தூதுவேளை – மருத்துவ பயன்கள்

தூதுவேளை கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. இருமல், இரைப்பு போன்றவற்றைக் குணமாக்கும். தேரையர் காப்பியத்தில், “தூதுவேளையையுணத் தொக்கினிற் றொக்கிய வேதையா நோயெலா மெய்யைவிட்டகலுமே” என்று தூதுவேளையின் சிறப்பு கூறப்பட்டுள்ளது.

தூதுவேளை இலை கோழையகற்றும்; உடலைத் தேற்றும்; காமம் பெருக்கும்; உணவின் சுவையைக் கூட்டும். தூதுவேளை பூ, உடலை உரமாக்கும்; காமம் பெருக்கும். தூதுவேளை காய், கோழையகற்றும்; பசியைத் தூண்டும்; மலச்சிக்கலைப் போக்கும்.

தூதுவேளை பழம், மார்புச்சளி, மார்பு வலி, கோழை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். தூதுவேளை இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு மருந்துப் பொருளிலிருந்து புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளைத் தயாரிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தூதுவேளை வளைந்து படரும் ஏறுகொடி தாவரமாகும். படரும் வாய்ப்பு கிடைக்காத போது செடி போன்ற அமைப்பில் காணப்படும். சிறகாக உடைந்த முட்கள் கொண்ட இலைகள், ஊதா அல்லது அரிதாக வெள்ளை நிறப் பூக்கள் உருண்டையான பச்சைக் காய்கள் மற்றும் சிவப்பு நிறமான பழங்களைக் கொண்டது.

கத்தரிப்பூ நிறமான பூக்கள் மற்றும் இலை, தண்டுகளில் காணப்படும் வளைந்த முட்களைக் கொண்டு தூதுவேளையை எளிதில் அடையாளம் காணலாம். தூதுவேளை வயல் வெளிகளிலும், ஈரப்பாங்கான புதர்களிலும் பாழ்நிலங்களிலும் களிப்பான நிலப் பகுதிகளிலும் விரும்பி வளர்பவை.

தூதுவேளையின் வேர் முதல் பழம் வரை அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுபவை. தூதுவேளை இலை, பூ, காய் ஆகியவை மருத்துவத்தில் பெருமளவில் பயன்படுபவை. தூதுவளை, தூதுவளம், தூதளை, சிங்கவல்லி என்கிற முக்கியமான மாற்றுப் பெயர்களும் தூதுவேளைக்கு உண்டு. இது கற்ப மூலிகையாகும்.

இரைப்பு, இருமல் குணமாக ஒரு கைப்பிடி அளவு தூதுவேளை இலைகளை, 2 குவளை நீரில் போட்டு, ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி, வடிகட்டிக் குடித்துவர, இரைப்பு, இருமல் ஆகியன தீரும் அல்லது ஒரு கைப்பிடி இலைகளை, அதே அளவு பொடி செய்த வெங்காயத்துடன் சேர்த்து, நல்லெண்ணெயில் வதக்கி, துவையலாக்கிச் சாப்பிட வேண்டும். இதேபோன்று, மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு, பின்னர் மூன்று நாட்கள் விட்டு மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு 21 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிடலாம்.

தூதுவேளைக் காயை நெய்விட்டு வதக்கி, குழம்பு வைத்து, தொடர்ந்து சாப்பிட்டு வர மார்புச் சளியைக் கரைக்கும்.

ஒரு டம்ளர் நீருக்கு, 10 தூதுவேளை இலைகள் என்கிற அளவில் இட்டுக் காய்ச்சி, குடிநீராகச் செய்து, குடித்துவர சளியுடன் கூடிய இருமல் குணமாகும். தினமும் இரண்டு வேளைகள், 3 நாட்கள் சாப்பிட வேண்டும்.

தூதுவேளைக் காயை உலர்த்தி, தயிர், உப்பு ஆகியவற்றில் பதப்படுத்தி வைத்துக் கொண்டு, எண்ணெயில் வறுத்து, இரவில் மட்டும் சாப்பிட்டுவர மலச்சிக்கல் தீரும்.

தூதுவேளை இலை, காய், வற்றல் போன்றவற்றை நம் உணவில் ஏதாவது ஒரு வகையில் 48 நாட்கள் தொடர்ச்சியாக சாப்பிட்டுவர அரிப்பு நோய்கள் தீரும். இரவில் அதிகமாகக் கண் விழித்ததால் ஏற்படும் கண் எரிச்சலும் இதனைச் சாப்பிடுவதன் மூலம் குறைக்கலாம்.

அகத்தியர் குணமபாடம், இறுகிய மார்புச் சளியையும், தொடர்ச்சியான இருமலையும் அறவே நீக்கும் திறனை தூதுவேளை காய் கொண்டுள்ளது என்பதை உறுதி செய்கின்றது.
கபக்கட்டு கோழை கதித்ததிரி தோடம்
குபுக்கென் றெழும்புநீர்க் கோவை-கவுக்கென்
றழுத்துவிட முன்போம் அடர்தூது ளத்திற்
பழுத்துவிழும் காயையுண்டு பார்

தூதுவேளையைப் பற்றி இராமலிங்க வள்ளலார் கூறுவதைப் பார்ப்போம். அறிவை விளக்குவதற்கும், ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கும், சளியை அகற்றுவதற்கும் மிக முக்கியமான ஒரு தாவரமாகத் தூதுவேளை திகழ்கின்றது. உடல் அசதியை நீக்கும். தேகத்தை மிகவும் வலுவுள்ளதாக மாற்றும் என்பதால் நமது முன்னோர்கள் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் தந்துள்ளார்கள்.

ஆண்மை பெருக தூதுவேளைப்பூவை உலர்த்தி தூள் செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு ½ தேக்கரண்டி அளவு தினமும் காலையில் பாலுடன் சாப்பிட வேண்டும்.

தூதுவேளைத் துவையல்

தூதுவேளை இலைகளை சுத்தம் செய்து, முட்கள் நீக்கி, துவையலாகச் செய்து சாப்பிட்டு வரலாம். இது மிகவும் சுவையானது, கிராமப் பகுதிகளில் வெகுவாகப் பிரபலமானது. இந்தத் துவையலை சாப்பிட, இருமல், சளி, கோழைக்கட்டு, மூச்சுத் திணல் ஆகியன குணமாகும். மேலும், செரிமானத் தன்மையும் அதிகரிக்கும்.

வெள்ளைத் தூதுவேளை

இதற்கு சங்கத் தூதுவேளை என்கிற பெயரும் உண்டு. தோற்றத்தில் தூதுவேளையை ஒத்திருந்தாலும்,பூக்கள் தூய வெள்ளை நிறமானவை. இவை இயற்கையில் அதிகமாக வளர்வதில்லை.

சிதம்பரம், தஞ்சாவூர், திருவாரூர் போன்ற பகுதிகளில் மட்டும் காணப்படுவதாக‌ அறியப்பட்டுள்ளது. தூதுவேளையின் அனைத்து மருத்துவக் குணங்களும் இதற்கும் பொருந்தும். இது ஒரு காயகல்ப மூலிகை என்பதாக நமது மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் இலையைத் துவையல் செய்து சாப்பிட குரல் இனிமையாகும்.

Comments are closed.