இணைய யுகத்திலும் விரும்பிப் படிக்கப்படுபவை துணுக்குகள்.
‘Light reading’ அம்சத்தின் ஒருபகுதியாக, ‘Titbits’ எனப்படும் துணுக்குகள், ஐம்பதுகளிலிருந்து வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவை.
மிகப்பெரிய ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் ஜோக்குகள் உடன் தகவல் துணுக்குகள் இடம்பெறும். இவற்றில் மேற்கோள்களும் வலம் வரும்.
துணுக்குகளைப் போலவே, புதுக்கவிதைகளும் துளிப்பாக்களும் வாசகர்களுக்கு விருந்தாகப் படைக்கப்பட்டன.
தமிழ்வாணன் அவர்கள், தமது கல்கண்டு இதழில் அதிக அளவில் துணுக்குகளை வெளியிட்டார்.
அதன் பின்னர் பொது அறிவு, நடப்பு செய்திகள் சார்ந்த துணுக்குகளைத் தாங்கி பிரத்தியேக துணுக்கு இதழ்களாக முத்தாரம், சூப்பர் நியூஸ் போன்ற இதழ்கள் வாசகர்களைக் கவர்ந்தன.
சிலர் துணுக்கு எழுத்தாளர் என்று அறியயப்பட்டனர். துணுக்கு எழுத்தாளர்கள் சங்கம் என்று ஒருஅமைப்பு இயங்கி வந்தது.
முந்தைய தலைமுறையினரைப் போலவே புதிய தலைமுறையினரும் டிஜிட்டல் தளங்களில் உலா வரும் சின்னஞ்சிறு செய்தித் துளிகளையே (titbits or bite sized) விரும்பி வாசிக்கின்றனர்.
வலையொளியில் சிறிய பதிவுகளே (shorts) அதிக அளவில் பார்க்கப்பட்டு பகிரப்படுகின்றன.
முந்தைய காலங்களில், துணுக்குகள் எழுதுபவர்கள், பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்து காத்திருக்க வேண்டும்.
சமூக வலைதளம் கோலோச்சும் காலத்தில் அத்தகைய நிலை இல்லை.
மற்றவர்களுக்குப் பயன் அளிக்கும் என்று ஒருவர் தாம் கருதும் தகவல் துளிகளை தம்முடைய சமூக வலைதளப் பக்கங்களில் இடுகைகளாகப் பதிவிடலாம்.
இணையதளங்களில் கொட்டிக் கிடக்கும் எண்ணற்ற தகவல்களால், எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் வேண்டிய தகவல்களைப் பெறலாம் என்பது இந்த சமகாலம் தரும் பொன்னான வாய்ப்பு.
மேலும், ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன் எடுக்கவும் கம்யூனிட்டிகளை உருவாக்கவும் வாய்ப்பு உள்ளதன் காரணமாக, வாசிப்பு அனுபவம் பரந்து பட்டதாக ஆகிறது.
முன் நிற்கும் சவால்: சமூக வலைத்தளங்களின் அதிக அளவிலான நோட்டிபிகேசன் ஆகியவை ஆழமான வாசிப்புக்குத் தடை ஏற்படுத்தி வேறு தளத்துக்கு செல்லும் நிலை உள்ளது.
இளையோர், அச்சு நூல்களை வாசிப்பதற்கும் நேரம் ஒதுக்கி, இணையதளத்தில் ஆக்கப்பூர்வமான, பயன் தரும் தகவல் துளிகளை சேகரித்து வாசித்து வருவதால், பகிர்ந்து வருவதால் வாசிப்பு மேம்படும்; வாழ்வும் மேம்படும்.
மதுரகவி சீனிவாசன்
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!