் இருந்ததற்கான சான்றுகளைக் கல்வெட்டுகள் நமக்களிக்கின்றன.
திருவில்லிபுத்தூர் தோன்றிய வரலாற்றைச் செவிவழிச் செய்தியாகக் கூறிவருகின்றனர் மக்கள். ஏதோ ஒரு சாபத்தால் இருமுனிவர்கள் வேட்டுவர்களாகப் பிறக்கின்றார்கள். அவர்களில் ஒருவர் வில்லி என்ற பெயரிலும், மற்றொருவர் கண்டன் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டனர். ஒருநாள் இவ்விருவரும் வேட்டையாடச் சென்றனர். கண்டனை ஒரு புலி அடித்துக் கொன்று விடுகின்றது. இது தெரியாமல் வில்லி கண்டனைத் தேடி வருகின்றான். அலைந்து திரிந்த வில்லிக்கு களைப்பு மேலீட்டால் உறங்கிப் போகின்றான். அப்போது அவன் கனவில் இறைவன்; தோன்றி இவ்விடத்தில் ஒரு நகரை உருவாக்கச் சொன்னதால் வில்லி ஒரு புது நகரை உருவாக்கியதாக கூறப்படுகிறது. வில்லி உருவாக்கிய புதிய ஊர் ‘வில்லிப்புத்தூர்’ என்றழைக்கப்பட்டுப் பின்னர் ‘திரு’ எனும் அடைமொழியுடன் திருவில்லிபுத்தூர் ஆயிற்று என்பர்.
சூடிக் கொடுத்த நாச்சியார் எனும் கோதை அவதரித்த தலமாதலால் இவ்வூர் ‘கோதாபுரி’ என்றும் பெயர் பெற்றது. சமஸ்கிருதத்தில் இவ்வூர் ‘ஸ்ரீதனுசுபுரம்’ என்று அழைக்கப்படுகின்றது. பெருமாளின் 108 திவ்வியச் சேத்திரங்களில் திருவில்லிபுத்தூர் ஒன்றாகும். இவ்வூரின் வரலாற்றுக்குச் சான்றாக ஆண்டாள் கோயிலும், வடபத்ர சாயி கோயிலும் அமைந்துள்ளன.
திருவில்லிபுத்தூர் கோயில்களில் முற்காலப் பாண்டியர்கள், சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், வாணாதிராயர்கள், தென்காசிப் பாண்டியர்கள், நாயக்க மன்னர்கள், சேர மன்னர்கள் போன்றறோரின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அம்மன்னர்கள் கோயிலுக்கும், இவ்வூருக்கும் செய்த பல நற்பணிகளைப் பற்றி கல்வெட்டுகளின் வாயிலாக அறியமுடிகின்றது. கோயில் வளாகங்களில் புதுப்புது பகுதிகள் உருவாவதற்கும், சதுர்வேதி மங்கலங்கள் தோன்றுவதற்கும் இவர்கள் காரணமாய் இருந்தார்கள் என்று தெரிகின்றது.
வடபத்ரசாயி கோயிலிலுள்ள சோழன் தலைகொண்ட வீர பாண்டியனின் கல்வெட்டு காலத்தால் பழமையானதாகும். இக்கோயில் இறைவனை சலசயனத்துக்கிடந்தருளின பரமசுவாமி எனக் குறிப்பிடுகின்றது. இதே இறைவனை கி.பி.13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்று வடபெருங்கோயில் பள்ளிகொண்டருளின பெருமாள் எனக் குறிப்பிடுகின்றது.
வட்டெழுத்துக் கல்வெட்டொன்று புனல் வேலியைச் சேர்ந்த ஆண்மர் நாட்டுக் கிழவன் சங்கரன் மூறி அருளாக்கி என்பவன் பராங்குசப் புத்தூர் குளத்தின் வடபுறத்திலுள்ள மதகினைப் புதிதாகக் கட்டித் தானமாக வழங்கியுள்ளான் எனத் தெரிவிக்கிறது.
