தீபாவளி பரிசு – சிறுகதை

“இந்த தீபாவளி பரிசு எனக்கு என்னென்னு தெரியுமா?” என்றான் மணி.

“என்ன புதுசட்டை, வெடி இதெல்லாம் தானே. இதுல என்ன பிரமாதம் இருக்கு?” என்றான் கனி.

“தீபாவளிக்கு இன்னும் ஒருவாரம்தான இருக்கு. அதான் எங்கப்பா, நேத்தே புதுசட்டை, வெடி எல்லாம் வாங்கிட்டு வந்துட்டாங்களே. அத்தோட தீபாவளி விருந்துக்கு வெள்ளாடு ஒன்ன வாங்கனும்முன்னு எங்கப்பா சொன்னாங்களே.” என்றான் மணி கெத்தாக.

“முழு வெள்ளாட்டுக்கறி விருந்தா?” என்று வாயைப் பிளந்தான் கனி.

“ஆமாம். இப்ப நேரமாயிருச்சு. எங்கம்மா தேடுவாங்க. நாளைக்கு காலைல 10 மணிக்கு கிரிக்கெட் பேட், பால் எல்லாத்தையும் எடுத்திட்டு தம்பியோட இங்க வாரேன். நாம எல்லாரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவோம். நாளைக்கு எல்லாரும் வந்திரணும் சரியா? கனி கருப்பையும் கூட்டிட்டு வந்திரு.” என்றபடி அங்கிருந்து ஓடினான் மணி.

மணியும் கனியும் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் மைதானத்தில் விளையாடும் போது நண்பர்களான ஐந்தாம் வகுப்பு சிறுவர்கள்.

கருப்பு கனியின் வீட்டில் வளரும் வெள்ளாடு. கருப்பு பெயருக்கு ஏற்றாற்போல் உடல் முழுவதும் கருமையான பளபளக்கும் முடிகளால் மூடப்பட்டு இருந்தது. பள்ளியைத் தவிர கனி எங்கு சென்றாலும் கூடவே இருக்கும் இந்த கருப்பு.

கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடைப்பட்ட அந்த ஊரில் மணியின் வீடு கிழக்குப் பகுதியிலும், கனியின் வீடு தெற்குப் பகுதியிலும் இருந்தன. கருப்பு, கனி அவனுடைய வீட்டிற்கு அருகில் இருந்த நண்பர்கள் தான் முதலில் மைதானத்தில் விளையாண்டு வந்தனர்.

கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் மணியும் அவனுடைய தம்பியும் மைதானத்திற்கு விளையாட வந்து நாளடைவில் கனி, கருப்பு மற்றும் அவனுடைய நண்பர்களுடன் ஒன்றாகி விளையாடத் தொடங்கினர்.

மணி தீபாவளிக்கு புதுசட்டை, வெடி வாங்கியதாகக் கூறியது கனியின் ஆசையைத் தூண்டியது. ஆதலால் மணி மைதானத்தை விட்டுக் கிளம்பியதும் கனியும் வீட்டிற்கு ஓடினான். கருப்பும் அவன் பின்னாலே ஓடியது.


நேரே அம்மாவிடம் சென்று “யம்மா, மணியோட அப்பா தீபாவளிக்கு புதுச்சட்ட, வெடி எல்லாம் நேத்தே வாங்கிட்டாங்களாம். எனக்கு எப்ப புதுசட்டை, வெடின்னு தீபாவளி பரிசு வாங்கித் தருவ?” என்றான் கனி.

“வாங்குவோம்டா, கொரோனான்னு சொல்லி அப்பாவுக்கு இப்ப வேலயில்ல. வேணி வேற தீபாவளிக்கு கொலுசு வேணும்முன்னு கேட்டா” என்றாள் வெள்ளையம்மா எரிச்சலாக.

“யம்மா, எனக்கு எப்படியாச்சும் புதுசட்டை, வெடி இந்த தீபாவளிக்கு வாங்கித்தாம்மா.”

