தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 4

ஒருவழியாய் பீச் ஸ்டேஷனில் வண்டி வந்து நின்றபோது மணி 9.35 ஆகியிருந்தது.

நிமிஷா சுரங்கப்பாதை வழியாக நடந்து வந்து படிகளேறி மேலே வந்தபோது ஏற்கனவே பரபரப்பாய் இருக்கும் அந்த போக்குவரத்துச் சாலை ‘பீக்’ அவர் என்பதால் திணறிக் கொண்டு இருந்தது.

அவசர அவசரமாய் நடந்து தினமும் பஸ் ஏறும் பஸ் ஸ்டாப்பிங்கில் வந்து நின்றபோது வழக்கமாய் ஏறும் சேப்பாக்கம் பஸ் போய் விட்டிருந்தது.

நொந்துபோனாள் நிமிஷா. ‘அடுத்த பஸ் எப்போது வரும்?’ எனத் தவிப்பாய் இருந்தது.

பஸ் ஸ்டாப்பிலிருந்த பல ரோட்சைட் ரோமியோக்களின் பார்வை நிமிஷாவை அங்குலம் அங்குலமாக வெறித்தன.

நிற்கவே பிடிக்கவில்லை நிமிஷாவுக்கு.

நல்லவேளையாக சேப்பாக்கம் செல்லும் இன்னொரு பஸ் வரவும் முண்டியடித்து ஏறிக் கொண்டாள். வரும் போதே உண்டான கூட்டத்தை ஏற்றி வந்ததால் உட்கார இடமில்லை.

வண்டி சாயும்போதெல்லாம் அதைக் காரணம் வைத்து மேலே சாய்வதும், அப்படிச் சாயும்போது முகத்தருகே முகத்தைக் கொண்டு வருவதுமாய் இடிமன்னர்கள் சில்மிஷம் செய்தனர்.

‘ஐயோ!’ என்றிருந்தது நிமிஷாவுக்கு.

‘வீட்டின் பக்கத்திலேயே நடக்கும் தூரத்திலோ அல்லது ஸ்கூட்டியில் செல்லும் தூரத்திலோ அலுவலகம் இருந்தால் எப்படி இருக்கும்?

இப்பிடி ட்ரெயின் புடிச்சி, பஸ் புடிச்சி, கொஞ்ச தூரம் நடந்தும் போயி, அப்பப்பா தினமும் எத்தன அவஸ்த.

இவுனுக இடிலேந்தாவுது தப்பிக்கலாமே! சல்லுனு ஸ்கூட்டீல போயிட்டு போயிட்டு வந்தா?’ மனம் ஆசைப்பட்டது.

கடும் போக்குவரத்து நெரிசலில் இன்னோவா இன்ச் பை இன்ச்சாக நகர்ந்தது.

‘பாவம் அப்பாவோட காரும் இப்பிடித்தானே அங்குலம் அங்குலமா நகர்ந்திருக்கும்’ என்று நினைத்தான் ஆதி.

காருக்குள் ஏசி இயங்கி குளிர்ச்சியை வாரி வழங்கிக் கொண்டிருக்க மிக மெலிதாக அவனுக்குப் பிடித்த மெலோடி இசை காதுக்குள் ரம்யமாய் நுழைந்து அவனையும் ‘ஹம்மிங்’ செய்ய வைத்துக் கொண்டிருந்தது.

ரோலக்ஸில் மணி பார்த்தான்.

செல்ஃபோன் அழைத்தது.

“அப்பா! சொல்லுங்கப்பா!” என்றான்.

“ஆதி கிளம்பீட்டியா?”

“கெளம்புறதா? இன்னும் பத்து நிமிஷத்துல ஆஃபீஸ் ரீச்சாயிடுவேன்பா! ரொம்ப டிராஃபிக்பா!”

சிரித்தார் கோவர்த்தன்.

“ஓகே. வந்துடு, வெச்சுடவா”

“அப்பா! நான் சொன்னது நெனவிருக்கா? யார்ட்டியும் சொல்லலியே?”

“ம்கூம்! சொல்லல மை சன்!”

“சரிப்பா, நான் அங்க ஒங்க ரூமுக்கு வரவரைக்கும் சைலன்ட்டா இருக்கனும்ப்பா!”

