சக்தி பீடங்கள் என்பவை ஆதிசக்தியின் அம்சமான தாட்சாயணியின் உடல் பாகங்கள் சிதறி விழுந்த இடங்களாகக் கருதப்படுகின்றன. தென்னிந்தியாவில் மொத்தம் 24 சக்தி பீடங்கள் உள்ளன.
சிவபக்தனான தட்சன் அன்னை உமையம்மை தனது மகளாகப் பிறக்கும்மாறு இறைவனான சிவபெருமானிடம் வேண்ட இறைவனும் அவ்வாறே அருள் புரிந்தார். உமையம்மையும் தாட்சாயணி என்ற நாமத்துடன் தட்சனின் மகளாக பிறந்தார்.
சிவபக்தியில் சிறந்த பெண்ணாக திகழ்ந்த தாட்சாயணியை சிவபிரானுக்கு மணம் முடித்தவுடன் தட்சன் உலகை ஆளும் ஈசனின் மாமன் என்ற ஆணவம் கொண்டு செருக்குற்று இருந்தான்.
ஆணவம் தலைக்கேறிய தட்சன் சிவபரம்பொருளை அழையாது யாகம் ஒன்றினை நடத்தினான். யாகத்திற்கு சிவபிரானை அழைக்காதது ஏன் என்று கேட்க சென்ற தாட்சாயணியையும், சிவபிரானையும் அவமதித்தான்.
இதனால் கோபமுற்ற அன்னை தாட்சாயணி தட்சனால் பெற்ற இவ்வுடல் தனக்கு வேண்டாம் என்று கருதி தன்னை மாய்த்துக் கொண்டாள்.
இதனை அறிந்த சிவபிரான் சினமுற்று தாட்சாயணி உடலைக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். அப்போது தாட்சாயணியின் உடலின் பாகங்கள் சிதறி பூமியில் விழுந்தன.
அவ்வாறு உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் கோவில்கள் எழுப்பப்பட்டு அவை சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இனி தென்னிந்தியாவில் உள்ள சக்தி பீடங்களைப் பற்றிப் பார்ப்போம்.
காமகோடி பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு அம்மை காமாட்சியம்மன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறாள். இங்கு அம்மை மூன்று தேவியரின் அம்சமாக இருக்கிறாள்.
மந்த்ரிணீ பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் மதுரையில் அமைந்துள்ளது. இங்கு அன்னை மீனாட்சி என்ற பெயரில் அருள்புரிகிறாள். இவ்விடத்தில் அன்னை கல்வி மற்றும் கலைகளின் அதிபதியான ராஜமாதங்கியின் வடிவமாக திகழ்கிறாள்.
சேது பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இங்கு அம்மை பர்வதவர்த்தினி என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறாள். இவ்வம்மையை வழிபட திருமணத் தடை நீக்கி நல்ல திருமண வாழ்வு அமையும்.
வீரசக்தி பீடம்
இப்பீடம் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டிணம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு அன்னை உலகநாயகி என்ற திருப்பெயருடன் மகிஷாசுரமர்த்தினியாக வீற்றிருக்கிறாள்.
ஞானபீடம்
இப்பீடம் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி அருகில் திருவானைக்காவல் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு அன்னை அகிலம் போற்றும் அகிலாண்டேஸ்வரி என்ற பெயரில் அருள்பாலிக்கிறாள். இவ்வன்னை ஸ்ரீசக்கரத்தை காதணியாக அணிந்திருக்கிறாள். இங்குள்ள சிவபெருமானை அர்ச்சகர்கள் உச்சிகாலை வழிபாட்டின்போது அன்னையின் அம்சமாக தங்களைக் கருதி சேலை கட்டி வழிபாடு நடத்துகின்றனர்.
அருணை பீடம்
இப்பீடம் தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் அழைந்துள்ளது. இங்கு இறைவி அபிதாகுஜாம்பிகை என்ற நாமத்தில் அருளுகிறாள். இவளே சிவபெருமானின் இடப்பாகத்தில் இடம் பெற்றவள் ஆவாள். இத்திருத் தலத்தில் கார்த்திகை-தீப வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.
