தென்றல் அடுக்ககம்

அடுக்ககத்தில் கவியரங்கம்.

முன்னுரைத் துளி

அடுக்கு மாடி குடியிருப்பின் கற்பனை கவியரங்கு நிகழ்ச்சியாக இந்த சின்னஞ்சிறு நாடக நூலைப் படைத்துள்ளேன். இளம் வாசகர்களுக்குப் பயன்படும் என்ற நோக்கத்தில் சமர்ப்பிக்கிறேன். நன்றி.

குறிப்பு : இந்த நூலில் படைக்கப்பட்ட பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல

காணிக்கை இளைய தலைமுறையினருக்கு

திரை எழுகிறது.

பின்னணியில் அடுக்கு மாடிக் குடியிருப்பு மொட்டை மாடி போன்ற அமைப்பு. வளர் இளம் பெண்கள் கீழே அமர்ந்திருக்கிறார்கள்.

வளர் இளம்பெண் அல்லி எழுந்து நிற்கிறாள். அப்போது சேலை உடுத்திய இளைஞி ரோஜா அங்கு வருகிறாள். அவள் அமர்வதற்காக அல்லி, நாற்காலியை எடுத்து வருகிறாள். ரோஜா அமர்கிறாள். அல்லி பேசுகிறாள்

அல்லி : தென்றல் அடுக்ககக் குடியிருப்பில் என் உடன் வசிக்கும் பதின்பருவ தோழிகள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். அந்தி சாயும் வேளையில் நாம் சந்தித்து மகிழ இது ஒரு சந்தர்ப்பம்.

மேல்நிலைத் தேர்வுகளோடு நுழைவுத் தேர்வுகளுக்காகவும் நாம் ஆயத்தமாக வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும், நம்மை இலேசாக ஆக்கிக் கொள்ள இங்கே கூடி உள்ளோம்.

நாம் படித்த தமிழின் சுவையை நமக்குள் பகிர்ந்து கொள்ள உள்ளோம். நாம் செவிக்குத் தரும் உணவை நம்மோடு சேர்ந்து சுவைக்க வந்துள்ள ரோஜா அக்காவை வரவேற்கிறேன் உங்கள் அனைவரின் சார்பாக.

பேராசிரியை ரோஜா அக்கா எனக்கு வழிகாட்டி. தமக்கையார் என்றும் இந்தத் தங்கச்சியின் கட்சி. இல்லை இல்லை கட்சி என்றால் அரசியல் கட்சி அல்ல. அவர் என்றும் என் பக்கம் நிற்பார் என்று சொல்ல வந்தேன்.

என் அன்னையாரிடம் ரோஜா அக்காவைப் பற்றிப் பேசத் தொடங்கினால் போதும். அம்மா ரோஜா மலரே ராஜகுமாரி! சின்னச் சின்ன ரோஜா! சிங்கார ரோஜா! என்றெல்லாம் பாடத் தொடங்குவார். நானும் என் அண்ணனும் ஓடத் தொடங்குவோம்.

என் அப்பா அதற்கு மேல். ரோஜா அக்கா என் இல்லம் வரும் தருணங்களில் ரோஜா தலைப்பு தமிழ்த் திரைப்படங்களைப் பட்டியலிடுவார். ரோஜாவின் ராஜா, சிகப்பு ரோஜாக்கள், வெள்ளை ரோஜா.

நடிகை ரோஜா அறிமுகமானதோ செம்பருத்தி என்றெல்லாம் பேசிக் கொண்டே இருப்பார். என் காதோரம், ரோஜா அக்கா, சினிமாப் பைத்தியம் என்று ஒரு திரைப்படம் வந்தது என்ற தகவலைக் கூறி விட்டுச் செல்வார்.
(ரோஜாவின் முகத்தில் புன்னகை)

சரி. நீ பேசியது போதும் என்கிற உங்கள் உள்ளத்தின் குரல் எனக்குக் கேட்கிறது. இப்பொழுது நம் தோழி மல்லிகை வருகிறாள். கரங்கள் பற்றிப் பேசப்போகும் அவளைத் தங்கள் கரவொலியால் வரவேற்றிடுங்கள்.
(கரவொலி)

அல்லி அமர்கிறாள். மல்லிகை பேச வருகிறாள்.

மல்லிகை : அன்புத் தோழியருக்கும் பேராசிரியை ரோஜா அவர்களுக்கும் வணக்கம். மாலை வேளையில் தங்கள் கைகளோடு ஒட்டிக் கொண்டிருக்கும் கைபேசிகளுக்கு ஓய்வளித்து இங்கு குழுமியுள்ள உங்களுக்கு நன்றி.

