தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய என்ற பாடல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய கோதை தமிழ் எனப் போற்றப்படும் திருப்பாவையின் ஒன்பதாவது பாசுரம் ஆகும்.
இந்த உலகில் உள்ள இன்பங்கள் எல்லாம் நிலையானவை என்று எண்ணி உலக மக்கள் அதில் மூழ்கி இருக்கின்றனர். அவை நிலையானவை அல்ல. திருமாலே நிலையானவர்.
ஆதலால் இறைவனைப் போற்றிப் பாடி, நிலையான இன்பத்தைப் பெற வாருங்கள் என்று இப்பாசுரம் அழைக்கிறது.
திருப்பாவை பாடல் 9
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமன்மகளே, மணிக்கதவம் தாள்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றுஎன்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.
விளக்கம்
தூய்மையான அழகிய மணிகள் பதிக்கப் பெற்ற மாளிகையில், நான்கு புறமும் விளக்குகள் எரிகின்றன. அங்கே அகில் உள்ளிட்ட வாசனைப் பொருட்களின் நறுமணம் வீசகின்றது.
அப்படிப்பட்ட அறையில் மென்மையான பஞ்சு மெத்தையின் மேல் உறங்கிக் கொண்டிருக்கும் மாமன் மகளே, அழகிய மணிகள் பொருத்தப்பட்ட வீட்டின் கதவைத் திறப்பாயாக.
மாமிமாரே, நீங்களாவது சென்று அவளை எழுப்பி விடமாட்டீர்களா?
உங்கள் மகள் என்ன ஊமையா?
காது கேளாதவளா?
பெருந்தூக்கம் கொள்ளும் சோம்பேறியா?
அல்லது மந்திரத்தில் கட்டுண்டு நீண்ட தூக்கத்தில் கிடக்கிறாளா?
மாயங்கள் பலசெய்து, உள்ளங்களைக் கொள்ளை கொண்ட மாயவன், பெரிய தவத்திற்கு சொந்தக்காரனான மாதவன்.
வைகுண்டத்தில் இருக்கும் நாராயணன் என்று பலபெயர்களால், திருமாலைப் போற்றி வழிபட, அவளை அழைப்பதற்காக உங்கள் வாசலில் நிற்கின்றோம்.
இனியேனும் உங்கள் மகளை எழுப்பி, மார்கழி நோன்பில் எங்களுடன் பங்கு கொள்ளச் செய்யுங்கள்.
உறக்கத்தை அதிகம் விரும்பி, அதில் ஈடுபடும் ஒரு பெண் இப்பாசுரத்தில் எழுப்படுப்படுகிறாள்.
உலகில் உள்ளவற்றை நிலையானவை என்று எண்ணி உலகமக்கள் மயக்கத்தில் இருக்கின்றனர்.
பரந்தாமனே நிலையானவன். ஆதலால் அவனை அடைய அவனுடைய பலபெயர்களைக் கூறி வழிபடுவது சிறந்தது என்பதை இப்பாசுரம் விளக்குகிறது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!