ஜன்னலோர சீட்டில் அமர்ந்தாலும் அடிக்கும் வெயில் ஜன்னல் வழியாய் உள்ளே வந்து நிமிஷாவை மெலிதாய்த் தொட்டுப் பார்த்தது.
முகத்தில் லேசாய் சூடேற, கழுத்து வியர்வையால் கசகசத்தது. ஹேண்பேக்கிலிருந்து கர்சீஃபை எடுத்து முகத்தையும் கழுத்தையும் அழுந்தத் துடைக்காமல் வியர்வையை மெதுமெதுவாய் ஒற்றி ஒற்றி எடுத்தாள்.
அடுத்து வரப்போவது எந்த ஸ்டேஷன் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து வண்டியின் வேகம் கொஞ்சம் மட்டுப்பட்டது.
கைகடிகாரத்தில் டைம் பார்த்தாள் நிமிஷா.மணி 8.50.
‘எப்படியும் பீச்ஸ்டேஷன் வர 9.15 ஆகிவிடும். ஒன்பதே காலுக்கு இறங்கி கூட்டத்தைப் பிளந்து கொண்டு ஸ்டேஷனைவிட்டு வெளியேறி நடந்து ட்ராஃபிக்கைத் தாண்டி அலுவலகத்துக்கு டைமுக்குள் போய்விட முடியுமா?’ என்ற கவலை தொற்றிக் கொண்டது.
அடுத்த ஸ்டேஷனில் வண்டி நின்று கிளம்பியபோது நிமிஷாவின் கம்ப்பார்ட்மென்ட் நிறைந்து போனது.
எதிரும் புதிருமான சீட்டில் எக்ஸ்ட்ராவாய் சிலர் அமர நெருக்கியடித்தது.
இப்போது வெய்யில் காணாமல் போயிருந்தது. இத்தனை நேரமாய் ஜன்னலுக்கு வெளியிலேயே பார்வையைச் செலுத்தி வந்த நிமிஷா வினாடி நேரம் உட்புறம் கண்களை சுழல விட்டாள்.
அமர்ந்திருந்த ஆண்களில் ஒருசிலர் மட்டுமே செய்திப் பத்திரிகைகளில் முகத்தைப் புதைத்திருந்தனர். பெரும்பாலான ஆண்களின் பார்வை அவள் மீதே லயித்திருந்தது.
இது ஒன்றும் அவளுக்குப் புதிதல்ல. தினம் தினம் அனுபவிப்பதுதான்.
கொஞ்சமும் நாகரீகமின்றி வெறித்தும் வேட்கையோடும் தன்னைப் பார்க்கும் ஆண்களைப் பார்க்கும் போது நிமிஷாவுக்கு உடலே கூசிப் போகும். மனம் வெறுத்துப்போகும்.
‘தான் அழகாய் இருக்கிறோம்… அதனால் ஆண்கள் நம்மைப் பார்க்கிறார்கள்’ என்ற கர்வமோ பெருமையோ நிமிஷாவுக்கு இல்லை.
வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டால் அது எந்த இடமாக இருந்தாலும் பெண்கள் சந்திக்கும் பெரும் பிரச்சனை இதுதான். அதுவும் நிமிஷாபோல் அதீத அழகான பெண்ணாய் இருந்துவிட்டால் அவர்கள் சந்திக்கும் பெருங்கொடுமையே இதுதான்.
“ச்சே!” என்று நினைத்தபடி மன எரிச்சலைக் கட்டுப்படுத்திக் கொண்டு மீண்டும் ஜன்னலுக்கு வெளியே பார்க்க ஆரம்பித்தாள் நிமிஷா.
ஆயாசமாக இருந்தது மனதுக்கு.
என்ன வாழ்க்கை இது?
இலக்கு இல்லாத வாழ்க்கைப் பயணமாய் இளமைக்கே உரிய சந்தோஷங்களில் சின்னச் சின்ன அனுபவங்களைக்கூட அனுபவிக்காத மனது.
இதோ! இருபத்தாறு வயது முடிந்து இருபத்தேழு ஆரம்பிக்க இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில் என்னத்தைக் கண்டேன்?
வருடம் ஒன்று போனால் வயது ஒன்று ஏறுகிறதே தவிர வாழ்க்கை யில் ஒரு மாற்றமும் இல்லை.
