துர்நாற்றமில்லா காலுறை – அறிவியல் குறுங்கதை

எப்போதும் வெள்ளிக்கிழமை, இறுதி வகுப்பில் ‘நீதி போதனைகள்’ கற்பிக்கப்படும். அன்றைய வகுப்பில் ஆசிரியர் வேதிவாசன் ‘தூய்மை’ குறித்த தகவல்களை தனது மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருந்தார்.

குறிப்பாக ‘தூய்மையை அகத்திலும் புறத்திலும் கடைபிடிக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்திக் கொண்டிருந்தார்.

அகமாகிய உள்ளத்தை மாசுபடுத்துபவை எவை? மாசுக்களை நீக்கி மனதை தூய்மையாக வைத்துக் கொள்வது எப்படி? என்பது போன்ற வினாக்களுக்கு மெய்நூல்களில் கூறப்பட்டுள்ள கூற்றுகளை மேற்கோள்காட்டி விளக்கினார்.

மனத்தூய்மையின் அவசியத்தையும் அதனால் விளையும் நன்மைகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும் புறதூய்மையின் அவசியத்தை நவீன அறிவியல் காரணங்களைக் கொண்டு விவரித்தார்.

சுற்றுப்புறத் தூய்மை

குறிப்பாக ‘தன்னை மட்டும் அல்லாமல் தன்னை சுற்றியுள்ள சூழ்நிலையையும் தூய்மையாக வைத்து கொள்வது’ பற்றிய தகவல்களை தன்னுடைய மாணவர்களுக்கு எடுத்துக்  கூறினார்.

அப்போது தன்னுடைய மாணவப் பருவத்தில் ‘சுற்றுப்புறத் தூய்மை பேணிக் காக்கும் பணியில்  தான் ஈடுபட்டதை நினைவு கூர்ந்தார்.

குறிப்பாக தன் வசிப்பிடத்தை சூழ்ந்த பகுதிகளை தன் நண்பர்கள் குழுவோடு தூய்மைபடுத்தியதையும், அப்பணியை அங்கிருந்த சுற்றத்தார் வெகுவாக பாராட்டியதையும் சுருக்கமாக கூறினார்.

அவரது இளமைக் கால நினைவு கூறல் நிச்சயமாக தற்பொருமைக்காக அல்ல, அத்தகவலால் மாணவர்கள் சற்றேனும் ஊக்கம் அடைவர் என்பதே அவரது எண்ணமாக இருந்தது.

அதற்கேற்றார் போல, மாணவர்கள் பலரும், இன்றே தங்களது நண்பர்களோடு சேர்ந்து குழுவை அமைக்கப் போவதாகவும், வார விடுமுறை நாட்களில் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்வோம் என்றும் உறுதி கூ றினர்.

அவர்களுக்கு பாராட்டுதல்களை தெரிவித்த வேதிவாசன், மேற்படி ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அவசியம் தன்னை அணுகுமாறு மாணவர்களை கேட்டுக் கொண்டார்.

ஏறத்தாழ எல்லா மாணவர்களும் ஆசிரியர் வேதிவாசனின் சொற்களை உறுதியாக பிடித்துக்கொண்டனர். உற்சாகத்துடன் அந்த வார இறுதி வகுப்பு நிறைவடைந்தது.

மாணவர்கள் எல்லோரும் சென்றவுடன், தானும் வீட்டிற்கு புறப்பட்டார் வேதிவாசன்.

வழக்கம் போல் அரைமணி நேர பேருந்து பயணம் மற்றும் பத்து நிமிட நடைபயணத்திற்கு பின் தனது வீட்டை அடைந்தார் வேதிவாசன்.

உள்நுழைந்தவர் தனது காலணிகளை கழட்டிவிட்டு கால்களை கழுவிக் கொண்டிருக்க, அவரது தம்பியும் அப்போது வீட்டிற்குள் நுழைந்தார்.

பொதுவாக வேலை முடிந்து இரவு ஏழு மணியளவில்தான் அவரது தம்பி வீடு திரும்புவது வழக்கும். அன்றோ தம்பி விரைவாக வந்ததன் நிமித்தமாக‌ “என்னடா சீக்கிரமே வந்துட்ட?” எனக் கேட்டார் வேதிவாசன்.

அடையலை (shoes) கழட்டியவாரே, “நாளைக்கு நாங்க (அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்) எல்லோரும் சுற்றுலா போகிறோம். காலை நாலு மணிக்கு அலுவலகத்தில இருக்கனுமாம். அதான் இன்னிக்கு சீக்கிரம் விட்டுட்டாங்க. சுற்றுலாவிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யணுமே!”என்றான் தம்பி.

“ஊம்ம்ம்… நல்லது…. எங்கெல்லாம் போறீங்க?” என வேதிவாசன் கேட்டார்.

“முதல்ல கடற்கரைக்கு போகிறோம். அங்கு தூய்மை பணி செய்யவிருக்கிறோம். அங்கிருந்து பொருட்காட்சிக்கு போறோம். இறுதியா புத்தக கண்காட்சிக்கு போயிட்டு இரவு வீடு திரும்பிடுவோம்” என நாளைய அலுவல்களை மடமட வென தம்பி கூறினான்.

அதற்குள் காலணியையும் சுத்தம் செய்து தம்பியின் அருகில் வந்திருந்த வேதிவாசன் “சிறப்புடா!” என்றார்.

துர்நாற்றமில்லா காலுறை

அப்போது தம்பி தனது காலுறைகளை கழட்ட, ‘குபீர்’ என துர்நாற்றம் வீசியது. யாருக்குதான் அந்த கெட்ட‌ வாடை பிடிக்கும்? ஏறிட்டு தம்பியை ஒரு கணம் உற்றுப் பார்த்தார் வேதிவாசன்.

