தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 3

‘தடங்’ என்ற சப்தத்தோடு குலுங்கி நின்ற வண்டியால் தூக்கி வாரிப் போட நிகழ்வுக்கு வந்த நிமிஷாவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.

ஜன்னல் வழியாய் வெளியே எட்டிப் பார்த்தாள். அவள் அமர்ந்திருந்த பெட்டிக்கு இரண்டு பெட்டிக்கு முன் கீழே கூட்டமாய்ப் பயணிகள் சில பேர் தலையிலடித்தபடி கத்திக் கொண்டும் வாயில் புடவைத் தலைப்பை வைத்து மூடியபடி சில பெண்கள் அழுதபடியும் நிற்க சில வினாடிகளில் விஷயம் தெரிந்து போனது நிமிஷாவுக்கு.

ஓடும் ரயிலின் வாசற்படியருகே கைகளை விரித்து இருபுற கைப்பிடிகளையும் பிடித்தபடி நின்றிருந்த கல்லூரி மாணவன் கழுத்தை நீட்டி வெளியில் பார்க்க, வழியில் நின்ற மின்கம்பத்தில் கழுத்து இடிக்க ரயில் ஓடும் வேகத்தில் கழுத்து தனியாய் உடல் தனியாய் போய் வண்டியைவிட்டு முண்டமாய் கீழே விழ சகபயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்தி இருப்பதை நிமிஷா அறிந்தபோது மனம் அந்த பையனுக்காகவும் அவனின் பெற்றோருக்காகவும் ஒருகணம் துடித்துப் போனது.

கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அடுத்த நிமிடம் ‘இனிமே ட்ரெயின் எப்ப கெளம்புமோ தெரீலயே?’ என்ற கவலையும் மனதுக்குள் எட்டிப் பார்த்தது.

வாட்சில் மணி பார்த்தாள்.மணி 9.05 ஆகியிருந்தது.

‘தடக்’ எதிர்பாராத விதமாய் பத்து நிமிட தாமதத்தில் வண்டி கிளம்பி விட்டது. ‘அப்பாடி!’ என்றிருந்தது நிமிஷாவுக்கு.

ஆனாலும் பத்துநிமிட தாமதத்தை எப்படி ஈடுகட்டுவது? புரியவில்லை, நடப்பது நடக்கட்டும் என்று பின்புறம் தலைசாய்த்து அமர்ந்து கொண்டாள்.

ரயிலின் வேகத்துக்கு ஏற்ப வெளியில் நிற்கும் மரங்களும் கட்டிடங்களும் ‘சரசர’வெனப் பின்னோக்கி ஓடுவது அத்தனை மனப்பிரச்சனைகளுக்கு இடையேயும் என்றைக்குமில்லாமல் இன்றைக்கு ஏனோ அவளை
அவளையுமறியாமல் ரசிக்க வைத்தது.

பார்ப்பவர்களை வாய் பிளந்து பார்க்க வைக்கும் வகையில் மிகப்பிரம்மாண்டமாய் பெரும் விஸ்தீரணத்தில் நின்று கொண்டிருத்தது அந்த பங்களா.

பங்களாவுக்குள் அவ்வளவு எளிதாய் யாரும் நுழைந்து விடமுடியாது. டைட் செக்யூரிட்டி போடப்பட்டிருந்த அந்த பங்களா வாசலில் கேட்டுக்கு வெளியே போடப்பட்டிருந்த ஸ்டூல் ஒன்றில் கருநீல யூனிஃபார்மில் வாட்ச்மேன் அமர்ந்திருந்தார்.

அவரின் அனுமதி பெற்று கேட்டைத் திறந்து உள்ளே போனால் குட்டியானை சைஸில் கோரைப்பற்களுடன் அல்சேஷன் நாய் ஒன்று கட்டப்படாமல் சுதந்திரமாய்த் திரிந்தபடி. துப்பாக்கி ஏந்திய நேபாள கூர்க்கா வேறு இறுகிய முகத்தோடு நின்றிருந்தான்.

