தென்றல் வந்து என்னைத் தொடும் – ‍பகுதி 12

‘மெதுவான குரலில் முணுமுணுப்பதாய் நினைத்து கொஞ்சம் சத்தமாய்ப் பாடியிருப்போமோ?’ என நினைத்து இருபுறமும் அமர்ந்திருந்த பிள்ளைகளை இப்படியும் அப்படியுமாய்க் கழுத்தைத் திருப்பிப் பார்த்துவிட்டு நிமிர்ந்தவனின் எதிரில் வந்து நின்றாள் நிமிஷா.

ஆதி மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிமிடம்.

சாப்பிடுபவர்க்கும் சாப்பாடு பரிமாறுபவர்க்கும் இடையே எத்தனை அடி இடைவெளி இருந்துவிடப் போகிறது? ஒரு இரண்டடி? மூன்றடி? அவ்வளவு தானே இருக்கும்? அதற்கு மேலா இருந்துவிடப் போகிறது?.

அப்படி அந்த கொஞ்சமான இடைவெளியில் எதிரே நிற்கும் நிமிஷாவைப் பார்த்த மாத்திரத்தில் ஆதிக்குப் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அதென்னவோ சிறுபிள்ளைகளுக்கு ஜாங்கிரி பரிமாறும்போது அந்த ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தட்டில் ஜாங்கிரியை வைத்துவிட்டு அந்தப் பிளைகளின் கன்னம் தொட்டு ஏதோ சொல்லிச் சிரித்து விட்டு வந்தவள் ஆதியின் தட்டுக்கெதிரில் வந்தபோது நெர்வஸானாள்.

நிமிர்ந்து அவனைப் பார்க்கவே இல்லை. க்ளவுஸ் அணிந்திருந்த வலது கையால் ஆதியின் தட்டில் வைப்பதற்காக ஜாங்கிரி ஒன்றை எடுத்தபோது லேசாய் கை நடுங்கியது; மனம் தடுமாறியது.

‘ஏய் ஆதி! என்னடா அந்தப் பொண்ண இப்பிடி பப்பரப்பன்னு பாத்துக்கிட்டு ஒக்காந்திருக்க. நிமிஷாவுக்கு பர்த்டே விஷ் எப்பிடி பண்ணுறதுன்னு ஒரு வாரமா ரிகர்சல் பண்ணிப் பண்ணிப் பாத்துக்கிட்டிருந்த.

காலேல ஆஃபீசுல சொல்லலாம்னு நெனச்சு வீட்டுல கண்ணாடி முன்னாடி நின்னு தலைவாரிக்கிட்டே! என்னமோ பாடினியே என்ன பாடின? என்ன பாடின?

ம்.. ம்.. அதா அதா.. ஆஹா என்பார்கள்; அடடா என்பார்கள்.
அவளைப் பார்த்த எல்லோரும் மூன்றே வினாடி அவளைப் பார்த்தாலே நெஞ்சைத் தாக்கும் மின்சாரம்னு பாடின.

ஓ! இப்ப நிமிஷாவப் பாத்து மூணு வினாடி ஆயிடுச்சா! ஒன் நெஞ்ச மின்சாரம் தாக்கிடுச்சு. அதானே? புரிஞ்சிடுச்சி! புரிஞ்சிடுச்சி!

தோ பாரு! அந்தப் பொண்ணு ஒந்தட்டுல ஜாங்கிரிய வெச்சிட்டு அடுத்த புள்ளைகிட்ட போயிட்டா அப்பறம் அவுங்கள கூப்ட்டு சொல்லுவியா ஹேப்பி பர்த்டேன்னு!

நேர ரெண்டடீல வந்து நிக்கிது தேவத கணக்கா! வாய்ப்பு கெடச்சிதுன்னு அதுங்கிட்ட பர்த்டே விஷ்ஷ சொல்லாம பப்பரக்கன்னு பாத்துக்கிட்டு ஜொள்ளு விடுற’ மனம் ஆதியைத் தட்டித் தூக்கியது.

‘ஐயோ! ஆமான்ல!’ சுதாரித்துக் கொண்டான் ஆதி.