“அதா படிச்சுப் படிச்சு சொல்லிட்டியே!”

“சரிப்பா!”

பஸ் வேகம் குறைத்தது.

நிமிஷா மெதுமெதுவாய் நகர்ந்து பஸ்ஸின் வாசல் படியருகே வந்து நின்று கொண்டாள்.

“பிள்ளையார் கோயில் ஸ்டாப்பிங்!” சத்தமிட்டார் கண்டக்டர்.

நிமிஷா இறங்கினாள்.

பஸ் இடது பக்க சாலையில் திரும்பிச் சென்றது.

அவள் இறங்கிய இடத்தில் நின்ற படியே பிள்ளையாரைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

வானம் வெய்யில் காட்டாமல் இதமாய் இருந்தது. குளிர்ந்த காற்று வீசியது.

‘அப்பாடி கூலிங்கா இருக்கு’ என நினைத்தபடி நடையை எட்டிப் போட்டாள் நிமிஷா.

சாலையைக் கிராஸ் செய்வதற்காகப் போடப்பட்டிருந்த பட்டை பட்டையான கருப்பு வெள்ளைக் கோட்டின் அருகே ரெடியாய் நின்று கொண்டிருந்த பாதசாரிகளோடு தானும் நின்று கொண்டாள்.

வாகனப் போக்குவரத்து சில வினாடிகள் நிற்க, எதிர்புறம் செல்லக் காத்திருந்தவர்கள் விரைவாய் நடந்து சென்று ரோட்டைக் கிராஸ் செய்தனர். சாலையின் எதிர்புறம் சென்றாள் நிமிஷா.

‘பார்க் அவன்யூ’ என்ற பெயர்ப் பலகையோடு ஆரம்பித்திருந்த அந்த சாலைக்குள் நுழைந்தாள் நிமிஷா.

சேப்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் போகும் வழியிலேயே நிமிஷா இறங்கும் பஸ் ஸ்டாப் வந்துவிடும்.

இங்கே அப்பப்பா, வரிசயாய் எதிரும் புதிருமாய் இருபுறமும் அடர்த்தியாய்க் கட்டிடங்கள். ஐந்து ஃப்ளோர்களுக்குக் குறையாத கட்டிடங்கள். பத்தொன்பது, இருபது ஃப்ளோர்களைக் கொண்ட கட்டிடங்களும் பிரம்மாண்டமாய் நின்றன.

குடியிருப்புகள் இல்லாமல் அனைத்துமே வியாபார நிறுவனங்களும் அலுவலகங்களும் ஐ.டி நிறுவனங்கள் இயங்கும் பகுதியாய் அமைந்திருந்தது பார்க் அவென்யூ.

பயங்கரமான டிராஃபிக் இல்லாவிட்டாலும் கூட்டத்துக்குக் குறைவில்லாமல் பரபரப்பாகவே இருந்தது அந்தச் சாலை.

இன்னும் மூன்று கட்டிடங்களைக் கடந்துவிட்டால் ‘கே.ஆர்.ஜி.’ நிறுவனம் வந்து விடும். மணி பார்த்தாள் நிமிஷா. மணி 9.50 ஆகியிருந்தது.

‘ப்ச். ஆபீஸ்குள்ள நொழஞ்சு வருகை நேரத்த உறுதிப்படுத்ததற்குள்ள பத்தாயிடும்’ கவலை மனதிற்குள் எட்டிப் பார்த்த நேரத்தில், கே.ஆர்.ஜி. நிறுவனம் இயங்கும் அந்த ஏழுமாடிக் கட்டிடத்தின் நுழைவு வாயிலில் நுழைந்தது ஆதித்யாவின் இன்னோவா.

பிரம்மாண்டமான அந்த ஏழு மாடிக் கட்டிடத்தின் ஆறாவது ஃப்ளோரின் முகப்பில் ‘பில்டர்ஸ் & ப்ரமோட்டர்ஸ் கே.ஆர்.ஜி.ரியல் எஸ்டேட்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெயரைத் தாங்கிய அகலமும் நீளமுமானப் பெயர் பலகை கண்ணில் பட்டது.

இரவிலும் ஒளிர்ந்து பெயர்ப்பலகையைக் காட்டுமாறு நியான் பல்ப் பொருத்தப்பட்டிருந்தது.

