நாம் வேலை செய்யும் இடத்தில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும். அதனை துறவியின் நேர்மை என்ற இப்பர்மியக் கதை விளக்குகிறது. கதையை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
துறவி ஒருவர் பழத்தோட்டம் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் அந்த துறவியிடம் தோட்டத்தின் உரிமையாளர் “நீங்கள் நம் தோட்டத்தில் விளைந்த நன்கு சுவையான இரண்டு மாதுளம் பழங்களைப் பறித்துக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்.
துறவியும் இரண்டு மாதுளம் பழங்களைப் பறித்துக் கொண்டு வந்து கொடுத்தார். அப்பழங்களை உடைத்துப் பார்த்த போது அவை நன்கு சிவந்து பார்த்தவுடன் தின்ன தூண்டின.
ஆசையுடன் தோட்டத்தின் உரிமையாளர் அப்பழங்களைத் தின்று பார்த்த போது புளிப்பாக இருந்தன.
எனவே அவர் துறவியிடம் “இப்பழங்கள் பார்ப்பதற்கு நன்கு சிவந்து இருந்தாலும் புளிப்புச் சுவை கொண்டே இருக்கின்றன. நானோ இனிப்பான பழங்களைத்தான் உங்களிடம் கேட்டேன்.” என்று குறைபட்டுக் கொண்டார்.
உடனே துறவி சென்று மீண்டும் இரண்டு மாதுளம் பழங்களை பறித்துக் கொண்டு தந்தார். அப்பழங்களும் புளிப்பாகவே இருந்தன.
உடனே தோட்டத்தின் உரிமையாளர் மிகவும் கோபத்துடன் துறவியிடம் “ஐயா, சுவையான பழங்களை கொண்டு வந்து தரச் சொன்னால் நீங்கள் மறுபடியும் புளிப்பான பழங்களைக் கொண்டு வந்து தருகிறீர்களே.
என் தோட்டத்தில் புளிப்பானவை எவை?, இனிப்பானவை எவை என்று உங்களுக்குத் தெரியாதா?. பழங்களை நீங்கள் சுவைத்தது இல்லையா?” என்று கேட்டார்.
அதற்கு அத்துறவி “என்னை நீங்கள் தோட்டதை கவனித்துக் கொள்ளும் வேலைக்கே நியமித்துள்ளீர்கள். பழங்களை உண்டு அவற்றின் சுவையை அறிவதற்கு அல்ல. ஆதலால் தங்களின் அனுமதி இன்றி பழங்களின் சுவையை அறிவதற்காக அவற்றை உண்ண மாட்டேன்” என்று கூறினார்.
துறவியின் நேர்மை கண்டு வியந்த தோட்டத்தின் உரிமையாளர் “மாதுளம் பழங்களை உண்டு அவற்றின் சுவையை கண்டறிந்து பின் இனிப்பான பழங்களை பறித்து தாருங்கள்” என்று கூறினார். துறவியும் தோட்டத்தின் உரிமையாளர் கூறியபடி பழங்களை சுவைத்து நல்ல பழங்களை பறித்துக் கொடுத்தார்.
நாம் நம்மை நம்பி வேலை கொடுத்தவர்களுக்கு எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை இக்கதை உணர்த்துகிறது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!