தி ப்ரெசண்ட் குறும்படம் (The Present) ஒரு சிறந்த கார்ட்டூன் படம்.
கலைப் படைப்பு சிலநேரம் ஏதோ ஒன்றை வெளிப்படுத்தத் தோன்றி, எதை எதையோப் பேசிவிடும் லாகவம் உள்ளது.
பார்ப்பவர் கோணங்களிலும் வேறொன்றைக் காட்டி வடிவம் கொள்ளும். அதைப் போன்ற பன்முகப்பொருள் வெளிப்பாடு கொண்ட கார்ட்டூன் குறும்படம் தான் தி ப்ரெசண்ட் .
இக்குறும்படம் உளவியல் பேசுகிறது; தத்துவம் பேசுகிறது; தன்னம்பிக்கை பேசுகிறது; அறவுரை பேசுகிறது; எதார்த்தம் பேசுகிறது; இப்படி நிறையவே பேசி இருக்கிறது.
இதுவரை, மிக நீண்ட பரிசுப் பட்டியலைப் பெற்ற குறும்படங்களில் முதல் 10 இடங்களில் இக்குறும்படமும் ஒன்றாக இருக்கிறது. படைப்பின் தரம் ஆழமான பொருள் உடையதாக இருப்பதால்அது சாத்தியமாகி இருக்கிறது.
வரைகலையின் நேர்த்தியும் வடிவங்களும், அதற்குள் ஒளிந்திருக்கும் முகபாவனையும், அதற்கு ஒத்து இசைக்கும் துரிதமான இசையும், குறியீடுகளும், வண்ண வெளிப்பாடுகளும், ஈடில்லா ஒன்றாக இக்குறும்படத்தை மாற்றி இருக்கின்றன.
குறும்படத்தின் கதை
குறும்படத்தில் மூன்று கதாபாத்திரங்கள் அவ்வளவுதான். தாய்,மகன், ஒரு நாய்க்குட்டி. 4.18 நிமிடங்களில் முடிந்து விடும் மிகப்பெரும் கதை.
ஒரு கோடிப் பார்வையாளர்களை நெருங்கும் சாதனை படைத்த பெருமை இப்படத்திற்கு உண்டு. 8,000 விமர்சனங்களைப் பெற்ற பெருமையும் இதற்கு உண்டு.
கால் ஊனமுற்ற பையன் அதிதீவிரமாக எந்த நேரமும் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கிறான்.
அவன் தாய் ஒரு பெட்டியைக் கொண்டுவந்து அவன் முன் வைத்து, ”இது உனக்குத்தான். பிரித்துப் பார்” என்கிறாள். அவன் அதைப் பிரித்துப் பார்க்கின்றான். ஒரு நாய்க்குட்டி அதற்குள் இருக்கிறது.
மிகுந்த ஆசையுடன் அதை வெளியில் எடுத்துக் கொஞ்சுகிறான். நன்கு அதோடு விளையாடிக் கவனிக்கும் பொழுது, அது ஒரு கால் இல்லாத ஊனமான நாய் குட்டியாக இருக்கிறது.
இதுவரை விளையாண்ட, தன்னைப் போலவே குறைபாடு உடைய அந்த நாயைப் பார்த்து அவன் வெறுக்கிறான். அவன் அந்த நாயைத் தூக்கி எறிகிறான்; அதிலிருந்து விலக மீண்டும் வீடியோ கேம் விளையாடுகிறான்.
நாய்க்குட்டி மீண்டும் மீண்டும் அவன் பக்கத்தில் ஓடி வந்து நிற்கிறது. ஆசையுடன் இவனைப் பார்க்கிறது.
ஆனால், இவனோ தன்னைப்போலவே அதுவும் இருக்கிறது என்பதனால் வெறுத்து, தன் ஒரு காலால் தள்ளி தள்ளி விடுகிறான்.
கொஞ்சநேரம் இப்படியாக நாய் விளையாண்டு கொண்டு இருக்கிறது.
தன்னம்பிக்கையோடு அந்த நாய்க்குட்டி ஒரு பந்தை மீண்டும் மீண்டும் எடுத்து வருவதையும், நடக்கிற பொழுது கீழே விழுந்து மீண்டும் எழுந்து நடக்க, அதனுடைய தன்னம்பிக்கையைப் பார்த்து, அவன் வீடியோ கேமில் இருந்து விலகி அந்த நாயைக் கவனிக்கத் தொடங்குகிறான்.
கொஞ்சம் கொஞ்சமாக அதன் மேல் பிரியம் ஏற்படுகிறது. அது செய்யும் சேட்டைகளை ரசிக்கிறான். பிறகு வீட்டின் கதவைத் திறந்து, அம்மாவிடம் கூறிவிட்டு பந்துடனும் அந்த நாயுடனும் மகிழ்ச்சியாய் வெளியே விளையாடச் செல்லுகிறான்.