“சரிடா. கருப்ப எங்க? அதுக்கு கழனித் தண்ணியக் காட்டு?”

“மைதானத்தல இருந்து என்னோட பின்னாலதான ஓடி வந்தான். ஏய், கருப்பு” என்றபடி வெளியே வந்தான் கனி.

கருப்பு அதனுடைய கொட்டகையில் குண்டானில் இருந்த கழனித் தண்ணியைக் குடித்து கொண்டிருந்தது.

“இப்பதான‌ வயிறு முட்ட புல்ல மைதானத்துல தின்ன. அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு?” என்றபடி கனி செல்லமாகத் தட்டினான்.

கருப்பும் கழனித் தண்ணீரைக் குடித்தபடி கனியின் மேலே உரசியது.

அன்று இரவு வெள்ளையம்மா தனது கணவனிடம் “உங்களுக்கு இப்ப வேல வேற இல்ல. கொரோனாவுக்காக மூடின நான் வேல பாக்குற கம்பெனியும் இப்பதான் ஆரம்பிச்சிருக்கதால தீபாவளி போனஸ் கிடையாதுன்னு சொல்லிட்டாங்க. என்னோட சம்பளத்த வச்சுதான் குடும்பத்த ஓட்டணும். வேணி கொலுசு வேணும்முன்னு ரொம்ப நாளாக் கேட்டுக்கிட்டு இருக்கா. கனியும் தீபாவளிக்கு புதுச்சட்டை, வெடி வேணும்முன்னு கேக்குறான். என்ன செய்யுறதுன்னு தெரியல.” என்றாள்.

“கொஞ்சம் பொறு. வேற ஏதாச்சும் வழி இருக்கான்னு பாப்போம்” என்றார் கனியின் அப்பா.

அடுத்து வந்த நாட்களில் கனி தினமும் அம்மாவிடம் தீபாவளி பரிசு கேட்டுக் கொண்டே இருந்தான்.

தீபாவளிக்கு முதல் நாளுக்கு முந்தைய நாள் வெள்ளையம்மாள் கனியின் அப்பாவிடம் “எனக்கு ஒருயோசனை தோணுது. கருப்ப வித்துட்டு வர்ற காசுல தீபாவளிக்கு நம்ம எல்லாத்துக்கும் புதுசும், கனிக்கு வெடியும், வேணிக்கு கொலுசும் வாங்கிறலாமா?” என்றாள்.

“கனியும், கருப்பும் உறங்குர நேரத்தத்தவிர மத்த நேரங்கள்ல ஒருத்தர விட்டு ஒருத்தர் பிரியாம ஒன்னாவே இருக்காங்க. கருப்ப கனிகிட்ட இருந்து பிரிச்சிட்டா பய ரொம்பவும் வருத்தப்படுவானேன்னு யோசிக்கிறேன்.” என்றார்.

ஆனாலும் வெள்ளையம்மாள் கனியின் அப்பாவை சமாதானப்படுத்தி கருப்பை விற்றுவிட்டு தீபாவளிப் பண்டிகையை கொண்டாட முடிவெடுக்கச் செய்தாள்.

கனியின் அப்பா அன்றிரவு கனியிடம் தீபாவளி பரிசுக்காக கருப்பை விற்றுவிடப் போவதாகக் கூறினார். அதனைக் கேட்டதும் விழுந்து புரண்டு அழுதான். தனக்கு தீபாவளி பரிசு ஏதும் வேண்டாம் என்று கூறினான்.

ஆனால் அப்பா கருப்பினைக் கொடுப்பதற்காக பணம் வாங்கி விட்டதால் முடிவினை மாற்ற இயலாது என்றும், மறுநாள் காலையில் கருப்பை அழைத்துப் போக ஆட்கள் வருவதாகவும் கூறினார்.

கருப்பின் கொட்டகைக்குச் சென்று அதனைத் தடவிக் கொடுத்தான் கனி. நெற்றியில் முத்தமிட்டான். கருப்பினுடையே இருந்தான். நேரம் செல்லச் செல்ல கனிக்கு அயற்சியாக இருந்தது.