விபரம் தெரிந்த நாளிலிருந்து குடும்பத்தில் வறுமையும் வேதனையும்தான்.
குடும்பப் பொறுப்பே இல்லாத அப்பா, மளிகைக்கடையில் எடுபிடி வேலை. குறைவான சம்பளம்.
வரும் சம்பளத்தில் அரசமரத்தடியில் தனிமையில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரின் பக்கமாய் சகாக்களோடு அமர்ந்து காசுவைத்து சீட்டாடி, வாங்கிய சம்பளத்தை ஆட்டத்தில் தோற்றுவிட்டு வெறுங்கையோடு வருவதும்…
அம்மாவை அடித்து அம்மாவின் அண்ணனிடம் போய்ப் பணம் வாங்கிவரச் சொல்வதும் பத்து வயதிலேயே மனதில் பதிந்துபோன காட்சிகள்.
ஒருமுறை சீட்டாடக் காசில்லாமல் வேலை பார்க்கும் மளிகைக்கடை கல்லாவில் கை வைத்து விட சீட்டுக் கிழிக்கப்பட்டு வீட்டுக்கு வந்து முடங்கிப் போக சீட்டாடப் பணமில்லாமல் வீட்டிலிருக்கும் பாத்திரம் பண்டங்களை தேவைக்கேற்பத் தூக்கிச் செல்ல ஆரம்பித்தார்.
குடும்பத் தலைவன் சரியில்லாத குடும்பம், மாலுமி இல்லாத கப்பல் தடுமாறுவது போல் தடுமாற ஆரம்பித்தது.
மாமாதான் வந்து முட்டுக் கொடுத்தார். அவராலும் எவ்வளவுதான் செய்ய முடியும்.
பணம் சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்றினாரோ இல்லையோ, வஞ்சனை இல்லாமல் குழந்தைகளைப் பெற்று குடும்பத்தைப் பெருக்கினார் அப்பா.
ஏழு பிள்ளைகளைப் பெற்று மூன்றை சாகக் கொடுத்து தற்போது இருப்பது நிமிஷா, தங்கை தீக்ஷிதா, தம்பி ராஜதுரை கடைசியாய் வைஷாலி.
நிமிஷாவும் தீக்ஷிதாவும் மட்டுமே எவ்விதப் பிறவிக் குறைபாடும் இல்லாமல் இருக்க தம்பி ராஜதுரை நாலு வயதில் வந்த ஜுரத்தின் தாக்குதலால் இருகால்களும் சூம்பிப்போய் வீட்டுக்குள்ளே முடங்கிப் போய்விட கடைசி தங்கை வைஷாலி மூன்று வயதில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தை என்று கண்டு பிடிக்கப்பட்டு வசதி இல்லாத குடும்பம் என்பதால் முடிந்தவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை தரப்பட்டு எந்த முன்னேற்றமும் இல்லாமல் பதினான்கு வயதிலும் ஐந்து வயதுக் குழந்தையின் மன வளர்ச்சியோடு நின்றுபோக வறுமையும் வேதனைகளும் நிறைந்த வீடு நரகமாயிற்று நிமிஷாவுக்கு.
பட்டாம் பூச்சியாய்ச் சிறகடிக்க வேண்டிய பதின் பருவம் நிமிஷாவுக்கு பாகற்காயாய் கசந்து போனது. ஆனாலும் படிப்பில் படுசுட்டியாகவே இருந்தாள்.
ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றவள் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தவித்தபோது மாமா கூப்பிட்டுச் சொல்லி விட்டார்.
“நிமி தோ பாரும்மா… இனிமே என்னால எங்குடும்பம், தங்கை குடும்பமுனு ரெண்டு குடும்பத்த பாத்துக்க முடியாது. இப்பவெல்லாம் எம் பொண்டாட்டி முணுமுணுக்க ஆரம்பிச்சிட்டா.
அதுனால எப்பிடியோ கஷ்டப்பட்டாவது ஒன்னய காலேஜு படிக்க வெச்சுடறேன். நீ ஏதோவொரு டிகிரி வாங்கி வேலைக்குப் போயி சம்பாரிச்சி இந்தக் குடும்பப் பொறுப்ப ஏத்துக்க” என்று கறாறாய்ச் சொல்லி விட்டார். அது ஞாயமாகவே பட்டது நிமிஷாவுக்கு.