குறைந்தபட்சம் ஐம்பது, அறுபது கார்களை நிறுத்தும் விஸ்தீரணம் கொண்ட அந்தக் கட்டிடத்தின் வாசல் முகப்பில் கலர்க்கலராய்க் கார்கள் வரிசையாய் நிறுத்தப்பட்டிருந்தன.

‘காரை எங்கே நிறுத்தலாம்?’ என்ற சிலவினாடி யோசனையோடு காரை மெதுபடுத்தினான் ஆதி.

உள்ளே நுழைந்தக் காரைக் கண்டவுடன் டைம் கீப்பர் காரருகே ஓடி வந்தார். கார் உள்ளே நுழைந்த நேரத்தையும் காரின் நம்பரையும் பதிவு செய்து கொண்டார்.

‘ஆதித்யா யார்?’ என்பதை அறியாதவர் அவர் என்பதால், எல்லோருக்கும் வைப்பதும் போல் சல்யூட் வைத்து விட்டு, “சார் வண்டிய அங்க நிப்பாட்டுங்க சார்!” என்று குறிப்பிட்ட இடம் நோக்கி ஒற்றை விரலை நீட்டினார் டைம் கீப்பர்.

அவர் சுட்டிக் காட்டிய இடம் நோக்கி வண்டியைச் செலுத்தி நிறுத்தி பார்க் செய்தான்.

காரைவிட்டுக் கீழே இறங்கி கதவை ஓங்கிச் சாத்தினான்.

அலுவலக வளாகத்துக்குள் நுழைந்து கட்டிடத்தை நோக்கிப் பத்தடி நடந்தாள் நிமிஷா.

ஆதி காரை பார்க் செய்து விட்டுக்கீழே இறங்கி காரைச் சுற்றி வந்து கட்டிடம் நோக்கிக் கால்வைத்தான்.

அவன் பார்வையில் விழுந்தாள் நிமிஷா.

விழுந்த நொடியில் ‘வாவ்!’ என்றது மனசு.

அடுத்த நொடி ‘குபீரெ’ன்று உடலில் மின்சாரம் பாய்ந்ததுபோல் ஓர் உணர்வு.

‘இவதா! இவதா!”

‘ம்.. நோ.. நோ.. நோ.. நோ.. இவதா இவதான்னு சொல்லுவியா ஒருமையில? இவங்கதான்னு சொல்லு’ மனசு ஆட்சேபணை செய்தது.

‘ஸாரி.. ஸாரி.. இவங்கதா.. இவங்கதா.. என் இதயம் தேடின பொண்ணு. இவங்கள பாத்த நொடி எம்மனசுல லைட்டு எரியுது. இவங்க உருவம் பச்சுனு எம் மனசுல ஒட்டி பதிஞ்சிடுத்து.

அது சரி, இவுங்க மிஸ்ஸா.. மிஸஸான்னு தெரியாம லைட்டு எரியுது. அது இதுங்கற, அதானே, இருவருக்குமிடையே பத்தடிக்குள் இடைவெளி இருக்க நிமிஷா கழுத்திலிருந்த மெல்லிய செயின் பிள்ளையாரோ முருகனோ லெட்சுமியோ யாரோ ஒருவரின் உருவம் பொறித்த டாலரோடு சுடிதாருக்கு வெளியே தெரிய, மனசு ‘விசிலடித்தது’.

ஓரளவு நிமிஷாவைக் கிட்டத்தில் பார்த்த ஆதி அப்படியே கிறங்கித்தான் போனான்.

‘யப்…பா இந்தப் பொண்ணுதா என்னவொரு அழகு!’ மனம் தேனில் மூழ்கிய வண்டாய் கிறங்கிப் போனது.

‘அப்பா! அம்மா! பாருங்களேன். எந்தப் பொண்ணப் பாத்தா எம் மனசுல லைட் எரிஞ்சி, அந்தப் பொண்ணோட உருவம் எம்மனசுல பச்சுனு ஒட்டுமோ, அந்தப் பொண்ணதா கட்டுவேன்னு சொல்வேன்ல, அந்தப் பொண்ணப் பாத்துட்டேம்ப்பா! பாத்துட்டேம்மா! தோ.. தோ.. எனக்கு முன்னாடிதா நடந்து போறாங்க’ மனம் ஏகமாய் சந்தோஷக்குதி போட்டது.

