தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 11

தென்றல் வந்து என்னைத் தொடும் பகுதி-11

பூந்தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களாய் கருணை இல்லச் சிறார்கள் முகம் முழுதும் மகிழ்ச்சி பரவிக் கிடக்க கைகூப்பி வணங்கி நின்று ஆதியை வரவேற்கக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரே காம்பவுண்டுக்குள் அடுத்தடுத்து அமைந்திருந்தன கருணை இல்லமும் கருணா சாகரமும்.

கருணா சாகரத்தில் தங்கியிருக்கும் வயதான பெண்களில் சிலரும் ஆதியை வரவேற்கக் காத்து நிற்க நடுநாயகமாய் கைகூப்பி முகமலர்ச்சியோடு நின்றிருந்தார் நந்தினியம்மா.

“வாங்க! வாங்க! மிஸ்டர் ஆதித்யா!” அன்போடு அழைத்த ஆசிரமத் தலைவி நந்தினியம்மாவைத் தானும் கைகூப்பி வணங்கினான் ஆதி.

சிறார்கள் வெல்கம் பாட்டுப் பாடினார்கள்.

“அடே! அடே! இது வேறயா!” சிரித்துக் கொண்டே பாட்டுப் பாடிய குழந்தைகளின் முதுகில் அன்போடு தட்டிக் கொடுத்தான் ஆதி.

அந்த நீளமும் அகலமுமாய் அகண்டு விரிந்திருந்த ஹாலில் கால் வைத்த ஆதிக்கு ஹாலில் செய்யப்பட்டிருந்த அலங்காரமும் நேர்த்தியும் மனதை வெகுவாகக் கவர்ந்தது.

ஹாலின் வலப்புறச் சுவற்றின் ஓரமாய் அடுத்தடுத்து வரிசையாய் நீலக்கலரில் சேர்கள் நிறைய எண்ணிக்கையில் போடப்பட்டிருந்தன.

அவற்றில் கருணை இல்லத்தில் வளரும் சிறுபிள்ளைகள் வரிசையாய் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

எதிர்ப்புறத்தில் போடப்பட்டிருந்த சிகப்பு நிற நாற்காலிகளில் கருணாசாகரத்து வயது முதிர்ந்த பெண்கள் அமர்ந்திருந்தனர்.

ஆதி ஹாலுக்குள் நுழைந்ததும் பிள்ளைகளும் பெண்களும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.

கை கூப்பி தலையை லேசாய்க் குனிந்து அவர்களின் வரவேற்பைப் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டான்.

ஹாலின் உள்ளே நுழைந்ததுமே நேரெதிரில் திருமண மண்டபங்களில் இருப்பதுபோல் அதிக உயரத்திலில்லாமல் இரண்டு படிகள் ஏறினால் மேடையில் கால் வைத்து விடலாம் என்ற அளவில் மேடையொன்று இருந்தது.

அதன் பின்சுவற்றில் அன்பையும் பண்பையும் போதித்த புத்தர், வள்ளலார், ரமண மகரிஷி, புதுச்சேரி அரவிந்தாஸ்ரம அம்மா, ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல், மதர் தெரஸா படங்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மாட்டப்பட்டிருந்தன.அந்த இடமே அமைதியும் தெய்வீக முமாய் இருந்தது.

மேடையில் நான்கைந்து இருக்கைகளும் கொஞ்சம் நீள சைஸ் மேஜையொன்றும் போடப்பட்டிருக்க மேஜையில் இரண்டு மூன்று அடுக்குகளாய் கருணை இல்லக் காப்பகக் குழந்தைகளுக்கு அளிப்பதற்கான உடைகள், கருணாசாகரத்தைச் சேர்ந்த வயதான பெண்மணிகளுக்குக் கொடுக்கப்பட விருந்த ஆடைகள் வைக்கப்பட்டிருந்தன.

