தீ நுண்மி – கவிதை

செய்யா மாதவம் சகத்தினை யாளுதே
அய்யோ யெனுமொலி செவயினில் கேட்குதே
பொய்யோ இதுவென நினைக்கவும் தூண்டுதே
மெய்யின் நிலையென மெய்களும் காட்டுதே

ஓயாத ஓலங்கள் ஓய்வின்றி ஒலிக்குதே
ஆறாத வடுவாக அவனியில் தொடருதே
வையாத மானிடரே வையத்துள் இல்லையே
வைகுண்ட பயணங்கள் வழிநெடுக தொடருதே

தலைமுறை காணாத கொலைகளம் ஆனதே
மலையென சடலங்கள் தீயினுள் போனதே
வலையினுள் சிக்குண்ட கயலென நீளுதே
துளையிட்டு மீளவே மானுடம் துடிக்குதே

தாழிட்ட நெடுவாசல் திறவாமல் இருக்கவே
தஞ்சம் இருந்திடுவோம் அடைபட்ட அஞ்சுகமாய்
கொஞ்சம் காலங்கள் அடங்கியே இருந்தாலே
எஞ்சிய காலங்கள் நமதென் றாகிடுமே

க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
கைபேசி: 6374836353

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.