குளித்துவிட்டு பாத்ரூமைவிட்டு வெளியே வந்த நிமிஷா, ஹால் சுவர் கடிகாரத்தைப் பார்த்தபோது காலை மணி ஏழு பத்து ஆகியிருந்தது.
“ப்ச், மணிக்கு என்ன அது பாட்டுக்கு ஆகிடும். தினமும் ‘மாங்குமாங்கு’னு நடந்து போயி எட்டு முப்பது எலக்ட்ரிக் ட்ரெயின புடிச்சி தாம்பரத்துல எறங்கி மறுபடியும் பஸ் புடிச்சி எறங்கி ஆஃபீஸ்க்கு கொஞ்ச தூரம் நடந்து போறதுக்குள்ள, என்னமோ, எல்லாம் விதி. பொறந்த பொறப்பு அப்பிடி” என்று நினைத்தபடி முகத்திலிருந்த தண்ணீர்த் திவலைகளை துண்டால் துடைத்துக் கொண்டே தனது அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டாள் நிமிஷா.
அறையில் இருந்த இரும்பு பீரோ ரொம்பவும் பழசாகத் தெரிந்தது. பெயின்ட் அடித்தால் கொஞ்சம் பார்க்கிற மாதிரி இருக்குமோ என்னவோ?
பீரோ வாங்கும்போதே கண்ணாடி வைத்த பீரோவாய் வாங்கப்பட்டிருக்க வேண்டும். காரணம் கண்ணாடியும் ரஸம் போய் கீறல் விழுந்து, அழுக்குப் பிடித்து இருந்தது.
எப்படித் துடைத்தாலும் ‘பளிச்’சென்று ஆகாது போன்ற கண்ணாடியோடு இரண்டறக் கலந்த அழுக்கு.
சுடிதாரை அணிந்துகொண்டு துப்பட்டாவைப் போட்டுக் கொண்டாள். டிரஸ்ஸிங் டேபிளோ, மேக்கப் கிட்டோவெல்லாம் கிடையாது.
டோர் போடப்படாத கப்போர்டிலிருந்த நீலநிற ப்ளாஸ்டிக் குப்பியிலிருந்து தேங்காய் எண்ணெயை இடது கை உள்ளங்கையைக் குழித்து ஊற்றிக் கொண்டு மீண்டும் குப்பியை கப்போர்டில் வைத்துவிட்டு கைகளிரண்டாலும் எண்ணெயைப் ‘பரபர’வென்று தேய்த்துத் தலையில் மஸாஜ் செய்வதுபோல் விரல்களால் ஆங்காங்கே தலைமுடி வேர்களில் சுரண்டிச் சுரண்டித் தேய்த்துத் தடவிக் கொண்டாள்.
கார்மேகம் போல் கன்னங்கரேலென்ற அடர்த்தியான முடி நடுமுதுகுக்கும் சற்று கீழாய்த் தொங்கியது.
சீப்பை எடுத்து லேசாய்க் கலைந்திருந்த வகிட்டைச் சீர்படுத்தினாள். நிமிட நேரத்தில் இழைய வாரி பின்னல் போட்டாள். கருநாகம்போல் வழுவழுத்த பின்னல் முதுகில் ஆடி அசைந்தது.
எண்ணை படிந்த கைகளை முகம் துடைத்த துண்டில் தேய்த்துத் துடைத்தாள். ‘யார்ட்லே லண்டன் ராயல்’ என்ற பெயரோடு நின்றிருந்த பவுடர் டப்பாவிலிருந்து பவுடரை இடது கையில் கொட்டி வலது கையால் காதுகள், நெற்றி, இருகன்னங்கள், முகவாய், மூக்கு என்று தொட்டுத் தொட்டு வைத்தாள்.
பிறகு மொத்தமாய் இழுத்துத் தடவி முகமெங்கும் தடவினாள். மீண்டும் கொஞ்சமாய் பவுடரை எடுத்து முன் கழுத்து, பின்கழுத்து என வைத்துத் திட்டுத்திட்டாய்த் தெரியாமல் மெலிதாய்த் தடவினாள்.