சதா வாய்நிறைய வெற்றிலை சீவலைக் குதப்பிக் கொண்டு புகையிலையை அடக்கிக் கொண்டு காசுவைத்து சீட்டாடிக்கொண்டு குடும்பத்துக் காக ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப்போடாத பொறுப்பற்ற அப்பாவை நினைக்கவே வெறுப்பாய் இருந்தது நிமிஷாவுக்கு.
கல்லூரி வாழ்க்கையும் மகிழ்ச்சியைத் தரவில்லை. சகமாணவிகள் தினம் ஒரு டிரஸ்ஸும், டிரஸ்ஸின் கலருக்கு ஏற்ப காதணி, வளையல், வாட்சின் பட்டை, காலணி, பொட்டு என்று அணிந்து வரும்போது நிமிஷா இருக்கும் மூன்று நான்கு டிரஸ்களையே மாற்றி மாற்றி அணிந்து கல்லூரிக்குச் செல்வாள்.
சகமாணவிகள் சினிமா என்றும் பிக்னிக் என்றும் கூட்டாய்ப் போய்விட்டு வந்து தங்களுக்குள் அவை பற்றிப் பேசிச் சிரிக்கும் போது நிமிஷா அமைதியாக அமர்ந்திருப்பாள். தான் ஏழை என்ற தாழ்வு மனப்பான்மை நிமிஷாவை யாருடனும் பழக விடாமல் கட்டிப்போட்டது.
இன்னொன்றையும் சொல்லத்தான் வேண்டும். நிமிஷாவின் தெறிக்கும் அழகு மற்ற மாணவிகளை அவளைப் பார்த்துப் பொறாமையில் புழுங்க வைத்தது. அதோடு அவளின் படிப்புத் திறன் அவர்களின் எரியும் பொறாமையில் எண்ணை ஊற்றியது.
ஓரிரெண்டு மாணவிகளைத்தவிர, மற்ற மாணவிகள் அவளை ஓரம் கட்டினர். பொறாமையால் அவ்வப்போது நிமிஷாவின் ஏழ்மையைச் சுட்டிக்காட்டி கேலி செய்தனர்.
கல்லூரிக் காலமும் நிமிஷாவுக்கு நரகமாகித்தான் போனது.
கடைசி வருடக் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அவள் வெளியே வந்தபோது ரிசல்ட் வருவதற்கு முன்பே கே.ஆர்.ஜி. என்ற பில்டர்ஸ் அண்ட் ப்ரமோட்டர்ஸ் என்ற பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ரிசப்ஷனிஸ்ட் கம் க்ளார்க்காய் வேலை கிடைத்தது.கே.ஆர்.ஜி.வெறும் கட்டுமான நிறுவனம் மட்டுமல்ல பெரும் வியாபார நிறுவனமும் ஆகும்.
கட்டுமான பொருட்களான கம்பி, சிமெண்ட், செங்கல் வியாபாரம், ஜவுளிக்கடை, ஃப்ரிஜ்ஜுக்கான கம்ப்ரெஸர்கள் தயாரிப்பு என பலதொழில்களும் செய்ததோடு அரசாங்கம் கட்டிடங்கள் மேம்பாலங்கள் கட்டும்போது விடும் டெண்டர்களிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்று அதற்குரிய கட்டிடமோ பாலங்களோ கட்டுவதுண்டு. மொத்தத்தில் கே.ஆர்.ஜி.நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் அதில் வேலை பார்ப்பதைப் பெருமையாய் சொல்லிக் கொள்வதுண்டு.
வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள் நிமிஷா. வேலைக்குச் சென்றதால் நிமிஷா சந்தோஷம் அடைந்தாளோ இல்லையோ வீடு சந்தோஷப்பட்டது.
மொத்தக் குடும்பப் பொறுப்பும் நிமிஷாவின் தோள்கள் மீது வந்தமர்ந்தது. சொன்னபடி மாமா விலகிக் கொண்டார்.
