தென்றல் வந்து என்னைத் தொடும் ‍- பகுதி 10

கருணாசாகரத்தின் அந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் வாசலை அடைத்து நின்ற மெகா சைஸ் கிரில் கேட்டின் தாழ்ப்பாளை நிமிஷா தொட்ட நேரம் உள்பக்கம் வரவேற்புத் தட்டியொன்றை இரண்டு மூங்கில் கால்களுக்கிடையே கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த காவலாளி ரெங்கசாமி கேட்டின் தாழ்ப்பாள் ஏற்படுத்திய சிறு ஓசை காதில் விழ திரும்பிப் பார்த்தார்.

வெளியே நிமிஷா நிற்பது தெரிந்தது. செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு “பாப்பா!” என்று அழைத்துக் கொண்டே கேட்டை நோக்கி வேகமாய் நடந்து வந்து கேட்டின் உட்புறத் தாழ்ப்பாளைத் திறந்து விட்டார்.

நிமிஷாவைப் பார்த்ததுமே முகம் கொள்ளா சந்தோஷம் அவருக்கு.

“பாப்பா! எப்டிம்மா இருக்க?” என்று கேட்டார் அறுபது வயது தாண்டிய அவர்.

“அங்கிள்! நா நல்லாருக்கேன் அங்கிள். நீங்க எப்டி அங்கிள் இருக்கீங்க? பேரன் கவின் எப்டிருக்கான்?அவுனுக்கு ஒடம்பு இப்ப நல்லா தேவலையா அங்கிள்?”

“நா நல்லாருக்கேம்மா! பேரப்புள்ள இப்ப நல்லாயிட்டாம்மா! அவுனுக்கு ஒடம்பு முடியாமப் போனத ஞாபகம் வெச்சு கேக்குறியே? அதாம்மா நீ!”

சிரித்தாள் நிமிஷா. “சரி அங்கிள்! நா உள்ள போறேன்” சொல்லிவிட்டு உள் நோக்கி நடந்தாள் நிமிஷா.

நிமிஷா வருவது பற்றி யார் சொன்னார்களோ? அல்லது காற்றுதான் சொன்னதோ? நந்தினியம்மா அவசரமாய்த் தன் அறையிலிருந்து வெளியே வந்தார்.

அவர் வெளியே வருவதற்கும் நிமிஷா அந்த பிரம்மாண்ட ஹாலுக்குள் கால் வைப்பதற் கும் சரியாக இருந்தது.

நிமிஷாவைப் பார்த்த நந்தினி அம்மா சந்தோஷ மிகுதியில் “நிமி!” என்று கத்திக்கொண்டே இருகைகளையும் நீட்டினார்.

“மேம்!” அழைத்துக் கொண்டே தன்னை நோக்கி ஓடி வந்த நிமிஷாவை, “கண்ணு! ஹேப்பி பர்த்டே கண்ணு!” என்று சொல்லி அணைத்துக் கொண்டார் நந்தினியம்மா.

குனிந்து அவரின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டாள் நிமிஷா.

“காட் ப்ளஸ்யூ நிமிஷாக் கண்ணு!” சொல்லும்போதே அவரின் கண்கள் கலங்கின. அத்தனை அன்பு நிமிஷாமேல் அவருக்கு.

நந்தினியம்மாவின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு நிமிர்ந்த நிமிஷாவின் கண்களும் கலங்கிப் போயிருந்தன.

“மேம்! நன்றி! நன்றி மேம்!” சொல்லும்போதே குரல் தழுதழுத்தது நிமிஷாவுக்கு. பெற்ற தாயினும் பரிவுகாட்டும் தாயுள்ளம் கொண்டர் என்பதால்.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புங்கணீர் பூசல் தரும்
என்ற வள்ளுவனின் குறளும்,

அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீர் உள்ளே இருக்கும் அன்பைப் பலரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்தி விடும் என்ற மு.வரதராசனார் குறளின் கருத்தாய்ச் சொன்னதும் நிமிஷாவின் நெஞ்சுக்குள் எட்டிப் பார்த்தது.

