திரைப்படம்

உலகின் பல்வேறு மொழிகள் இருப்பினும், மக்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் உலக மொழி திரைப்படம். அது உள்ளத்தால் பேசி உணர்ச்சிகளால் உருவாகும் மொழி. அதனால் மக்களை தன் வயப்படுத்தும் திறன் திரைப்படத்திற்கு உண்டு.

 

திரைப்பட வரலாறு

ஒளிப்படம் எடுக்கும் முறையை 1830ம் ஆண்டு கண்டு பிடித்த பின்னர் எட்வார்டுமை பிரிட்ச் என்பவர் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றிபெற்றார். ஈஸ்ட்மென் என்பவர் படச்சுருள் உருவாக்கும் முறையை கண்டுபிடித்தார். எடிசன் பார்க்கும் படக் கருவியைக் கண்டுபிடித்தார்.

பிரான்சிஸ் சென்கின்சு என்ற அமெரிக்கர் 1894ல் ரிசமண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படத்தை எல்லோரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார். இவ்வியக்கப் படத்தில் நாட்டியம், கடல் அலைகள் கரையில் மோதுதல் முதலிய காட்சிகளைக் காண முடிந்தது. இவற்றைப் பல இடங்களில் படம் காட்டிக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினர். இவை ஊமைப் படங்களே.

பின் ஊமைப் படங்களைப் பேசும் படங்களாக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால் திரைப்படத்துறை மாபெரும் வளர்ச்சியை எட்டியது. படத்துக்குரிய கதையும் கதை மாந்தரும் தேர்வு செய்யப்பட்டனர். கதை, உரையாடல், பாடல் முதலியன தயார் செய்யப்பட்டன.

திரைப்பட நடிகர், நடிகையர், அவர்களுக்குத் தோழர், தோழியர், பணியாளர்கள் என பலர் தேர்வு செய்யப்பட்டனர்.நடிகர்கள் குரல் இசைவாக இல்லாவிடில் மற்றொருவர் குரல் தரும் முறை கொண்டு வரப்பட்டது.

நடிப்பாற்றலை எடுத்துக் கூறிச் சில நேரங்களில் தாமே நடித்தும் காட்சிகள் அமைத்தும் படம் முடியும் வரை உழைப்பவரை இயக்குநர் என்பர். அவருக்கு உதவியாகத் துணை இயக்குநர் பணியாற்றுவார். படம் எடுத்தலை படப் பிடிப்பு என்பர்.

திரைப்படத்துறையில் கதைப்படங்கள் மட்டுமின்றி; கருத்துப் படங்கள், செய்திப் படங்கள், விளக்கப்படங்கள், கல்விப் படங்கள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

 

கருத்துப்படம்

கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் வால்ட் டிஸ்னி என்னும் ஓவியர் ஆவார். ஒரே செயலைக் குறிக்கும் பல்லாயிரக் கணக்கான படங்களை வரைவார். ஒன்றுக்கொன்று சிறிது மாறுவனவாக இருக்கும். இப்படங்களை வரிசைப்படி அடுக்கி வைத்துவிட்டு மிக வேகமாக ஏடுகளைப் புரட்டினால் அவை வெவ்வேறு படங்களாகத் தோன்றாமல் ஒரே நிகழ்வாகத் தோன்றும்.

ஒவ்வொரு காட்சியிலும் வரும் விவரங்களையும், பின்னனியையும் தனித்தனியாக எழுதி ஒளிபுகும் செல்லுலாய்டு தகட்டில் தீட்டி, திரைப்படக் கருவியைக் கொண்டு இப்படங்களை படமாக்குவர். கதைக்கேற்ப ஒலிப்பதிவையும் செய்வர்.

படங்களுக்குப் பதிலாக பொம்மைகளைக் கொண்டும் படங்கள் தயார் செய்யப்படுகின்றன. இது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருப்பதால் குழந்தைகள் இதை மிகவும் விரும்புவர்.

 

செய்திப்படம்

உலகில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளை படமாக்கிக் காட்டுவது செய்திப்படம் ஆகும். செய்திப் படங்கள் வாயிலாக உலக நிகழ்வுகளை நாம் நம் இருப்பிடத்திலேயே காணலாம். திரைப்படம் எடுப்பதைவிட செய்திப்படம் எடுப்பது கடினமான பணியாகும்.