சந்திரன் வருவதற்குள் அதுதான் நீலவானில் சந்திரன் வருவதற்குள் பேசி முடிக்க வேண்டும் அல்லவா?
என்னைக் கரவொலியால் வரவேற்றீர்கள். தங்கள் வளைக் கரங்களுக்கு என் நன்றி.

தோழி அல்லி கூறியது சரிதான். கரங்களைப் பற்றித்தான் அடியாள் பேசப் போகிறேன்.
அன்றாடம் நம் பணிகளைச் செய்திட உதவும் கைகள், பேச்சிலும் எழுத்திலும் உதவி செய்கின்றன.

ஆடவரின் வீரம் வெளிப்படுவது கைகளால். மகளிரின் ஆடல்கலை நயங்களை வெளிப்படுவதும் கைகளால்.

ஒருவர், ‘அவர்தான் என்னைக் கைதூக்கி விட்டார்‘ என்றால் பேருதவி புரிந்தார் என்று பொருள்.

‘தாய் கைகளாரத் தழுவினாள்’ என்றால் எல்லையற்ற அன்பை வெளிப்படுத்தினாள் என்று பொருள்.

கை விட்டு விட்டார் என்றால் தக்க சமயத்தில் உதவி புரியவில்லை என்று பொருள். மனித இயல்பு அப்படித்தான். அதனால் தான் பெரியவர்கள், கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்று சொல்லிச் சென்றனர்.

கவியரசர்கள், பெரும்புலவர்கள், எழுத்தாளர்கள் தங்கள் திருக்கரங்களால் படைத்தவை இலக்கியங்கள்.
வரையும் கலை கைவரப்பற்றவர்களின் கரங்கள் தூரிகைகளால் படைத்தவை ஓவியம்.

‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்று சொன்னாள் ஔவைப் பாட்டி.

எண்ணற்ற சிற்பிகளின் கைவண்ணம் காணக் கிடைக்கின்றன நம் பண்பாட்டுச் சின்னங்களாய்.

கைகளால் உருவாக்கப்பட்டவையே நம் கண் முன் விரியும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியாய். அவர்களுக்குப் பெயர் கைவினைக் கலைஞர்கள்.

தோல்பாவைக் கூத்தில், பொம்மலாட்டத்தில் ஆட்டக் கலைஞர் தம் கரங்களால் ஆட்டுவிக்கும் பொம்மைகள் நமக்கு கதைகளைக் கூறும்.

‘ஆட்டுவித்தால் ஆடுகிறேன்’ என்று சமயக் குரவர் பாடினர் அல்லவா? அவன் ஆட்டுவிக்க நாம் ஆடுகிறோம் என்பதுதான் அதன் பொருள்.

‘உடுக்கை இழந்தவன் கை போலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்பது திருவள்ளுவர் வாக்கு.

ஒருவன் இடுப்பில் உடுத்தியிருந்த வேட்டி அவிழ நேரிட்டால் கைகள் ஓடோடி வந்து மானத்தைக் காப்பது போல் நண்பனின் துன்பத்தை விரைந்தோடிப் போக்குபவனே உண்மையான நண்பன் என்று நட்புக்கு இலக்கணம் பகர்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

அதிர்ச்சி செய்தி வந்தால் பணி செய்ய ஏதும் தோன்றாத நிலையில் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை என்று சொல்வார்கள்.

கைகளைப் பிசைந்து நிற்கும் நிலை என்பது பிரச்சினைக்கான தீர்வு மனதில் தோன்றாத நிலை.
கையால் ஆகாத நிலை, கையறு நிலை, பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் அதன் தீமைகளை, கெடுதல்களை ஏற்றுக் கொள்ளும் நிலைமை ஆகும்.

அவன் கைகளில் தாங்குகிறான் என்றால் நன்றாகப் பார்த்துக் கொள்கிறான் என்று பொருள்.

கையூட்டு வாங்குபவரை கைசுத்தம் இல்லாதவர் என்றுதான் ஊரார் சொல்வார்கள். ஊழலில் மூழ்கித் திளைப்பவரின் கரங்களைப் பற்றி கூறும்போது கறை படிந்த கரங்கள் என்று இந்த உலகம்.

கருமியை வர்ணிப்பவர்கள், எச்சில் கையால் காக்கையை விரட்ட மனம் இல்லாதவன் என்று மக்கள் சொல்வார்கள்.

இப்படித்தான் கைகளுக்குக் கெட்ட பெயர் உண்டாகிறது பாருங்கள். திருட்டில் ஒருவன் ஈடுப்பட்டால் கைவரிசையைக் காட்டி விட்டான் என்று சொல்கிறார்கள்.

