தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம் நம் நெஞ்சைப் பிளக்கக் கூடியது. தம் சொந்த மண்ணில் சுற்றுப்புற சீர்கேடிற்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது தமிழக வரலாற்றில் ஒரு பெருந்துயரம்.

இத்தகைய ஒரு நிகழ்ச்சி இனி எப்போதும் தமிழகத்தில் நிகழக்கூடாது என அனைவரும் சிந்திக்க வேண்டும்; செயல்பட வேண்டும்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் தாமிர உருக்காலை நிறுவ முயற்சி செய்த நாளில் இருந்தே போராட்டம் தொடங்கியது. பல கட்டங்களில் நடைபெற்ற போராட்டம் இன்று மிக மோசமான ஒரு நிலையை அடைந்திருக்கின்றது.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஆதரவோ, சுட்டவர்களுக்கு ஆதரவோ இந்தக் கட்டுரை அல்ல. ஒரு முக்கியமான பிரச்சினையின் நடுநிலை வாதம் இது.

 

தொழிற்சாலைகள் தேவைதான்

நாட்டின் முன்னேற்றத்திற்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் தொழிற்சாலைகள் தேவைதான். ஆனால் சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்கும் தொழிற்சாலைகள் வேண்டுமா என்கின்ற கேள்வியும் நியாயமானதுதான்.

உலகிலேயே காற்று மாசுபாட்டில் முதலிடத்தில் இருப்பது இந்தியாதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

சில தொழிற்சாலைகளில் சுற்றுச்சூழல் சீர்கேடு என்பது தடுக்க முடியாதது என்பது உண்மைதான். எடுத்துக்காட்டாக அனல் மின் நிலையங்கள்.

இத்தகைய தொழிற்சாலைகளில் தேவையான மாசுக் கட்டுப்பாட்டுக் கருவிகள் நிறுவப்பட வேண்டும். தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் நீரோ காற்றோ முடிந்த வரையில் நன்கு சுத்தப்படுத்தப்பட்டு வெளிவிடப்பட வேண்டும்.

இந்த இடத்தில்தான் நிறைய நிறுவனங்கள் தவறு செய்கின்றன. காற்றையோ நீரையோ சுத்தம் செய்து வெளியே அனுப்புவது என்பது அதிக செலவு பிடிக்கும் செயல்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்றால் அதற்காக நிறைய மெனக்கெட வேண்டும். கூடவே அதனால் செலவு கூடி லாபமும் குறையும்.

எனவே நிறைய நிறுவனங்கள் உண்மையில் மாசுக் கட்டுப்பாடு செய்யாமல் வெறுமனே காகிதத்தில் மாசுக்கட்டுப்பாடு செய்வதாக எழுதி வைத்திருப்பார்கள்.

நீங்கள் பார்க்கலாம், நிறைய நிறுவனங்கள் இரவு நேரத்தில் புகையை வெளியே தள்ளும்; யாரும் அறியா வண்ணம் கழிவு நீரை ஆற்றில் கொட்டும்.

 

அரசு கண்டு கொள்வதில்லை

அரசுக்கு இதெல்லாம் தெரிந்தாலும் கண்டு கொள்வதில்லை. நூறு கோடிக்கும் மேலே மக்கள் தொகை உள்ள நாட்டில் அரசின் முதல் நோக்கம் எல்லோருக்கும் உணவு, வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை வசதிகள்.

சுற்றுச்சூழலைப் பாழ்படுத்துபவர்களே பல நூறு பேருக்கு வேலை கொடுக்கின்றார்கள் என்ற காரணத்திற்காக அரசு பெரும்பாலும் அவர்களைக் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் நமது நாட்டின் நதிகள் எல்லாம் செத்துக் கிடக்கின்றன.