ஐடெக்ஸ் மெரூன் கலர் ஸ்டிக்கர் பொட்டு அட்டையிலிருந்து ஒரு பொட்டை உரித்து கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையே பிடித்துக் கொண்டு பீரோவில் பதித்திருந்த ரஸம் போன கண்ணாடிக்கு முன் வந்து நின்றாள் நிமிஷா.
பொட்டை நெற்றியில் வைத்தபோது அவளின் மேனியில் ஒட்டியிருக்கப் போகிறோம் என்ற தெம்மாந்த ஆசையிலும் கர்வத்திலுமோ என்னவோ பொட்டு ‘பச்’சென்று ஒட்டிக்கொண்டு அவளின் நெற்றியில் ஐக்கியமானது.
இவ்வளவுதான் நிமிஷாவின் மேக்கப். எந்த செயற்கை அழகு சாதன பொருட்களோ, கனமான மேக்கப்போ கிடையாது. அது அவளுக்குத் தேவையுமில்லை.
கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டாள் நிமிஷா.
நிமிஷா அழகை மொத்தமாய்க் குத்தகைக்கு எடுத்துவிட்டவள் போல் அத்தனை அழகு. ஒருபெண்ணின் உடலில் எது எது எப்படி அமைந்திருந்தால் அது அழகுக்கான இலக்கணமோ அப்படி அப்படி அமைந்தவள்.
தனித்தனியாய் அவளை வர்ணிக்க வேண்டாம். வர்ணித்தால் அந்த வார்த்தைகள் அவற்றின் மதிப்பை இழந்து தோற்றுப் போகும்.
பார்ப்பவர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அழகு நிமிஷா. ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் பெண்களுக்கேகூட அவளை இறுக அணைத்து முத்தமிடத் தோன்றும்.
பட்பட்டென்று அறையின் கதவைத்தட்டும் சப்தமும் அக்கா கதவத்தொற.. கதவத்தொறக்கா என்று சப்தமாய்க்கத்தும் பதினான்கு வயதுத் தங்கையின் குரலும் கேட்டது.
இரவு கழற்றி வைத்திருந்த மெல்லிய தங்கச் சங்கிலியைக் கழுத்திலும் ஒற்றை வளையலை வலது கையிலும் அணிந்து கொண்டு ரிஸ்ட்வாட்சை இடது கையில் கட்டி, கட்டிலில் படுக்கைமீது கிடந்த ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு கதவின் அருகில் வந்து ‘டப்’பெனக் கதவைத் திறந்தாள்.
அறைக்கு வெளியே நின்றிருந்த தங்கை வைஷாலி “ஹை அக்கா! கதவத் தொறஞ்சாச்சு கதவத் தொறஞ்சாச்சு” என்று கைதட்டிச்சிரித்தாள்.
அப்படி சிரிக்கும்போது முகத்தை மேல் நோக்கி வைத்துக்கொண்டு சிரித்தாள்.
“அக்கா! அக்கா! நிம்மிக்கா! நிம்மிக்கா!” மீண்டும் கைதட்டினாள்.
“வைசாலிக்கு என்ன வேணும்? அக்காட்ட சொல்லுவியாம். என்ன வேணும் வைசாலிக்கு?” தங்கையைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு கேட்டாள் நிமிஷா.
“சாக்கி, சாக்கி வேணும்”
“ஓ! சாக்லேட் வேணுமா வைஷாலிக்கு? எத்தன சாக்கி வேணும்?”
இரண்டு கை பத்து விரல்களையும் காட்டி “ஏழு சாக்கி!” என்றாள் வைஷாலி.
“ஓ! சாயந்திரம் வரும்போது வைஷாலிக்கு அக்கா சாக்லேட் வாங்கிண்டு வருவேனாம். அம்மாவப் படுத்தக் கூடாது. சமத்தா இருக்கணும் சரியா?”
