தென்னை மரம் வளர்ப்பு

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கக் கூடிய மர வகைகளில் தென்னை மரம் ஒன்றாகும். தென்னை மரம் நடுவதற்கு முதலில் குழி தயார் செய்ய வேண்டும். 3x3x3 அடிக்கு குழி தோண்ட வேண்டும்.

இரண்டு மரங்களுக்கு இடையே 20 முதல் 21 அடி இடைவெளி இருக்க வேண்டும். இரண்டு தென்னை மரங்களுக்கு இடையில் மாதுளை, கொய்யா ஆகியவற்றை நடவு செய்யலாம்.

தென்னைக்கு குழி தோண்டிய பின் முதலில் 2 முதல் 6 இன்ஞ் அளவிற்கு மணல் இட வேண்டும். பின்பு 5 இன்ஞ் அளவிற்கு இலை சருகுகளை நிரப்ப வேண்டும். பசுந்தழை உரம் ஒரு அடி உயரத்திற்கு இட வேண்டும். பசுந்தாள் உரம் ஒரு அடி உயரத்திற்கு இட வேண்டும். குழி நிறைந்த பின்பு நன்கு மக்கிய தொழு உரம் ஒரு அடி உயரத்திற்கு இட வேண்டும்.

பின் குழியில் தண்ணீர் விட்டுவந்தால் ஒரு மாதத்தில் குழியின் அளவில் பாதியளவு 1 ½ அடி முதல் 2 அடி வரை நன்கு மக்கி குழி தயராகிவிடும். பின் நல்ல தென்னை நாற்றுகளை வாங்கி நடவேண்டும்.

 

தென்னை நடவுமுறை

குழியைத் தயார் செய்து பின் 3 இன்ஞ் அளவிற்கு மணல் இட்டு குழியின் நடுவே தென்னை நாற்றை நடுவில் வைத்து சுற்றிலும் மணலும், தொழுவுரமும் கலந்த கலவையை தென்னை நாற்றில் உள்ள தேங்காய் மறையும் அளவிற்கு இட வேண்டும்.

தென்னையை வேர் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கு குழிக்கு ½ கிலோ வீதம் வேப்பம் பிண்ணாக்கு இட்டு நீர்விட வேண்டும்.

 

தென்னை பராமரிப்பு

தென்னை நட்ட பின்பு அவற்றை பராமரிக்க ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஊட்டமளிக்க வேண்டும். ஊட்ட மளிக்க களைச் செடிகள் மற்றும் பிண்ணாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

முதல் மூன்று ஆண்டுகளுக்கு வாரம் ஒருமுறையும், பின்பு 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். மரம் பூத்து காய்க்கும் வேளையில் தண்ணீர் அதிக அளவு தேவைப்படும். அது சமயம் நம் வீட்டில் உபயோகப்படுத்தும் பாத்ரூம் தண்ணீர், சமையலறை தண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

பாத்ரூம் தண்ணீரில் சோப்பு, டிடர்ஜெண்ட், பிளீச்சிங் ஆகியன கலந்திருக்கும். இவற்றை இயற்கை முறையில் வடிகட்டுவதற்கு தென்னைக்கு தண்ணீர் செல்லும் வழியில் கல்வாழை நடவு செய்ய வேண்டும். கன்றிலிருந்து ஒரு அரை வட்டமாக ஒரு அடி ஆழம் அகலத்தில் தோண்ட வேண்டும். பின் அதில் கொழுஞ்சி செடிகளை போட்டு அவற்றுடன் ½ கிலோ பிண்ணாக்கு சேர்த்து குழியை மூட வேண்டும்.

இப்படி செய்தால் தென்னை மரம் சிறப்பாக வளரும்.

– இரா.அறிவழகன்