சுயநலமில்லாத உண்மையான அன்பு.கையெடுத்துக் கும்பிட்டாள் நந்தினியம்மாவை.

அவரின் அன்பும் நெஞ்சார்ந்த அவரின் வாழ்த்துக்களும் நிமிஷாவின் மனதைத் தென்றலாய் வருடின.

அடுத்த ஐந்து நிமிடங்களில் அந்தக் காப்பகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் நிமிஷாவைச் சுற்றி நின்று கைகொடுப்பதும், பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வதுமாய் இருந்த அந்த நேரத்தில் நிமிஷாவின் நெஞ்சுக்குள் அடைபட்டுக் கிடந்த வேதனைகளும் வலியும் காணாமற் போயிருந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.

நிமிஷாவின் கை பற்றித் தனது அறைக்கு அழைத்துக் சென்றார் நந்தினியம்மா.

சூடாய் டீ வந்தது. வெறும் வயிறு ஏற்படுத்தியிருந்த களைப்பு சூடாய்க் குடித்த டீயால் விலகிப் போக இப்போது நிமிஷா உடலாலும் மனதாலும் புத்தம் புதிய நிமிஷாவாய் மாறிப் போயிருந்தாள்.

ஏனோ மனம் றெக்கை கட்டிப் பறப்பதுபோல் இனம் புரியாத சந்தோஷத்தில் பூரித்துப் போனது. பேசாமல் வேலையை ரிஸைன் பண்ணிவிட்டு இந்தக் காப்பகத்திலேயே வந்து தங்கி தொண்டாற்ற வேண்டும் போல் இருந்தது. அத்தனை அமைதி நிலவியது மனதில்.

காலை மணி எட்டரை.

முதல் நாளே இந்த டிரஸ்ஸைத்தான் போடுவது என்று தேர்ந்தெடுத்து ரெடியாக வைத்து விட்டதால் குளித்துவிட்டு வந்ததுமே ‘எந்த பேண்ட்டை போடுவது? எந்த ஷர்ட்டை அணிவது?’ என்ற யோசனைக்கு இடமின்றி முதல்நாள் இரவே முடிவு செய்து எடுத்து வைத்து விட்டாதால் டிரஸ் அணிவது எளிதாகிப் போனது ஆதிக்கு. ஷு முதற்கொண்டு புத்தம் புதிதாய் எடுத்து வைத்திருந்தான்.

எப்போதுமே பளிச்சென்று உடை உடுத்தும் ஆதி ‘நிமிஷாவின் பிறந்தநாள் இன்று அவளுக்கு பிறந்ததநாள் வாழ்த்துச் சொல்லப் போகிறோம்’ என்ற சந்தோஷத்தில் வெகுநேர்த்தியாய்த் தன்னைப் பார்த்துப் பார்த்து தயார்ப்படுத்திக் கொண்டான். கருணாசாகரத்திற்கு சீஃப் கெஸ்ட்டாக வேறு போக வேண்டியிருந்ததால் டிரஸ் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தினான்.

முதல் நாளே ஆண்களுக்கான ப்யூட்டி சலூன் சென்று தலைமுடியைத் திருத்தி, ஷேவிங் செய்து, மீசையை ட்ரிம் செய்து கொண்டு வந்து விட்டதால் ஷேவிங் செய்து கொள்ளும் வேலை மிச்சமானது ஆதிக்கு.

ஆளுயரக் கண்ணாடி முன் நின்று தலைவாரிக் கொண்டே இருந்தவன் மனம் முழுதும் நிமிஷாவே நிறைந்திருந்தாள்.

‘அய்யோ, நிமிஷாதான் எத்தனை அழகு?’ என்று நினைத்தவன் வாயிலிருந்து

என்ற விஜய் படப் பாடல் பிசிறின்றி சரியான ராகத்தோடு வெளியே வந்து அறையில் சுழன்றது.