பங்களாவின் உள்ளே அந்த மிகப்பெரிய ஹாலில் போடப்பட்டிருந்த புதையப் புதைய எந்த அழுத்தமுமின்றி மிருதுவான உயர்தர சோஃபா வில் அமர்ந்து குனிந்து வலது காலில் அணிந்திருந்த அடிடாஸ் ஷுவின் லேசை இணைத்து முடிச்சுப் போட்டுக் கொண்டிருந்தார் கே.ஆர்.ஜி. ரியல் எஸ்டேட் அதிபர் கோவர்த்தன்.

லேஸைக் கட்டி முடித்துவிட்டு நிமிர்ந்தவரின் எதிரில் வந்து நின்றார் கோவர்த்தனின் மனைவி விமலாதேவி.

மனைவியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவர் சட்டென முகத்தை தனக்கு வலப்புறமாய்த் திருப்பி லேசாக மேலே நிமிர்ந்து பார்த்தார்.

அவர் அமர்ந்திருந்த அந்தப் பெரிய ஹாலின் சுவற்றை ஒட்டினாற்போல் மாடிக்குச் செல்லும் படிகள் அமைந்திருந்தன. அப்படிகளில் ஏறிச்சென்றால் மாடியில் வரிசையாய் அறைகளும் அமைந்திருந்தன.

கோடீஸ்வரர்களின் பங்களாவின் ஒவ்வொரு இன்ச்சும் எப்படி பணத்தின் பகட்டைக் காட்டுமோ அப்படித்தான் இருந்தது பெரும் பணக்காரரான கே.ஆர்.ஜி. நிறுவனத்தின் ஓனரான கோவர்த்தனின் பங்களாவும்.

கிரானைட்டும் தேக்கு மரமுமாய் பயன்படுத்தி ‘பளபள’வென்று இழைக்கப்பட்டிருந்தது.

கணவர் மாடியைப் பார்ப்பதற்கான அர்த்தம் தெரிந்து புன்னகைத்தார் விமலாதேவி.

“பாத்தியா! மணி என்ன ஆகுது விமலா இப்ப?”

“ஏங்க, கைல கட்டியிருக்குற கடிகாரம் ஓடுல? எங்கிட்ட மணி கேக்குறீங்க?” கணவர் எதற்காக மணி கேட்கிறார் என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் கிண்டலாய்க் கேட்டுச் சிரித்தார் விமலாதேவி.

“நல்லா பண்ணுவியே கிண்டல்” தானும் சிரித்தார்.

“பாரு மணி ஒம்போது ஆச்சு. இன்னும் ஓம்மவன் எழுந்துருக்கல. காலா காலத்துல கல்யாணத்த பண்ணிக்கிட்டோமா? அப்பாவுக்கு ஒதவியா பிஸினஸ பாத்துக்கிட்டோமான்னு இல்லாம”

“அட ஏங்க போங்க. புள்ளைய எதாச்சும் சொல்லிக்கிட்டே”

“வந்துடுவியே பாஞ்சுகிட்டு. புள்ளைய ஒன்னு சொல்லிடக்கூடாது. நான் அவன என்னா சொல்றேன். வெய்யிறேனா திட்டுறேனா? காலா காலத்துல கல்யாணத்த பண்ணிக்கோன்னுதானே சொல்றேன்” ஆதங்கப்பட்டார் கோவர்த்தன்.

“ஆமாங்க..நீங்க சொல்லுறதும் சரிதாங்க. வயசு இருவத்தம்போது முடியப்போவுது. இன்னமும் சாக்குபோக்கு சொல்லிக்கிட்டுருந்தா கேக்குறவுங்களுக்கு பதில் சொல்ல முடியலிங்க. என்னத்துல கொறச்சலு அழகில்லையா? படிப்பில்லையா? அந்தஸ்து இல்லியா? கொட்டிக் கெடக்கு பணம் கோடிக் கணக்குல. அத்தனைக்கும் ஒரே வாரிசு”

“பொண்ணுதர பொண்ணப் பெத்தவங்க வரிசையா நிக்கிறாங்க. புடிகுடுக்க மாட்டேங்குறானே!”

