தி கால் குறும்படம் விமர்சனம்

தி கால் குறும்படம் மனித உணர்வுகளைப் பதம் பார்க்கும் ஆங்கில மொழிக் குறும்படம் ஆகும்.

இதன் இயக்குனர் ‘அம்மர் சோண்டர்பெர்க்‘ ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு இளம் திரைப்படத் தயாரிப்பாளர்.

2007 ஆம் ஆண்டில் அவர் தனது முதல் படத்திற்கான பரிசை வென்றார். அப்போதிருந்து அவரது படங்கள் பார்வையாளர்களிடையே உணர்ச்சிகளைத் தூண்டின.

அவரது குறிப்பிட்ட ஒரு குறும்படம் ‘ஒரு மகளிடமிருந்து கடிதம்’. இது சில நாட்களில் தயாரிக்கப்பட்டது ஒரு சாதனையாகும்.

இக்குறும்படம் சமூக ஊடகங்களில் பல மில்லியன் முறை பார்க்கப்பட்டு பகிரப்பட்டது.

அவரது ‘தி கால்’ திரைப்படம் அதன் வழியில் உணர்வுகளைத் தட்டி எழுப்புகிறது.

2016 ஆண்டு விழாக்களில் 18 விருதுகளைப் பெற்ற பெருமையுடையது இப்படம்.

உணர்வுகளின் வெளிப்பாடு

ராணுவத்தில் பணிபுரியும் ஆண், பெண் இருவரின் உள்ளம் சார்ந்த, பாசம், நேசம், அன்பு இவற்றின் தேவைகளுக்காக ஏங்கி அழுது புலம்பும் மன ஓட்டங்களை இப்படத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இன்னொரு பக்கம் ராணுவத்திற்குத் தன் மகளை அனுப்பிவிட்டு, தனிமையில் மகளின் ஆதரவு இல்லாமல், பாசத்திற்காக ஏங்கும் தந்தையின் எதிர்பார்ப்புகள் சொல்ல முடியாத சோகத்தையுடையவை.

உண்மையில் ராணுவம் என்பது, சாதாரண மக்களினால் கற்பனை செய்து பார்க்க முடியாத இறுக்கமான கூறுகளை, உடல் சார்ந்தும் மனம் சார்ந்தும் கொண்டு வருகிற, மாபெரும் அமைப்பு அல்லவா?

இராணுவத்தில் நினைத்தவுடன், பிற இடத்தில் வாழும் வாழ்வைப் பெறவே முடியாது. அங்கு மாபெரும் கட்டுப்பாடுகள் உண்டு. எனவே மனதை தூரத் தள்ளி வைத்து விட்டே ராணுவத்தில் ராணுவத்தினரால் பணியாற்ற முடிகிறது.

எந்நேரமும் இறப்பு வரலாம் என்கிற பதற்றமான சூழ்நிலையில், அன்புக்கு ஏங்கும் உள்ளங்கள் எத்தனை எத்தனையோ?

நம் குழந்தையைச் சென்று கொஞ்சி விட மாட்டோமா?

தன் தகப்பனாரின், தன் தாயாரின் மடியில் இருந்து உணவு சாப்பிட மாட்டோமா? என்று எத்தனை ஏக்கங்கள்.

தன் வீட்டின் சுவாசத்தை, தன் தோட்டத்தின் சுவாசத்தை, தன் வீட்டுச் செல்லப்பிராணிகளின் பாசத்தைப் பார்ப்போமா? என்று எத்தனை ஏக்கங்கள்.

உடன்பிறந்தாரின் சுவாசத்தை அனுபவிக்க அல்லது அவற்றைப் பெற இயங்கும் அந்த ராணுவத்தினரின் மனதை, உள்ளம் கசிந்து அவ்விடத்தில் யோசித்துப் பார்க்கின்றோம். மிகவும் கொடுமையான ஒன்று தான் அது.

குறும்படக் கதை

முதிய வயதை ஒட்டிய ஒருவர் ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து இருக்கிறார்.

அப்பொழுது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. ராணுவத்தில் பணிபுரியும் மகள்தான் அவரை அழைத்து இருக்கிறாள்.

அவள் தன் இளமைப் பருவத்தையும், அப்பா, அம்மாவின் அன்பை குறித்தும் கூறுமாறு தொலைபேசியில் கேட்கிறாள்.

அவள் கேட்கும் அன்பான அந்த நிகழ்வுகளைத் தொலைபேசி வழியாக, சந்தோஷத்தில் ஆரம்பித்து சோகமான கதைகளாக சொல்லி முடித்து வைக்கிறார்.