ஒவ்வொருவருக்கும் எளிதாய் எடுத்துக் கொடுப்பதற்காக உடைகள் ப்ளாஸ்டிக் கவர்களில் வைக்கப்பட்டு கொடுக்கப்பட வேண்டியவரின் பெயர் எழுதப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

ஆதியின் கண்கள் ஹாலை அலங்கரித்தித்திருக்கும் விதத்தை மிகுந்த ஈர்ப்போடு சுழன்று பார்த்து ரஸிப்பதைக் கண்ட நந்தினியம்மாவுக்கு ரொம்பவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

‘நிமிஷா எந்த காரியத்த செஞ்சாலும் அந்த வேலைய பார்க்குறவங்க ரசிச்சி பாக்குறா மாரி சிறப்பா செஞ்திடுவா.

பாரேன் காலேல எட்டு மணிக்குதா வந்தா. வந்தவ ஹால எந்த அளவுக்கு அழகா மாத்தி வெச்சுட்டா.

காப்பகப் பணியாளர்கள் ஹெல்ப் பண்ணினாலும் ஐடியா நிமிஷாவுது தானே!’ நிமிஷாவை மனதிற்குள் பாராட்டினார் நந்தினியம்மா.

“மிஸ்டர் ஆதித்யா உட்காருங்களேன்!” சிம்மாசனம் போல் இருந்த குஷன் தைக்கப்பட்டிருந்த கொஞ்சம் பெரிய சைஸ் மரநாற்காலியில் ஆதியை அமரச் சொன்னார் நந்தினியம்மா.

“நோ.. நோ.. நோ.. எனக்குப் போய் எதுக்கு மேடம் இது போலலாம். சாதா நாற்காலி போதும்” சொல்லிக் கொண்டே பழக்க தோஷத்தில் கை கடிகாரத்தில் நேரம் பார்த்தான். மணி பத்து இருபது.

“ரக்ஷிதா!” ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்த காப்பகப் பணிப்பெண்ணை அழைத்தார் நந்தினியம்மா.

“அம்மா! என்னங்கம்மா!” கேட்டுக் கொண்டே நந்தினியம்மாவின் அருகில் வர,

“ரக்ஷிதா! நிமிஷா எங்க? வி.ஐ.பி. வந்தாச்சில்ல நிகழ்ச்சிய ஆரம்பிக்க வேண்டாம். நிமிஷாவக் கூப்பிடுங்க”

சாதாரணச் சேர் ஒன்றில் சிறார்களுக்கு நடுவில் தானும் ஒருவனாய் அமர யத்தனித்த ஆதியின் செவிகளில் “நிமிஷா!” என்று நந்தினியம்மா உச்சரித்த, அந்த ஒற்றை வார்த்தை என்ன மேஜிக் செய்ததோ அமர முயன்றவன் அதைத் தவிர்த்து விட்டு உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தவன்போல் சட்டென மீண்டும் நின்றான்.
மனம் பரபரத்தது.

‘இரு.. இரு.. அடிக்கடி இப்பிடி நிமிஷாவ நெனச்சுப் பாத்து நெனச்சுப் பாத்து என்னைய பரபரக்க வெக்காத; ஆமா சொல்லிப்புட்டேன்.

அதென்ன ஒலகத்துல நிமிஷாங்குற பேருல அந்தப் பொண்ணு மட்டுந்தா இருக்குமா என்ன?

பாரு.. பாரு.. நிமிஷான்னு அந்தம்மா சொன்னவங்க நாப்பத்தஞ்சு, அம்பது வயசு பெரியம்மாவா இருப்பாங்க.

அந்தம்மாவ பாத்ததுமே நீ ஏமாத்தத்துல ‘ஙே!’ன்னு முழிக்கப் போகுற பாரு’ மனம் செய்த கேலி ஆதியை அப்படியும் இருக்குமோ என்று எண்ண வைத்து லேசாய்க் கைகளால் பின் கழுத்தைச் சொரிய வைத்தது. நாற்காலியில் அமர்ந்தான்.

அப்போது ஹாலுக்குள் நுழைந்த கருணாசாகரத்தைச் சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர் நந்தினியம்மாவை நெருங்கி “அம்மா! நம்ம மீனாட்சியம்மாவுக்கு நாலுநாளா காய்ச்சலில்ல. டாக்டர் கஞ்சி குடுத்திட்டு மாத்திர குடுக்கச் சொல்லிருக்காரு.