“ஹை! ஹை! சாக்கி! சாக்கி! அக்கா வாய்ண்டு வருவா! வருவா!” கத்திக் கொண்டே ஓடிப்போய் ப்ளாஸ்டிக் நாற்காலியொன்றில் ஏறி நின்று கைகளைமீண்டும் மீண்டும் தட்டித் தட்டிச் சிரித்தாள் பதினான்கு வயது வைஷாலி. மனவளர்ச்சி குன்றிய(ஆட்டிசம்) வைஷாலி.
வைஷாலி. பதினான்கு வயதில் மனவளர்ச்சிக் குறைபாடு இருந்தாலும் பதின் பருவ வளர்ச்சி அபரிமிதமாகவே இருந்தது.
பதினோரு வயதிலேயே பருவம் எய்தினாள். ஆனாலும் சிறிய தலையும் தெத்துப் பல்லும் அடிக்கடி சத்தமாய்க் கத்துவதும் எதையாவது சொல்ல ஆரம்பித்தால் அதையே திரும்பத் திரும்ப சொல்வதும் செய்வதையே திரும்பத் திரும்பச் செய்வதும் ஒரேவிதமான உணவையே விரும்பிச் சாப்பிடுவதும் ஆண், பெண் வித்தியாசம் தெரியாமலிருப்பதும் அவளைப் பெற்றவர்களைக் காட்டிலும் நிமிஷாவை பெருங்கவலை கொள்ளச் செய்திருந்தது.
இப்போதுகூட வைஷாலி சேரில் ஏறிநின்று நான்கு வயதுக் குழந்தைபோல் கைதட்டிச் சிரித்துக்கொண்டு நிற்பது கண்களில் கண்ணீர் அரும்பச் செய்தது.
“இறைவா!” என்று முணு முணுத்தது நிமிஷாவின் வாய்.
“நிமிஷா!” அழைத்துக் கொண்டே தோசையையும் சட்னியையும் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்தார் நிமிஷாவின் தாயார் அம்புஜாம்மா.
வீஸிங்கால் தவிப்பவர் போல் மூச்சிரைத்தது. நெஞ்சுக்குழி குழிந்து குழிந்து வீஸிங்கின் அதீத தாக்கத்தைக் காட்டியது.
இரவு முழுதும் வீஸிங்கால் தூங்கியிருக்க மாட்டார் என்பதை முகவாட்டமும் கண்களின் கருவளையமும் காட்டிக் கொடுத்தன.
டைனிங் டேபிளின் அருகே கிடந்த சேரில் வந்தமர்ந்தாள் நிமிஷா. தோசை இருந்த தட்டைத் தன்னை நோக்கி இழுத்தபோது டேபிள் ஆடியது.
‘டேபிள் லொட லொடத்துப் போயிடுத்து. புதுஸா ப்ளாஸ்டிக்குல வாங்கனும்னாகூட சேர்களோட சேர்த்து ஒம்போதாயிரம் பத்தாயிரம் ஆகும்’ மனசு கணக்குப் போட்டது.
‘ஆமா இருக்குற செலவு போதாது பாரு. டைனிங் டேபிள்தா ரொம்ப முக்யம்’ எழுந்த நினைப்பைப் ‘பட்’டெனத் தட்டி அடக்கியது இன்னொரு மனசு.
அம்மா டிஃபன் பாக்ஸைக் கொண்டு வந்து மேஜைமீது வைத்தபோது அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள் நிமிஷா.
அம்மாவின் மார்பும், தோள்பட்டைகளும் எம்புவதும் இறங்குவதாயும் இருப்பதும் தொண்டைக் குழி குழிவதும் ‘கொய் கொய்’ என்ற இளைப்பு சப்தமும் கேட்டது. கண்களைச் சுற்றிக் கருவளையம் இட்டிருந்தது.