கதையின் ஆழம்
தன் உடல் குறைபாட்டை மறக்க நினைக்கும் போது, அதே குறைபாட்டை உடைய பிற ஒன்றைக் காணும்போது மனித மனம் துயரத்தின் அடி ஆழத்தை சந்தித்ததைப் போல், பிற ஒன்றின் மீது வெறுப்பு ஏற்படுகிறது. இது உளவியல் ரீதியான தாக்கம்.
உடல் ஊனம் உடையவர்கள், குறைபாடு இல்லாதவர்கள் மூலம் இவ்வுலக நிகழ்வுகளில் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள நினைப்பர். அங்கு தனக்கு உதவ முடிந்தவர்களையே நெருக்கமாக உணர முடிகிறது அவர்களால்.
எல்லாரும் நிறைவாக இருக்கும் பொழுது, தனக்கு மட்டும் குறை உள்ளது எனக் குறைபாடு உள்ளவர்கள் நினைக்கும் போது, தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ளவும், யாரும் தன்னைப் பார்த்து இரக்கம் கொள்ளாதிருக்க வேண்டும் எனவும் அவர்கள் தூரமாகச் சென்று விடுவதையும், தனக்குத்தானே சுய விரக்தியடைந்து தண்டனை அளித்துக் கொள்வதையும் சமூகத்தில் பரவலாகப் பார்க்கின்றோம்.
இம்மனநிலை உடைய ஒரு சிறுவனின் மன ஓட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறது இக்குறும்படம்.
தன்னம்பிக்கை என்பது பிறரிடம் இருந்து இவர்களுக்குத் தேவை.
இதை உணர்ந்து பிறர் அணுகும் பொழுது, குறைபாடுகள் வாடாத வண்ணம் புத்துணர்ச்சி பெறுகின்றன. இதுவே மனிதாபிமானம். இதுவே உன்னதமான வாழ்க்கை.
நீ எதில் இருந்து விலக நினைக்கின்றாயோ, அது உன் கவனத்தை மையம் கொண்டிருக்கும். வேறு ஒன்றின் மேல் ஈடுபாடு எழுந்தால்தான் அது விலகும் எனும் தத்துவார்த்தக் கருத்தும் இக்குறும்படம் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
தி ப்ரெசண்ட் குறும்படம் 180 திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, உலக அளவில் 50க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றது.
விருதுகளின் விரிவான பட்டியலில் சில
- Int. அனிமேஷன் சினிமா மற்றும் காமிக்ஸ் கார்ட்டூன் கிளப் விழா – கார்ட்டூன் கிட்ஸ் விருது
- Flickers Rhode Island International Film Festival – Grand Prize சிறந்த அனிமேஷன்
- FESA – குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படம்
- அனிமேகோ விருது – சிறந்த குறும்படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டது
- Int. மாணவர் திரைப்பட விழா பிசெக் – சிறப்பு நடுவர் விருது
- அனிமலாடா – சிறந்த குறும்பட அனிமேஷன் திரைப்படம் 2014, ஜூரி விருது
- அனிம் ஆர்டே – மாக்ஸி இரண்டாம் இடம்: பார்வையாளர் விருது
- 15 குறும்பட விழா – ஜூரி விருது சிறந்த அனிமேஷன்
- PISAF – பார்வையாளர்கள் பரிசு (சர்வதேசம்)
- சர்வதேச குடும்ப திரைப்பட விழா – சிறந்த வெளிநாட்டு குறும்பட அனிமேஷன்
- Enfoque, Int. புவேர்ட்டோ ரிக்கோ திரைப்பட விழா – சிறந்த அனிமேஷன் மற்றும் ஆடியன்ஸ் சாய்ஸ் விருது
- Filmschau Baden Wuerttemberg – சிறந்த அனிமேஷன்
குறும்படம் குறித்த சிறந்த விமர்சனம்
”உங்களுக்கு என்ன தவறு இருக்கிறது என்று உங்களுக்கு ஏதாவது நினைவூட்டப்பட்டால், நீங்கள் அதை உடனடியாக விரும்பவில்லை. உங்கள் குறை எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை இந்த அனிமேஷன் எனக்குக் கற்பிக்கிறது. ஏனென்றால் நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அது ஒரு தடையாக இருக்கக்கூடாது. நம் குறைகளை அனைவரும் ஏற்றுக்கொள்வோம்.”
குறும்படக் குழு
ஜேக்கப் ஃப்ரே – இயக்குனர், திரைக்கதை, அனிமேசன்
டோபியாஸ் பிர்கர்- இசை
தி ப்ரெசண்ட் குறும்படம் பாருங்கள்
(குறும்படம் விரியும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com