‘ஏய்! ஏய்! ரொம்ப குதிக்காத, என்னமோ நாம் பாத்தேன். மனசுல லைட்டு எரிஞ்சு. அந்தப் பொண்ணு உருவம் வந்து மனசுல ஒட்டிக்கிச்சுனு குதிக்கிற., அந்தப் பொண்ணு ஒன்ன எப்பிடி நெனைக்கப் போவுதோ? யாருக்குத் தெரியும்? எரிஞ்ச லைட்டோட பல்பு ஃபியூஸாயிட்டா, ரொம்ப குதிக்காத அடக்கிவாசி!’ மனம் மூக்கை நுழைத்து முழங்கியது.

‘வெளீலேர்ந்து எனக்கு எதிரியே வேண்டாம் எங்கூடயே இருக்குற நீயே போதும். ஆரம்பிக்கும் போதே அஸ்து கொட்டிகிட்டு’ மனதிடம் கோவப்பட்டான்.

‘ஹி.. ஹி.. தோணினத சொன்னேன் கோவப்படாத!’ மனம் வாலைச் சுருட்டிக் கொண்டது.

காத்திருந்தவர்கள் நிமிஷா உட்பட அவசரமாய் ஒவ்வொருவராய் உள்ளே நுழைந்தனர்.

கதவு தானாக மூட முற்படும் வினாடிநேரத்திற்குள் தன்னை நுழைத்துக் கொண்டான் ஆதி.

‘தன் மனம் கவர்ந்தவள் எங்கே நிற்கிறாள்?’ என்பதை வினாடிக்கும் குறைவான நேரத்தில் கவனித்துவிட்டு பார்வையை மீட்டுக் கொண்டான்.

அதேசமயம் பெட்டிக்குள் நிற்கும் அனைவரின் பார்வையும் பெண்கள் உட்பட அந்தப் பெண்ணின் மீதே மோதி மோதி மீள்வதையும் பார்த்தான்.

அனைவர் மீதும் கோபம் வந்தது. மனசு எதையோ சொல்லி கிண்டலடித்து கிசுகிசுத்துவிட்டு சாதுவாய் அமைதியானது. அது என்ன சொல்லியதோ, சிரித்துக் கொண்டான் ஆதி.

மூன்றாம் தளத்தில் பெட்டிக்குள் நின்ற ஏழுபேரில் ஐந்துபேர் வெளியேறிவிட ஆதியும் நிமிஷாவும் மட்டுமே நின்றார்கள்.

‘இப்போது வெகு அருகாமையில் தன் மனதைக் கவர்ந்தவள் நிற்கிறாள்’ என்பதே ஆதிக்கு படபடப்பையும் சந்தோஷத்தையும் கொடுத்தது.

ஆனாலும் நிமிஷாவை அவன் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. எங்கே அப்படிப் பார்த்தால் தனியா நிக்கிற ஒரு பொண்ண எப்பிடிப் பாக்குறாம் பாரு எச்ச பயன்னு நெனச்சிட்டா?’ கைகளைக் கட்டிக்கொண்டு லேசாய் தலைகுனிந்து நின்றான்.

‘ப்ச்.. ஆறாவது ஃப்ளோர லிஃப்ட் அடைய அரைமணியா ஆகும். தோ வந்துடும்!’ என்று ஆதி வருத்தத்தோடு நினைப்பதற்குள் ‘தடங்’ என்று ஆறாவது ஃப்ளோரில் நின்றது லிஃப்ட்.

கதவு திறந்து கொள்ள, நிமிஷா வெளியேற முயற்சித்தபோது அவளின் இடப்புறக் காதிலிருந்து அவள் அணிந்திருந்த ரிங் கழன்று பெட்டிக்குள் விழுந்ததை கவனித்தது ஆதியின் கண்கள்.

சட்டெனக் குனிந்து ரிங்கை எடுத்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்துக்குள் வெளியே வந்தான்.

கட்டிடத்தினுள் நுழையும் வாசற்படியைத் தொட்டாயிற்று. வரிசையாய் நான்கைந்து லிஃப்ட்கள். ஒவ்வொன்றின் வாசலிலேயும் பத்து பேருக்குக் குறைவில்லாமல் நின்றார்கள்.

