துளசி பூஜையின் பலன் – ஜானகி எஸ்.ராஜ்

ஒரு சமயம் நாரதர் தேவலோகத்துக்குச் சென்றிருந்த போது பாரிஜாத புஷ்பம் ஒன்றை இந்திரனிடமிருந்து பெற்றார். அதை கிருஷ்ணனுக்குக் கொடுக்கலாம் எனத் துவாரகைக்கு கொண்டு வந்தார்.

கிருஷ்ணனைச் சந்தித்து மலரைச் சமர்ப்பித்து வணங்கினார். மகரிஷியிடமிருந்து சந்தோஷத்தோடு மலரைப் பெற்றுக் கொண்டார் கிருஷ்ணன்.

அப்போது அங்கே ருக்மணி வந்தாள். பகவான் திருக்கரத்தில் பாரிஜாத மலர் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.

“பிரபோ, தேவலோகத்து மலர் தங்களுக்கு எப்படி கிடைத்தது?” என்று கேட்டாள் ருக்மணி.

“ருக்மணி, நாரதர் தேவலோகம் போயிருந்தாராம். இந்திரன் அவருக்கு இதைக் கொடுத்தானாம். நமக்குக் கொடுக்க வேண்டும் என்று ஆசையோடு எடுத்து வந்து தந்திருக்கிறார்” என்றார் கிருஷ்ணன்.

“சுவாமி எனக்கு மலரைத் தாருங்கள்” என்று ருக்மணி ஆசையோடு கேட்கவே, அதை அவளுக்குக் கொடுத்து விட்டார் கிருஷ்ணன்.

இதையறிந்த சத்தியபாமாவுக்கு வருத்தம் ஏற்பட்டது. பாமாவின் வருத்தத்தையறிந்த கிருஷ்ணன் அவளைச் சமாதானப்படுத்தினார்.

“பாமா, ருக்மணி மலரைப் பார்த்து விட்டுக் கேட்டதால் கொடுத்துவிட்டேனே தவிர, அவளுக்கு என்று எடுத்துப் போய் கொடுக்கவில்லை. மலர் வேண்டும் என்கிற உன் ஆசையை நான் நிறைவேற்றுகிறேன். என்னுடன் புறப்படு. நாம் இருவரும் தேவலோகம் செல்வோம். இந்திரனிடமிருந்து பாரிஜாத விருட்சத்தையே உனக்கு வாங்கித் தருகிறேன்.” என்றார்.

சமாதானம் அடைந்த சத்தியபாமா கிருஷ்ணனுடன் தேவலோகம் புறப்பட்டாள்.

இருவரையும் ஒருங்கே கண்ட இந்திரன் பூரித்துப்போய் வரவேற்று உபசரித்தான்.

“பிரபோ, என்னைத் தேடிவர வேண்டுமா? சொல்லியிருந்தால் நானே வந்து உங்களைத் தரிசித்திருப்பேனே? நான் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுங்கள்” என்று பிரார்த்தித்தான்.

கிருஷ்ணர் விஷயத்தை எடுத்துரைத்ததும் “பிரபோ, தங்கள் விருப்பத்துக்கு ஆட்சேபணை சொல்வேனா? இப்போதே பாரிஜாத விருட்சத்தைக் கொண்டு போய்ச் சேர்க்கிறேன்” என்றான் இந்திரன்.

துவாரகையில் சத்தியபாமாவின் கிரஹத்தில் பாரிஜாத விருட்சம் வந்து சேர்ந்தது. ஆனந்தத்தில் மிதந்தாள் சத்தியபாமா.

ஒருநாள் நாரதர் சத்தியபாமாவின் இல்லத்திற்கு வரவே, அவரை மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, நமஸ்கரித்து கிருஷ்ணனுடைய அன்பு காரணமாக பாரிஜாத விருட்சத்தையே பெற்றதாகக் கூறினாள்.

நாரதர் அவளை நோக்கி “பாமா, இந்த பாக்கியம் உனக்குச் சாமானியத்தில் கிட்டியது என்று நினைக்கிறாயா? பூர்வ ஜென்மத்தில் நீ கார்த்திகை ஏகாதசி விரதம் இருந்தாய். அப்போது துளசி செடியை வைத்து, வளர்த்து பூஜித்து வந்தாய்.

அந்த பாக்கியமே உன்னை இப்பிறவியில் பகவானை அடையச் செய்தது. கார்த்திகை ஏகாதசி ஸ்ரீமந்நாராயணனுக்கு மிகவும் விசேஷமானது. ஏனெனில் அன்றுதான் பகவான் அவதரித்து அசுரனால் கவர்ந்து செல்லப்பட்ட வேதங்களை மீட்டு வந்தார்.

கார்த்திகை மாதத்தில் வரும் ஏகாதசி அன்று விரதம் இருப்பவருக்கு பகவானுடைய அனுக்கிரகம் விசேஷமாகக் கிட்டும். துளசிச் செடியை வளர்த்து பூஜித்து வந்தால் இந்தப் பிறவியில் பாரிஜாத விருட்சமே உன் கிரஹத்தில் இருக்கிறது.” என்றார்.

கணவனுடைய அன்பு என்றும் நிலைத்திருக்கத் துலாபாரம் போட்டு, ஒரு தட்டிலே பகவானை அமரச் செய்து மற்றொரு தட்டிலே தங்கம் முதலான ஆபரணங்களுடன் கிடைத்ததற்கரிய பாரிஜாத மலரையும் வைத்து நிறுத்தாள்.

பின்னர் அந்தப் பொருட்களை நாரதருடைய பாதங்களிலேயே சமர்ப்பித்து ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினாள்.

நாரதரும் சந்தோஷமடைந்து, அவள் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க ஆசீர்வதித்தார்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.