“அம்மா! என்ன இது? வீஸிங் ரொம்ப இருக்கா. டாக்டர பாக்கலாம் வரியா? நெபுலைஸர்னா வெச்சிகிட்டு வரலாமா!”
“ம்கூம்! அதெல்லாம் வேண்டாம் நிமிஷா”
“ஏ! நேத்து நன்னாதானே இருந்த!”
“அக்கா! அக்கா!” சப்தமாய் அழைத்துக்கொண்டே இருகைகளையும் தரையில் ஊன்றி முழங்கால்களுக்குக் கீழே சூம்பிப் போன இருகால்களையும் தரையில் தேய்த்துத்த தேய்த்து இழுத்தபடித் தவழ்ந்து டைனிங் டேபிளை நோக்கி வந்தான் பதினெட்டு வயது தம்பி ராஜதுரை.
வயதுக்கேற்ற உடல் வளர்ச்சியின்றி நறுங்கலாக இருந்தான். ஆனாலும் மேலுதட்டின் மேல் கோடாய் மீசை அரும்பியிருந்தது.
சட்டென சேரிலிருந்து எழுந்தாள் நிமிஷா. இரண்டு தோசைகளில் முக்கால் தோசை மிச்சமிருந்தது தட்டில்.
“தொர! என்னப்பா?” தம்பியிடம் கேட்டாள்.
“அக்கா! அம்மாக்கு ஏந்தெரியுமா வீஸிங்?”
“ஏன்?”
“டேய்!” .அவன் வாயை அடைக்க அம்புஜம்மா கத்தினார்.
“அக்கா! நேத்திக்கு வாசல்ல ஐஸ்க்ரீம் வண்டி வந்திச்சி. அம்மா கப் ஐஸ்க்ரீம் வாங்கி சாப்ட்டாங்க..எனக்கும் வைஷாலிக்கும் வாங்கிக் குடுத்தாங்க”
“அம்மா! ஏம்மா இப்பிடி. ஒனக்குதா கூல்ட்ரிங்ஸ் ஐஸ்க்ரீம்லா ஒத்துக்காதுன்னு தெரியும்ல அப்பறம் ஏன்?” கேட்டுக் கொண்டே டிஃபன் பாக்ஸை எடுத்து ஹேண்ட்பேக்கில் போட்டுக் கொண்டாள்.
அம்புஜம்மா நெளிந்தார்.
“சரி லேட்டாயிடுத்து நா கெளம்புறேன். ஆஃபீஸ் விட்டு வர்ரத்தே மாத்ர வாங்கிட்டு வரேன்” சொல்லிக் கொண்டே வாசல் நோக்கி நடந்தவளை மீண்டும் அழைத்தான் ராஜதுரை.
“அக்கா!”
திரும்பி தம்பியைப் பார்த்தாள்..
“அக்கா சாயந்ரம் வரும்போது ஒயிட் பேப்பர், கலர் பென்ஸிலு, ஸ்கெட்ச் பென்னு வாங்கிட்டு வரியாக்கா? படம் போட்டு கலரு அடிக்க” முகத்தில் எதிர்பார்ப்பு.
“வாங்கிட்டு வரேன் தொர”
செருப்பை மாட்டிக்கொண்டு வாசலில் கால் வைத்தபோது கேட்டருகே நின்றிருந்தார் அப்பா. அவர் நிற்பது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் நடையைத் தொடர்ந்தாள் நிமிஷா. அப்பாவை நினைத்தாலே எரிச்சலாய் வந்தது.
தான் நிற்பது தெரிந்தும் தன்னைக் கண்டுகொள்ளாமல் மகள் நிமிஷா கடந்து செல்வது கருணாகரனுக்குத் தெரியாமலில்லை. அது பற்றி அவர் கவலைப்படவுமில்லை; அதை அவமானமாகவும் கருதவில்லை.