அந்தம்மா நிமிஷாப் பொண்ணு கஞ்சி குடுத்தாதா சாப்பிடுமா. மாத்ர போட்டுக்குமாம். ஒரே பிடிவாதம்.

அவுங்குளுக்கு கஞ்சி குடுத்திட்டு மாத்ர குடுத்திட்டு வர்ரதா நிமிஷாப் பொண்ணு சொல்லிச்சு.இப்ப வந்திடும் நிமிஷா!”

அந்த வயதான பெண்மணி யின் ஒவ்வொரு வார்த்தையும் ஆதியின் செவிகளில் தெளிவாய் நுழைந்தன.

“நிமிஷாப் பொண்ணு!” என்று அந்தப் பெண்மணி உச்சரித்தபோது பரபரப்பும் எதிர்பார்ப்பும் கூடிப் போயிற்று.

‘நிமிஷாப் பொண்ணு’ன்னு சொல்றாங்க. அப்ப அப்ப தவிப்பாய் இருந்தது ஆதிக்கு.

பார்வை வாசலைப் பார்த்தபடி இருக்க, வினாடியும்கூட நீண்ட நேரமாய்த் தோன்றியது.

மின்னல் போல் ஹாலுக்குள் நுழைந்தாள் நிமிஷா. அப்படியே மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனான் ஆதி.

‘நெஜமாவா நெஜமாவா நெஜமாவா நிமிஷாவேதானா! ஹைய்யோ!’

‘இதென்ன அதிசயம் இங்க எப்டி இவுங்க நம்பவே முடீல’ சேரை விட்டு எழுந்திருக்க முயன்றவனை, ‘அவசரப்படாத! அவசரப்படாத! போற போக்கப் பாத்தா நீ எழுந்துகிட்டு ஹாய் நிமிஷா!ன்னு கூப்டுடுவ போலருக்கு. அப்டில்லாம் கூப்ட்டு அவுங்கள தர்மசங்கடப்படுத்திடாத.

நந்தினியம்மாவே அந்தப் பொண்ண ஒனக்கு அறிமுகப்படுத்துவாங்கன்னு தோணுது. அப்பிடி அறிமுகப்படுத்துனா இவுங்கள எனக்குத் தெரியுமே. எங்க நிறுவனத்துலதா வொர்க் பண்றாங்கன்னுலா சொல்லி வச்சுடாத.

அந்த நேரத்துல அந்தப் பொண்ணு எப்பிடி நடந்துகிதோ அதுக்கு ஏத்த மாரி நீயும் நடத்துக்க. சரியா? ஜென்ட்டிலா நடந்துக்க. மனம் குட்டியாய் பிரசங்கம் செய்தது. அதுவும் கரெக்ட்டுதா!’ அமைதியாய் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் ஆதி.

ஆனாலும் நிமிஷாவிடமிருந்து கண்களை நகர்த்தவே முடியவில்லை ஆதியால்.

ஆதி! நிறுத்து.. நிறுத்து.. விட்டா மைக் புடிச்சி பாடிடுவ போலருக்கே! வீட்டுக்குப் போறதுக்குள்ள ஒரு வழியாயிடுவ போலருக்கு’ மனம் மீண்டும் அடக்கியது.

உள்ளே மின்னலென நுழைந்த நிமிஷாவின் கண்கள் மேடையின் வெற்று இருக்கைகள் மீது படிந்தது.

‘நல்லவேளை இன்னும் அந்த முக்கியஸ்தர் வரவில்லை’ என்று நிம்மதியானாள்.

ஆதிதான் அந்த முக்கியஸ்தர் என்பதும் பிள்ளைகளின் வரிசையில் தானும் ஒருவனாய் அவன் அமர்ந்திருப்பதையும் அவள் கவனிக்கவில்லை.

வேகமாய் நடந்து நந்தினியம்மாளிடம் சென்றாள்.