‘அடேய்! அடேய்! நீ இப்பிடீல்லாம் கூட பாடுவயா? கெட்ட பையண்டா நீ!’ மனம் அவனைக் கிண்டலடித்து செல்லமாய்க் கோவப்பட்டது.

செல்ஃபோன் அழைத்தது.

“அப்பா! என்னப்பா?” என்றான்.

“ஆதி ரெடியாயிட்டியா?”

“தோ! வந்துகிட்டே இருக்கேம்ப்பா!”

டேபிள்மீது இருந்த அமெரிக்கன் டூரிஸ்டர் க்ரே கலர் ப்ரீஃப்கேஸை ஒருமுறைத் திறந்து பார்த்தான். சின்னதாய் மிக அழகாய் ரிச்சாய் இருந்தது அந்த ப்ரீஃப்கேஸ்.

அதற்குள்தான் அலுவலகத்தில் ஸ்டாஃப்களுக்கு அன்பளிப்பாய்த் தரவேண்டிய ரூபாய் 5000 க்கான அமேசான் கிஃப்ட் கூப்பன்கள் இருந்தன.

சாதாரணமாய் கூப்பன்களை பணியாளர்களுக்கு வாட்ஸ்ஸப் அல்லது மெயில் மூலமாக அனுப்பிவிடலாம் என்றாலும் நேரில் நிமிஷாவிடம் கொடுத்து பர்த்டே விஷ் சொல்ல வேண்டும் என ஆதி விரும்பியதால் அச்சிட்ட காகித அட்டையாய் அமேசானிலிருந்து பெறப்பட்டது.

அப்படி பெறப்பட்ட கிஃப்ட் வவுச்சர்கள் மொத்த ஸ்ட்டாஃப்கள் பதினாறு பேருக்குமானது.

கே.ஆர்.ஜி. நிறுவனத்தின் பெயர் அச்சடிக்கப்பட்டிருந்த கவர்களில் தனித்தனியாய் அந்த ப்ரீஃப்கேஸில் வைக்கப்பட்டிருந்தன.

ப்ரீஃப்கேஸின் பிடியை வலது கையில் பிடித்துத் தொங்கவிட்டு மீண்டும் தன்னை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டான்.

உதடுகளைக் குவித்துச் சீட்டியடித்தான். செல்லை எடுத்து ஷர்ட் பாக்கெட்டில் போட்டுகொண்டே அறையை விட்டு வெளியே வந்தான்.

வழக்கம்போல் ‘தடதட’வென மாடிப் படிகளில் இறங்கி கீழே ஹாலுக்கு வந்தான்.

டைனிங் டேபிளின் எதிரில் சேரில் அமர்ந்திருந்தார் அப்பா.

“என்ன ஆதி? ஷு போட்ட? டிஃபன் சாப்படுனும்ல!”

“அப்பா டிஃபன் வேண்டாம்ப்பா. கருணாசாகரத்துல பசங்களோடு சேந்து ஒக்காந்து நானும் சாப்படனும்ல. இப்ப டிஃபன் சாப்ட்டா ஹெவியாயிடும்ப்பா!”

சிரித்தார் கோவர்த்தன்.

“அப்ப கருணாசாகரத்துல ஃபுல் கட்டுகட்ட ரெடியாயிட்ட!”

“போங்கப்பா!” ஆதியும் சிரித்தான்.

“ஆதி! ஷு ரொம்ப சூப்பராருக்கு!”

“அப்ப நாம்ப்பா?”

“ஒனக்கென்னடா, ராஜா மாரில்ல இருக்க. என்னிக்குதா ப்ருத்விராஜ் சம்யுக்தாவ குதிரேல வெச்சு தூக்கிகிட்டு வந்தாப்ல நீ ஏறிப் போற காருல சம்யுக்தாபோல ஒரு அழகுப் பொண்ண ஏத்திக்கிட்டு வரப் போறியோ?” சொல்லிவிட்டுச் சிரித்தார் விமலாதேவி.

மழுப்பலாய் தானும் சேர்ந்து தாயோடு சிரித்தான் ஆதி.