சிரித்தார் கோவர்த்தன்.

“அவ மனசுப்படியே நடக்கட்டுங்க. நம்ம குலதெய்வம்தாங்க அவங்கண்ணுல அந்தப் பொண்ண சீக்கிரமே காட்டணும்”

“ஆமாம் விமலா! அந்தப் பொண்ணு ஏழப்பொண்ணா இருந்தாலும் சரிதான் விமலா. நமக்கில்லாத பணமா? வர்ர பொண்ணு கொண்டுட்டு வரணும்னு அவசியமில்ல. நம்ம பய தாலி கட்டின அடுத்த நொடியே அந்தப் பொண்ணு நம்ம குடும்பத்துப் பொண்ணா ஆகிடறா. அப்ப அந்தப் பொண்ணும் ஆட்டமேட்டிக்கா பணக்காரியாயிடறால்ல”

“ஆமாங்க! பணம் என்னங்க பணம். ஏழப்பொண்ணா இருந்தாலும் குணவதியா இருந்தா போதுங்க”

“ஆமா விமலா!” ஆமோதித்தார் கோவர்த்தன்.

‘ப்ளக்’ அறைக் கதவு திறக்கப்படும் ஓசை மாடியிலிருந்து கேட்டது.

“ஹாய் அப்பா! ஹாய் அம்மா! குட்மார்னிங்.!” சொல்லிக் கொண்டே ‘தடதட’வெனப் படிகளில் இறங்கி வந்தான் ஆதித்யா.

ஆதித்யா, ஆறடி உயரம். உயரத்திற்கேற்ற தேகம், சிவந்த நிறம், அழகான கேசம், தீர்க்கமான கண்கள், எடுப்பான நாசி, சிரிக்கும் இதழ்கள், மெல்லிய மீசை, அகன்ற மார்பு, திண்ணிய தோள்கள் கொண்டவன்.

டிவி விளம்பரங்களில் வரும் ஆண்களில் அவரைப் போன்றோ இவரைப்போன்றோ என்றோ பாலிவுட் ஆக்டர் அவர்மாதிரி இவர்மாதிரி என்றோ சொல்ல வேண்டாம். புராணகாலம் முதல் இன்று வரை அழகான ஆணை ‘மன்மதன்’ போல் என்று வர்ணிப்பது போலும் வேண்டாம்.

யார் ஒருவரையும் ஆதித்யாவுக்கு இணையாகச் சொல்லக்கூடாது. காரணம் ஆதித்யாவுக்கு இணை ஆதித்யாதான். அத்தனை அழகானவன். படு சுறுசுறுப்பு.

M.Arch., M.B.A. படித்துப் பட்டம் பெற்றவன். அப்பா அம்மாவை நேசிப்பவன். அவர்களிடம் பாசமும் மரியாதையும் கொண்டவன். பெற்றவர்களை மதிப்பவன். என்றும் நல்லவனாகத்தான் இருப்பான். இறைபக்தி கொண்டவன். மொத்தத்தில் ஆதித்யா ஒரு சிறந்த நல்ல ஆண்மகன்.

வயது இருபத்தொன்பது ஆகியும் விளையாட்டுத்தனமான கொள்கையோடு இருப்பதால் இன்னும் திருமணமாகவில்லை. பெற்றவர்களை வேதனைப்பட வைக்கிறோமோ என்ற குற்ற உணர்வு இருந்தாலும் கொள்கையை விட்டுத்தர மனம் வராதவன்.

சோஃபாவில் அப்பாவின் அருகில் உட்கார்ந்தான்.

“ஆதி! குளிச்சிட்டியா என்ன? படு ஃப்ரெஷ்ஷா இருக்க. சோப்பு வாசன ஆளத் தூக்குது” மகனைக் கேட்டார் கோவர்த்தன்.