படிக்கும் பதின்பருவத்தில் படிப்பை மறந்து ஆடவர் விரித்த காதல் வலையில் விழுந்த நம் தோழியர் சிலர் ஏமாந்து நின்றனர். அவர்களை நட்டாற்றில் தவிக்கச் செய்து கைவிட்ட ஆடவரை எண்ணி என் விழிகளில் வழிந்தோடும் கண்ணீர்.

கைகளுக்கு நல்ல பெயரும் உண்டு. பெரிய மனிதருக்கு உறுதுணையாக இருக்கும் ஒருவரை அவருடைய வலக்கரம் என்றே அழைப்பார்கள்.

தரவுகளையும் தகவல்களையும் நன்றாகத் தெரிந்து வைத்திருப்பவர்களை விரல் நுனியில் விவரங்களை வைத்திருக்கிறார் என்று கூறுவர்.

ஆனால், ஔவைப் பாட்டி, கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்று மொழிந்தார். ஔவைப் பாட்டியின் தன்னடக்கத்தைப் பாருங்கள்.

சொற்பமான எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம் என்று கூறுவார்கள்.

ஒருவர் மற்றொருவரின் கண்ணில் வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்து ஆதரவையும் பரிவையும் வெளிப்படுத்துவர்.

கைகள், கைம்மாறு கருதுவதில்லை ; புகழ்ச்சியை விரும்புவதில்லை. ஆம். இப்படித்தான் புலவர் பெருமான் சிவப்பிரகாச சுவாமிகள், தம்முடைய நன்னெறி நூலின் பாடல் ஒன்றில் குறிப்பிடுகிறார்

கைகள் பலவித பணிகளில் நமக்கு உதவினாலும் சுவாமிகள் கைகள் நாம் வயிறார உண்ண உதவுவதைக் குறிப்பிடுகிறார்.

இன்று நம்மில் பலர் கரண்டியின் உதவியுடன் பசியாற்றல் பணியைச் செய்தாலும் அதற்கும் கைகள்தானே உதவுகின்றன. கைம்மாறு கருதாமல் உதவும் கைகளை எப்படித்தான் புகழ்வதோ என்று புலவர் பெருமான் கூறியுள்ளார்.

குழந்தைகள் தங்கள் கைகளை அசைத்து பெற்றோரை வழியனுப்பி வைப்பார்கள். காதலர்கள் பிரியும் போதும் சேரும்போதும் கைகளுக்கு வேலை அதிகம். அனுபவமா என்று கேட்டு விடாதீர்கள்.

நம்முடைய பணிகளை நாமே செய்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் முதுமொழி : தன் கையே தனக்கு உதவி. இதனையே தமது கொள்கைகளுள் ஒன்றாகக் காந்தியடிகள் கடைப்பிடித்து ஒழுகினார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சமையலில் ஒருவருடைய கைப்பக்குவம் பெரிதாகப் பேசப்படும். அம்மாவின் உணவு சுவையாக இருந்தால் சமைத்த அந்தக் கைகளுக்குத் தங்க ஆபரணம் வாங்கித் தர வேண்டும் என்று அப்பா கூறுவார். ஆனால் வாங்கித் தர மாட்டார்.

கைவண்ணத்தைக் காட்டுங்கள் என்றால் திறமைகளை வெளிப்படுத்துங்கள் என்று பொருள்.

அடிக்கிற கைதான் அணைக்கும் என்கிற சொலவடை கண்டிப்பு உள்ள இடத்தில் அன்பு இருக்கும் என்பதைக் குறிக்கும்.

சிலருடைய கைவிரலாகவே மாறி விட்ட புகையிலை சுருட்டின் புகை அவர்களுக்கும் பகை. அருகிலுள்ள மனிதர்களுக்கும் பகை.

உதவி கேட்கவோ கடன் பெறவோ ஒருவரிடம் போய் நிற்கும்போது அவர் உதவி செய்யவில்லை அல்லது கடன் தரவில்லை என்றால் அவர் கை விரித்து விட்டார் என்று கூறுவது வழக்கம்.

செவிப்புலன் இல்லாதவர்கள், தங்களுக்குள்ளும் பிறருடனும் சைகை மொழியில் உரையாடுவார்கள். இந்த சைகை மொழியில் பயன்படுத்தப்படுபவை கைகளே.

தொழில்நுட்பம் கோலோச்சும் இந்தக் கால கட்டத்தில் அவர்கள், கைபேசியின் காணொளி வாயிலாக உரையாடுகிறார்கள்.

