தீபம் ஏற்றுதல் – ஒரு பார்வை

தீபம் ஏற்றுதல் என்பது இறைவழிபாட்டில் முக்கியமான பங்கு வகிக்கின்றது. காலையிலும் மாலையிலும் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பொதுவாக பெரியோர்கள் கூறுவார்கள்.

தீபமானது அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கிளியன் சட்டி என பல வடிவங்களில் ஏற்றப்படுகிறது.

ஏன் தீபம் ஏற்ற வேண்டும்? அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன? தீபம் ஏற்றும் முறை ஆகியவை பற்றிப் பார்ப்போம்.

 

ஏன் தீபம் ஏற்ற வேண்டும்?

இறைவன் உலகில் எங்கும் நீக்கமற நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின் வடிவில் நிறைந்திருக்கிறார். இவற்றுள் நெருப்பு என்னும் ஒளி வடிவிமே அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது.

அவ்வாறு ஞானத்தை வழங்கும் வடிவமான இறைவனை விளக்கு என்னும் தீபத்தினை ஏற்றி நாம் வழிபாடு செய்வது சாலச் சிறந்தது ஆகும். இதனையே புராணங்களும் இதிகாசங்களும்  வலியுறுத்துகின்றன.

தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான இலட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே தான் கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன.

 

தீபம் ஏற்றும் இடங்கள்

தீபமானது வீட்டில் பூஜை அறை, சமையலறை, துளசி மாடம், முற்றம் போன்றவற்றிலும், கோவில்கள், தொழில் நிறுவனங்கள், கல்விகூடங்கள் என எல்லா இடங்களிலும் ஏற்றப்படுகிறது. எல்லா செயல்களின் தொடக்கத்திலும் தீபம் ஏற்றப்பட்டே செயல்கள் ஆரம்பிக்கப்படுகின்றன.

 

தீபத்தை ஏற்ற உகந்த நேரம்

வீடுகளில் தீபத்தை காலையில் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது.

அதே போல் மாலையில் பிரதோச வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது சிறந்த பலன்களைக் கொடுக்கும்.

கோவில்களில் எந்த நேரமும் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம்.

 

தீபம் ஏற்றுவதற்கான விதிமுறைகள்

தீபம் ஏற்ற முதலில் விளக்கினை நன்கு துலக்கியோ அல்லது புதுவிளக்கையோ பயன்படுத்த வேண்டும்.

விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் இட்டு பூவினைச் சூட்ட வேண்டும். (அகல் விளக்காயின் வெளிப்புறத்தில் மஞ்சள் குங்குமம் இட்டு பூவினை விளக்கினைச் சுற்றி வைக்கவும்.)

நெய் அல்லது எண்ணெயை விளக்கில் ஊற்றும்போது விளக்கு நிறைய ஊற்ற வேண்டும். (அதாவது குளம் போல). அதன் பின்தான் திரி இடவேண்டும்.

நெய் அல்லது எண்ணெய் விளக்கில் எத்தனை திரிகள் போட்டுள்ளோமோ அத்தனையையும் ஏற்றிவிட வேண்டும்.

இரண்டு திரிகளை ஒன்றாகச் சேர்த்து முறுக்கி திரி இடவேண்டும். இவ்வாறு செய்வது வீட்டில் கணவன், மனைவி ஒற்றுமையைக் குறிப்பதாக ஆன்மீகப் பெரியோர்கள் கூறுகிறார்கள்.

திரியை நன்கு நெய்யிலோ, எண்ணெயிலோ நனைத்து பின் நுனியை கூராக்கி தீபம் ஏற்ற வேண்டும்.

 

தீபம் ஏற்றும் திசைகளும் அவற்றின் பலன்களும்

கிழக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் வாழ்வின் துன்பங்கள் நீங்கும். கிரக தோசம் நீங்கி லட்சுமி கடாட்சம் கிட்டும். வீடு இல்லாதவர்கள் வீடு வாங்குவார்கள்.

தென்கிழக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் குழந்தைகளுக்கு புத்தி கூர்மை உண்டாகும். குழந்தைகள் படிப்பில் கெட்டியாக விளங்குவர். இதற்கு தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றி அதன் புகையை குழந்தைக்கு நெற்றியில் இடவேண்டும். (தீபத்திரியின் மேல் சிறிது நேரம் கை வைத்திருந்தால் கையில் படும் புகை.)

தெற்கு: வீட்டில் இத்திசை நோக்கி தீபம் ஏற்றக் கூடாது. மரண பயம் உண்டாக்கும். வீட்டில் யாராவது இறந்து விட்டால் வசதி இல்லதவர்கள் கோவிலில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றி இறந்தவர்களுக்கு நல்ல அனுகிரகத்தைப் பெற்றுத் தரலாம்.