“ஆமாம்ப்பா குளிச்சாச்சு!” கையை மடக்கி முகர்ந்து பார்த்தான். “சோப்பு வாசன செம இல்ல?” என்று கேட்டான்.

சிரித்தார் கோவர்த்தன். “வெளயாட்டுப் புள்ளடா நீ!” என்றார்.

“அம்மா! காபிம்மா!”

“தோ.. சங்கரியம்மா ஆதிக்கு காபி கொண்டாங்க” சமையலறை பார்த்துக் குரல் கொடுத்தார் விமலாதேவி.

“வந்துட்டேங்கம்மா!” சொல்லிக்கொண்டே காபி எடுத்து வந்த சமையல்காரம்மா சங்கரியம்மாவிடமிருந்து காபி டம்ளர் டபராவை வாங்கி பதமாய் ஆற்றி மகனிடம் நீட்டினார்.

“தேங்யூமா!” சொல்லிக் கொண்டே காபியை வாங்கி உறிஞ்சினான். குடித்து முடித்ததும் டம்ளர் டபராவை சமையல்காரம்மா வாங்கிக் கொண்டு உள்ளே சென்றார்.

“அப்பறம், மை சன்!” என்றபடி மகனின் தோளைத் தட்டிக் கொடுத்தார் கோவர்த்தன்.

“சொல்லுங்கப்பா!” என்றான் ஆதி.

“ஆதி! ஒன்னு சொல்லணும். ஒங்கிட்ட..ஒரு ரெக்வெஸ்ட்னு வெச்சுக்கியேன்”

“அய்யோ! என்னப்பா? ரெக்வெஸ்ட் அது இதுன்னு சொல்லிக்கிட்டு, சொல்லுங்கப்பா என்னனு?”

“ஆதி ஒங்கல்யாணந்தா எங்க இஷ்ட்டபடி ஆகுல. நீ நெனைக்கிறா மாரியே ஏதாவது ஒருபொண்ணு சீக்கிரமே ஒம்மனசுக்குள்ள லைட் எரிய வெச்சு ‘பச்சு’னு ஒம்மனசுல அந்தப் பொண்ணு ஒட்டிக்கணும்னு நானும் அம்மாவும் ஒன்ன வாழ்த்துறோம். கடவுள ப்ரே பண்ணிக்கிறோம்.. அதவுடு, நல்லதே நடக்கும். ஆனா..”

“சொல்லுங்கப்பா! வேறெதும் இருக்கா?”

“ஆமா ஆதி! எனக்கும் வயசு அறுபத்திரெண்டாயிடுத்து. மனசும் ஒடம்பும் கொஞ்சம் தற்காலிக ஓய்வு கேக்குது ஆதி. நீண்ட ஓய்வு இல்ல. நா அப்பிடி ஓய்ந்து ஒக்காரல்லாம் மாட்டேன். அதுனால..”

“நா என்னப்பா செய்யனும் சொல்லுங்கப்பா!”

“ஆதி நாம புதுசா ஏழுமாடி கட்டிடம் ஒன்னு சேப்பாக்கத்துல கட்டினம்ல. அதுல ஆறாவது ஃப்ளோர்ல நம்ம கே.ஆர்.ஜி. நிறுவனம் இயங்குது தெரியும்ல, பாக்கி ஃப்ளோரெல்லாம் வாடகைக்கு விட்ருக்கோம்.”

“ஆமாம் அப்பா!”

“அந்த நம்மோட ஆஃபீஸ்க்கு இதுவர நீ வந்துருக்கியா?”

“அங்கங்க இருக்குற நம்மோட மத்த ப்ரான்ஞ்ச்கெல்லாம் போயிருக்குற நீ இந்த ஆஃபீஸ்கு மட்டும் வந்ததே இல்ல. சரியா?”

“ஆமாம்ப்பா!”