கமலை பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் திருவாரூரில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் அம்மை சந்திரனை தலையில் சூடி கமலாம்பிகை என்ற திருபெயரில் அருளுகிறாள். இங்கு அம்பிகை நான்கு கரங்களுடன் யோகாசனத்தில் அருளுகிறாள். இவ்விடத்தில் அன்னையின் தோழி நீலோத்பலாம்பாள் என்று அழைக்கப்படுகிறாள்.
குமரி பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. அம்பாள் கன்னி பகவதியாக முக்கூடல் சங்கமத்தில் அருளும் தலம் இது. இவ்வன்னை பிரகாசமான மூக்குத்தி அணிந்து சிறப்பு பெறுகிறாள்.
விஷ்ணுசக்தி பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. 72000 கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியான இவ்வம்மை மங்களாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். ஆவணி ஞாயிறு அன்று மஞ்சள் பூசிய முகத்துடன் செம்பருத்தி அலங்காரத்தில் காட்சி தரும் இவ்வன்னையைக் காண கண்கள் கோடி வேண்டும்.
கால பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் திருக்கடையூரில் அமைந்துள்ளது. இங்கு அம்மை அபிராமி என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறாள். அன்னை தன் பக்தனுக்காக தை அமாவாசை அன்று பூரண முழுநிலாவாகக் காட்சி அருளி அதன் காரணமாக அபிராமி அந்தாதி பாடப்பட்ட தலம். இங்கு மாங்கல்ய காணிக்கை சிறப்பு.
காளிசக்தி பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் திருவள்ளுர் அருகில் திருஆலங்காட்டில் உள்ளது. இவ்விடத்தில் அன்னை இறைவனுடன் நடனப் போட்டி ஆடிய மகாகாளித் தலம். ரத்த பீஜனை போரிட்டு அழித்த தலம் இது. இங்கு வண்டார்குழலி அம்மை, காரைகால் அம்மை ஆகியோர் சிறப்பு பெறுகின்றனர்.
தரணி பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ளது. இங்கு அம்மை குழல்வாய்மொழி, பராசக்தி என்ற திருநாமங்களுடன் அருளுகிறாள். இவ்விடத்தில் உள்ள அருவிகள் காரணமாக இது புண்ணிய தீர்த்த தலமாகக் கருதப்படுகிறது. இங்கு பவுர்ணமி இரவு நவசக்தி பூஜை நடைபெறுகிறது.
சாயா பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியிலிருந்து முசிறி செல்லும் வழியில் ஈங்கோய்மலை என்ற இடத்தில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் அம்மை மரகதாம்பிகை, லலிதா என்ற திருநாமத்துடன் அருளுகிறாள். இறைவனான சிவபிரான் உமையம்மைக்கு தனது இடது பாகத்தை தருவதாக உறுதியளித்த தலம் இது.
வீமலை பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்தில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் அன்னை உலகாம்பிகை என்ற பெயரில் அருளுகிறாள். இசை வல்லுநர்கள் இவ்வன்னையை வழிபட அவர்களின் இசைத்திறன் மேம்படும். இவ்வன்னையே அகத்தியருக்கு திருமணக்காட்சி அருள காரணமானவள். இவ்விடம் நவகைலாய தலங்களுள் ஒன்று.
காந்திசக்தி பீடம்
இப்பீடம் தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் அமைந்துள்ளது. இங்கு இறைவி காந்திமதி என்ற பெயரில் அருளுகிறாள். இவ்வம்மை மாலையில் ஞானசரஸ்வதியாகக் காட்சியளிக்கிறாள். இவ்விடத்தில் அம்மையே இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதாகக் கருதப்படுகிறது.
பிரணவ பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் சீர்காழி அருகில் திருவெண்காட்டில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் அன்னை பிரம்மவித்யாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். இவ்வன்னையை வழிபட குழந்தைப்பேறு, திருமணப்பாக்கியம், கல்வி மேன்மை, நாவன்மை ஆகியவற்றைப் பெறலாம். நரம்பு நோயையும் இவ்வன்னை தீர்ப்பாள். நவக்கிரகங்களில் புதனுக்குரிய தலமாக இவ்விடம் விளங்குகிறது.
