தென்னை மரம் கடற்கரை ஓரங்களிலும், மணற்பாங்கான பகுதிகளிலும் ஏராளமாக ஓங்கி செழித்து வளரக்கூடியது.
இது 100 அடி உயரம் வளர்வது மட்டுமின்றி, நூறாண்டுகள் வரையிலும் வளரக் கூடியது. தென்னங்கன்றை நட்ட ஏழாவது ஆண்டு முதல் வருடந்தோறும் பூக்கள் பூக்கத் தோன்றும்.
இந்தியாவில் மக்கள் தேங்காய்க்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ‘கற்பக விருட்சம்’ என தென்னையை அழைக்கிறார்கள்.
வாழ்நாளில் அதன் மூலம் எண்ணற்ற பயன்களைப் பெறுவதால் மரங்களிலேயே சொர்க்கமாகத் தென்னை கருதப்படுகிறது.
உஷ்ணம் நிறைந்த பகுதிகளில், மாநிலங்களில் தென்னை மரங்கள் பூஜிக்கப்பட்டு வருகின்றன. மங்களக் காரியங்களுக்கும், இதர விசேஷ வைபவங்களுக்கும் இம்மரத்தைப் பயன்படுத்துகின்றனர்.
தென்னை மரங்களில் விளையும் தேங்காயின் உள்ளே காணப்படும் இளநீர் மிகுந்த சுவையுடையது. இனிப்பானது. அநேக மருத்துவ குணங்களைக் கொண்டது.
உடல் உஷ்ணத்தை இளநீர் தணிக்கும். தாகத்தைத் தீர்க்கும். இளநீரில் குளுக்கோஸ் மற்றும் பொட்டாஷியம், சோடியம் போன்ற உலோகச் சத்துக்கள் அடங்கியுள்ளன.
அதனால் உடலுக்கு இது அதிக சக்தியை அளிக்கிறது. மிகச் சுலபமாக ஜீரணிப்பதால் ஒருமாத குழந்தைக்கும் கூட இளநீரைக் கொடுக்கலாம்.
சிலருக்கு சிறுநீர் சுரப்பு குறைவாக இருக்கும். சொட்டு சொட்டாக சிறுநீர் பிரியும். இது போன்ற குறைபாடுகளைக் கொண்டவர்கள் இளநீரைத் தாராளமாக அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வயிற்றுப் போக்கால் உடலிலிருந்து அதிக நீர்ச்சத்து இழந்தவர்கள் (Dehydration) இளநீர் அதிகம் அருந்த வேண்டும்.
வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, அதிகபேதி போன்றவைகளுக்கு இளநீர் கை கண்ட மருந்து. அதிக அமிலத்தன்மை குறைய இளநீர் சிறந்ததோர் மருந்து.
வாந்தி வருவதுபோல் ஏற்படும் உணர்ச்சி (Nausea) மற்றும் வாந்தி, மயக்கம் போன்றவைகளுக்கு இளநீர் நல்ல நிவாரணி.
வாந்தி எடுப்பதால் வயிற்றுப்போக்கால் இழக்கப்படும் பொட்டாஷியம் சத்து, இளநீர் அருந்துவதின் மூலம் மீண்டும் கிடைக்கிறது. ‘காலரா’வை விரட்டியடிக்கும் விஷயத்தில் இளநீர் நன்கு செயல்படுகிறது.
சிறுநீரை அதிகளவில் பிரியச் செய்து உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்குவதால் எளிதில் தொற்றிக் கொள்ளக்கூடிய ஜூரங்களுக்கு இளநீர் கொடுக்கப்படுகிறது.
இளநீரின் முற்றாத காயின் உள்ளே காணப்படும் மிருதுவான தேங்காய் ‘வழுக்கை‘ என அழைக்கப்படுகிறது. இதில் எண்ணெய் சத்தும், கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்தும் காணப்படுகிறது.
விரைவில் ஜீரணமாகும் இந்த வழுக்கைத் தேங்காயை குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் கொடுக்கலாம். இதற்கு காயங்களை ஆற்றும் தன்மை இருப்பதால் காயங்களில் இந்த வழுக்கைப் பகுதியை வைத்துக் கட்டலாம்.
முற்றிய தேங்காயிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
தேங்காய் பாலில் அதிக அளவு புரதச் சத்து இருப்பதால், புரதச் சத்தின்றி காணப்படுபவர்கள் தேங்காய் பால் அருந்தலாம்.
மேலும் வயிற்றில் சுரக்கும் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தி, வயிற்றில் புண் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் தேங்காய் பாலுக்கு உண்டு.
அதனால்தான் வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் இடியாப்பமும், தேங்காய் பாலும் கலந்து சாப்பிடுபவர்கள். தேங்காய் பால் வறட்டு இருமலுக்கும் நெஞ்சுவலிக்கும்கூட மிகச்சிறந்தது.
இவ்வளவு மகத்துவங்கள் தேங்காயில் இருப்பதால்தான் தென்னிந்தியாவில் இதை மக்கள் அதிகமாகச் சமையலில், உணவுத் தயாரிப்பில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
‘பர்பி‘ என்ற ஒருவகை இனிப்புப் பண்டம் தேங்காயும், சர்க்கரையும், ஏலக்காயும் சேர்ந்த ஓர் கலவையே. குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் ஓர் திண்பண்டம் இது. பற்களையும் ஈறுகளையும் வலுப்படுத்தும்.
வயிற்று வலிக்காரர்கள், பேதி மற்றும் ஈரல் பாதிப்புடையவர்களும் கொலஸ்ட்ரால் உடையவர்களும் முற்றிய தேங்காயைப் பயன்படுத்தக் கூடாது.
தென்இந்தியாவில் கேரள மாநிலத்தில் தென்னை மரங்கள் செழித்து வளருகின்றன.
தகிக்கும் கோடைகாலம் துவங்கிவிட்டது. வெளியே செல்லும் சமயம் காபி, தேநீருக்குப் பதிலாக இனி இளநீர் அதிகம் அருந்துங்கள்.
இளநீர் உங்கள் உடலுக்கும் உள்ளத்தும் புத்துணர்ச்சியை அளிக்கும்.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!