குயில் குப்பன் மக்கள் வசிக்கும் ஊர் பகுதிக்குச் சென்று தூங்கியவன் கன்று கடாக்கன்று என்ற பழமொழியையும் அதற்கான விளக்கத்தையும் கேட்டு திரும்பிக் கொண்டிருந்தது.
வழியில் தனது நண்பனான முயல் முத்தண்ணாவைப் பார்த்தது. “இன்று நான் நகர் பகுதியில் இரு மனிதர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்” என்றது.
“அவர்கள் இருவரும் பழமொழி ஒன்றையும் அதற்கான விளக்கத்தையும் விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்பழமொழியைப் பற்றி தான் இன்றைக்கு நம் கூட்டத்தில் கூறப் போகிறேன்” என்று குயில் குப்பன் கூறியது.
முயல் முத்தண்ணா “நம் காக்கை கருங்காலன் தாத்தாவிடம் பழமொழியைப் பற்றி நீ முதலில் கூற அனுமதி கேட்டு விடு” என்றது.
அதனைக் கேட்ட குயில் குப்பன் “இன்று மாலை கூட்டம் நடைபெறும் இடத்திற்கு முதலில் சென்று தாத்தா கருங்காலனிடம் விவரத்தைக் கூறி இன்று பழமொழி சொல்லும் வாய்ப்பை நான் பெறுவேன்” என்று கூறி விடை பெற்றது.
மாலையில் குயில் குப்பன் காக்கை கருங்காலனிடம் தனது அனுபவத்தைக் கூறி தனக்கு பழமொழி சொல்ல வாய்ப்பு தருமாறு கேட்டது.
கருங்காலனும் கூட்டத்திற்கு எல்லோரும் வந்ததும் எழுந்து “குயில் குப்பன் இன்று தான் கேட்ட பழமொழி பற்றி தனது அனுபவத்தை கூறுவான்” என்று கூறி அமர்ந்தது.
குயில் எழுந்து “தூங்கியவன் கன்று கடாக்கன்று” என்ற பழமொழியை நான் இன்று கேட்டறிந்தேன்.
இந்தப்பழமொழி உறக்கத்திற்கும் கன்றுக்கும் சம்மந்தம் இல்லாத வகையில் இருப்பது போல உள்ளது. இதற்கான சரியான விளக்கத்தை எளிதில் புரிந்து கொள்ளும்படி சிறு உதாரணம் மூலம் கூறுகிறேன்.
ஒரு ஊரில் இரு நண்பர்கள் இருந்தனர். இருவரிடமும் ஒவ்வொரு பசு இருந்தது. அவை இரண்டும் கன்று ஈனும் தருவாயில் இருந்தன.
அப்பொழுது விடிவதற்குள் எப்படியும் கன்று ஈன்றுவிடும் என்ற நிலையில் இரவு பொழுதை நான்கு பங்காக மாற்றி, ஒருவர் மாற்றி ஒருவர் விழித்து இருந்து பசுக்களை கண்காணிப்பது என அவர்களுக்குள் முடிவெடுத்துக் கொண்டனர்.
அதன்படி முதலில் ஒருவன் விழித்திருந்தான். மற்றொருவன் தூங்கினான். இவ்வாறாக இரு பங்கு இரவுப் பொழுது கழிந்தது. மூன்றாம் பங்கு பொழுதில் பசுக்கள் கன்றுகளை ஈன்றன.
தூங்கிக் கொண்டிருந்த மனிதனின் பசுவானது பெண் கன்றை ஈன்றது. விழித்திருந்தவனின் பசுவோ கடா (ஆண்) கன்றை ஈன்றது.
தனது பசு ஈன்ற கடாக்கன்றால் பயனேதும் இல்லை என்பதை உணர்ந்த விழித்திருந்தவன் நண்பனின் பசுவின் அருகில் கடாக்கன்றை விட்டுவிட்டு தன் பசுவின் அருகே பெண் கன்றை விட்டுவிட்டு நண்பனை எழுப்பினானாம்.
அதிலிருந்து தூங்கியவனின் கன்று கடாக்கன்று என்ற பழமொழி மக்களிடம் உலா வரலாயிற்று.
“நாம் விழிப்புடன் இருக்காவிட்டால் எளிதில் ஏமாற்றப்படலாம் என்பதை உணர வேண்டும்.” என்று குயில் குப்பன் கூறி முடிந்தது.
“இந்த பழமொழி குயில் இனத்துக்கு ஏற்றதுதான். குயில்கள் தமது முட்டைகளை காக்கையின் கூடுகளில் இடுவதுதானே வழக்கம்” என நரி நல்ல தம்பி கேலி செய்தது.
காக்கை கருங்காலன் “என் அருமைக் குழந்தைகளே குயில் குப்பன் கூறிய பழமொழியும் விளக்கமும் புரிந்தது தானே. நாளை உங்களில் இன்னொருவர் வந்து பழமொழி பற்றி கூறுங்கள். இப்பொழுது கலைந்து செல்லுங்கள்” என்று கூறியது.
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)