“வேலைக்கு எத்தன ஆட்கள போட்டாலும் அப்பப்ப நாமளும் போகவர இருந்தாதான் வேல சரிவர நடக்கும் ஆதி. எட்டுமணி நேரம் ஆஃபீஸ்ல இருக்க வேண்டிய அவசியமில்ல. அதுக்கு மேனேஜர் இருக்காரு. ஆனா வாரத்துக்கு ரெண்டு மூணுநாளு ஒரு ரெண்டு மணிநேரமாவது இருந்தாதான் அவுங்க அவுங்க வேலய சரியா பாப்பாங்க.”

“உண்மைதான் அப்பா”

“இன்னிக்கு நீ இந்த பிரான்ஞ்ச் ஆஃபீஸ்க்கு வரணும்னு ஆசப்படறேன். ஒன்ன இன்னொரு மேனேஜிங் டைரக்டரா அறிமுகப்படுத்தனும்னு விரும்புறேன் ஆதி. அப்பாவோட இந்த ஆசைய நெறவேத்துவியா ஆதி?” கெஞ்சலாய்க் கேட்டார் கோவர்த்தன்.

“ஐயோ அப்பா! என்னப்பா கெஞ்சுறா மாரிகேக்குறீங்க. நா வரேம்ப்பா!” என்றான் ஆதி.

“ஏங்க இப்பிடி வருத்தமா பேசுறீங்க. ஆதி வருஷத்துக்கு நாலு தடவ வெளிநாடு டூர்போய் அதக் கத்துக்கிட்டு வரேன் இதக் கத்துக்கிட்டு வரேன்னு போயிடறான். அமெரிக்காவுலேந்து திரும்பியே ரெண்டு மாசந்தானே ஆச்சு. அதா அவ எந்த பதவியையும் ஏத்துக்க முடியாம இருந்தான். இனிமே பொறுப்ப ஏத்துக்குவான்.
இன்னிலேந்து ஆஃபீஸுக்கு வருவாங்க நம்ம ஆதி!” என்று கணவருக்கு ஆறுதல் கூறினார் விமலாதேவி.

“தேங்க் யூ மை சன்!” என்றார் கோவர்த்தன் ஆதியிடம்.

முகத்தில் ஏகத்துக்கும் மகிழ்ச்சி.

“அப்பா!”

“சொல்லு ஆதி!”

“ஓகே டன்!” விரலை உயர்தினார் கோவர்த்தன்.

“ஓகே நா கிளம்புறேன். நீ அவசியம் சீக்கிரம் வந்துடு ஆதி!” என்று மகனிடம் சொல்லிவிட்டு, “போய்ட்டு வரேன் விமலா!” மனைவியிடமும் சொல்லி விட்டுக் கிளம்பினார் கோவர்த்தன்.

ஆளுயரக் கண்ணாடி முன் நின்று உடலை அப்படியும் இப்படியும் அசைத்துத் தன்னைப் பார்த்துக் கொண்டான் ஆதித்யா.

க்ரு ஹேர் க்ரீம் தடவப்பட்ட கேசம். ஸ்லிம் ஃபிட் ஃப்ளெக்ஸி க்ரீம் கலர் பேண்ட்.. லாரெண்ட் கிவன்சி ஃபுல் ஹேண்ட் ஷர்ட். ஷர்ட்டின் கைகளை மணிக் கட்டுக்குக் கொஞ்சம் மேலாக முழங்கைக்குக் கொஞ்சம் கீழாக இருக்குமாறு இழுத்து விட்டிருந்தான்.

ஷர்ட்டை பேண்ட்டுக்குள் இன் பண்ணி போலோரால்ப் பெல்ட் அணிந்திருந்தான். அட்டகாசமாய்த் தெரிந்தான் ஆதி.

மிக மெலிதாய் டென்வர் டால்கம் பவுடரை முகத்துக்கும் கழுத்துக்கும் அப்ளை செய்து கொண்டான். டேவிடாஃப்கூல் சென்ட்டை ‘பிஸ்க் பிஸ்க்’கென ஆடையியின் மீது அளவாய் ஸ்ப்ரே செய்து கொண்டான்.