ஆனால் இந்த நிலை இப்படியே தொடர முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

ஒரு நிறுவனத்தின் செயலால் சுற்றுச் சூழலும் மக்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டால் அவர்கள் அதற்கு எதிராகக் கொதித்து எழுவார்கள் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி ஒரு நிலை ஏற்படும்போது சட்டமும் அரசும் தன் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும், நீதிமன்றமும் பலவீனமாகவே உள்ளனர்.

ஒரு பிரச்சினையின்போது நடுவில் நின்று இருதரப்பு நிலையினையும் புரிந்து கொண்டு பிரச்சினையைத் தீர்த்து வைக்கின்ற நிலையில் இன்றைய பொதுவாழ்வில் ஆட்கள் இல்லை.

 

மக்கள் போராட்டம்

எந்தக் கட்சி அரசாக இருந்தாலும் சரி மக்களுக்கு அரசின் மீதும், சட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. வீதிக்கு வந்து போராடுவதே மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

நல்ல நோக்கங்களோடு ஆரம்பிக்கப்படும் போராட்டங்கள் ஒரு கட்டத்தில் வன்முறையை நோக்கி நகர ஆரம்பித்து விடுகின்றன.

போராட்டக்காரர்களோடு சமூக விரோத சக்திகளும் கலந்து விடுகின்றன. நிதானமாக யோசிப்பது என்பது இல்லாமல் போய்விடுகின்றது.

சுற்றுச் சூழல் பிரச்சினை இப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆகிவிடுகின்றது.  உடனே காவலர் வன்முறையைப் பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர்.சுற்றுச் சூழல் பாதிப்பால் துயரப்படும் மக்கள் காவல்துறை நடவடிக்கைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

ஓட்டுக் கேட்பதற்காக ஓராயிரம் முறை நடந்தவர்களுக்கு அந்த ஊருக்கான பாதை மறந்து போகும். அறிக்கை விடுவதோடு அரசியல் தலைவர்கள் நின்று விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலைக்குத்தான் ஸ்டெர்லைட் விவகாரம் வந்து நிற்கிறது.

 

இப்போதைய தேவை

இங்கே இருந்து அடுத்து நகர்வது எப்படி?

முதலில் இத்தகைய பிரச்சினைகளை அரசு அமைதியாக இருந்து சமாளித்து விடலாம் என நம்புவது பிழையானது.

அரசு ஒருதலைப் பட்சமாகவும் செயல்படத் தேவையில்லை.

முதலில் பிரச்சினையின் உண்மைத் தன்மையை பொதுவெளியில் வைக்க வேண்டும்.

போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டுக்கள் உண்மைதானா என்பதைக் கண்டறிய வேண்டும்.

ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது என்பதும் அவை போதுமானவைதானா என்பதும் விவாதிக்கப்பட வேண்டும்.

ஸ்டெர்லைட் நிறுவனம் தனது உற்பத்தியை இரு மடங்காக உயர்த்தினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?; அந்த பாதிப்புகளைக் குறைக்க அந்த நிறுவனம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் எல்லாம் பொது வெளியில் விவாதிக்கப்பட வேண்டும்.

தகவல்களின் அடிப்படையில் விவாதம் எதுவும் பொதுவெளியில் நடப்பதுபோல் தெரியவில்லை. எந்த பெரிய பத்திரிக்கையோ செய்தி நிறுவனமோ அதை செய்வதுபோல் தெரியவில்லை.

ஒருபுறம் பெரிய பயத்தினை உருவாக்குகின்றனர். மறுபுறம் போராட்டக்காரர்களையும் அவர்களுக்கு ஆதரவு தருபவர்களையும் தேச விரோதிகள் போல ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றனர். இருதரப்பும் தவறு செய்கின்றனர்.

நம்முடைய இப்போதைய தேவை, நேர்மையுடன் இந்தப் பிரச்சினையை அணுகி உறுதியான நடவடிக்கை எடுக்கக் கூடிய தலைமை.

வ.முனீஸ்வரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.