“ஸாரி மேம்! மீனாட்சியம்மாவுக்குக் கஞ்சியும் மாத்திரையும் குடுத்துட்டு அவுங்கள படுக்க வெச்சிட்டுவர கொஞ்சம் லேட்டாயிடுத்து மேம்! மணி பத்தரை மேம்! அந்த வி.ஐ.பி.இப்ப வந்திடுவாரு இல்ல மேம்!” என்றாள்.

“நிமிஷா கண்ணு! வி.ஐ.பி.வந்து பத்து நிமிஷமாச்சு. நாமதா லேட்!” என்றார் நந்தினியம்மா.

“என்னது வி.ஐ.பி.வந்தாச்சா!” திடுக்கிட்டுப் போனாள் நிமிஷா.

“என்ன மேம் சொல்றீங்க? மேடையில யாரையும் காணும்!”

“அதோ பிள்ளைங்களோட சேந்து ஒக்காந்திருக்காரு பாரு!”

உடலைத் திருப்பாமல் முகத்தை மட்டும் திருப்பிப் பார்த்தாள் நிமிஷா.

ரொம்பப் பதிவிசாய் அமைதியாய் வலது கைவிரல் நகங்களைப் பார்த்தபடி சிறுபிள்ளைகள் அமர்ந்திருக்கும் நீலநிறச் சேர்களின் வரிசையில் தானும் ஒருவனாய் அமர்ந்திருந்தான் ஆதி.

அவனைப் பார்த்த மாத்திரத்தில் அதிர்ந்து போனாள் நிமிஷா. ‘என்னது! என்னது! இவரா! இவரா!’ கண்களை நம்ப முடியாமல் தவித்தாள்.

தன்னை நிமிஷா பார்ப்பதை ஆதியால் உணர முடிந்தது.

நிமிர்ந்து நிமிஷாவைப் பார்க்கவேண்டும் போல் மனம் குறுகுறுத்தது. ‘பாக்கலாமா?’ அவன் நினைப்பதற்குள் மனமே முந்திக் கொண்டது.

‘டேய்.. டேய்.. அப்பிடில்லாம் ஙே!ன்னுலாம் பாக்காத. நந்தினியம்மாவே நிமிஷாவ ஒனக்கு இப்ப அறிமுகப்படுத்துவாங்க பாரு! ஏற்கனவே சொல்லிட்டேன், நிமிஷாவ தெரிஞ்சாப்ல காமிச்சிக்காத! வராங்க! வராங்க!’ மனது பதுங்கிக் கொண்டது.

தன்னை நோக்கி நடந்துவரும் காலடியோசை கேட்டு மெல்ல நிமிர்ந்தான் ஆதி.

நந்தினியம்மாவும் நிமிஷாவும் எதிரில் வந்து நின்றார்கள்.

நந்தினியம்மாவை ஏறிட்டுப் பார்த்தான்.

“நிமிஷா! இவர் மிஸ்டர் ஆதித்யா. நீ வேல பாக்குற நிறுவனத்து ஓனர் திரு.கோவர்த்தன் அவர்களோட சன். ஒனக்குத் தெரிஞ்சிருக்குமே?”

“வணக்கம்!” சொல்லிக் கொண்டே ஆதியைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள் நிமிஷா. முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. ஆனால் நிமிஷா உள்ளுக்குள் படபடப்பாய் இருப்பது புரிந்தது ஆதிக்கு.

“வணக்கம்!” என்று நிமிஷாவைப் பார்த்துக் கைகூப்பினான்.

“மிஸ்டர் ஆதித்யா இவுங்க மிஸ்.நிமிஷா. ஒங்க நிறுவனத்துல தான் வொர்க் பண்றாங்க!”

“ஓ! அப்டியா! எந்த ப்ராஞ்சுல?”

“நிமிஷா நீ எந்த ப்ராஞ்ச்சில வொர்க் பண்ணுற?”

நந்தினியம்மா கேட்கவும் தடுமாறினாள் நிமிஷா.

