தென்றலே – கவிதை

தென்றல் காற்றே வந்திடுவாய் – நீ

தேன்தமிழ் இசையைத் தந்திடுவாய்

கொன்றை மலரெனச் சிரித்திடுவாய் – நீ

குளிர் நிலவொளியில் குளித்திடுவாய்

கண்இமை அதனுள் களித்திடுவாய் – நீ

காதல் மலரை அளித்திடுவாய்

வானில் சிறகை விரித்திடுவாய் – நீ

வஞ்சனை மனதை எரித்திடுவாய்

சோலை மலர்கள் வாடிடுதே – நீ

சோகம் தீர்க்க ஓடிடுவாய்

மாலை வெயிலின் அழகினிலே – இந்த

மங்கை மனதை வருடுகிறாய்

பெண்ணோ நீயென எண்ணிடவே – பல

பெரியோர் வரிகளில் நிறைந்தவளே

கண்ணே என்முன் தெரிவாயா? – நீ

கனிமொழி இருவரி உரைப்பாயா?

தீக்குணம் உடையோர் மேனியிலும் – நீ

தேனினும் இனிமை சேர்க்கின்றாய்

பூக்களின் அழகை உலகறிய – நீ

புதுமலர் வாசம் பரப்புகிறாய்

ஏக்கங்கள் தவிர்த்திட என்முன்னே – நீ

எதிர்வந்து விழிநீரைத் துடைத்திடுவாய்

கனிவாய் மனதில் நுழைந்தவளே – நான்

காதல் கொண்டேன் உன்மேலே

த . கிருத்திகா

One Reply to “தென்றலே – கவிதை”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.