அவளின் உழைப்பிற்காகக் கிடைக்கப் போகும் ஊதியத்தை உறிஞ்சத் தயாரானது வீடு. முக்கியமாய் அப்பா கருணாகரன் வெகுவாகவே சந்தோஷப்பட்டார்.
எப்படியும் மனைவியின் கையில் மகள் கொடுக்கப் போகும் சம்பளத்திலிருந்து சீட்டாடவும் வெத்திலை, பாக்கு, புகையிலை வாங்கவும் தினசரி மனைவியை மிரட்டிப் பணம் வாங்கிவிடலாமென்று மகிழ்ந்து போனார்.
தீக்ஷிதா நிமிஷாவுக்கு இரண்டு வயதே சிறியவள். படிப்பு ஏறாததால் பத்தாவதோடு படிப்பை நிறுத்திக் கொண்டாள். அப்பாவைப் போலவே சுயநலவாதி.
அக்கா கொண்டுவரப் போகும் சம்பளத்தில் தனக்கென அதை வாங்க வேண்டும் இதை வாங்க வேண்டும் என்ற கனவும் ஆசையும் கொண்டவள்.
ஆனாலும் அக்காவின் அழகும் அறிவும் அவளின் மனதில் அக்கா நிமிஷாவின் மீது அசூசையை ஏற்படுத்தியிருந்தது.
தீக்ஷிதா பத்தாவதோடு படிப்பை நிறுத்தப் போவதாக சொன்னபோது.
“தீக்ஷி படிப்பு ரொம்ப முக்யம்ப்பா. படிப்ப நிறுத்தாதே. பிச்சை புகினும் கற்கை நன்றேன்னு அவ்வையார் சொவ்லிருக்குறத நீ அஞ்சாவுதுல படிச்சிருப்பீல்ல. படிக்கனும், படிப்புதான் நமக்கு சோறு போடும்” என்று மிகத்தன்மையோடு எடுத்துச் சொன்னாள் நிமிஷா.
“ஒனக்கென்ன? நீ சொல்லுவ, நீ சரஸ்வதியால தத்து எடுக்கப்பட்டவ. உனக்கு புத்திசாலித்தனத்த ரொப்பி அனுப்பிருக்கான் ஆண்டவன். எனக்கு எல்லாத்துலயும் ஓரவஞ்சனதா. அழகாகட்டும் படிப்பாகட்டும் நீதானே அதையெல்லாம் மொத்தமா குத்தகைக்கு எடுத்திருக்க.” நிடூஷியமாய் பதில் சொல்லிவிட்டு நகர்ந்தாள் தீக்ஷிதா.
மனம் விண்டு போனது நிமிஷாவுக்கு.
நிமிஷா வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்களானபோது அவளின் வயது இருபத்து மூன்றும் தீக்ஷிதாவுக்கு இருபத்து ஒன்றும் ஆகியிருந்தது.
அன்று ஞாயிற்றுக்கிழமை. தனது அறையில் கப்போர்டை சுத்தபடுத்திக் கொண்டிருந்தாள் நிமிஷா.
அறைக்குள் நுழைந்த தீக்ஷிதா அறையின் கதவைச் சாத்திவிட்டு நிமிஷாவின் அருகில் வந்து தீடீர்ப் பாசத்தை வார்த்தையில் தடவி “அக்கா!” என்றாள்.
‘ஏதோ தேவையானதை வாங்கிக் கொள்ள பணம் கேட்கப் போகிறாள் தீக்ஷிதா’
என்று நினைத்த நிமிஷாவை தீக்ஷிதா சொன்ன விஷயம் அதிர வைத்தது.
தான் ஒருவனை விரும்புவதாகவும் அவனும் தன்னை நேசிப்பதாகவும் அவனைத் தனக்கு மணம் முடித்து வைக்கவேண்டுமென்று கெஞ்சினாள் தீக்ஷிதா.
‘என்னது கல்யாணமா? பத்து பைசா சேமிப்பு இல்லாத குடும்பத்தில் பெண்ணுக்குக் கல்யாணம் முடிப்பது எப்படி சாத்தியம்.
தான் வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்து ரெண்டு வருஷமே ஆன நிலையில் பணம் எங்கே சேர்ப்பது? சம்பளம் என்ன முப்பதாயிரம் நாப்பதாயிரமா என்ன?