“சரி ஹார்லிக்ஸாவது குடிச்சிட்டு கிளம்பு!” என்றார் விமலாதேவி.

“ஆதி ஒன்னு சொல்ல மறந்துட்டேனே. ஆஃபீஸ்ல எல்லாருக்கும் கிஃப்ட் கூப்பன குடுத்துட்டு சீக்கிரம் கிளம்பி தாம்பரம் கருணாசாகரம் போய்டு. அங்க சின்னப் புள்ளைகளும் வயசானவங்களும் நீ அங்க போய் சேர லேட்டானா பசியோட காத்ருப்பாங்க. அப்படி பசியோட காக்க வைக்கிறது பாவம்ல!”

“ஆமா ஆதி! சாதாரணமா வருஷா வருஷம் இந்த மாசம் அஞ்சாம் தேதி நாம கருணை இல்லத்து புளைங்களுக்கும் கரணாசாகரத்து வயசான பெண்களுக்கும் புது டிரெஸ்ஸும் ஸ்பெஷல் சாப்பாடும் தர்ரது வழக்கம்தான்னாலும் அன்னிக்கி அந்த நிகழ்ச்சில நாம யாரும் போய்க் கலந்துக்கிறது இல்ல. நந்தினியம்மாட்ட பொறுப்ப ஒப்படச்சிடுவோம்.

அவுங்க செஞ்சி முடிச்சிட்டு நமக்குத் தெரிவிச்சுடுவாங்க. இந்த மொறதான் மொத மொதலா நீ போய்க் கலந்துக்கப் போற.

அப்பா சொல்லுறாப்புல சீக்கிரமாவே போய்டு. புள்ளைங்களையும் வயசானவங்களையும் காக்க வைக்கக் கூடாதுல்ல!” என்றார் விமலாதேவி.

“சரிம்மா!” என்றான் ஆதி.

“இன்னொன்னு ஆதி, டெண்டர்ல கலந்துக்க நுழைவுக் கட்டணம் கட்டனும்னீல்ல. நீ கருணாசாகரம் போய்ட்டு வீட்டுக்குத் திரும்புனதும் வீட்லேந்தே கட்டிடலாம் ஆதி. நீ என்ன சொல்லுற?”

“டபுள் ஓ.கே.ப்பா!”

ஹார்லிக்ஸைக் குடித்து முடித்துவிட்டு அம்மா, அப்பாவின் கால்தொட்டுக் கும்பிட்டுவிட்டுக் கிளம்பி ஆதி வாசலுக்கு வந்தபோது மணி ஒன்பது ஐந்து ஆகியிருந்ததை கையிலிருந்த கடிகாரம் காட்டியது.

ஆதி இன்று எந்தக்கார்கள் அருகேவும் நின்று ஆக்கு பாக்கு வெத்தலப் பாக்கு என்று பாடவில்லை. நேராய் இன்னோவாவுக்குள் புகுந்து ஸ்டார்ட் செய்தான்.

‘நீ தானே நிமிஷாவை சந்திக்க வெச்ச! நீதான் எனக்கு ராசி. நன்றி டியர் இன்னோவா!” என்றான்.

காரில் பயணித்த அரைமணி நேரமும் நிமிஷாவின் கையில் கிஃப்ட் கூப்பனைக் கொடுத்துவிட்டு பர்த்டே விஷஸ் சொல்லுவதை மனம் ஒத்திகை பார்த்துப் பார்த்துத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டது.

காரைப் பார்க் செய்துவிட்டு லிஃப்டில் ஏறி மணி பார்த்தான். நேரம் ஒன்பது இருபது என்று ரோலக்ஸ் காட்டியது.

பத்து நிமிடம் முன்பாகவே வந்து விட்டோம். ‘எல்லா ஸ்டாஃப்பும் வந்திருப்பாங்களா?’ அவன் நினைத்து முடிப்பதற்குள் ஆறாவது தளத்தில் வந்து நின்றது மின்தூக்கி.