இணைந்து செயல்படுவோம் என்பதைக் குறிக்க கைகோத்து செயல்படுவோம் என்று கூறுவர்.

‘கை வீசம்மா! கை வீசம்மா!’ என்று அன்னை அன்று பாடிய பாடல் நம் நெஞ்சை விட்டு நீங்காத ஒன்று.

ஒருவர் தொடங்கிய செயல் நன்றாக முடிந்தால் இவர் தொட்டால் துலங்குகிறது ‘கைராசிக்காரர்’ என்று ஊரார் அழைப்பார்கள். நோய்களைப் பறந்தோடச் செய்த மருத்துவர்கள், கைராசி டாக்டர் என்று மக்களால் போற்றப்பட்டனர்.

மருத்துவர், நோயின் தன்மை அறிய முதலில் தொட்டுப் பார்ப்பது கைகளைத்தான். நாடித்துடிப்பை அறிய கைகள் உதவுகின்றன.

வாய்ப்புகள் ஈடேறவில்லை என்றால் கை நழுவிப் போய் விட்டது என்று சொல்வது
வழக்கம்.

ஒருவருக்கொருவர் கை கொடுத்துக் கொள்வது நட்பின் தொடக்கத்தை உணர்த்தும்; வாழ்த்துதலையும் பாராட்டுதலையும் குறிக்கும். கைகளில் ஆயுதம் ஏதுமில்லை என்பதைத் தெரிவிக்கவே கைகுலுக்கல் வழக்கத்தில் வந்தது என்றும் கூறுவர்.

மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்திலும் உடலின் பல அவயங்கள் ஈடுபடுத்தப்பட்டாலும் உழைப்பின் பெருமை என்னவோ கரங்களுக்கு. உழைக்கும் கரங்கள் என்று கைகளே சிறப்பிக்கப்படுகின்றன.

வேளாண் இயந்திரங்கள் வருவதற்கு முன்பு விவசாயத்தில் நாற்று நடுதல், உழுதல், அறுவடை செய்தல் என அனைத்து பணிகளிலும் கரங்கள்.

உழைக்கும் கரங்கள் ஈடுபட்டன. நெசவிலும் போர்ப்படை ஆயுதங்கள், கலை வேலைப்பாட்டுடன் கூடிய ஆபரணங்கள், கட்டிடங்கள், ஆலயங்கள், நீராதாரங்கள் அனைத்தையும் படைத்தவை உழைக்கும் மக்களின் கரங்கள்.

ஆலைகளும் சோலைகளும் உருவாக, தொழிலாளர் சோதரர் இரத்தம் சொரிந்தனர் என்பதைப் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், சித்திரச் சோலைகளே பாடல் வாயிலாக நமக்கு உணர்த்துகிறார்.

கைத்தொழில், கைத்தறி சிறந்து விளங்கிய வரலாறு கொண்டது நம் செந்தமிழ்நாடு.

மிகச்சிறிய அளவிலான நூல்கள், கையடக்கப் பதிப்பு என்றும் கையடக்க நூல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

கைகளால் தொட்டதை யெல்லாம் பொன்னாக்கும் வரம் பெற்ற மிதாஸ் கதையை மறக்க முடியுமா?

வியாபாரத்திற்கு நம் கைப்பொருளைச் செலவழிப்பது கை முதல் என்றழைக்கப்படுகிறது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதால் கைப்பொருளை வீணாக்கக் கூடாது என்று பெரியவர்கள் எச்சரிப்பார்கள். கையில் உள்ள இருப்பு, கைக்காசு என்றெல்லாம் பணத்தைக் குறிப்பிடுவர். கையிருப்பு என்ற சொல்லாட்சி நம்மிடையே உண்டு.

மற்றவர்களைத் தங்கள் சொல்பேச்சு கேட்கும்படி வசப்படுத்தி இருப்பவரை ஆட்களைக் கைக்குள் வைத்திருக்கிறான் என்று சனங்கள் குறிப்பிடுவார்கள்.

தாய், தன் மகனுக்கு நல்ல வருமானம் என்பதைத் தெரிவிக்க அவன் கை நிறையச் சம்பாதிக்கிறான் என்று கூறுவாள். இன்று மகளிரும் கை கொள்ளாமல் நிறையப் பொருள் ஈட்டுகிறார்கள்.

பகைவர், நம்மை நோக்கித் தொழுத கையில் கொலைக்கருவி மறைந்திருக்கும் என்பதை குறட்பா ஒன்றில் திருவள்ளுவர் நமக்கு உணர்த்துகிறார்.

