மதுரை அனுப்பானடி.
ராகவன் இல்லம்.
இரவு நேர பணி முடித்து, காலை எட்டு மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தான் ராகவன்.
உள்ளே நுழைந்ததும், மனைவி கலா “என்னங்க, வந்ததும் உட்காராம அப்டியே விகாசை பள்ளிகூடத்திற்கு போய் விட்டு வந்திருங்க!
அவனுக்கு இன்னைக்கு பேச்சு போட்டி இருக்காம். அதான் அதுக்கு பயிற்சி எடுக்க பள்ளிகூடத்திற்கு சீக்கிரமா போகணும்னு சொன்னான்” என்று கூறினாள்.
ராகவன், கலா தம்பதியினருக்கு ஒரே ஒரு பையன் விகாஸ். ஆறாம் வகுப்பு தனியார் பள்ளியில் படிக்கிறான்.
ராகவன் தனியார் கம்பெனில இரவு நேர மெசின் ஆப்ரேட்டரா வேலை பார்கிறான். கலா வீட்டில் இருந்து குடும்பத்தை கவனிக்கிறாள்.
“என்னடி, வேலைய முடிச்சு வந்து ஒரு அஞ்சு நிமிஷம் உட்காந்துட்டு போறேனே!” என்று ராகவன் கூறினான்.
“வந்து உட்காரலாம், தூங்கலாம் சரியா? இப்போ முத கிளம்பி பள்ளிகூடத்தில் விட்டு வாங்க!” என்று சற்று அழுத்தமாக கலா கூறினாள்.
கோவமாக எழுந்தான் ராகவன்.
மகன் விகாசை “டேய் வாடா! பள்ளிகூடத்தில் உன்னை விட்டு வந்தா தான் உன் அம்மா என்னை வீட்ல நிம்மதியா இருக்க விடுவா!” என்று கோவமாக அழைத்து சென்றான்.
“என்னங்க! போறது போறீங்க, இந்த குப்பைய போட்டு போங்க!” என்று வாசலில் குப்பை கவரை தூக்கி வைத்தாள் கலா.
ரொம்பவே கோவம் வந்தது ராகவனுக்கு.
இரு சக்கர வாகனத்தை தயார் நிலைக்கு கொண்டு வந்து மகன் விகாசை தூக்கி எரிச்சலுடன் அமர வைத்தான்.
“குப்பைய கொட்ட ஒரு ஆளு, இவ பார்க்கிற வேலைக்கு!” என்று வாயில் முனங்கியபடி கிளம்பினான் ராகவன்.
தெரு முற்றத்தில் ஒரு குப்பை தொட்டி.
வாகனத்தில் சென்றவன் அந்த குப்பை தொட்டியை பார்த்ததும் தன் வண்டியில் வைத்திருந்த குப்பை கவரை தூக்கி எறிந்தான்.
அந்த குப்பை கவர் தொட்டியில் விழாமல் கீழே விழுந்தது.
‘அடச்சே!’ என்று நினைத்தபடி செல்ல முயன்ற ராகவனை வாகனத்தின் முன் வந்து தடுத்தான் மாநகராட்சி குப்பை அள்ளும் சுந்தரம்.
“சாரு! என்ன இப்படி? இப்ப தான் குப்பைய அள்ளி முடிச்சோம். அதுக்குள்ள குப்பைய வெளியில போட்டு போறீங்க?“ என்று மாநகராட்சியை சுத்தம் செய்யும் ஊழியர் சுந்தரம் ராகவனை நோக்கி கேள்வி எழுப்பினான்.
சுந்தரத்தின் கேள்வி மேலும் ராகவனை கோவமாக்கியது.
“குப்பை அள்ளுற வேலை தான பார்க்கிற பின்ன என்ன? குப்பை இருந்தா அள்ளுயா! அத விட்டு என்னமோ கலெக்டர் மாதிரி பேசுற!” என்று கோவமாக சுந்தரத்தை எதிர்கொண்டான் ராகவன்.
“சார்! குப்பை அள்ளுற வேலை தான் நான் பார்க்கிறேன். இப்போ தான் குப்பைய சுத்தம் பண்ணிட்டு வண்டி கொண்டு போயிருக்கு.
புது குப்பை தொட்டிய வச்சிட்டு போயிருக்கு. குப்பைய சரியா அந்த தொட்டியில போட சொன்னா, அத விட்டு என்னமோ பேசுறிங்க!“ என்று சுந்தரம் கூறினான்.