வீட்டு வாடகை, மளிகை, மருத்துவம், துணிமணி என்று வரவைத் தாண்டி செலவாகி பற்றாக்குறை பட்ஜெட் தான் போட முடிகிறதே தவிர அஞ்சு காசுகூட சேர்க்க முடியாத நிலையில் கல்யாணச்செலவு எப்படி சாத்தியம்?’
“தீஷிதா! நம்ம குடும்பம் இருக்குற நெலமைல கல்யாணத்தப் பத்தி நீ எப்பிடி யோசிச்ச! இதுவர பேங்க் புக்ககூட நாம பாத்ததில்ல. வீடு, நெலம்னு எதுவுமில்ல வித்து பணம் பண்ண!”
“அக்கா! இதெல்லாம் யோசிச்சு காதல் வர்றதில்ல.” முகத்திலடித்திற் போல் சொல்லும் தங்கையைப் பார்த்தாள் நிமிஷா.
தங்கை ஏதோ ஒரு திட்டத்தோடு இருப்பதாய்த் தோன்றியது.
“அக்கா கல்யாணம் பண்ண நம்மட்ட பணமில்லாட்டி பேசாம நானும் அவரும் ரிஜிஸ்டர் மேரேஜுனா பண்ணிக்கிறோம். நீ கவலப்பட வேண்டாம்” சொல்லிவிட்டு ‘விருக்’கென எழுந்தாள் தீக்ஷிதா.
ஆடிப் போனாள் நிமிஷா.
‘கல்யாணம் என்றால் குறைந்தது ஐந்து லட்சமாவது வேண்டும். அதுவே போதாது. வேலைக்குச் சென்று இரண்டு வருடமே ஆன நிலையில் வேலை இன்னும் பர்மனென்ட் ஆகாததால் லோன் எதுவும் போட முடியாது.
வெளி யாரைக் கேட்டாலும் ஆயிரம் ரெண்டாயிரம் கடனாகக் கொடுப்பார்களேயன்றி ஐந்து லட்சமெல்லாம் தரமாட்டார்கள்’ குழம்பிப் போனாள் நிமிஷா.
அடகாய் வைக்க வீடோ நிலமோ நகையோ எதுவும் கிடையாது.
அம்மாவிடம் விபரம் சொன்ன போது அம்மா அழுதாள். அவளாள் முடிந்தது அதுதான். அம்மா மூலம் விபரமறிந்த அப்பா பட்டுக்கொள்ளவே இல்லை.
என்ன செய்வதென்று தவித்த போதுதான் ‘நாகேந்திரா அண்ட் சன்ஸ்’ என்ற அடகு மற்றும் வட்டி கடை போர்டைக் கடைத் தெருவில் பார்த்த ஞாபகம் வந்தது நிமிஷாவுக்கு.
வட்டிக் கடைக்குள் நிமிஷா நுழைந்தபோது முன்புறம் மேஜை கிடக்க பின்புறத்தில் குஷன் வைத்த நாற்காலியில் கறுப்பாய் குண்டாய் அம்மைத் தழும்பு முகமும் சிகரெட் பிடித்துப் பிடித்துக் கருத்துப் போன தடித்த உதடுகளும் சோடாப்புட்டிக் கண்ணாடியுமாய் நெற்றியில் சந்தனப் பொட்டுமாய் அமர்ந்திருந்தார் ஐம்பது ஐம்பத்திரெண்டு வயது மதிக்கத்தக்க ஒருவர்.
சட்டையின் மேல் பட்டனைப் போடாததால் கழுத்தில் போட்டிருந்த கனமான தங்கச்செயின் டாலடித்தது. அவரின் இருபுறமும் முரட்டுத் தோற்றத்தோடு சினிமா வில்லன்கள் போல் இருவர் நின்றிருந்தனர்.
நாற்காலியில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து “வணக்கம்!” என்று சொல்லி கைகுவித்து வணங்கினாள் நிமிஷா.
பதிலுக்குக் கைகுவித்து வணங்கிய நாற்காலி ஆசாமியின் விரல்கள் அனைத்திலும் மோதிரங்கள் பளபளத்தன.