கைமீறிப் போய் விட்டது என்றால் பிரச்சினை கட்டுப்படுத்தும் சூழலில் இல்லை என்று பொருள்.

அங்கே சிலர் தங்கள் கைக்கடிகாரத்தைப் பார்ப்பதால் என் இரு கரம் கூப்பி அடியாள் உரையை நிறைவு செய்கிறேன். நன்றிக்கு முன் என் பாட்டியார் சொல்லும் சொற்களைப் பகிர்ந்து கொள்கிறேன்

கைகளுக்குப் பல வேலைகள். ஆனால், இறைவனைத் தொழும் கைகளே மறுமைப் பயன் அடையக் கூடிய கைகள்.

நன்றி. வணக்கம். தங்கள் அனைவருடைய மேற்படிப்பு நன்றாக அமைய வாழ்த்துக்கள். நீங்கள் கைகளால்
தொட்டதெல்லாம் துலங்கட்டும் வாழ்க்கை, வாழ்க்கை சிறந்து விளங்கட்டும்
(கரவொலி)

(மல்லிகை அமர்கிறாள்)

(ரோஜா பேசுகிறாள்)

ரோஜா : தமிழாசிரியையின் பெயர்த்தி என்பதை மல்லிகா தன் உரையில் காட்டி விட்டாள். கைகளின் பெருமைகளைப் பற்றி அவள் கூறியதும் கூறாமல் விட்டதும் நம்மைச் சிந்திக்க வைக்கும். பதின்பருவத்தில் அவள் பக்குவமாகப் பேசுவது மனநிறைவு தருகிறது.

(மல்லிகை எழுந்து நின்று ‘நன்றி அக்கா!’ என்று கூறுகிறாள். அல்லி பேச வருகிறாள்)

அல்லி : கைகளைப் பற்றிப் பேசி கைத்தட்டல் வாங்கினாள் மல்லிகை. நெறியாளும் பணியை அடியாளுக்கு அளித்த தோழிகளுக்கு நன்றி. இப்பொழுது நம்மிடையே பேசுவதற்கு தோழி செண்பகம் வருகிறாள்.

(செண்பகம் எழுந்து முன்னால் வந்து பேசுகிறாள்)

செண்பகம் : ரோஜா அக்காவுக்கும் வெண்ணிலா அடுக்ககக் குடியிருப்பின் தோழிகளுக்கும் வணக்கம்.
கைபேசியைக் கைவிட்டு கைகள் பற்றிய மல்லிகையின் உரையை கேட்டீர்கள்.

இங்கு இருப்பவர்கள் எல்லாம் படிப்பிலும் பொது அறிவிலும் கெட்டிக்காரர்கள். சொல்லுங்கள் உலகின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?

சரி சரி ஆளாளுக்கு ஒரு பதில் மனதில் ஓடும் என்று எனக்குத் தெரியும். நானே கூறுகிறேன். நான் கூறுவது என்பது தவறு சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.

இதுவரை உலகம் பெற்றுள்ள எல்லா அறிவும் மனத்தில் இருந்து வந்ததே. எல்லையற்ற நூற்களஞ்சியம் உங்கள் சொந்த மனத்திற்குள்ளேயே இருக்கிறது.

சுவாமி விவேகானந்தர் கூறியதை நீங்கள் மனதில் நிறுத்துங்கள்.வருங்காலத்தில் போட்டி தேர்வு, மேற்படிப்பு தேர்வு, வாழ்க்கை தேர்வு, தொழில் தேர்வு எல்லாவற்றிலும் வெற்றிகளைக் குவிக்கலாம்.

ஆக்ஸ்போர்டு அகராதி அமைப்பு 2018 ஆம் ஆண்டுக்காக தேர்ந்தெடுத்துள்ள இந்தி மொழிச் சொல் நாரீ சக்தி. பெண்ணின் வல்லமை. தங்கள் வல்லமையை வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் வெளிப்படுத்துங்கள்.

அகந்தையுடன் அறிவுரையாக அள்ளித் தெளிக்கவில்லை. தோழியாகக் கூறும் தெம்புரையாகத்தான் சொல்ல நினைத்தேன். கூறினேன்.இறைவி உங்களுக்கு உறுதுணையாக இருப்பாள். நன்றி. வணக்கம்.

(கரவொலி)

(செண்பகம் செல்கிறாள்)

அல்லி : சிற்றுரையாகப் பேசிச் சிந்திக்க வைத்தாள் தோழி செண்பகம். இப்பொழுது தோழி முல்லை பேச வருகிறாள்.