பெரிய நீண்ட காரிடார். வலது பக்கம் நீளமாய் சென்று திரும்பினால் கே.ஆர்.ஜி. நிறுவனத்தின் அலுவலகம். இடதுபுறம் சென்று திரும்பினால் வேறு ஏதோ ஒரு அலுவலகம்.

காரிடாரின் வலப்பக்கம் திரும்பினாள் நிமிஷா.

அவளின் பின்னால் லிஃப்ட்டின் கதவின் முன் நின்றிருந்த ஆதி எச்சிலைக் கூட்டி விழுங்கிவிட்டு “மிஸ்!” என்று அழைத்தான்.

தன்னைதான் யாரோ அழைக்கிறார்கள் என்று நினைத்தவளாய் நடப்பதை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தாள் நிமிஷா.

தன்னுடன் நிமிடநேரத்திற்கும் குறைவாய் லிஃப்டில் பயணித்தவன்.

‘இவன் மிஸ்ஸென அழைத்தது தன்னையா? வேறு யாரையாவதா?’ என்று அங்குமிங்கும் பார்த்தாள்.

அவளின் எண்ண ஓட்டம் புரிந்தவனாய் “உங்களைத் தான்!” என்றான்.

‘என்ன?’ என்பது போல் அவனைப் பார்த்தாள்.

“இது ஒங்குளுதா பாருங்க?” என்று மூடி வைத்திருந்த வலதுகையைப் பிரித்தான் கொஞ்சம் தள்ளியே நின்றபடி.

வாய்ப்புக் கிடைத்ததே என்று பெண்களிடம் நெருங்கி நிற்கும் ரகமில்லை ஆதி.

அவனின் கையில் இருந்த ரிங்கைப் பார்த்தவளின் கைதாமாக காதுகளைத் தொட்டுப் பார்த்தது.இடது காதில் ரிங்கைக் காணவில்லை.

“ஆமாம்!” என்றாள் பதற்றமாக.

“நீங்க லிஃப்ட்லேந்து வெளில போறசமயம் ஒங்க காதுலேந்து லிஃப்ட்டுக்குள்ள விழுந்ததப் பாத்தேன். இந்தாங்க!” ரிங்கை நீட்டினான்.

நிமிஷா வலதுகை உள்ளங்கையை நீட்ட, கொஞ்சம் கையைத் தூக்கினாற் போல் வைத்துக் கொண்டு ரிங்கை நிமிஷாவின் கையில் போட்டுவிட்டு சட்டெனத் திரும்பி காரிடாரின் இடப்பக்கம் நோக்கி நடந்தான் ஆதி.

“தேங்க்யூ!” என்றாள் நிமிஷா.

‘யாழின் இசைபோல் இதென்ன இவ்வளவு இனிமை குரலில்!’ தேனாய் இனித்த குரல் அவனை ஈர்த்தது.

அப்படியே ‘சட்டெ’னத் திரும்ப நினைத்தவனை, ‘டேய்.. டேய்.. பக்கிமாரி, பரக்கா வட்டிகணக்கா, பட்டுனு திரும்பி அசடு வழியாத! பொண்ணுங்க மனசு ஒனக்குத் தெரியாது’ மனசு எச்சரித்து ஆலோசனை சொன்னது.

உடலைத் திருப்பாமல் கழுத்தை மட்டும் திருப்பி நிமிஷாவைப் பார்த்தான்.

“வெல்கம்!” என்று சொல்லிவிட்டு பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

மெஷினில் விரல்வைத்து, ரேகைப் பதிவைச் செய்துவிட்டு, ரிசப்ஷன் கேபின் நாற்காலிக்கு வந்தபோது, தாமதமாய் வந்ததால் ஏற்பட்ட படபடப்பில் ஏ.சி.யின் ஜில்லிப்பையும் தாண்டி வியர்த்தது நிமிஷாவுக்கு.

இவள் வரும் வரை ரிசப்ஷனைக் கவனிக்க நாற்காலியில் அமர்ந்திருந்த ப்ரியம்வதா இவளைப் பார்த்ததும் எழுந்தாள்.

“குட்மார்னிங் ப்ரியா!”

“ம்.. ம்.. குட்மார்னிங்! ஏ, நிமிஷா! இவ்வளவு லேட்டு. எம்.டி. வந்திருக்காரு!”