தென்மேற்கு: இத்திசையில் தீபம் ஏற்ற பெண்கள் மற்றும் ஆண்களால் வரும் துன்பம், கலகம் ஆகியன நீங்கும். திருமணத் தடங்கல்கள் நீங்கும்.

மேற்கு: இத்திசையில் தீபம் ஏற்ற பணத்தால் வந்த பகைமை வளராமல் தீரும். கடன் தொல்லை நீங்கும்.

வடமேற்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் சகோதர சகோதரி ஒற்றுமை நிலவும். குடும்பச் சண்டைகள் நீங்கும்.

வடக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் நல்ல காரியங்களில் வெற்றி பெறலாம். மாங்கல்யத்தைப் பேணி மதிக்காத பாவம் நீங்கும். திருமணம் கைகூடும்.

வடகிழக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் வீட்டின் தலைவர் வாழ்வில் உண்மையான கொடையாளியாக மாறுவார். அவரும் அவர்தம் பிள்ளைகளும் தம்மையும் அறியாமல் தானம் செய்வர்.

 

தீபம் ஏற்றும் முறை

ஒருமுகம் ஏற்றினால் நினைத்த செயல்கள் நடக்கும்.

இரண்டு முகங்கள் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கிட்டும்

மூன்று முகங்கள் ஏற்றினால் புத்திர தோசம் நீங்கும்.

நான்கு முகங்கள் ஏற்றினால் பசு, பூமி, செல்வம் ஆகியவை கிடைக்கும். சர்வ பீடை நிவர்த்தியாகும்.

ஐந்து முகங்கள் ஏற்றினால் சகல நன்மையும் ஐஸ்வரியமும் கிடைக்கும்.

 

தீபம் ஏற்றும் எண்ணெயின் பலன்கள்

நெய்யினால் தீபம் ஏற்றினால் சகல வித சம்பத்துக்களும் கைகூடும். செல்வம் பெருகும்.

நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும். நம்மை விட்டு எல்லா பீடைகளும் அகலும். நவகிரக தோச நிவர்த்தி தரும்.

எல்லா தெய்வ வழிபாடுகளுக்கும் நல்லெண்ணெய் ஏற்றது.

விளக்கு எண்ணெய் தீபம் ஏற்றினால் புகழ் கிடைக்கும்.

குலதெய்வத்தின் முழு அருள் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்ற வசீகரம் கூடும்.

இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்ற சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

வேப்பெண்ணை தீபம் ஏற்றினால் கணவன் மனைவி உறவு நலம் பெறும். மற்றவர்களின் உதவி கிடைக்கும்.

வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், நெய் மூன்றையும் சேர்த்து தீபம் ஏற்றி வழிபட மனதில் தெளிவும், உறுதியும் ஏற்படும். மேலும் இது குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்றது.

நெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என ஐந்து கூட்டு எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி வழிபட அம்மன் அருள் கிட்டும். மந்திர சக்தியையும் பெறலாம்.

கடலை எண்ணெய், பாமாயில், கடுகு எண்ணெய், காய்ச்சிய எண்ணெய், அசுத்தமான எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு தீபம் ஏற்றக் கூடாது.

 

தெய்வங்களுக்கு ஏற்ற தீப வழிபாடுகள்

விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவது நலம் பயக்கும்

திருமகளுக்கு பசு நெய் கொண்டு தீபம் ஏற்றி வழிபட சகல சம்பத்துகளும் கிடைக்கும்.

குலதெய்வத்திற்கு வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், நெய் மூன்றையும் சேர்த்து தீபம் ஏற்றி வழிபட குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும்.

அம்மனுக்கு நெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என ஐந்து கூட்டு எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி வழிபட அம்மனின் அருள் பார்வை கிட்டும்.

சிவன், முருகன், திருமால் உள்ளிட்ட ஏனைய தெய்வங்களுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது சாலச் சிறந்தது.

 

தீபம் ஏற்றப் பயன்படும் திரிகளின் வகைகளும் அவற்றின் பலன்களும்

தீபம் ஏற்ற புதிதாகவும், கெட்டியாகவும் உள்ள திரிகளைத் தேர்வு செய்யவும்.

தாமரைத் தண்டுத் திரி: தாமரை மலரின் தண்டுப் பகுதியை வெயிலில் காய வைத்து அதிலிருந்து திரியினைத் தயார் செய்து தீபம் ஏற்ற முன்வினைப் பாவங்கள் நீங்கும். நிலையான செல்வம் கிடைக்கும்.

பருத்தி பஞ்சு திரி: பொதுவாக பருத்திபஞ்சுதிரி கொண்டே தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இத்திரியினைப் பயன்படுத்தி விளக்கிட குடும்பம் சுபிட்சமாகும். நற்செயல்கள் நடக்கும்.