 

விளக்கப்படம்

ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கை முறையை விளக்கப்படம் மூலம் அறியலாம்.

 

கல்விப்படம்

கல்வி கற்பிப்பதற்கென உருவாக்கப்படும் படங்கள் கல்விப் படங்கள். வாழ்வில் நேரில் காணமுடியாத பல இடங்களையும் நேரில் பார்ப்பதைப் போலவே காட்டுவதற்கு கல்விப்படம் வழி செய்கிறது.

 

திரைப்படச்சுருள்

திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள் செல்லுலாய்டு என்னும் பொருளால் ஆனது. படம் எடுக்கப் பயன்படும் சுருள், எதிர்சுருள் எனப்படும். ஒலி, ஒளி பதிவுகளை தனித்தனி படச்சுருளில் அமைப்பர்.

 

படப்பிடிப்புக் கருவி

திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்யப் படப்பிடிப்புக் கருவி இன்றியமையாதது. இக்கருவியை உறுதியான பீடத்தில் பொருத்திவிடுவர். சிலர் படப்பிடிப்புக் கருவியை நகர்த்தும் வண்டியில் பொருத்துவதும் உண்டு.

இக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருளில் பதினாறு படங்கள் வீதம் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாக எடுக்கப்படும்.

 

ஒலிப்பதிவு

நடிகர்களின் நடிப்பையும், பாடும் பாடல்களையும் உரையாடல்களையும் ஒலிப்பதிவு செய்வர். உரையாடலில் எழும் ஒலி அலைகள் நுண்ணொலி பெருக்கி மூலம் மின் அதிர்வுகளாக்கப்படுகின்றன. மின் அதிர்வுகள் பெருக்கப்பட்டு ஒரு வகை விளக்கினுள் செலுத்தப்படுகின்றன. அம்மின்னோட்டத்திற்குத் தக்கவாறு விளக்கின் ஒளிமாறும். இவ்வொளி படச்சுருளின் விளிம்பிலுள்ள பகுதியில் விழுந்து ஒலிப்பாதையை தோற்றுவிக்கும்.

 

திரைப்படக் காட்சி

ஒளி ஒலிப்படக் கருவி திரையரங்குகளில் திரைப்படம் காட்டப் பயன்படுகிறது. இக்கருவியில் மேற்பக்கம் ஒன்றும், அடிப்பக்கம் ஒன்றுமாக இருவட்டமான பெட்டிகள் இருக்கும். காட்ட வேண்டிய படச்சுருளை மேல் பெட்டியில் பொருத்துவர். இக்கருவியில் பல பற்சக்கரங்களும், சக்கரங்களும் உண்டு.

படச்சுருளைப் பற்சக்கரங்களுக்கு இடையில் செலுத்திக் கீழே உள்ள பெட்டியில் மீண்டும் சுற்றிக் கொள்ளுமாறு செய்வர். படச்சுருள் பிரிந்து மீண்டும் சுருட்டிக் கொள்ளும். ஒளிமிகு விளக்குகளுக்கும் உருபெருக்கிகளுக்கும் இடையில் படம் வரும்.

முன்புறம் ஒரு மூடி இருக்கும். மூடிக்கு இரண்டு கைகள் நொடிக்கு பதினாறு முறை சுழலும். அதனால் கைகள் ஒளியை மறைக்கும். ஒளி மறைக்கும் போதெல்லாம் படச்சுருள் நழுவி அடுத்த படம் வந்து நிற்கும். அதற்குள் மூடி திறந்து விடுவதால் அப்படம் திரையில் விழும்.

திரைப்பட இயந்திரங்களில் நவீன தொழில் நுட்பங்களைக் கையாளுவதால் இத்துறை வளர்ச்சியும் செழுமையும் பெற்றுத் திகழ்கிறது.மக்களைத் தன்பால் ஈர்த்துக் கட்டிப்போடும் ஆற்றல் கொண்டது திரை உலகம். மக்களிடம் மிக எளிதில் சென்று சேரும் ஆற்றல் திரைப்பட ஊடகங்களுக்கு உண்டு. அதனால் இத்துறை மக்களிடம் பேரும் புகழும் பெற்றுத் திகழ்கிறது.