பெரும்பரப்பளவு உலகியலை வாசகனுக்குக் கடத்தி விட வேண்டும் என்பதல்ல கவிதை; சிறு உணர்வைத் தூண்டி விட முயற்சித்தாலே போதும்.
வாசகன், படைப்பாளனின் வழி சில சிருஷ்டிகளுடன் உறவாடுகின்றான். அதன் மேலான அதிசயப் பார்வைகளுடன் ரசிக்கின்றான். வலிகளின் உள்பாடுகளைப் போர்வையாக்கி உடனிருந்து வேதனைகளுடன் பயணிக்கின்றான்.
கவிஞர் அமீர்ஜானின் ”புரண்டு படுப்பவனின் நிழல்” கவிதைத் தொகுப்பில் முதல் கவிதையாக அமைந்த ‘அன்பின் ஓவியம்’ எனும் ஒரே ஒரு கவிதை, பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதுவதற்கான விதையினை வைத்திருக்கின்றது. கவிஞனின் கவிதை உலகம் மிகப்பெரிதாகப் பொருள் கொள்ள வைத்திருக்கிறது.
கவிஞர் அமீர்ஜானை வாசிப்பவர்கள், அவர் சுட்டிச் செல்லும் எந்த ஒரு உணர்வுச் சாயலையும் அப்படியே விளங்கிக் கொள்வர் என்பது கவிஞரின் சிறப்புக்களில் மிக முக்கியமானதாகும். தீவிரமான வாசித்தலின் படி கவிஞரின் எல்லைகள் நீண்ட வெளியைத் தன்னகத்தே கொண்டுள்ளன.
கவிஞர், ஆழ்மனப் பேச்சுக்களை ஆராதனை செய்து படம் பிடிக்கும் புகைப்படக்காரர் என்பதால் அவரது கவிதைகளில் உள் விளைந்த பேச்சுக்களின் மணம் கமழ்கிறது.
வாழ்வின் நிகழ்வுகள் கடந்து போய்க் கொண்டே இருக்கும். அதன் நினைவுகள் என்றாவது திடீரென முளைக்கும்.
ஆனால், கவிஞர் நிகழ்வுகளின் ஒவ்வொரு கணத்தையும் தன்னை விட்டு விட்டு மேலெழுந்து நின்று கவனிக்கிறார். அதை முழுமையாக அனுபவிக்கின்றார். அதன் மேடு பள்ளங்களைத் தன் ஓவியங்களில் வண்ணங்களாக மாற்றுகின்றார்.
கவிப்புலமையின் மிகுதியால் எல்லா நடத்தைகளின் பின்பும், முன்பும், நோக்கும் நோக்குப் பார்வையாக இருப்பதனால் நடத்தைகளின் வேறுவேறு பார்வைகள் முழுவதும், கவித்தோட்டத்தில் மலர்களாயிருக்கின்றன.
இந்நூலில், பல மிகுபுனைவுக் கவிதைகளையும், எதார்த்தவியல் கவிதைகளையும், மாயஎதார்த்தவியல் கவிதைகளையும் உளவியல் கவிதைகளையும் வாசிக்க முடிகிறது.
பல அடுக்குப் படிமக் காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாய், ஒரே கவிதைக்குள் கோர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. அன்பின் ஓவியம் கவிதையில், தக்களி, புல்லாங்குழல், குளம், பனிக்குடம் எனக் கனகச்சிதமாகப் படிமக் காட்சிகள் அன்பின் ருசியை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றன.
அதில் ஒரு காட்சியில்,
”உன் மனத்தக்களியில்
இந்தப் பஞ்சை
நூற்று அணிந்து கொள்கின்றாய்
என்னை
ஆடையாக்கி..
என்னை
அணிந்தபின் தான் நிர்வாணம்
அற்றதென
எண்ணி மகிழ்கின்றாய்“
என்று காதலன், காதலி இருவருக்குமான மன நெருக்கத்தை, ஒருவரை ஒருவர் அடைந்த போக்கின் சுகத்தை அனுபவத்தால் அனுபவித்தல் என்பதை மேற்கண்ட காட்சி விளக்குகிறது.
காதலன் பஞ்சாக இருக்கிறான். காதலியின் மனம் தக்களியாக இருக்கிறது. பஞ்சை நூலாக்கி, நூலை ஆடையாக்கி, அதை அணிய வேண்டும்.
இங்குக் காதலன் எனும் பஞ்சைக் காதலி தன் தக்களியால் நூற்று ஆடை செய்து அணிந்து கொள்ளுகிறாள். மகிழ்கிறாள். அதுமுன்வரை பொறுமையாக இருந்து தவித்த மனம், தற்பொழுது முழுத்திருப்தி அடைந்த சுகத்தை எண்ணி மகிழ்கின்றது.
புல்லாங்குழலாய் அவள் இருக்கின்றாள். காற்றாக காதலன் உள் நுழைகின்றான். அது மாறுதலாகி நல்ல இசையாகக் காதலனை வெளிக்கொண்டு வருகிறாள் காதலி என்பதனை,
”துளை வழி நுழையும் காற்றாய்
இசை வரும் கிளர்ச்சியில்
உயிர் நுழைந்தோமென நினைக்கக்
காணாமல் போயிருந்தோம்
ஒற்றையில்…” என்கின்றார்.