முல்லை : இனிய மாலை வணக்கம்.பேராசிரியை அவர்களுக்கு வணக்கம். உங்களைப் போல் நான் அவரை அக்கா என்று விளிக்க முடியாது. வருங்கால அண்ணி, மற்றொரு அன்னை அல்லவா?

(ரோஜா முறைக்கிறாள்)

அதாவது.. அதான்.. நீங்கள் எல்லாம் உங்கள் வருங்கால அண்ணியை அன்னை போல் மதியுங்கள் என்று கூற வந்தேன். நாக்கு குளறி உளறிக் கொட்டி விட்டது. அது போகட்டும்.

மல்லிகையிடம் கை பற்றிய கைச்சரக்கு இருந்தது. அவளுடைய கைவண்ணம் நாம் கண்டோம். என்னிடம் கவித்துவம் பேசும் பொருள் ஏதுமில்லை.

நெறியாளர் அல்லி தகவல்களைத் தெரிவிக்கலாம் என்று கூறினாள். இன்று தகவல்களை மற்றவர்களிடம் எவரும் கேட்பதில்லை. இணையத்தில் தேடுபொறியில் தேடிக் கொள்கிறார்கள்.

கைபேசி நமக்கு வாய்த்த நல்ல அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். நாம்தான் அவற்றுக்கு அடிமையாக உள்ளோம்.

பதின்பருவத்திலிருந்து இளமைப் பருவத்தில் நுழையும் நாம் கைபேசி ஊடகங்களில் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது என்று நான் கூற விரும்புகிறேன். உபதேசமாக அல்ல யோசனையாகக் கூறி நிற்கிறேன்.

ஔவைப் பாட்டி எப்படி பேச வேண்டும் என்று கூறியுள்ளார். வெட்டெனப் பேசேல். நயம்பட உரை. இந்த இரண்டு பொன்மொழிகளும் வருங்காலத்தில் காட்சி ஊடகங்களில் வெற்றிக்கொடி நாட்ட விரும்பும் அல்லி போன்ற தோழிகளுக்கு உதவும். மற்றவர்களுக்கும் அவரவர் வாழ்க்கைப் பயணத்தில் உதவும்.

நுழைவுத்தேர்வு பற்றியும் மேற்படிப்பு பற்றியும் திரும்பத் திரும்பப் பேசி விட்டோம். ஆனால் வாழ்நாள் முழுவதும் தொழில் நிமித்தமாக, வேறு நோக்கத்திற்காக நாம் படித்துக் கொண்டுதான் இருக்கப் போகிறோம்.

எப்படி வாசிக்க வேண்டும் என்று என் அண்ணன் சதீஷ் கூறியதை இங்கு சுருக்கமாக எடுத்துக் கூற முயல்கிறேன்.

வாசிப்பதை நான்கு வகையாகப் பிரிக்கின்றனர்.

1.Skimming – மேம்போக்காகப் படித்தல்

2.Scanning – கிரகித்துக் கொள்ளுதல்

  1. Intensive reading – ஆழ்ந்து படித்தல்

4.Extensive reading – விரிவாகப் படித்தல். வாசிக்கும் திறன் – Reading skills வசப்பட, வளர்த்துக் கொள்ள இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

வாசியுங்கள். வாழ்க்கையைக் கொண்டாடுங்கள். வெற்றி மாலை பெறுங்கள். நன்றி. வணக்கம்.

(கரவொலி)

அல்லி : தனக்குத் தெரிந்த தகவலை வெளியிட்ட தோழி முல்லைக்கு நன்றி. வாசிப்பது எப்படி என்று கூறினாளே அந்தத் தகவலைக் குறிப்பிட்டேன். சரி. இப்பொழுது தோழி மரிக்கொழுந்து வருகிறாள் நம்மிடையே பேச

மரிக்கொழுந்து : பேராசிரியை அவர்களுக்கும் தோழியருக்கும் வணக்கம். அடியாள் இன்று காலை எழுதியதை இப்பொழுது உங்களிடையே அரங்கேற்றுகிறேன். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதுதானே அறிவுடைமை?

கடவுள் மறைந்து விட்டார். கடவுளே கடவுளே என்றழைத்தேன். உரக்கக் குரல் கொடுத்தேன்.

அம்மா என்னை உலுக்கினார். என்ன ஆயிற்று என்றார்.
வீணாக்கிய பொழுது மீண்டும் கிடைக்காது என்றேன்.
குழந்தை படித்துப் படித்து குழம்பி நிற்கிறது என்றாள் தாய்.

