அப்பா,
உன் புகைபடத்தின் அருகே
ஏற்றி வைத்த ஊதுவத்தி
சாம்பல் உதிர்த்தது.
ரகசியமாய் நீ
ஊதித் தள்ளிய
சிகரெட்டின் வாக்குமூலம் அது!
புன்னகை
தற்கொலை செய்து கொள்ள
கயிற்று முனை சுருக்குகள்
காற்றோடு உலவின;
உன்
ஒவ்வொரு இழுப்புக்கும்
தன்னை இனப்பெருக்கம்
செய்து கொண்டு!
உனக்கான
பொட்டளவு கதகதப்பில்
தீப்பிடித்தது
அம்மாவின் பொட்டு!
உன் மரணத்தின்
சங்கு முழக்கங்களை,
ஓட்டையற்ற புல்லாங்குழலில்
வாசிக்க முற்பட்டாய்!
வட்ட வட்டமாய் எழும்பிய
புகைத் தொகுப்பு,
நிலவை மூடிய மேகமாய்
நுரையீரலோடு
சிறு ஒத்திகை பார்த்தது!
கடைக்கு கூட்டிச் சென்று
எனக்கு சாக்லேட்
உனக்கு சிகரெட் வாங்கினாய்;
இரண்டின் தன்மையும் ஒத்துப்போனது.
சொத்தை ஏற்பட்டது;
எனக்கு பற்கள் ;
உனக்கு நுரையீரல்!
அவசர… அவசரமாய்
ஊதி அணைத்து,
பின் என்னை
வாரி அணைத்து,
உதட்டோரமாய்
பிறக்கினற முத்தங்களில்,
மறையாத
சிகப்பு ஒளி,
கன்னங்களில்
சூடு வைக்கிறது.
சரியாய் அணைந்து விடாத
மிச்ச நுனியை,
முத்தத்தின் ஈரம் கொண்டு
சமன் செய்கிறாய்!
விட்டுவிட முடியாத
பழக்கத்தில்,
நீ விட்டது எங்களைத்தான்!
புகை போல்
நகர்ந்து மறைவதில்லை:
அன்புக்குரியோரின்
ஞாபகமும்….
ஞாபத்திற்குரிய
அன்பும்…..
சிதவி.பாலசுப்ரமணி
கைபேசி: 7448705850