அப்படி பதில் வணக்கம் தரும்போதே அவர் கண்கள் நிமிஷாவின் மேனியெங்கும் அலைந்து அவளின் அழகில் லயித்துப் போனது. ‘அப்பாடி! இந்த பொண்ணுதா எத்தன அழகு!’ என்றது ஐம்பதைத் தாண்டிய வயதுக்காரரின் மனசு கிசுகிசுப்பாய்.
“உட்காருங்க!” எதிரில் கிடந்த சோஃபாவைக் கைநீட்டிக் காட்டினார்.
அமர்ந்தாள் நிமிஷா.
நாற்காலிக்காரரின் துளைக்கும் பார்வை நிமிஷாவை நெளிய வைத்தது. ‘ச்சே!’ என்றது மனசு.
“சொல்லுங்க”
“எனக்கு வட்டிக்குப் பணம் வேணும்”
“ஓ! ஒங்க பேரு மத்த விபரங்கள சொல்லுங்க. எவ்வளவு ரூவா வேணும்? பணத்துக்கு ஈடா வீடா, நிலமா, நகையா என்ன வைப்பீங்க?”
‘திக்’கென்றது நிமிஷாவுக்கு.
“எம்பேரு நிமிஷா! நா கே.ஆர்.ஜி.யில வேல பாக்குறேன். ஈடா வைக்கவெல்லாம் வீடோ, நிலமோ, நகையோ இல்ல!” சிரித்தார் நாற்காலிக்காரர்.
“அடமானம் வைக்க எதுவுமே இல்லேன்னா எப்புடிம்மா?”
‘பொண்ணு எம்மாம் அழகாருக்கு. அதும் அழகுக்கு ஈடா நீ குடுக்கப் போவுற பணம்? நீ எவ்வளவு பெரிய கில்லாடி! எம்மாம் நெருக்கடி குடுத்து ஒ எண்ணத்த நெறவேத்திப்ப’ கேவலம் புடித்த கேடு ட்ட குரங்கு மனது கோலெடுத்து ஆட்டி
வித்தை காட்டியது.
“எவ்வளவு தொக வேணும்?”
“அஞ்சு லெட்சம்”
“கெக்..கெக்..கெக்கே..” சத்தம் போட்டு சிரித்தார்.
“அம்பது ரூவா கேட்டாலே ரேஷன் அட்டைய வாங்கி வெச்சுக்கிட்டுதா பணம் குடுப்போம். அடமானம் வெக்க ஒன்னுமே இல்லேனுட்டு அஞ்சு லட்சம் கேக்குறீங்க!”
“நா மாசம் தவறாம வட்டி கட்டிடுவேன்”
“சின்ன வயசா இருக்கீங்க. கே.யார்.ஜீ-யிலவேற வேலா பாக்குறேங்கிறீங்க. ம்.. என்ன செய்யிலாம்” சொல்லிக் கொண்டே விரல்களால் மேஜையில் தாளம்போட்டார் யோசிப்பது போல்.
“சரி வெளியில அரமணி ஒக்காருங்க. பதில் சொல்லுறேன்” என்றார்.
வெளியில் போடப்பட்டிருந்த நாற்காலிகள் ஒன்றில் அமர்ந்தாள் நிமிஷா.
இவள் வெளியில் சென்று அமர்ந்ததும் யாருக்கோ ஃபோன் செய்தார் நாற்காலிக்காரர்.
அடுத்த கால்மணி நேரத்தில் நிமிஷாவின் குடும்ப விபரம் அவர் கையில்.
அவர் மனம் கணக்குப் போட்டது. பழம் தின்று கொட்டை போட்ட அவருக்கு நிமிஷாவை தன் பிடிக்குள் கொண்டு வருவது எளிதல்ல என்று தோன்றியது.
அவளின் இளமையும் அழகும் அவரைத் திணற அடித்தது. பணத்தை வைத்தே அவளை வீழ்த்த நினைத்தார்.
அவளின் அப்பாவை அந்த சீட்டுப் பைத்தியத்தை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள நினைத்தார். பணத்தால் எதையும் சாதிக்கலாமென நினைத்தார்.
நிமிஷா உள்ளே அழைக்கப்பட்டாள்.
“மிஸ்.நிமிஷா! நிமிஷா! அதானே ஒங்கபேரு ஸ்வீட் நேம்” சிரித்தார்.