அலுவலகத்திற்குள் நுழைந்தவனின் கண்களில் ரிசப்ஷனில் அமர்ந்திருந்த ப்ரியம்வதா தென்பட்டாள். பக்கென்றது ஆதிக்கு.

பெரும்பாலும் எல்லா பணியாளர்களும் வந்து விட்டதாய்த் தோன்றியது. இவன் உள்ளே நுழைந்ததும் மரியாதை நிமித்தம் அனைவரும் எழுந்து நின்றார்கள்.

மின்னலென தன் அறைக்குள் நுழைந்தான். ‘நிமிஷா வல்ல, நிமிஷாவக் காணும். பாத்தியா ரிசப்ஷன்ல ப்ரியம்வதா தானே ஒக்காந்திருந்தாங்க?’ மனசு கூவியது.

மீண்டும் வாட்சில் மணி பார்த்தான். ஒன்பது இருபத்தஞ்சு.

‘ஆஃபீஸ் தொடங்க இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு. வந்துடுவாங்க!’ மனதுக்கு சமாதானம் சொன்னான்.

பத்துநிமிடம் கடந்து போனது.

‘இப்ப பாரு மணிய! ஒன்பது முப்பத்தஞ்சு ஆயிடுச்சே! வந்துருப்பாங்களா?’ கேள்வி கேட்டு அடங்க மறுத்து மனம் சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது.

இன்ட்டர்காமில் மேனேஜரைத் தொடர்பு கொண்டான்.

குட்மார்னிங் சொன்னார். இவனும் பதில் வணக்கம் சொன்னான்.

அடுத்த சில நொடிகளில் மேனேஜர் நேரில் வந்து நின்றார்.

ஆதிக்கு எதிரில் கிடந்த சேரில் அமர்ந்திருந்த மேனேஜரிடம் “எல்லா ஸ்டாஃபும் வந்துட்டாங்களா?” கேட்டான்.

“ம்.. எல்லாரும் வந்துட்டாங்க. ஆனா, மிஸ்.நிமிஷா வரல. அவுங்க இன்னிக்கி லீவு. நேத்தே லீவு சொல்லிட்டாங்க.”

ஏமாற்றத்தில் அப்படியே மனதில் நிரம்பியிருந்த மகிழ்ச்சி வற்றிப் போனது ஆதிக்கு.

‘ச்சே!’ என்றானது. ஆனாலும் இயல்பாய் இருப்பதுபோல் காட்டிக் கொண்டான்.

“ஓ! அவுங்க மட்டும்தானே இன்னிக்கு லீவு போட்ருக்காங்க!”

“ஆமா!”

“நம்ம கே.ஆர்.ஜி.நிறுவனம் தொடங்கி இருபத்தெட்டாவது வருடம் ஆரம்பிக்கிற இன்றைய நாளுல அந்த மகிழ்ச்சிய கொண்டாடுற விதமா வருடா வருடம் குடுக்குறாப்ல பொருளா வாங்கிக் குடுக்காம அவுங்கவுங்குளுக்குத் தேவையானத வாங்கிக் கொள்ளும் விதமா இந்த வருடம் நம்ம சேப்பாக்கம் பிராஞ்சுல பணியாற்றுகிற அனைவருக்கும் ரூபாய் 5000‍த்துக்கான கிஃப்ட் கூப்பன நம்ம நிறுவனம் குடுக்க முடிவெடுத்திருக்கு.

வேளச்சேரி, மதுரவாயல் பிராஞ்சுங்களுக்கு அப்பா குடுத்துடுவார். நான் பொறுப்பேற்று குடுக்குற முதல் கிஃப்ட் இந்தத் தொகை. நீங்க மேனேஜர்ங்கிற முறையில உங்களுக்கு நானே குடுத்துடறேன்.
மத்தவங்களுக்கும் நானே குடுக்கனும்னுதா விரும்பறேன்.