அவர் மகளிடமிருந்து மரியாதையை எதிர்பார்க்கவில்லை. அவருக்குத் தேவை காசு வைத்து ரம்மி சீட்டு ஆட ஒருநூறு ரூபாய்.
மனசு பரபரத்தது. எங்கே நிமிஷா தூரமாய்ச் சென்று விடுவாளோ என்ற பயத்தில் “நிமிஷா!” என்று அழைத்தார்.
ம்கூம், நிமிஷா தந்தை கூப்பிடுவது காதில் விழுந்தும் திரும்பிப் பார்க்கவில்லை.
வேண்டுமென்றே தன்னை மகள் புறக்கணிப்பது கருணாகரனுக்குப் புரிந்தது. மனதில் ஆத்திரம் மண்டியது. ஆனாலும் அவளிடமிருந்து எப்படியும் நூறு ரூபாயைக் கறந்துவிடவேண்டுமென்ற நோக்கத்தோடு மகளின் அலட்சியத்தை அலட்சியம் செய்துவிட்டு கொஞ்சம் வேக நடைபோட்டு நிமிஷாவின் பின்னால் சென்றார்.
“நிமிஷா!” என்றார்.
ஏற்கனவே தாமதமாகிவிட்ட கவலையில் இருந்த நிமிஷாவுக்கு அப்பாவின் அழைப்பு கடும் எரிச்சலாய் இருந்தது. கோபத்தோடு திரும்பிப் பார்த்தாள்.
அப்பாவின் அழுக்கு வேட்டியும், அதை அவர் கட்டியிருந்த அலங்கோலமும், கலைந்து கிடந்த கேசமும், காவியேறிய பற்களும் வெறுப்பை ஏற்படுத்தின.
என்ன என்று ஒரு வார்த்தைக்கூட அப்பாவைக் கேட்கவில்லை நிமிஷா. அவர் எதற்காகத் தன்னைக் கூப்பிட்டிருப்பார் என்று அவளுக்குத் தெரியாதா என்ன?
தன்னை நோக்கித் திரும்பிய மகளைப்பார்த்து “ஹி.. ஹி.. நிமிஷா! ஆஃபீஸ் கெளம்பிட்டியா?”
பதில் சொல்லாமல் மௌனம் காத்தாள்.
“நிமிஷா! ஒருநூறு ரூவா கொடேன்!”
“ஏன்? சீட்டாட காசு இல்லியா!”
“அது.. அது.. வந்து..”
“ச்சே!” வெடுக்கென்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள் நிமிஷா.
மெயின் ரோடில் கால் வைத்த போது ஆரியா மெடிகல்ஸ் கண்ணில் பட்டது. அம்மாவின் வீஸிங் ஞாபகம் வந்தது.
‘சாயந்திரம் அலுவலகம் முடிந்து திரும்பி வரும்வரை அம்மா மூச்சுவிட முடியாமல் தவிப்பாளே!’ என்று தோன்றியது.
சால்புடமால் மாத்திரை வாங்கினாள். மெடிகல் ஷாப்பிலிருந்து இறங்கும் போது ஸ்டேஷனரி கடை பார்வையில் பட்டதும், தம்பி கேட்டவை ஞாபகம் வர, ஒயிட் பேப்பர் ஒரு குயர், கலர் பென்சில் பாக்கெட், ஸ்கெட்ச் பேனா பாக்கெட் வாங்கினாள்.
அந்தக் கடையிலேயே கண்ணாடி பாட்டில்களில் வகை வகையான சாக்லேட்கள் இருக்க தங்கை வைஷாலிக்கு கேட்பரீஸ் நான்கு வாங்கிக் கொண்டாள்.
வாட்சில் மணி பார்த்தபோது எட்டு ஐந்து என்று காட்டியது. வாங்கியவற்றை நடந்துபோய் வீட்டில் கொடுத்துவிட்டு திரும்ப நடந்து ஸ்டேஷன் போய் எட்டு முப்பது ட்ரெயினைப் பிடிப்பது சிரமம் என்று தோன்றியது.
