கனத்தை நுனியில் சுமந்து
கணப்பொழுதில் மாயும் வாமனனே
மாயமாய் மாயும் மாலைப் பொழுதில்
கூடலின் தொடக்கம் வரை உந்தன் தேடலே…
தலைக்கனத்தோடு தறிகெட்டு அலையும்
மனிதர்க்கு உந்தன் தலைக்கனமே சிறந்த பாடம்
காயும் கதிரவனும் சாயும் வேளையில்
கனல் பிளம்பை கட்டுக்குள் வைக்கிறான்
நீயோ எப்பொழுதும்
நிறம் மாறா தீ பிளம்பே…
இருட்டில் இருப்பவருக்கு வெளிச்சம்
தரும் வழிகாட்டியே
உன்னை சிரச்சேதம் செய்யும்
மானிடர்கள் இங்கு ஏராளம்
இறைக்கு தீபமேற்றுவதானாலும்
இறந்த சடலத்திற்கு தீ
மூட்டுவதானாலும் உந்தன் இசைவின்றியே
உன்னை மாய்த்து விடுகிறோம்
உரசினால் உருகுலைந்து விடுவாய் என்ற
சித்தாந்தத்தை உரைத்த மரப்பாச்சியே
உதவி என்றதும் தனது உயிரையே
கொடுக்கும் உயரிய குணாளனே…
நலமிலா கடுந்தீமைக்கும் நீயே உவமை
நலம் பயக்கும் நன்மைக்கும் நீதான் உவமை
இருளகற்றும் ஒளியாய்…
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
6374836353
நல்ல படிமக் கவிதை வாழ்த்துக்கள்