காலையில்தான் ஷேவ் செய்து கொண்டிருந்ததால் முகம் வழுவழுப்பாய் பளபளத்து அவன் அழகை மேலும் கூட்டியது. பக்கத்து கப்போர்டிலிருந்த அட்டைப் பெட்டியிலிருந்து புத்தம் புதிய நைக் ஷுக்களை எடுத்துக் கொண்டு அறையிலிருந்த சிறிய சோஃபாவில் அமர்ந்து கால்களில் சாக்ஸை அணிந்து ஷுவை மாட்டி லேஸைகளை முடிச்சுப் போட்டுக் கட்டி கால்களைத் தரையில் ஊன்றி இப்படியும் அப்படியும் ஆட்டி அட்ஜெஸ் செய்தான்.

மறுபடியும் கண்ணாடி முன் தன்னைப் பார்த்துக்கொண்டான். லேசாய் விசிலடித்தான்.

மிகநேர்த்தியாய் நான்காய் மடித்து வைத்திருந்த கெர்சீஃபை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் வைத்து அது புடைப்பாய் வெளியே தெரியாமலிருக்க ரெண்டு தட்டு தட்டி சமப்படுத்தினான்.

ரோலக்ஸ் வாட்சைக் கையில் கட்டி மணி பார்த்தான். மறக்காமல் விலையுயர்ந்த ஆப்பிள் ஐஃபோனை எடுத்து ஷர்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

அறைக் கதவைச் சாத்திக் கொண்டு ஆதி படிகளில் இறங்கி ஹாலில் கால் வைத்து மணி பார்த்தபோது கைக்கடிகாரம் நேரம் ‘ஒன்பது முப்பத்தி ரெண்டு’ என்று காட்டியது.

“அம்மா!” என்றான்.

சோஃபாவில் அமர்ந்தபடி செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்த விமலாதேவி, ‘அம்மா’ என்று அழைக்கும் ஆதியின் குரல் கேட்டுத் தலைநிமிர்ந்தார்.

“செல்லமே! ஆதிக்கண்ணா! கிளம்பியாச்சா. எம்புள்ளையப் பாத்தா எங்கண்ணே பட்டுடும் போலருக்கு. சுத்திப் போடனும்!” சொல்லிக் கொண்டே எழுந்தபோது ஆதி தாயின் அருகில் வந்து நின்றான்.

மகனின் கன்னங்களைக் கைகளால் வழித்து திருஷ்ட்டிக் கழித்தார்.

“கிளம்புறேம்மா!” குனிந்து அம்மாவின் கால்களைத் தொட்டு நெஞ்சின் இடப்புறம் வைத்துக் கொண்டான்.

ஆதியின் தலைதொட்டு “செல்லமே! நீ நல்லாருக்கணும்டா!” என ஆசிர்வதித்த விமலாதேவியின் கண்கள் பாசத்தால் கலங்கின. “டிபன் சாப்ட்டு போ!” என்றார்.

“அம்மா! வேண்டாம்மா!”

“டேய்! சும்மா இருடா! வெறும் வயித்தோட போவியா?” செல்லமாய்க் கடிந்து கொண்டார்.

“சங்கரிம்மா ஆதிக்கு டிஃபன் கொண்டாங்க!”

“அம்மா நீங்களே குடுங்கம்மா!, ஆ” வாயைத் திறந்து காட்டினான் ஆதி.

சிரித்து விட்டார் விமலாதேவி.

“கல்யாணமாயிருந்தா ரெண்டு புள்ளைகளுக்கு அப்பாவாயிருப்ப. ஊட்டி விடுன்னு வாய காமிக்குறத பாரு!” சொல்லிக் கொண்டே இட்டிலியைப் பிய்த்து மகனின் வாயில் ஊட்டினார். இரண்டு இட்லி உள்ளே போனது.