திருவில்லிபுத்தூர் மகாசபை கி.பி.960இல் பரமசுவாமிக்கு நிலத்தானம் வழங்கிய செய்தியினை ஒரு கல்வெட்டுத் தருகின்றது. முதலாம் குலோத்துங்கன் காலத்திலே சோழ நாட்டைச் சேர்ந்த ஒருவன் நொந்தா விளக்கெரிக்க ஆடுகளைத் தானமாக வழங்கிய செய்தியினைத் தெரிவிக்கின்றது.
முதலாம் குலோத்துங்கனின் கல்வெட்டொன்று ‘விக்கிரமச் சோழச் சதுர்வேதி மங்கலம்’ என்ற பிரம்மதேயம் உருவாக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றது. கி.பி.13-ஆம் நூற்றாண்டில் குலசேகரச் சதுர்வேதி மங்கலம் என்ற ஒரு சதுர்வேதிமங்கலம் உருவாக்கப்பட்டு அது 122 பங்குகளாகப் பிரிக்கப்பட்டு அந்தணர்களுக்கு கொடுக்கப்பட்டது.
முதலாம் சடையவர்மன் குலசேகரன் மற்றும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டுகள், இக்கோயிலில் விளக்கெரிப்பதற்காகவும் பூசைக்காகவும், மடப்பள்ளித் தேவைக்காகவும் நிலத்தானம் வழங்கப்பட்ட செய்தியைத் தெரிவிக்கின்றன.
முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கருநிலக்குடி நாட்டு மங்கலத்தில் தங்கியிருக்கும்போது கோயில் நிலங்களுக்கு வரிவிலக்களித்து ஆணையிட்டான் என்ற செய்தியை ஒரு கல்வெட்டு தெரிவிக்கின்றது. அத்துடன் இராமாயணம், மகாபாரதம் ஓதுவதற்காக ஒரு மண்டபம் பிற்காலப் பாண்டியர் காலத்தில் எழுப்பப்பட்டுள்ளது. கல்வெட்டுகளில் இக்கோயில் சூடிக்கொடுத்த நாச்சியார் கோயில் எனக் குறிப்பிடப்படுகிறது.
ஆண்டாள் – பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள், பெரியாழ்வார் தினந்தோறும் பூக்கள் சேகரித்து மாலை தொடுத்து இறைவனுக்கு வழங்குவதைக் கடமையாகக் கொண்டிருந்தார். அவ்வாறு நந்தவனம் சென்று பூக்கள் சேகரித்து வரும்போது அங்குள்ள துளசிச் செடியின் அருகில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைதான் ஆண்டாள். அக்குழந்தைக்குப் பெரியாழ்வார் இட்டபெயர் கோதை என்பதாகும். கோதை வளர்ந்து வரும் நாளில் பெரியாழ்வார் கட்டும் மாலைகளை அவரறியாது எடுத்துச் சென்று தான் சூடி கிணற்று நீரில் பார்த்து ரசித்து மகிழ்ந்த பின்னர் கோயிலுக்கு அம்மாலையை கொடுத்து வந்தாள்.
ஒருநாள் இதனைக் கண்ட பெரியாழ்வார் கோதையைத் திட்டி விட்டுப் புதிய மாலை புனைந்து இறைவனுக்குச் சூட்டினார். அன்றிரவில் பெரியாழ்வார் கனவில் தோன்றிய இறைவன் கோதை சூட்டிய மாலையையே தாம் விரும்புவதாகத் தெரிவித்தார். அப்போதே இக்குழந்தை சாதாரணக் குழந்தையன்று என்பதை உணர்ந்தார். அன்று முதல் கோதை சூட்டிய மாலையையே இறைவனுக்குச் சூட்டி வந்தனர். அதனால் ஆண்டாளுக்குச் ‘சூடிக்கொடுத்த நாச்சியார்’ என்ற பெயர் ஏற்பட்டது.