வாழைத்தண்டு நார் திரி: வாழைத்தண்டினை காயவைத்து அடித்து பஞ்சு போலாக்கி திரி தயார் செய்து தீபம் ஏற்றலாம். இது முன்னோர் சாபம், தெய்வக் குற்றங்கள் ஆகியவை நீங்கி சுபிட்ச வாழ்வு கிட்டும். மேலும் இது குடும்ப அமைதி, மனசாந்தி, குழந்தைப்பேறு ஆகியவற்றை நல்கும்.

வெள்ளருக்கம் பட்டைத் திரி: வெள்ளெருக்கம் பட்டையை ஊற வைத்து காய வைத்து அடித்து நாராக்கி திரியாகத் திரித்து தீபம் ஏற்றி வழிபட செல்வ வளம் ஏற்படும். பிள்ளைகளுக்கு நல்வாழ்வு கிடைக்கும்.

புதிய மஞ்சள் துணி திரி: புதிய மஞ்சள் நிற துணியை பன்னீரில் நனைத்து காயவைத்து திரியாக்கி தீபம் ஏற்றி வழிபட நோய்கள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை நிலவும். அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும்.

புதிய சிவப்பு துணி திரி: புதிய சிவப்பு நிற துணியை பன்னீரில் நனைத்து காயவைத்து திரியாக்கி தீபம் ஏற்றி வழிபட திருமணத்தடை நீங்கும். குழந்தைப்பேறு கிடைக்கும்.

புதிய வெள்ளை துணி திரி: புதிய வெள்ளை நிற துணியை பன்னீரில் நனைத்து காயவைத்து திரியாக்கி தீபம் ஏற்றி வழிபட அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.

 

தீபம் ஏற்றும் விளக்குகளின் தன்மைகள் மற்றும் அதன் பலன்கள்

மண்ணால் செய்யப்பட்ட விளக்கில் தீபம் ஏற்ற பீடைகள் விலகும்.

வெள்ளி விளக்கில் தீபம் ஏற்ற திருமகள் அருள் கிடைக்கும்.

வெண்கல விளக்கில் தீபம் ஏற்ற ஆரோக்கியம் உண்டாகும்.

இரும்பு விளக்கில் தீபம் ஏற்ற சனி கிரக தோசம் விலகும்.

பஞ்ச உலோக விளக்கில் தீபம் ஏற்ற தேவதை வசியம் உண்டாகும்.

 

தீபம் ஏற்றும் விளக்கினைத் துலக்கும் நாட்கள் மற்றும் அதற்குரிய பலன்கள்

விளக்கினை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்க வேண்டும்.

தீபம் ஏற்றும் விளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரை குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி தனயட்சணி குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கு துலக்கினால் இவள் வெளியேறிவிடுவாள்.

வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி சங்கநிதியட்சணி குடியிருக்கிறாள். எனவே வெள்ளிக்கிழமை விளக்கு துலக்குவதை தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு அன்று துலக்க கண் நோய் நீங்கும்.

திங்கள் அன்று துலக்கினால் மனஅமைதி, தீர்க்கமாக முடிவு எடுக்கும் பண்புகள் வளரும்.

வியாழன் அன்று துலக்க மனநிம்மதி கிடைக்கும்.

சனி அன்று துலக்க வீட்டிலும் பயணத்திலும் பாதுகாப்பு. இழந்த பொருள் திரும்பக் கிடைக்கும்.

 

தீபத்தினைத் தூண்டிவிடும் முறை

தீபம் ஏற்றியவுடன் தீபத்தில் முப்பெரும் தேவியர் வந்து விடுவர். ஆகையால் தீபத்தின் திரியினை தூண்டிவிட்டு பிரகாசமாக்கலாம். திரியின் கசடினை தட்டி விடக்கூடாது.

திரியின் சுடர் பிரகாசமாக இல்லை எனில் மற்றொரு திரியை விளக்கில் இட்டு தீபம் ஏற்றி ஏற்கனவே உள்ள திரியை எடுத்து விட வேண்டும்.

 

தீபத்தினை குளிர வைக்கும் (அணைக்கும் முறை)

தீபத்தினை தானாக அணைய விடக்கூடாது. தீபத்தினை குளிர வைக்கும் போது வாயால் ஊதவோ, கைகளால் விசிறவோ கூடாது. பூக்களால் அல்லது கல்கண்டினால் தீபத்தின் சுடரினை குளிர வைக்கலாம். குச்சியைக் கொண்டு திரியை விளக்கினுள் இழுத்து எண்ணெயில் அமிழ்த்தி குளிர வைக்கலாம்.

மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டு வாழ்வின் உன்னத நிலையை அடைவோம்.

– வ.முனீஸ்வரன்

 

One Reply to “தீபம் ஏற்றுதல் – ஒரு பார்வை”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.