அதிகாலை வேளையில் சேவல் கூவியது. தன்னுடைய வீட்டிலிருந்து கிளம்பி டீக்கடையை நோக்கி புறப்பட்டார் செல்லையா.
டீக்கடையில் வந்து வழக்கமாக உட்காரும் இடத்தில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் பேப்பர்காரர் அங்கே வந்தார்.
“அண்ணா இந்தாங்க பேப்பர்” என்று டீக்கடைக்காரரிடம் பேப்பரை கொடுத்து விட்டு சென்றார்.
“சாமி அந்த பேப்பரை தாரீங்களா? இன்னைக்கு செய்தி என்னன்னு பாத்துட்டு தாரேன்”
“பேப்பர் எல்லாம் நீ தொட்டு ஒன்னும் படிக்க வேணாம்! இரு வானொலியில் செய்தி சொல்லுவான்! அதை மட்டும் கேளு! அது போதும் உனக்கு!”
டீக்கடையில் அதிகாலை வேளையில் வானொலியில் செய்தி கூறப்பட்டு கொண்டிருந்தது. அதை செல்லையா அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.
“ஒரு டீ கொடுங்க சாமி!”
“உன்னோட டம்ளரை எடுத்துட்டு வாடா செல்லையா!”
“இந்தாங்க ஐயா!”
டீ டம்ளர் கழுவும் இடத்தில் தன்னுடைய டம்ளரை வைத்தார் பிறகு அந்த டம்ளரில் டீ ஊற்றியதும் “ரெண்டு வடை எடுத்துக்கிறேன் சாமி” என்று சொன்னபடியே வடை இருக்கும் தட்டை நோக்கி வடையை எடுக்க கையை நீட்டினார்.
“டேய் இருடா! இருடா! நான் எடுத்து தரேன் டா! நீ எடுத்தா தீட்டு பட்டுடும்ன்னு சொல்லி ஊர்காரங்க வடையே சாப்பிட மாட்டாங்கடா!”
“சரிங்க சாமி” என்று கூறிவிட்டு ஒதுங்கி நின்றார்.
இரண்டு வடையை எடுத்து தட்டு இருக்கும் இடத்தை விட்டு கொஞ்சம் தள்ளி கீழே வைத்துவிட்டு மற்றவர்களுக்கு டீ போட சென்று விட்டார் ராமநாதன்.
அந்த இரண்டு வடையை எடுத்து சாப்பிட்டு விட்டு வீட்டை நோக்கி புறப்பட்டார் செல்லையா.
காட்டு வேலை கழனி வேலை என்று எந்த வேலை கிடைக்குமோ அதனை செய்து கொண்டு அதில் கிடைக்கும் வருவாய் மூலம் தன்னுடைய குடும்பத்தை நடத்தி வந்தார். அன்று அவருக்கு வேலை இல்லை!
அன்றைய பொழுது அவருக்கு கழிந்து விட்டது.
மறுநாள் காலையில் எழுந்து முகம், கை, கால் கழுவிக் கொண்டிருந்தார்.
வீட்டின் வெளியே “செல்லையா! செல்லையா!” என்று குரல் ஒலித்தது.
“என்னங்க ஐயா! சொல்லுங்க இப்ப வந்திருக்கீங்க?”
“நம்ம டீக்கடை ராமநாதன் மாரடைப்பால் நேத்து நைட்டு இறந்து போயிட்டாரு! இன்னைக்கு சாயங்காலம் அவரை எரிக்கணும் ஆக வேண்டிய வேலையை பாருயா!” என்று கூறினார் வந்தவர்.
“நேத்துதான் கடையில பார்த்தேன். நல்லா தான் இருந்தாரு! திடீர்னு இறந்து போயிட்டாருன்னு சொல்லுறீங்களே! ரொம்ப கஷ்டமா இருக்கு சாமி”
“என்னையா பண்றது எல்லாம் தலைவிதி!”
“சரிங்கய்யா ஒரு மூட்டை வரட்டி, மூணு கட்டு விறகு, 10 கிலோ சீனி, அஞ்சு லிட்டர் மண்ணெண்ணெய் கொஞ்சம் ரெடி பண்ணி கொடுங்க ஐயா!”
“எல்லா ரெடியா இருக்கும். நீ ஆக வேண்டிய வேலையை பாருயா” என்று சொல்லிவிட்டு சென்றார் வந்தவர்.
மாலை நேரம் பொழுது சாய்ந்தது. சுடுகாட்டில் செல்லையா காத்துக் கொண்டிருந்தார்.
மேளதாளங்களோடு ராமநாதன் பல்லாக்கு சுடுகாட்டிற்கு கொண்டு வந்து இறக்கப்பட்டது. அவரை மெல்ல தூக்கி அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகில் கட்டின் மீது படுக்க வைத்தார்கள்.
பிறகு ராமநாதன் கழுத்தில் இருந்த மாலைகளை அகற்றி, அவர் கைகளில் உள்ள கட்டுகளையும் கால் கட்டுகளையும் நேராக நிமிர்த்தி வைத்து ஈம சடங்குகளை செல்லையா செய்ய ஆரம்பித்தார்.
ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசியை எடுத்து எல்லோரிடமும் கொடுத்தார். அதனை வாங்கி ராமநாதன் வாயில் அதை ஒவ்வொருவரும் போட்டார்கள்.
பிறகு ராமநாதன் மகன் கொள்ளி வைத்தான். செல்லையா அவரை தொட்டு கும்பிட்டு விட்டு எரித்துக் கொண்டிருந்தார்.
அருகில் உள்ள கண்மாயில் குளித்துவிட்டு ‘ராமநாதன் தீட்டு கழிந்து விட்டது’ என்று எண்ணிக்கொண்டு சென்றார்கள் அந்த நடமாடும் ஜடங்கள்.
பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) முதலாம் ஆண்டு
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
கைபேசி: 9361723667
மின்னஞ்சல்: sivakumarpandi049@gmail.com