இந்நிகழ்வின் பின்னர் கோதை நாச்சியார் இறைவனிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிக் கொண்டார். இந்நினைவோடு திருவரங்கம் கோயில் பெருமாளைக் கண்டுவரக் கோயிலுக்குச் சென்றபின் மறைந்து விட்டதாக ஒரு கதை நிலவுகின்றது. ஆண்டாள் பூதேவியின் மறு அவதாரமாகக் கருதப்படுகின்றாள். ஆண்டாள் பாடிய பாடல்கள் திருப்பாவை என்றும், நாச்சியார் திருமொழி என்றும் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆண்டாள் கோயில் கருவறை, அரைமண்டபம், மாமண்டபம் என்ற அமைப்புடன் கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் சுந்தரத்தோளுடையான் வாணாதிராயன் என்பவனால் கட்டப்பட்டது. கருவறையில் உள்ள இறை உருவங்கள் ஆண்டாளும் ரங்க மன்னாரும் திருமணக் கோலத்தில் காட்சி தருகின்ற உருவச் சிலைகளாகும்.
மாமண்டபத்திலுள்ள வெளிக்குறடு மண்டபம் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. இம்மண்டபத்தில் ஆண்டாள் ரங்கமன்னார் ஆகியோர் செப்புத் திருமேனிகள் வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சலில் எழுந்தருளிவிக்கப்படுகின்றன. இம்மண்டபத்துத் தூண்களில் திருமலை நாயக்கர் அவர் சகோதரர் முத்தியாலு நாயக்கர், ராணியரின் உருவங்கள் புடைப்புச் சிற்பமாக உருவாக்கப்பட்டுள்ளன, இவ்வுருவங்கள் தங்கமுலாம் பூசப்பட்ட செப்புத் தகடுகளால் போர்த்தப்பட்டுள்ளன. இம்மாமண்டபத்திலேயே மஞ்சனக் குறடும், கண்ணாடிக் கிணறும் காணப்படுகின்றன.
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கல்வெட்டுகள் கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட்ட நிலங்களைப் பற்றிய செய்திகளைத் தருகின்றன. திருமாலிருஞ்சோலை மாவலி வாணாதிராயன் கி.பி.1429-இல் வைகைக் கரையில் உள்ள விரகனூரில் திருவிடையாட்டமாக நிலங்கள் வழங்கியதை ஒரு கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.
சுந்தரத் தோளுடைய வாணாதிராயனுடைய தாய் ரங்கநாயகி என்பவள் மார்கழி மாதத்தில் இறைவியை ஊஞ்சலில் எழுந்தருளச் செய்வதற்காக சொக்கனேந்தல் என்ற சிற்றூரைத் தானமாக வழங்கியுள்ளாள். அச்சிற்றூர் சுந்தரத்தோள் நல்லூர் எனப் பெயர் மாற்றம் செய்யப்படு திருவிடையாட்டமாக வழங்கப்பட்டது. இத்தானத்தைத் தனது மனக்கவலை போக்குவதற்காக வழங்கியதைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றாள். இவளின் கணவன் ‘திருமாலிருஞ்சோலை நின்றருளின வாணாதிராயன்’ என்பவன் இக்கோயிலில் ஆடித்திருவிழா நடைபெறுவதற்காக ‘மாங்குடி’ என்னும் சிற்றூரைத் தானமாக வழங்கியதை ஒரு கல்வெட்டு தெரிவிக்கின்றது.
சோழ மண்டலத்தைச் சேர்ந்த, ‘கீழக்காட்டார் குலதீப மங்கலம்’ என்ற சிற்றூர் இறைவியினுடைய அடுக்களைப்புறமாக 1425-இல் தானம் வழங்கப்பட்டுள்ளது. கி.பி.1453-ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு, ‘முட்ட நாட்டுத் திருவரங்க நல்லூர்’ என்ற ஊர் இக்கோயிலுக்கு அடுக்களைப்புறமாக வழங்கப்பட்ட செய்தியைத் தெரிவிக்கின்றது.