ஆனா மிக முக்கியமான வேலையா நா உடனே கிளம்ப வேண்டியிருக்கு. அதுனால நீங்களே நம்ம மற்ற ஸ்டாஃப்ஸுக்கெல்லாம் குடுத்திடுங்க. மிஸ்.நிமிஷாவுக்கு நாளை குடுத்திடலாம். நம்ம ஸ்டாஃப்ஸ் அனைவர்ட்டயும் நான் நாளை பேசுறதா சொல்லிடுங்க!”

ப்ரீஃப்கேஸைத் திறந்து கிஃப்ட் கூப்பன் அடங்கிய கவர் ஒன்றை எடுத்து எழுந்து நின்று மேனேஜரிடம் கொடுத்து கைகூப்பி வணங்கினான்.

மேனேஜரும் கவரைப் பெற்றுக் கொண்டு “நன்றி!” எனச் சொல்லி ஆதியை கைகூப்பி வணங்கினார். நிறுவனம் மேலும் மேலும் வளர வாழ்த்தினார்.

நன்றி சொல்லிவிட்டு நேரம் பார்த்தான் ஆதி. நேரம் ஒன்பது நாற்பதைத் தொடவிருந்தது.

ப்ரீஃகேஸிலிருந்து அனைத்து கவர்களையும் எடுத்து மேனேஜரிடம் ஒப்படைத்துவிட்டுக் கிளம்பினான்.

லிஃடில் ஏறி கீழே இறங்கி கார் நோக்கி நடந்தபோது நிமிஷாவுக்குத் தன் கையால் கிஃப்ட் கவரைக் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லமுடியாமல் போனது அவன் உணர்வுகளை தொய்வடையச் செய்திருந்தன.

காரில் ஏறி அமர்ந்து வண்டியைத் தாம்பரம் நோக்கி செலுத்தியவன் ‘பச்.. போகணுமேன்னு இருக்கு. அப்பாட்டன்னா சொல்லிடலாமா? எனக்கு கருணாசாகரம் போக முடியலேன்னு.

அட அப்பிடிக்கூட சொல்லுவியா நீனு? காரணம் என்னனு சொல்லுவ? நிமிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல முடியலனா?

அடபோவியா! இன்னிக்கில்லாட்டி நாளைக்கு சொல்லிட்டுப் போ. அந்தப் பொண்ணப் பாத்தே ஒரு வாரந்தா இருக்கும். அதுக்குள்ள இப்பிடி மறுகிப் போவுற. காதல் வந்திடிச்சாம், பொல்லாத காதலு. ரொம்பத்தா உருட்டுற!” மனம் அதட்டி சமாதானம் செய்ய முயன்றது.

டிராஃபிக் ஏகத்துக்கும் இருந்ததால் முன்னால் செல்லும் வண்டிகள் இன்ச் இன்ச்சாய் நகர்ந்தன.

ஏற்கனவே ஏமாற்றத்திலும் வருத்தத்திலும் இருந்த ஆதிக்கு டிராஃபிக் மெல்ல மெல்ல‌ ஊர்ந்து செல்வது எரிச்சலை ஏற்படுத்த காரணமே இல்லாமல் ஹாரனை அழுத்தி அழுத்தி சப்தமெழுப்பினான்.

‘த பாரு! வருத்தத்தையெல்லாம் கருணை இல்லத்திலும் கருணாசாகரத்திலும் காட்டாத! அசிங்கமாயிடும். அப்பா காதுக்குப் போச்சுனா நீ என்னா பதிலு சொல்லுவ? பாத்து நடந்துக்க!’ மனம் எச்சரிக்க, அது சரியெனவே பட்டது ஆதிக்கு.

ஒருவழியாய் ஆதியின் கார் கருணாசாகரம் பில்டிங்கின் வாசலில் வந்து நின்றபோது நேரம் பத்து ஐந்து ஆகியிருந்தது. கேட் திறக்கப்பட கார் உள்ளே நுழைந்தது.

உள்வாசலில் ஒரே மகிழ்ச்சி ஆரவாரம் கேட்க, காரைவிட்டுக் கீழே இறங்கினான் ஆதி.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்