அமைதியாய் இருந்தாள் நிமிஷா.
“இங்க பாருங்க நிமிஷா! மூணு லட்சமுனா தரேன். அடமானமில்லாம இவ்வளவு பெரிய தொகைய நா குடுக்குறேன்னா ஒங்களப் பாத்தா நம்பிக்கையா தோணுது. அதுனால குடுக்குலாமுனு நெனைக்குறேன்.
ஆனா ஒன்னு இந்த மூணு லட்சத்த மூணாவது வருஷம் வட்டியும் அசலுமா மொத்தாமா திரும்பக் கொடுத்திடனும்.
அந்த நேரத்துல பணம் கெடைக்காட்டி என்ன செய்யுறதுன்னு நெனைப்பீங்க. அது ஒங்க யோசன. பணத்தக் கட்டின அடுத்த நிமிசமே மறுபடி தேவையான பணத்த கடனா வாங்கிக்கலாம்.இது எங்க ஃபைனான்ஸ் கம்பெனியோட ரூலு.
விருப்பமுனா கடனு தரேன். ஆனா ரூலுபடி மூணாவது வருஷம் பணம் கட்டுலனா கம்பெனி கடுமையா நடந்துக்கும்.சொல்லிப்புட்டேன்.”
“ஒங்களோட சாலரி ஸ்லிப்பு. பேங்க் அக்கௌண்ட் நம்பரு” என்று ஏதேதோ கேட்டார்.
“பேங்க் புக்கே கிடையாது” என்ற போது சிரித்தார்.
“ஆபீஸ்ல சம்பளம் எப்பிடி குடுப்பாங்க கையிலயேவா?” என்று கேட்டும் சிரித்தார்.
நிறைய ஸ்டாம்ப் ஒட்டிய பேப்பரில் கையெழுத்து வாங்கினார்.
“ஷ்யூரிட்டி கையெழுத்து யார் போடுவாங்க?” என்று கேட்டார்.
ஆனாலும் நெருக்கடி அதிகம் கொடுக்காமல் மூன்று லட்சம் பணத்தைக் கொடுத்தார்.
துணைக்கு யாரையும் கூட்டி வராமல் சிறுபெண் தனியாய் வந்ததை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார் நாற்காலிக்காரர்.
மாமாவைக்கூட துணைக்கு அழைத்து வராமல் ஐந்து வட்டிக்குப் பெருந்தொகையை கடனாகப் பெற்று கடனாளியான நிமிஷா இனி தான் படப்போகும் துன்பத்தை அறியாதவளாய் இருந்தாள்.
ஆயிற்று. காதலனைக் கைபிடித்தாள் நிமிஷாவின் தங்கை தீக்ஷிதா.
அடுத்து வளைகாப்பு சீமந்தம், பிரசவம் என்று செலவுக்குப் பணமின்றி தவித்துப் போனாள் நிமிஷா.
எப்படியோ எல்லாவற்றையும் ஒப்பேற்றித் தங்கையை கணவன் வீட்டில் கொண்டு விட்டும் பலனின்றி கணவன் வீட்டில் அதைக் கேட்டார்கள் இதைக் கேட்டார்கள் என்று அடிக்கடி கண்ணைக் கசக்கிக் கொண்டு வர ஆரம்பித்தாள் தீக்ஷிதா. ஓய்ந்து போனாள் நிமிஷா.
இப்போதெல்லாம் தங்கையிடமிருந்து ஃபோன் வந்தால் எதைக் கேட்டு அழுவாளோ என்று ஃபோனை எடுக்கவே பயந்தாள் நிமிஷா.
திடீரென ‘தடங்..’ என்ற பெரும் சப்தத்தோடு பின்புறமாய் சிறிது தூரம் நகர்ந்து ப்ரேக் போட்டு குலுங்கி நின்றது வண்டி.
அலறல் சப்தங்கள் கேட்டன. கத்திக் கொண்டே நிறையபேர் வண்டியின் முன்புறம் நோக்கி ஓடினார்கள்.
நினைவுகளில் மூழ்கிப் போயிருந்த நிமிஷா தூக்கி வாரிப் போட நிகழ்வுக்கு வந்தாள்.
(தென்றல் வீசும்)
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்