அக்கதைகளில், தனக்கும் மனைவிக்கும் நடந்த திருமணம், குழந்தை பெறல், பிறகு தாய் இறந்து போகத் தனிமையில் அன்போடு அந்தப் பெண் குழந்தையை பாசமாய் வளர்த்த‌து, அந்தக் காலங்களை நினைக்கிற பொழுது, அவரினுடைய கண்களும் உடலும் நடுங்குகிறது.

தழுதழுத்த குரலில் தன் மகளிடம் அந்தக் கதைகளை எல்லாம் கூறுகிறார்.

எதிர்முனையில் இருக்கின்ற மகள், போர்க்களத்தில், ராணுவ வீரராக இருக்கிறாள். அங்கு சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இறக்கப் போகிறோம் என்ற நிலையில் தன் தகப்பனாரிடம் அவரின் அன்பான சப்தத்தை அவரின் குரலை அவர் வழியாகத் தம் இளமைக் காலத்தைக் கேட்பதற்கு நினைக்கிறாள்.

அவளுடைய கடைசி ஆசையைக் கேட்டு முடிக்கும் தருவாயில், எங்கிருந்தோ வரும் துப்பாக்கிச் சத்தத்தில் அவள் இரையாகிப் போகிறாள். இதோடு இக்குறும்படம் முடிகிறது.

இரண்டு காட்சிகள் தான் இப்படத்தில். ஒன்று தகப்பனார் பெஞ்சில் அமர்ந்து தொலைபேசியில் பேசுகிற காட்சி.

இன்னொரு காட்சி, ராணுவத்தில் பதுங்கு குழியில் இருக்கிற மகள் உருக்கத்துடன் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டு பேசுகிற இன்னொரு காட்சி.

இதற்கு இடையில் மீட்டுருவாக்கம்.

இளமைப் பருவம், அப்பருவத்தில் நடந்தவை, சிறுசிறு காட்சிகளாக வந்து போகின்றன. சிறுசிறு காட்சிகளில் முழுக்கதையும் புரிந்துவிடுகிறது.

ஒரு அற்புதமான உணர்வு வெளிப்பாட்டுக் கதையாகக் கூறப்பட்டுள்ளது.

கதைக்கு அழகு- முகபாவங்கள், இன்பமான மகிழ்ச்சியையும், சோகமான துக்கத்தையும், அப்பா, மகள் இருவரிடத்திலும் வெளிக்கொண்டு வந்திருப்பது, அவர்கள் அவ்வளவு இயல்பாக நடித்து இருப்பது மிக மிக உன்னதமான படைப்பாகி விட்டிருக்கிறது.

மிகக் கூடுதலாக இக் குறும்படத்திற்கு வலிமை சேர்த்தது இசை.

சோகத்தை அந்த இசையால் நம் மனதில் ஆழமாக ஊன்றி விட்டு செல்கிறது. மகிழ்வையும் சோகத்தையும் இசையால் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல முடியும் என்பதற்கு உதாரணமான குறும்படம் இது.

வேறு எந்த இடைஞ்சலும் இல்லாமல் அற்புதமான அமைப்பில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மனம் சார்ந்த உள்ளப் போராட்டங்கள், ஒரு தந்தையின் பக்கமும், மகளின் பக்கமும் எவ்வாறெல்லாம் உள்ளக் கிளர்ச்சிகள், பாசத்திற்காக ஏங்கும் என்பதை இக்குறும்படம் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறது.

இயக்குனர் குறுகிய காட்சிகளில் நீண்ட வரலாறை புரிய வைத்திருப்பது அவரது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறது.

படக்குழு

தந்தை மற்றும் மகள் நடிகர்கள் – ஃபிராங்க் ஸ்டாக்கிள் & மைக்கேலா கிளமிங்கர்

இயக்குனர்/திரைக்கதை/தயாரிப்பாளர் – அம்மர் சோண்டர்பெர்க்

நிர்வாக தயாரிப்பாளர் – ஹன்னா ஜானன்

விமர்சனம் ஒன்று இவ்வாறு கூறுகிறது. ”மிகவும் அழகாக ஆழமான செய்தி மிகச் சரியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மண்ணில் போர் நடக்கிறது என்பதை அறிந்து என் இதயம் வலிக்கிறது. வாழ்க்கையும் தொடர்கிறது என்ற அறிவின் உறுதியால் நான் ஆறுதல் அடைகிறேன்”

இதன் மூலம் வாசகரின் ஏற்புக் கோட்பாடு தெரிகிறது.

தி கால் குறும்படம் பாருங்கள்

(குறும்படம் விரியும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@admin

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.