‘சேப்பாக்கம் பிராஞ்ச்!’ என்று தான் சொல்லப் போக, ஆதி தானும் சேப்பாக்க அலுவலகத்துப் பொறுப்பைப் பார்த்துக் கொள்வதாய் சொல்லிவிட்டால் ஏற்கனவே ஆதித்யாவைத் தெரிந்திருந்தும் தெரியாத மாதிரி நிமிஷா நடந்து கொள்கிறாளே என்று மேம் தன்னைப் பற்றித் தவறாக நினைத்துவிட்டால்!’ தவிப்போடு திண்டாடிய நிமிஷா, ‘எது நடந்தாலும் சரி உண்மையைச் சொல்லி விடுவோம்!’ நினைத்துச் “சேப்பாக்கம் பிராஞ்ச்!” என்றாள்.

அவள் தவிப்பு நன்றாகவே புரிந்தது ஆதிக்கு.

“ஓ! சேப்பாக்கம் பிராஞ்சா? நா வேளச்சேரி பிராஞ்ச பாத்துக்கிறேன். அப்பாதான் சேப்பாக்கம் ப்ராஞ்ச பாத்துக்குறாரு. நா ஒரு ரெண்டு தடவ சேப்பாக்கம் ப்ராஞ்சுக்குப் போயிருக்கேன். ஆனா இவுங்கள பாத்ததா ஞாபகம் இல்ல!”

“ஓ! அப்ப நிமிஷா! மிஸ்டர் ஆதித்யாவ ஒனக்குத் தெரிஞ்சிருக்க முடியாது”

‘நன்றி!’ என்பதுபோல் ஆதியைப் பார்த்தாள் நிமிஷா.

மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஆதியும் நந்தினியம்மாவும் வயதில் மூத்த ஆசிரியைகள் சிலரும் அமர்ந்திருக்க நந்தினியம்மா ஆதிக்கு சால்வையொன்றை அணிவிக்க வந்தபோது எழுந்து நின்று மிகப் பணிவாய் அதனை ஏற்றுக் கொண்டான் ஆதி.

வயதில் மூத்த அனைவரையும் கைகுவித்து வணங்கினான்.

நந்தினியம்மாவின் அழைப்பின் பேரில் மேடைக்கு வந்தாள் நிமிஷா.

அடுத்ததாய் மேஜைமீது வைக்கப்பட்டிருந்த புத்தாடைக் கவர் ஒவ்வொன்றாய் எடுத்து அதில் ஒட்டப்படிருக்கும் பெயரைப் படித்து நிமிஷா நந்தினியம்மாளிடம் கொடுக்க, நந்தினியம்மாள் ஆதியின் கையில் கொடுக்க படிக்கப்படும் பெயரினைக் கொண்ட பிள்ளைகள் ஒவ்வொருவராய் மேடையேறி புத்தாடையைப் பெற்றுக் கொண்டு மேடையில் இருக்கும் அனைவரையும் வணங்கிவிட்டு இறங்கிச் சென்றனர்.

அடுத்து வயதான பெண்களும் மேடையேறிவர முயன்றபோது ஆதி நந்தினியம்மாவிடம், “மேடம் அவங்கள்ளாம் மேடை ஏறி வரவேண்டாம். கீழே இறங்கி நாமே கொடுத்து விடலாம்!” என்று சொன்னபோது வியந்து போனார் நந்தினியம்மா.

‘எவ்வளவு பெரிய பணக்கார வீட்டுப் பிள்ள. இப்பிடியொரு எளிமையா? பண்பாடா? குடும்பமே பண்பாடான நல்ல குடும்பம். அந்த குடும்பத்து வாரிசு ஆதித்யா இப்படி எளிமையா இருக்கக் கேட்பானேன்?’ மனதிற்குள் சிலாகித்துக் கொண்டார்.

ஆதியின் விருப்பப்படியே கீழே இறங்கி வந்தே வயதான பெண்மணிகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.

அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் ஆஸ்ரம சிப்பந்திகள் சுறுசுறுப்பாய் இயங்கினார்கள். நீள்வடிவ சாப்பாட்டு மேஜைகள் கொண்டு வரப்பட்டு போடப்பட்டன.

காப்பகத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் வயதான பெண்களும் அன்றாடம் உணவருந்தப் பயன்படுத்தும் சாப்பாட்டுத் தட்டுக்கள் வைக்கப்பட்டன.