“காலுறைகளை துவைத்து எத்தனை நாட்கள் ஆனது?” என்று கேட்பது போல் இருந்தது அவரது பார்வை.

அதனை உணர்ந்த தம்பி, “அண்ணா, காலைல அவசர அவசரமா வேலைக்கு போனேன். துவைத்த காலுறைகள் எங்கு இருக்குன்னு கண்டுபிடிக்க முடியல! அதான் பழ‌சையே போட்டுக்கிட்டு போயிட்டேன்” என்றான்.

‘சரி’ என்றபடி இருவரும் வீட்டிற்குள்ளே நுழைந்தனர். அவர்கள் வந்ததை அறிந்த அவர்களது அம்மா உடனே தேநீர் தயாரிப்பதற்காக சமயலறைக்குள் நுழைந்தார்.

தொலைக்காட்சி பெட்டியை இயக்கிவிட்டு இருவரும் ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்தனர்.

விளம்பரம் ஒளிபரப்பாகி கொண்டிருந்த நிலையில், “இப்போது புதிய சில்வர் நானோ டெக்னாலஜியில்” என்ற சொற்றொடர் மட்டும் தம்பியின் கவனத்தை ஈர்த்தது.

என்ன நினைத்தான் என்று தெரியவில்லை! உடனே “அண்ணா, ஆடைகளில் நேனோ தொழிற்நுட்பம் பயன்படுகிறதா?” என்று கேட்டான் தம்பி.

“ம்ம்ம்…நன்றாகவே பயன்படுது! ஏன்?, காலுறைகளில்கூட நானோ தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது” என்றார் வேதிவாசன்.

“காலுறையில் நானோ தொழிற்நுட்பமா? எப்படி? அண்ணா!”என்றான் தம்பி.

“சொல்றேன். மூன்றுநாள் துவைக்காம பயன்படுத்திய காலுறையில் இருந்து துர்நாற்றம் வருதே! அதற்கு காரணம் நுண்ணுயிரிகள்தான்!” என்றார் வேதிவாசன்.

அதற்குள், “அண்ணா காலுறையை பயன்படுத்தி ஒருநாள்தான் ஆவுது!” என்றான் தம்பி.

அதற்கு வேதிவாசன் “ஓ… ஒரு நாளைக்கேவா! சரி, அந்த துர்நாற்றம் வீசாம இருக்கத்தான் சில்வர் நானோ துகள்களை காலுறையில சேர்க்குறாங்க.

அதாவது 55% பருத்தி, 30% சில்வர் நானோ துகள் மற்றும் 15% எலாஸ்டிக் ஆகியனவற்றை சேர்த்து காலுறைகள் தயாரிக்கப்பட்டிருக்கு.” என்றார்.

“சில்வர் நானோ துகள் எப்படி துர்நாற்றத்தை போக்குது? ஒரு வேளை துர்நாற்றத்தை அது உறிஞ்சிக்குமோ?” என்றான் தம்பி.

“இல்லடா துர்நாற்றத்திற்கு காரணமான நுண்ணியிரிகளை சில்வர் நானோ துகள் தாக்கி அழிச்சிடும். அதனாலதான் துர்நாற்றம் வராது” என்றார் வேதிவாசன்.

“எப்படிண்ணா, சில்வர் நானோ துகள் பாக்டீரியாவை அழிக்கும்?” என்றான் தம்பி.

“அதற்கான படிமுறைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க, உரிய கருவிகள் துணைக் கொண்டு! விளக்கமா சொல்றேன், ஒருதாளை எடு (வினை வழிமுறைகளை எழுதி விளக்குவதற்காக)” என்றார் வேதிவாசன்.

அதற்குள், “இருக்கட்டும்ணா, நுண்ணியிரிகளை அழிப்பதற்கு மட்டும்தான் நானோ   தொழில்நுட்பம் பயன்படுதா? அல்லது வேற‌ எதுக்காச்சும் பயன்படுதா?” என கேட்டான் தம்பி.

ஒரு புன்னகையுடன், “அழுக்கு மற்றும் நீர் ஒட்டாத ஆடைகள், எளிதில் தீ பிடிக்காத பாதுகாப்பு ஆடைகள், எளிதில் கிழியாத ஆடைகள் முதலியனவற்றை தயாரிப்பதற்கும் பலவகையான நானோபொருட்கள் பயன்படுது” என்றார் வேதிவாசன்.

அப்போது அம்மா இருவருக்கும் தேநீரை கொண்டு வந்து கொடுத்துவிட்டு, “இன்னிக்கு வீட்டை சுத்தம் செஞ்சிடுங்கப்பா” என்றார்.

இருவரும் பேச்சை நிறுத்திவிட்டு தேநீரை வாங்கி சுவைக்க தொடங்கினர். உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு வீட்டை சுத்தம் செய்யும் பணியை தொடங்குவதற்காக.

முனைவர்.ஆர்.சுரேஷ்

சென்னை, அலைபேசி: 9941091461

 

One Reply to “துர்நாற்றமில்லா காலுறை – அறிவியல் குறுங்கதை”

  1. அறிவியல் கதைக் கட்டுரைகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. நடுநிலைப் பள்ளி வரையிலான மாணவர்களுக்கு இவற்றைக் கொண்டு சேர்க்கும் வழிகளைக் கையாண்டால் மாணவச் செல்வங்களுக்கு உரியதாய் அமையும். முனைவர் சுரேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் -செல்லம்பாலா, சென்னை

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.