“போயா! இருக்கிற கோவத்தில நீ வேற!” என்று கூறி ராகவன் கிளம்ப முயன்றான்.
ராகவனை தடுத்து நிறுத்தினான் சுந்தரம்.
“ஒழுங்கா குப்பைய தொட்டியில் போடுங்க சார். நீங்க பண்றத பார்த்து அடுத்து உங்க பையனும் செய்வான். உங்க ஒழுக்கம் தான் அவனுக்கு வரும். நீங்க ஒழுங்கா நடந்துக்க முயற்சி பண்ணுங்க!” என்று சுந்தரம் கூறினான்.
சுந்தரத்தை முறைத்தான் ராகவன். அடிதடி ஆகிருமோ என்ற பயத்தில் இருந்தான் விகாஸ்.
அப்போது வண்டியிலிருந்து விகாஸ் இறங்கி அந்த குப்பையைத் தொட்டியில் போட்டான்.
“அண்ணா குப்பைய போட்டேன். நன்றி உங்க கருத்துக்கு. நான் பள்ளிக்கூடம் போகணும் நேரம் ஆகுது!“ என்று விகாஸ் சுந்தரத்திடம் தயவு கூர்ந்து கேட்டான்.
“நல்லது தம்பி! இது தான் ஒழுக்கம். ஆனா சொல்லி வரக்கூடாது சொல்லாம வரணும்!“ என்று சுந்தரம் கூறி கொண்டிருந்த போது ராகவன் வண்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
ராகவனை பார்த்து சிரித்தபடி சுந்தரம் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
பள்ளியை நோக்கி விரைந்தான் ராகவன்.
பள்ளிக்கூட வாசலில் விகாசை இறக்கி விட்டு கிளம்ப முயன்றான்.
“அப்பா! மறுபடியும் அவர்ட்ட போய் சண்ட போடாதிங்க! இதோட விட்ருங்க! இன்னைக்கு பேச்சு போட்டி இருக்கு என்று அம்மா சொன்னங்களே! அத பத்தி நீங்க கேக்கல!“ என்று பயத்துடன் ராகவனை நோக்கி கேட்டான் விகாஸ்.
“ஆமா விகாஸ்! அந்த ஆள நான் பார்த்துகிறேன். நீ பயப்படாத! பேச்சு போட்டி என்ன தலைப்பு? கேக்க மறந்துட்டேன்!” என்று ராகவன் விகாஸிடம் கேட்டான்.
“பேச்சு போட்டி தலைப்பு ‘தூய்மை இந்தியா’. அத தான் இப்போ கண்கூட பார்த்துட்டு வந்தேன். நாம திருந்தாம அதுக்கு வாய்ப்பு இல்ல என்பதை புரிஞ்சுக்கிட்டேன்.
குப்பை அள்ளுரவங்கள கேவலமா பார்க்கிறோம். அவங்களும் மனுசங்க தான! நீங்க பேசுனது தப்பு தான அப்பா!
அவரு உங்களை மரியாதையா தான் பேசுனாரு. நீங்க தான் அவர மதிக்காம கேவலமா பேசுனீங்க.
தூய்மை இந்தியா திட்டம் அல்ல; ஒவ்வொருவரின் கடமை. சுத்தம் சோறு போடும் என்று முன்னோர்கள் சொன்னது சும்மாவா!“ என்று அப்பா ராகவனை வெளுத்து வாங்கினான் விகாஸ்.
“சரிப்பா! பேச்சு போட்டிக்கு நல்ல விசயம் உங்களால கிடைச்சது. நன்றி! இத பற்றி பேசி பரிசு வாங்கிருவேன். பரிசோட உங்கள பார்க்கிறேன்!“ என்று விகாஸ் கூறி பள்ளிக்குள் சென்றான்.
விகாஸ் நடத்திய பாடத்தை வேறு வழி இல்லாமல் ஏற்று கொள்ள விரும்பினான் ராகவன். மகனின் பேச்சு அவனுக்கு வியப்பைத் தந்தது.
மகன் விகாஸ் ‘வெற்றியுடன் வர வேண்டும்!’ என்ற நினைப்பில் வீட்டை நோக்கி நகர்ந்தான் ராகவன்.
‘தூய்மை இந்தியா’ திட்டம் அல்ல; ஒவ்வொருவரின் கடமை. நம்மை சுற்றி இருக்கும் சூழலை சுத்தமாக வைத்தால் தான் ஆரோக்கியம் கிடைக்கும்.
மணிராம் கார்த்திக்
மதுரை
கைபேசி: 9842901104