தரும பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் திருவையாற்றில் உள்ளது. இங்கு அன்னை தர்மசம்வர்த்தினி என்ற பெயரில் அருளுகிறாள். இவ்வன்னையே உலகிற்கு படியளக்கும் நாயகி ஆவாள். இவ்விடத்தில் அஷ்டமி திதியில் இரவு வேளையில் இவ்வன்னைக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
இஷீசக்தி பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் சென்னை திருவொற்றியூரில் உள்ளது. இங்கு அன்னை வடிவாம்பிகை என்ற பெயரில் அருளுகிறாள். இவ்வன்னை ஞானசக்தியின் வடிவம் ஆவாள். இங்கு தினமும் சுயம்வர புஷ்பாஞ்சல் நடைபெறுகிறது.
அர்த்தநாரி பீடம்
இவ்விடம் கர்நாடக மாநிலத்தில் கொல்லூரில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் அன்னை மூகாம்பிகை என்ற பெயரில் அருளுகிறாள். இவ்வன்னைக்கு அபிசேகம் கிடையாது. இவள் சரஸ்வதியின் அம்சமாவாள். ஆதிசங்கரர் இவ்வன்னையின் மீது கலாரோஹணம் பாடினார்.
கர்ண பீடம்
இவ்விடம் கர்நாடக மாநிலத்தில் கோகர்ணத்தில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் அம்மை தாமிர கவுரி என்ற நாமத்தில் சிவனை திருமணம் செய்த தலம். இவள் நதி வடிவ அம்பிகை ஆவாள். இங்கு சிறப்புமிக்க கோடிதீர்த்தம் உள்ளது.
சைல பீடம்
இவ்விடம் ஆந்திர மாநில ஸ்ரீசைலத்தில் உள்ளது.இங்க அன்னை பிரம்மராம்பாள் என்ற பெயரில் அருளுகிறாள். இவ்வன்னையே பவானி வடிவில் மராட்டிய மன்னன் சிவாஜிக்கு வாள் அளித்தவள் ஆவாள். இவ்விடம் பூலோகக் கைலாயம் என்றழைக்கப்படுகிறது. சிவானந்த லஹரி பிறந்த தலம் இது.
ஞான பீடம்
இவ்விடம் ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ளது. அன்னை இவ்விடத்தில் ஞானப்பூங்கோதை என்ற பெயரில் அருளுகிறாள். இவ்வன்னை கல்வி மற்றும் அறிவை வழங்கும் தெய்வமாக வழிபடப்படுகிறாள். கண்ணப்பர் வழிபட்ட தலம் இது. இங்கு சரஸ்வதி தீர்த்தம் அமைந்துள்ளது.
மாணிக்க பீடம்
இவ்விடம் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. காளிதாசர் சியாமளா தண்டகத்தில் குறிப்பிடும் மாணிக்கவீணா என்ற ஸ்லோகத்தின் அதிபதியான மாணிக்காம்பாள் அருளும் தலம் இது.
மகாசக்தி பீடம்
இவ்விடம் கேரள மாநிலத்தில் கொடுங்களுரில் அமைந்துள்ளது. இது சிலப்பதிகார காலத்தில் கட்டப்பட்ட பகவதி கோவில். இவ்விடத்தில் அன்னையின் திருவுருவம் பலாமரத்தினால் ஆனது. இங்கு கண்ணகியே பகவதியாக அருளுகிறாள். இவ்வன்னையை வழிபட குழந்தை பாக்கியம் ஏற்படும்.
சிறப்புக்கள் வாய்ந்த தென்னிந்திய சக்தி பீடங்களைப் போற்றுவோம்.
– வ.முனீஸ்வரன்
அருள்மிகு அன்னையின் அபூர்வ தகவல்.பார்த்து படித்து,ரசித்தோம்.
இன்றுதேவிபட்டினம் என்றுழைக்கப்படும்ஊர் முன்பு
தேவி புவனேஸ்புரம் என்று இருந்ததாக சான்று உள்ளது
சோட்டாணிக்கரை எந்தபீடம் உங்களுக்கு தெரியுமா