நன்றி வணக்கம். (மரிக்கொழுந்து செல்கிறாள்)

ரோஜா : அறிவுடைமை என்கிற சொல்லை மரிக்கொழுந்து கூறினாள். திருக்குறள் காட்டும் பத்து உடைமைகள் என்னென்ன தெரியுமா?

தமிழறிஞர் ச. வே. சுப்பிரமணியன் கூறுகிறார் : மனிதன் நற்பண்புகளுடன் வாழ பத்து உடைமைகளை திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். அவை –

அல்லி :திருக்குறள் பற்றிய தமிழறிஞர் ச. வே. சுப்பிரமணியன் அவர்கள் கூறியதைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அக்கா. இப்பொழுது நம்மிடையே பேசுவதற்கு தோழி மலர் வருகிறாள்.

மலர் : தமிழ் மங்கையருக்கு வணக்கம். எங்களுக்கு ஆதரவாக இருக்கும் ரோஜா அக்காவுக்கு வணக்கம்.

அல்லி : தென்றல் அடுக்ககக் குடியிருப்பின் அழகு நிலா நம் தோழி செந்தாமரை. மற்றவர்கள் அழகாக இல்லையா என்று சண்டைக்கு வந்து விடாதீர்கள்.

செந்தாமரை எப்போதும் துடைத்து வைத்த குத்துவிளக்கு போல் பளிச்சென்று இருக்கிறாள் என்று என் அன்னையார் கூறுவார். வா. பேசாமடந்தை என்னதான் பேசுகிறாய் என்று பார்ப்போம்.

செந்தாமரை : வணக்கம்.

(கரவொலி)

(ரோஜாவும் கை தட்டுகிறாள்)

அல்லி : ரோஜா அக்கா இப்பொழுது கவிதை மொழிவார். அதனைக் கேளுங்கள். இந்த இனிய மாலைப்பொழுது நிகழ்ச்சியை அவரது உரையுடன் நிறைவு செய்ய உள்ளோம்.

ரோஜா : துறுதுறுப்பான வளர் இளம் பெண்கள் உங்களைப் பார்த்தாலே மனச்சுமை நீங்கும். கவலைகள் பறந்து போகும். அதனால் தான் என்னைப் புதுப்பித்துக் கொள்ள இங்கு வந்தேன்.

துள்ளித் திரிந்து, துடிப்பாக வண்ணத்துப்பூச்சிகளாய்ச் சுற்றி வந்த உங்கள் மீது பொறுப்பு சுமை படிப்பு ஆக, தொழில் ஆக வந்தமர்கிறது.

உங்கள் இளமைத் துடிப்பும் சுறுசுறுப்பும் சலிப்படையாத நிலையும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
அல்லி நான் கவிதை சொல்வேன் என்று என்னைக் கேட்காமல் சொல்லி விட்டாள்.

நாம் அனைவரும் கதை கேட்டு வளர்ந்தவர்கள். மாமல்லபுரம் அருகே புலிக்குகை என்ற இடத்தில் பல்லவர் காலத்து நாடகமேடை அமைப்பு இப்போதும் உள்ளது.

நமது முன்னோர்களைப் போலவே நமக்கு கதை பிடிக்கும். நாடகம், தெருக்கூத்து, வானொலி, திரைப்படம், சின்னத்திரை ஆகியவை அனைத்தும் கதைகளுடன் பின்னிப் பிணைந்தவை.

நாமும் கற்பனைக் கதையைப் பார்க்கிறோம் ஒலி ஊடகத்தில் கேட்கிறோம். வம்புதான் என்றாலும் மனத்தை அடக்காமல் பிறர் வாழ்வில் நடந்தவற்றை ஆவலோடு கேட்கிறோம். பீடிகை எதற்கு? நான் ஓர் உண்மைக் கதையை உங்களுக்குச் சொல்கிறேன்.

உங்களுக்கு கதையும் பிடிக்கும் சாக்லேட்டும் பிடிக்கும். இது ஒரு சாக்லேட் மன்னரின் கதை. உண்மைக் கதை. வெற்றிக் கதை. ரத்தினச் சுருக்கமாக உங்களுக்கு

அமெரிக்காவின் சாக்லேட் மன்னர் என்று போற்றப்படுபவர் மில்ட்டன் எஸ். ஹெர்ஷி.

ஹெர்ஷி சந்திக்காத தோல்விகள் இல்லை. அத்தனை தோல்விகளையும் தாங்கிக் கொண்டு தமது தொடர் முயறசிகளால் வெற்றி பெற்ற இவருடைய வாழ்க்கை, இன்று பல வணிகவியல் கல்லூரிகளில் பாடமாகப் படிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் புகழ் பெற்ற சாக்லேட் பிராண்ட் ஹெர்ஷி. தமது பெயரையே பிராண்ட் பெயராக ஆக்கிய ஹெர்ஷியின் வெற்றிக்குப் பின்னால் இருந்தவை அவரது விடாமுயற்சி, கடின உழைப்பு, கற்றுக் கொள்ளத் தயங்காத பண்பு.