‘போதும்மா போதும்மா!’ என்பதைப்போல் கையாட்டி விட்டு வாஷ்பேசினில் கை கழுவி வாய் கொப்பளித்து விட்டு வெகு நாசூக்காய் உதடுகளிலும் தாவாங் கட்டையிலும் பட்டிருந்த தண்ணீரைக் கர்ச்சீப்பால்
ஒற்றி எடுத்தான்.

“ஆதி காபி!”

“நோ.. நோ.. வேண்டாம்மா!”.

“வரேம்மா!” மணிக்கட்டில் மணி பார்த்தான்.

“மொத மொதலா புது ஆபீஸ் போய் பொறுப்பேற்குற. இந்த அம்மாவோட ஆசியும் வாழ்த்துக்களும்டா ஆதிகண்ணா! கடவுளோட அருள் ஒனக்கு எப்போதும் தொணையிருக்கட்டும்.”

“தேங்க்யூமா!” அம்மாவை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு கிளம்பினான் பாசக்கார மகன்.

ஆதி வாசலுக்கு வந்ததும் காலடியில் வந்து நின்று வாலாட்டியது அல்சேஷன். அதன் முதுகைத் தடவிக் கொடுத்தான். நேபாள கூர்கா சல்யூட் அடித்தான். வாசலில் வரிசை கட்டி நின்றன ஐந்தாறு கார்கள்.

பி.எம்.டபுள்யூ..லம்போர்கினி, இன்னோவா கார்கள் அடுத்தடுத்து நின்று கொண்டிருந்தன. ‘எதை எடுப்பது?’ என்று நிமிட நேரம் யோசித்தவனுக்கு, பள்ளியில் படிக்கும்போது ‘தமிழா? ஆங்கிலமா? எந்த புக்கை எடுத்துப் படிப்பது?’ என்று குழப்பம் வரும்போது வகுப்பில் சகமாணவர்கள் மாணவிகள் ரெண்டு புக்கையும் மாற்றி மாற்றி விரலால் தொட்டுப் பாடும் வரிகள் ஞாபகம் வந்தது.

பிஎம்டபுள்யூவையும் லம்போர்கினியையும் “ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு டாம் டூம் டை” என மிக மெலிதாய்ப் பாடிக் கொண்டே மாற்றி மாற்றி விரலால் தொட்டான். பாட்டு முடியும்போது விரல் எந்தக் காரைத் தொடுகிறதோ அதைதான் எடுக்கவேண்டும். லம்போர்கினியில் நின்றது விரல்.

தனக்குத் தானே தன் குழந்தைத்தனமான செயலுக்குச் சிரித்துக் கொண்டான்.

“சின்னையா!” பணிவாய் அழைத்தபடி கைகட்டி வந்து நின்றார் டிரைவர்.

“பாலுண்ணே! நானே டிரைவ் பண்ணிக்கிறேன்” என்று சொன்னபடி காரில் ஏறி அமர்ந்து எஞ்சினை உசுப்பி வண்டியைக் கிளப்பினான்.

ஹார்ன் ஒலி எழுப்பியபடி நகர்ந்து வண்டி.

ஹர்ன் ஒலி கேட்டதும் வாட்ச்மேன் கேட்டை விரியத் திறந்து வைத்தார். கார் கேட்டைத் தாண்டி வெளியே வந்து தெருவுக்குள் மூக்கைநுழைத்தது.

போயஸ் கார்டனை ஒத்திருந்த பாஷ் ஏரியா அது என்பதால் தெரு அப்போதுதான் அலம்பி விட்டதுபோல் படுசுத்தமாய்ப் ‘பளீரெ’ன்று இருந்தது.

வெண்ணையாய் வழுக்கிச் சென்றது இன்னோவா.

ஐந்தே நிமிடங்களில் கடும் வாகனப் போக்குவரத்தும் ஜனநடமாட்டமுமாய் பரபரத்துக் கொண்டிருந்த அந்தப் பிரதான சாலையின் பரபரப்பில் தன்னையும் இணைத்துக் கொண்டது இன்னோவா.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்