தூக்குமரம் குறும்படம் விமர்சனம் இந்த பதிவில் பார்ப்போம்.
தூக்குமரம் ஒரு சிறந்த குறும்படம்.
முதல் காட்சி
வாழ்வில் விரக்தி அடைந்து இறக்கும் எண்ணமுடன், தூக்குப்பட்டி என்னும் ஊரிலுள்ள தூக்குமரத்தில் தூக்குப் போட்டு இறக்க ஒருவர் வருகிறார்.
பெட்டிக்கடைக்காரர் ஒருவர், வந்தவரின் மனதைப் புரிந்து கொண்டு, தூக்குப் போட்டுக் கொள்ளக் கயிறை இலவசமாகத் தருகிறார். இதன் மூலம் அவரின் கடை பிரபலமாகி வியாபாரம் அதிகரிக்கும் எனக் கூறுகின்றார்.
இரண்டாம் காட்சி
தூக்குமரம் நோக்கிக் கயிறோடு வரும் இவரை, செல்பி எடுத்து ஸ்டேட்டஸ் போட்டு கொள்ளும் இளைஞர் ஒருவர், இறப்பதற்கு முன் உங்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளுகிறேன் என்று விதவிதமாக போட்டோ எடுத்துக் கொள்கிறார். இந்தப் புகைப்படங்கள் அவரைப் புகழின் உச்சத்திற்குக் கொண்டு செல்லப் போகிறது என்று அவர் கூறுகிறார்.
மூன்றாம் காட்சி
நாற்காலியைப் போட்டு மரக்கிளையில் கயிறைக் கட்டித் தூக்குப் போட்டுக் கொள்ள தயாராகிறார். இதை வேடிக்கை பார்க்கவும், போட்டோ எடுக்கவும் ஊர் மக்கள் திரண்டு வந்து வரிசை வரிசையாக அமர்கின்றனர்.
ஊர்த் தலைவரும் அவசரம் அவசரமாக வந்து தன் வேலையாள் கொண்டு வந்த நாற்காலியைப் போட்டு அமர்கிறார்.
யார் பார்த்தால் என்ன? இன்று எப்படியும் நாம் இறந்து விட வேண்டும் என்று, தூக்குப் போட்டுக் கொள்ள வந்தவர் நாற்காலியைத் தள்ளிவிட்டுச் சாகத் துணிகிறார்.
தூக்குக்கயிறு மாட்டிய அந்தப் பெரிய கிளை முறிந்து கீழே விழுகிறது. கழுத்தில் கயிறுடன் கீழே விழுந்த அவர் விரக்தியோடு எழுந்து நடக்க ஆரம்பிக்கிறார்.
ஊர்த் தலைவர் அவரைப் பார்த்துக் கூறும்போது “யாரையும் தூக்குப்போட்டுச் சாகவிடாது இந்த மரம். மனிதர்களை வாழ்வில் தூக்கி விடுவது தான் அதற்கு பழக்கம். அதனால தான் அதற்குப் பெயர் தூக்குமரம். கவலைப்படாம போங்க தம்பி. இனி உங்க வாழ்க்கையில எல்லாமே நல்லதாகவே நடக்கும்” என்பார்.
நான்காம் காட்சி
தூக்குப்பட்டி ஊருக்குள் இன்னொரு இளைஞர் விரக்தியாகி இறக்கும் எண்ணத்துடன் வருகிறார். அதே பெட்டிக்கடைக்காரரிடம் போய், தூக்குமரம் எங்கே இருக்கிறது? என்று விசாரிக்கிறார்.
குறும்படத்தின் கருத்து
மரம் கூட கருணையால் யாரையும் சாக விடாமல் தடுக்கிறது. மானிட இனம் உதவாமலா போய்விடும்? முன்னேற வழியைப் பார்க்காமல், இறக்க நினைப்பது முட்டாள்தனம் என்பதே தூக்குமரம் குறும்படம் நெத்தியடியாகச் சொல்லும் கருத்து.
சாகப் போகும் ஒருவனைக் கூடத் தன் கடையின் விளம்பரமாகப் பயன்படுத்திக் கொள்வதையும், செல்பி எடுக்க முனையும் வக்கிரத்தையும் இப்படம் கோபக் கனலோடு சுட்டிக் காட்டுகிறது.
குறும்படத்தில் உள்ள குறை
தூக்குப் போட்டுக்கொள்வது ஒரு மறைமுகமான செயல். ஆனால் அனைவர் முன்னிலையிலும் போட்டுக்கொள்ள முயற்சி செய்வதும், அதை ஊர்மக்கள் ஊக்குவிப்பதும், எதார்த்தமான ஒன்றாக அமையவில்லை.
”தூக்குமரம் – சமூகத்தைத் தாக்கும் மரம்”
(குறும்படம் விரியும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
மறுமொழி இடவும்