தூக்கிவாரிப் போட்டது நிமிஷாவுக்கு.

“எம்.டி.வந்திருக்காரா? இன்னிக்கு வியாழன் தானே! நாளைக்குதானே வருவாரு?”

“ஏன்னு யாருக்குத் தெரியும்?” உதட்டைப் பிதுக்கித் தோளைக் குலுக்கினாள் ப்ரியம்வதா.

காரிடாரின் இடப்பக்கம் திரும்பி நடந்த ஆதி மெள்ளத் திரும்பிப் பார்த்தான்.

‘அந்தப் பொண்ணு வலதுபக்கமா போனாங்கன்னா அதுக்கு என்ன அர்த்தம்? ஒருவேள அவுங்க நம்ம கே.ஆர்.ஜி.யிலதா வேல பாக்குறாங்களோ?’ நினைக்கும்போதே இனித்தது ஆதிக்கு.

‘ஏன் அவுங்க அங்க நிலம் வாங்குறது சம்மந்தமா, மேனேஜருட்ட பேச வந்திருக்கலாம். இல்லாட்டி அங்க வேலபாக்குற தெரிஞ்சவங்க யாரையாவது பாக்ககூட வந்திருக்கலாமுல்ல!’ சம்மனே இல்லாமல் ஆஜரானது மனசு.

காற்றடிக்கப்பட்ட பலூனில் ஊசி குத்தியதுபோல் ‘புஸ்’ஸென்றானது ஆதிக்கு.

மணி பார்த்தான்.மணி பத்து பத்து என கடிகாரம் தான் பிறந்த நேரத்தைக் காட்டியது.

‘இனி மேலும் தாமதித்தால் அப்பா ஃபோன் செய்வார்’ என்று நினைத்தவன் காரிடாரின் வலது பக்கம் நேராய் நடந்து திரும்பினான்.

‘பில்டர்ஸ் & ப்ரமோட்டர்ஸ், கே.ஆர்.ஜி. ரியல் எஸ்டேட்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த போர்டு மாட்டப்பட்டிருந்த அந்த பெரிய சைஸ் அலுவலகத்திற்குள் மெல்ல நுழைந்தான் ஆதி.. ஆதித்யா.

ரிசப்ஷனில் அமர்ந்து கணிணியில் முகம் பதித்திருந்த நிமிஷா உள்ளே யாரோ நுழைவதை உணர்ந்து பொதுவாய் எல்லோருக்கும் ஏற்படும் இயல்பான உந்துதலில் கணிணியிலிருந்து முகத்தைத் திருப்பி வாசற்புறம் நோக்கினாள்.

உள்ளே நுழைந்து நாலடி எடுத்து வைத்திருந்த ஆதியை நிமிஷா பார்க்க, பார்த்த மாத்திரத்தில் ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.

நிமிஷாவை ரிசப்ஷனில் பார்த்த ஆதியின் மனது சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தது.

‘இங்க.. இந்த நம்ம நிறுவனத்துல இவுங்க வேல பாக்குறாங்களா?’ மனக்குரங்கு உச்சபச்ச சந்தோஷத்தில் ஏகத்துக்கும் ஆட்டம் போட்டது.

ஆனாலும் தன்னைப் பார்த்தவுடன் அந்தப் பெண்ணின் முகம் ‘சட்’டென கடுப்பாகி சடுதியில் இயல்புக்கு வந்ததையும் ஆதி கவனிக்கத் தவறவில்லை.

சிரித்துக் கொண்டான்.

‘என்ன நெனச்சிருப்பாங்கன்னு தெரியாதா? பாரு, வந்துட்டான் காது ரிங்க எடுத்துக் குடுத்துட்டான்ல, அத சாக்கா வெச்சு தினமு இனிமே ஆஃபீஸ் வாசல்ல வந்து நின்னு, நாம வரச்சே, நம்மப் பாத்து வழியுவா கபோதி.. காவாலிப் பயன்னு நெனச்சிருப்பாங்க’

மீண்டும் மனதிற்குள் சிரித்துக் கொண்ட ஆதி ரிசப்ஷனுக்கு எதிரில் கிடந்த சோஃபாவில் இரு ஆண்கள் அமர்ந்திருக்க, மீதமிருந்த இடத்தில் போய் அமர்ந்து கொண்டான்.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்