இசையும் அதைத் தோற்றுவித்த கருவியும் இரண்டறக் கலந்த மையாக ஒற்றையில் இருந்தோம் என்பது, என்ன அருமையான கவிதை நயம். காற்று இங்கு இசையானது காதலியால்.
இவற்றையெல்லாம் விட, ஓவியன் ஒருவன் ஒரு குளத்தை வரைகிறான். அழகிய குளம் அது. காதலன் காதலி இருவரும் அந்தக் குளத்திற்குள் இறங்குகின்றனர்.
குளிக்கக் குளிக்க ஆனந்தம். குளத்தை விட்டு சென்று விடக்கூடாது என நினைக்கின்றனர். ஓவியன் இக்குளத்திற்கான கரையை வரைந்து விட்டால், ஒருவேளை நாம் செல்ல நேரிட்டாலும் நேரிடலாம் என நினைத்து ஓவியனை அந்த இடத்தை விட்டுத் துரத்துகிறார்கள்.
கரையும் இல்லை, ஓவியனும் இல்லை, அந்தக் குளத்தில் இன்னும் நீந்திக் கொண்டே உள்ளனர் காதல் ஜோடிகள்.
”தூரிகை
வரைந்த குளத்தில் முழ்கிய நாம்
துரத்தி விட்டோம்
ஓவியனை
கரையேற
கரை வரைந்து விடுவானோ
என்று….”
மாயஎதார்த்தவாதம் கவிதைக்குச் சிறந்த உதாரணமாக இக்கவிதையைக் கூறலாம்.
கவிதை நயத்தின் உச்சமாக, ஒரு படிமம் இக்கவிதையின் கடைசியாக அமைந்திருக்கிறது. அதுபோன்ற படிமம் இதுவரை எந்தக் கவிஞனும் கூறியதில்லை என்பதாகவே தெரிகிறது.
தாயின் வயிற்றில் கரு வளர்கிறது. அதற்குக் கருமுட்டையும், விந்தணுவும் தேவை. இவைகளின் சங்கமத்தில் குழந்தை உருவாகிறது. கரு முட்டையும், விந்துவும் சேர்ந்த இணைப்பு நிலை போல், பனிக்குடத்தில் நாம் இணைந்து விட்டோம் எனக் காதலன் காதலியைப் பார்த்துக் கூறுகின்றான். அந்த வரிகள் கவிதையின் மிக உச்சமான வரிகளாக அமைந்து இருக்கின்றன. அக்கவிதை,
”விதானமற்ற
பனிக்குடத்தில் ஆகிவிட்டு இருந்தோம்.
அன்பின் சிசுக்களாக நாம்.
நம்மை
பிரசவிக்கப் பிரியமில்லாமல்….”
என்பதாக அமைகிறது. பனிக்குடத்தில் இணைந்து அப்படியே இருந்துவிட வேண்டும். குழந்தையாகப் பிரசவிக்காமல் என்பதிலிருந்து கவிஞர் அமீர்ஜானின் உலகம் எப்படிப்பட்டது என்பதை உணரமுடிகின்றது.
இவரின் மாயஎதார்த்த வியல் கவிதையான இக்கவிதையில் கற்பனையின் வேறுவேறு கோணங்களில் சென்று அவரின் உலகை ரசிக்க முடிகின்றது.
”உலகப் பொருள்களால் மாத்திரமல்லாது அர்த்தங்களையும் ஆழமான அர்த்தங்களில் புதிரும், மாயமும் கலந்து இருக்கின்றது. ஒவ்வொன்றையும் சொல்லுவதற்கு ஒரு முறையல்ல பல முறைகள் இருக்கிறது.
மேஜிக்கல் ரியலிசம் என்ற இந்த முறை, பழைய பார்வைகளையும் உணர்வுகள் பற்றிய அகவயமான மற்றும் புறவயமான அத்தனை சாத்தியங்களையும் சொல்லித்தருகிறது” எனும் பிரண்ட்ஸ் ரா (Franz rah)எனும் மேலைநாட்டு அறிஞரின் கருத்து, கவிஞர் அமீர்ஜானின் கவிதை நயத்துடன் மிகச் சரியாக ஒத்துப் போகின்றது.
எதிராளியின் உள்ளங்களைப் படிக்கும் மருத்துவராகப் பல இடங்களில் கவிஞர் தெரிகிறார்.
சமகாலப் பிரச்சனைகளை மேல்தட்டு நிலையிலும், சுய பிரச்சனைகள் அடித்தட்டு நிலையிலும், கற்பனாவாதம், புதிய நடைமுறைத் தத்துவமும் கிடைத்தட்டு நிலையிலும் நின்று கவிஞரின் கவிமனம் வெளிப்படுவதை ஒட்டுமொத்த கவிதைகளைப் படித்து முடிக்கும் பொழுது அறிய முடிகிறது.
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!