துக்க நிவாரண அஷ்டகம்

துக்க நிவாரண அஷ்டகம் என்பது நமது கவலைகள் நீங்க நாம் காமாட்சி அம்மனை நினைத்துப் பாடும் எட்டுப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.

மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே! 
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே! 
கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே! 
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி! 

கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்! தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்!
மானுறு விழியால் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி!

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே! 
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே! 
எங்குலத் தழைத்திட எழில்வடி வுடனே எழுந்தநல் துர்க்கையளே! 
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி!

தணதண தந்தண தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்!
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்!
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி!

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே! 
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்தநல் குமரியளே!
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற் சக்தியெனும் மாயே! 
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி!

எண்ணிய படிநீ யருளிட வருவாய் எங்குல தேவியளே!
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்!
கண்ணொளி யதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி!

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை யென்றுநீ சொல்லிடுவாய்!
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்! 
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி!

ஜெயஜெய பாலா சாமுண் டீஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி!
ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபர மேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி!
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீதேவி!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.