ஹெர்ஷி (18-09-1857-13-10-1945) சுயதொழில் தொடங்கும் ஆர்வத்துடன் தமது 19வது வயதில் பிலடெல்பியாவில் மிட்டாய்க் கடையைத் தொடங்கி நடத்தி வந்தார்.

அங்கே பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்தார். கடின உழைப்பைச் சிந்தியும் அந்த விற்பனையகத்தை வெற்றிகரமாக நடத்த முடியவில்லை. அவர் மனம் தளரவில்லை.

பிலடெல்பியா நகரத்தை விட்டு நியுயார்க் நகருக்குச் சென்றார். அங்கு சாக்லேட் அங்காடியைத் தொடங்கினார்.

அதிலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. நியுயார்க் நகரில் ஒரு சாக்லேட் தயாரிப்பு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே பால் சேர்த்து சாக்லேட் செய்யும் வழிமுறைகள் மற்றும் நுட்பங்களைக் கற்றுக் கொண்டார்.

பின்னர், கேரமல் சாக்லேட்கள் தயாரிக்கும் நிறுவனத்தைத் துணிச்சலுடன் தொடங்கினார். இந்த முறை அவர் முயற்சி தோல்வியில் முடியவில்லை. அங்கிருந்து அவருடைய வெற்றிப் பயணம் தொடர்ந்தது.

மக்கள் கொண்டாடும் அபிமான பிராண்ட் ஆக ஹெர்ஷி உச்சத்தைத் தொட்டது. அவர் அதோடு நின்றுவிடவில்லை. தாமாகவே அனைத்து வசதிகளையும் கூடிய நகரீயம் (township) நிர்மாணித்தார்.

அந்த நகரின் பெயர் – ஹெர்ஷி. ஒரு நகரத்து மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் நிறைந்ததாக விளங்கியது அந்த நகரீயம். அது மட்டுமா? தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்காக அழகான பொழுதுபோக்குப் பூங்காவையும் கட்டினார். இன்றும் அந்த நாட்டின் சிறுவர்சிறுமியரைக் கவர்ந்திழுக்கும் பொழுதுபோக்குப் பூங்காவாக அது திகழ்கிறது.

ஹெர்ஷிக்கு குழந்தைகள் இல்லை. ஹெர்ஷியும் அவரது துணைவியாரும் தங்கள் சொத்துடைமைகளை ஏழைப் பிள்ளைகளின் கல்விக்காக எழுதி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசு, இவர் நினைவாக 1995 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டது….

ஹெர்ஷியின் கதையை உங்கள் மனதில் கொள்ளுங்கள். தோல்வியால் துவளக் கூடாது தளரக் கூடாது விட்டு ஓடி விடக் கூடாது என்று உறுதி கொள்ளுங்கள்.

வெற்றி வாகை சூடுவீர்கள் நிச்சயமாக. உங்களுக்காக நான் சமர்ப்பிக்கும் கவிதை இதோ….

எல்லாம் செயலி என்று ஆகி விட்ட நிலையில், நான் தங்களுக்கு ஒரு செயலியை அறிமுகம் செய்கிறேன். உங்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது. இருப்பினும் கூறுகிறேன்.

Adobe Spark – கற்றலை எளிதாக்க உறுதுணை புரியும் செயலி. Web application ஆக இணைய வடிவத்திலும் உள்ளது.

இந்த செயலியில் teachers and educators தங்கள் கற்பிக்கும் வழிமுறைகளை மாணவமணிகளுக்கு visual treat ஆக தங்கள் போஸ்ட் மூலம் வழங்க முடியும்.

மாணவர்களும் தங்கள் படைப்புகளை visual stories ஆக இதில் பதிவேற்றலாம். தற்போது வரை, Adobe கட்டணமில்லாமல் இதனை வழங்குகிறது.

வருங்காலத்தில் premium features அல்லது paid option சேர்க்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

புதிய தலைமுறையினர் நடத்திய இந்த தமிழ் நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்தித்து தமிழ் அமுதம் பருகினேன். அழைத்த தங்கை அல்லிக்கு நன்றி. விடை பெறுகிறேன். மீண்டும் வாழ்த்துக்கள். சந்திப்போம்.

(திரை)

(நிறைந்தது)

மதுரகவி சீனிவாசன்
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.