விருந்தளிப்பவர் யாரோ அவர் முதலில் இனிப்பு பரிமாறுவது வழக்கம் என்பதால் ஆதி குட்டிக் குட்டிக் கப்புகளில் பாயஸம் ஊற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்த ட்ரேயை வைத்துக்கொண்டு நின்றிருந்தவரிடமிருந்து அதனை வாங்கித்தானே ஒவ்வொரு தட்டிலும் வைக்க ஆரம்பித்தான்.

பதறிப் போய் விட்டார் நந்தினியம்மா.

“மிஸ்டர் ஆதி! நீங்க போயி இதெல்லாம் செஞ்சிகிட்டு வேண்டாம்” என‌த் தடுக்க அவன் கேட்பதாய் இல்லை. முதல் ஐந்தாறு பிள்ளைகளுக்கும் வயதான பெண்மணிகளுக்கும் ஆதியே பாயஸக் கப்புகளை வைக்க அவனை வியப்போடு பார்த்தபடி நின்றாள் நிமிஷா.

இருபுறமும் பிள்ளைகள் அமர்ந்திருக்க நடுவிலிருந்த நாற்காலியில் ஆதி வற்புறுத்தி அமர வைக்கப்பட்டான். அவனுக்கெதிரே புத்தம் புது எவர்சில்வர் பிளேட்.

மூன்று நான்கு பேர் சாப்பாடு பரிமாற ஆரம்பிக்க ஒரு மரியாதைக்காவும் வழக்கத்திற்காகவும் உட்கார்ந்தேன்.

“ப்ளீஸ் அதிகமால்லாம் வெச்சுடாதிங்க!” சிரித்தபடியே கையெடுத்துக் கும்பிட்டான். கண்கள் நிமிஷாவைத் தேடின.

‘அதென்ன நிமிஷா கையில ஜாக்கிரிகள் அடங்கிய கூடைமாரி தெரியுது!’ பந்தியில் முதலாவதாய் அமர்ந்திருக்கும் சிறுவனின் தட்டில் கூடையிலிருந்து ஒரு ஜாங்கிரியை எடுத்து நிமிஷா வைப்பது கண்களில் பட்டது.

‘அப்டின்னா.. அப்டின்னா.. எனக்கும் ஜாங்கிரி பரிமாற நிமிஷா வருவாங்க!’ மனம் பரபரத்தது.

அவளையே பார்ப்பதும், ‘யாராவது தான் நிமிஷாவயே பார்ப்பதை கவனித்துவிட்டால் என்ன நினைப்பார்களோ?’ என்று நினைத்துப் பார்வையை நகர்த்துவதுமாய் திண்டாடினான்.

‘இன்னும் எத்தனை பிள்ளைகளைத் தாண்டி நம்மிடம் வருவாங்க!’ என்று நினைத்து ஒன்னு, ரெண்டு, மூனு என்று பிள்ளைகளை எண்ண ஆரம்பித்தான் மனதிற்குள். அவனுக்கே அவன் செயல் சிரிப்பை வரவழைத்தது.

ஒவ்வொரு பிள்ளைக்கும் தட்டில் ஜாங்கிரியை வைத்து விட்டு அந்தக் குழந்தையின் கன்னம் தொட்டு ஏதோ சொல்லிச் சிரித்துவிட்டு அடுத்த பிள்ளையிடம் வரும் நிமிஷாவைப் பார்த்த ஆதி ‘அப்பாடி! நிமிஷா சும்மா இருந்தாலே அழகு அதுவும் சிரிக்கும்போது!’ என்று நினைத்தவன்.

என்று வாய்விட்டு முணு முணுத்துவிட்டு வாய்விட்டு சத்தமாய் முணுமுணுத்திருப்பமோ என்ற சந்தேகத்தில் தனக்கு இருபுறமும் அமர்ந்திருந்த பிள்ளைகளைக் கழுத்தை இப்படியும் அப்படியுமாய்த் திருப்பிப் பார்த்துவிட்டு நிமிர்ந்தவனின் எதிரில் வந்து நின்றாள் நிமிஷா.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்