ஆட்டோவில் ஏறி வீட்டு வாசலுக்கு வந்தபோது உள்ளேயிருந்து அப்பா பணம் கொடுக்கவில்லையென்று தன்னைக் கன்னாபின்னா வென்று வாய்க்கு வந்தபடி ஏசிக் கொண்டிருப்பது கேட்டது.
ஆட்டோ சப்தம் கேட்டு அம்மா எட்டிப் பார்த்துவிட்டு நிமிஷா ஆட்டோவிலிருந்து இறங்குவதைப் பார்த்து, “நிமிஷா என்னாச்சு? ஆட்டோல வர்ர” கேட்டுக் கொண்டே வெளியில் வந்தார்.
“இந்தா! புடி! புடி! ஒனக்கு மாத்ர, தொரைக்கு பேப்பர், பென்சில், வைஷாலிக்கு சாக்லேட் லேட்டாயிடுத்து. வரேன்” சொல்லிக் கொண்டே அனைத்தையும் அம்மாவின் கையில் திணித்துவிட்டு ஓட்டமும் நடையுமாய் வந்து ஆட்டோவில் ஏறினாள்.
ஆட்டோ டிராஃபிக் ஜாமினிலிருந்து மீண்டு ரெயில்வே ஸ்டேஷனில் வந்து நின்றபோது மணி எட்டு இருவத்தி நாலு. ஆட்டோவுக்கான சார்ஜ்ஜைக் கொடுத்துவிட்டு எஸ்கலேட்டர் பழுதாகிக் கிடப்பதால் படிகளில் ‘தடதட’வென அவசர அவசரமாய் ஏறும் பயணிகளோடு தானும் ஒருத்தியாய் ஏறி குறிப்பிட்ட நடைமேடைக்கு வந்தபோது அவள் ஏறவேண்டிய மின்சார ரெயில் மூச்சிரைக்க வந்து நின்றது.
‘நல்லவேளை சீசன் டிக்கெட் வாங்கினது நல்லதா போச்சு. இல்லாட்டி க்யூவுல நின்னு டிக்கெட் வாங்குறத்துக்குள்ள போதும் போதும்னு ஆகிடும்’ நினைத்தவாறே டிரெயினுக்குள் ஏற முயன்றாள்.
முகூர்த்த நாளோ என்னவோ கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் ஏற முயன்று முயன்று தோற்றுப்போனாள்.
நிமிஷா ஏறாமலேயே அந்த மின்வண்டி “பா…..ங்” என்ற சப்தத்தோடு கிளம்பி நகர்ந்தது. முதன் முறையாய் வழக்கமாய் ஏறும் வண்டியில் ஏறாமல் தோற்றுப்போனாள் நிமிஷா.
சட்டென நடைமேடை கூட்டம் குறைந்துபோய் காற்று வாங்கியது.
அடுத்த வண்டி வருவதற்கு எப்படியும் பத்து நிமிடம் ஆகும். தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் அலுவலகத்தில் பயோமெட்ரிக் டிவைஸில் விரல் வைக்க கால தாமதமாகும். ஐந்து நிமிடங்களே கிரேஸ் டைம்.
அதற்குமேல் லேட்டானால் காரணம் சொல்ல வேண்டும்.சொல்லும் காரணம் ஏற்கப்படாவிட்டால் ஒருமணிநேரம் பர்மிஷனாகக் கொள்ளப்படும் .மூன்று பர்மிஷன்கள் அரைநாள் லீவாகக் கருதப்படும். அரைநாள் சம்பளம் ‘கட்’.கவலையாய் இருந்தது நிமிஷாவுக்கு.
அடுத்த வண்டிக்கு கூட்டம் அதிகமில்லை. பிரயத்தனம் செய்யாமல் ஏறி அமர்ந்தாள். ஜன்னலோர இடம் கிடைத்தது.
(தென்றல் வீசும்)
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்