சாளுவ மன்னன் நரசிம்ம உடையார் 1453-இல் தென்கரை வடகரை ஆகிய சிற்றூர்களில் இக்கோயில் நித்தியபூசைச் செலவிற்காக நில தானம் வழங்கியுள்ளார். 1455இல் பாகனூர்க் கூற்றத்திலுள்ள ஒரு சிற்றூர் இதேபோன்று அடுக்களைப் புறமாக வழங்கப்பட்டுள்ளது.
வடபெருங்கோயில் சுந்தர பாண்டியன் மண்டபத்தில் குலசேகரன் முத்துப்பந்தலில் வெம்பூர் உடையான் அரியணையில் இறைவன் அமர்ந்து நம்மாழ்வாரின் திருப்பாசுரங்களைக் கேட்டு மகிழ்வதற்காகத் தானம் வழங்கிய செய்தியை மற்றொரு கல்வெட்டு கூறுகின்றது.
விட்டலதேவ மகாராயர் காலத்திலும் சதாசிவராயர் காலத்திலும் இக்கோயிலுக்கென்று சில தானங்கள் வழங்கப்பட்டுள்ளன. வீரமார்த்தாண்டன் என்னும் திருவிதாங்கூர் மன்னன் தன்னுடைய பெயரில் ‘வீரமார்த்தாண்டன் சந்தி’ பூசைக்கு கி.பி.1533-இல் நிலத்தானங்கள் வழங்கியுள்ளான். செட்டிப்பள்ளம், பராந்தக நல்லூர் ஆகிய ஊர்களை வீரமார்த்தாண்டன் மடமான திருவேங்கடத்தான் மடத்திற்குத் தானம் வழங்கியுள்ளான். இத்தானத்தைக் கொண்டு தினசரி 33 அந்தணர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்றும் அக்கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.
தென்காசிப் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் வீரபாண்டியன் சந்தி, ஸ்ரீவல்லபன் சந்தி ஆகிய சிறப்பு வழிபாடுகள் தோற்றுவிக்கப்பட்டன. மன்னர்கள் தங்கள் பிறந்த நட்சத்திரத்தில் இப்பூஜைகளைச் செய்ய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இதற்காகக் காசுகளும், நிலங்களும் தானமாக வழங்கப்பட்டன. இக்காலகட்டத்தில் மேலெழுத்து, மண்டபக்கணக்கு, உள்காவல் போன்ற பணிகளுக்காக ஆட்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ஊதியமாக நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன.
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு இவ்வூரில் பகவதி விண்ணகர் ஆழ்வார், இடர்கெடுத்த பெருமாள் கோயில் ஆகிய இருகோயில்கள் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கின்றது.
இவ்வூரில் அமைந்துள்ள மற்றொரு கோயில் கிருஷ்ணன் கோயிலாகும். இது கருவறை, அரைமண்டபம், மாமண்டபம் என்ற அமைப்பினைக் கொண்டு விளங்குகின்றது. முறையான கட்டடக் கலையமைப்புடைய இக்கோயிலை ‘அழகன் பெருமாள் அதிவீரராமன்’ என்ற தென்காசிப் பாண்டியன் கி.பி.1571-இல் கட்டியுள்ளான். கருவறையில் ருக்மணி சத்யபாமாவுடன் கிருஷ்ணன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். கோயிலைக் கட்டிய மன்னன் இங்கு பூசை நடைபெறுவதற்காக ‘வேப்பன் குளம்’ என்ற சிற்றூரைத் தானமாக வழங்கியுள்ளான்.
வீரப்ப நாயக்கன் காலத்தில் கோயில் பணி செய்யும் சலவைத் தொழிலாளருக்கு சர்வமானியமாக நிலம் வழங்கிய செய்தியையும் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் திருவேங்கட சமுத்திரம் என்ற சிற்றூர் தானமாக வழங்கப்பட்ட செய்தியையும் தெரிவிக்கின்றன.