கொட்டகையில் இருந்த கல்லின் மீது அமர்ந்து கொண்டு சுவற்றில் சாய்ந்து உறங்கினான். அவன் ஆழ்ந்து உறங்கியதும் அப்பா அவனை வீட்டிற்குள் தூக்கிச் சென்று படுக்க வைத்தார்.

கனிக்கு திடீரென விழிப்பு தட்டியது. உடனே கருப்பின் கொட்டகைக்குச் சென்றான். பொழுது விடியவில்லை. கருப்பு குலையைத் தின்று கொண்டிருந்தது.

கொட்டகையின் கல்லில் அமர்ந்து கருப்பையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்பா கனியைப் பார்த்தும் பார்க்காதது போல் தெருக்குழாயில் தண்ணீரைப் பிடித்து தொட்டியில் நிரப்பிக் கொண்டிருந்தார்.

காலை ஏழு மணிக்கு அப்பா “வாங்க, வாங்க இங்கதான் கொட்டகையில கட்டிக் கிடக்கு.” என்று கூறுவது கேட்டு கனிக்கு சுயநினைவு வந்தது.

‘கருப்ப கூட்டிட்டுப் போக ஆளக வந்துட்டாங்க போல’ என்று எண்ணிக் கொண்டு எட்டிப் பார்த்தான்.

ஒரு பெரிய மனிதருடன் மணி நின்று கொண்டிருந்தான். மணியும் கனியைக் கவனித்து விட்டான்.

“கனி, இது உங்க வீடா?”

ஆமாம் என்பது போல் தலையசைத்து மலங்க விழித்தான் கனி.

மணிக்கு புரிந்தது தீபாவளி விருந்துக்காக கருப்பைத்தான் தன்னுடைய அப்பா விலைக்கு வாங்க வந்திருக்கிறார் என்று.

“அப்பா, மைதானத்துல எங்ககூட விளையாடுவான்னு சொல்லுவேன்ல கனி அவன்தான் இவன். இவங்க ஆட்டையா விலைக்கு வாங்கப் போறோம்?” என்று கேட்டான்.

“ஆமாம்ப்பா” என்றார் அப்பா.

“டேய், மணி கருப்ப அழைச்சிட்டுப் போயி விருந்து வச்சிராதிங்கடா” என்றான் கனி கெஞ்சலாக. கனியின் கண்களில் நீர் அருவியாகக் கொட்டியது.

“சின்ன பையன் சொல்றதெல்லாம் கண்டுக்காதீங்க. நீங்க அழைச்சிட்டுப் போங்க” என்றபடி கருப்பு கழுத்தின் கயற்றினை நீட்டினார் கனியின் அப்பா.

மணியின் அப்பா கனியையும் மணியையும் மாறி மாறிப் பார்த்தார். இருவரின் கண்களும் கருப்பை விட்டுவிடும்படி கெஞ்சுவதைக் கண்டார்.

கனியின் அப்பாவிடம் “மணி உங்க பையனையும், கருப்பையும் பத்தி நிறைய எங்கிட்ட சொல்லிருக்கான். கொரோனா லீவுல இந்தப் பசங்களோட பொழுதுபோக்கே கருப்புதான்னு எனக்குத் தெரியும். கருப்ப நீங்களே வச்சுக்கோங்க. கருப்புக்காக கொடுத்த காச இப்ப உடனே நீங்க திருப்பிக் கொடுக்க வேண்டாம். அந்த காச வைச்சு தீபாவளி பண்டிகையை சிறப்பா கொண்டாடுங்க. உங்களுக்கு வேல கிடைச்சதும் காச கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிக் கொடுங்க.” என்று கூறினார் மணியின் அப்பா.

உடனே கனியும் மணியும் கருப்பை சேர்த்துக் கட்டிக் கொண்டனர். கருப்பு நடப்பது ஏதும் அறியாமல் அவர்கள் இருவரையும் உரசியது.

வ.முனீஸ்வரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.