கையிலெடுத்த ஜாங்கிரியை ஆதியின் தட்டில் வைப்பதற்காக தட்டை நோக்கி கையைக் கொண்டு வந்த நிமிஷாவின் காதுகளில்

“ஹாய்! ஹேப்பி பர்த்டே மிஸ் நிமிஷா! மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே!” என்ற ஆதியின் வாழ்த்துக் குரல் விழுந்த நொடி ‘குப்’பென்று உடல் முழுதும் ரத்தம் பொங்கி வடிந்ததுபோல் உணர்ந்தாள் நிமிஷா.

‘இவுருக்கு, இவுருக்கு எப்பிடித் தெரியும் இன்னிக்கு நம்ம பர்த்டேன்னு? நிச்சயம் மேம் சொல்லிருக்க மாட்டாங்க. சொல்ல வேண்டிய அவசியமும் அவுங்களுக்கில்ல. பின்ன நம்ம பர்த்டே இன்னிக்குன்னு இவுருக்கு எப்பிடித் தெரிஞ்சிச்சு?’ குழப்பத்தோடு சட்டெனத் தன்னை அறியாமல் ஆதியை ஏறிட்டு நோக்கினாள்
நிமிஷா.

நிமிஷாவின் மனதில் எழும் கேள்வியும் அதன் காரணமாய் அவள் முகத்தில் தோன்றிய குழப்பமும் தடுமாற்றமும் புரிந்தது ஆதிக்கு.

குனிந்தபடி ஜாங்கிரியை எடுத்துத் தன் தட்டில் பரிமாறிவிட்டு நகர இருந்தவளை தான் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து தன்னை குழப்பத்தோடு தலைநிமிர்ந்து பார்க்க வைத்ததைக் கண்டு ஆதியின் உதட்டில் குறும்புத் தனமான குறுஞ்சிரிப்பு. புருவங்கள் கொஞ்சமாய் மேலேறி இறங்கின.

ஆதி அலுவலகத்தில் எம்.டி.யாய்ப் பொறுப்பேற்ற அன்று தன்னை மேனேஜர் ஆதிக்கு அறிமுகப்படுத்தியபோது இப்படிக் குறும்பாய்ச் சிரித்ததும் அப்போதும் இதுபோல் ஆதியின் புருவங்கள் கொஞ்சமே உயர்ந்து இறங்கியதும் அந்த நேரத்தில் அவனின் வசீகரத்தில் தான் தடுமாறியதும் சட்டென நினைவுக்கு வந்தது நிமிஷாவுக்கு.

அவன் குறும்பாய்த் தன் கண்களைப் பார்த்து சிரித்ததைத் தாங்க மாட்டாதவளாய் தலையைக் குனிந்து கொண்டாள்.

கையிலிருந்த ஜாங்கிரியை ஆதியின் தட்டில் வைக்காமல் தடுமாறினாள்.

“இன்னும் எனக்கு ஜாங்கிரி வெக்கில!” மிகத் தாழ்ந்த குரலில் அவன் சிரித்துக் கொண்டே சொன்னபோது மொத்தமாய் செய்வதறியாது போனாள் நிமிஷா.

சட்டென ஒரு ஜாங்கிரியை எடுத்து சமாளித்துக்கொண்டு தட்டில் வைத்து விட்டு நகர முயன்றவளை, “பர்த் டே விஷ் பண்ணவனுக்கு ஒரு தேங்ஸ்கூட சொல்ல மாட்டீங்களா மிஸ் நிமிஷா?” ஆதியின் கேள்வி அவளை வெட்கப்பட வைத்தது.

“தே.. தே.. தேங்ஸ்!” என்றாள் தட்டுத் தடுமாறி.

“அதுசரி, தேங்ஸ்னு மட்டும் சொல்லிட்டா போதுமா? நேருக்கு நேரா பர்த்டே விஷ் பண்ணவங்களுக்கு ட்ரீட் ஒன்னும் குடுக்க வேண்டாம்.

அட்லீஸ்ட் ஒரு சாக்லெட்கூட கெடையாதா? இந்த ஜாங்கிரியதா தட்டுல வெச்சேனேன்னு சொல்லக் கூடாது.

நீங்க வாங்கித் தரணுமில்ல. சாக்லெட்கூட வேண்டாம். சின்னதா ஒரு ஸ்மைல். அதுகூட கெடைக்காதா?”

நிமிஷா காதில் மட்டுமே விழக்கூடிய அளவுக்கு ஆதியால் கிசுகிசுப்பாய் எப்படித்தான் பேச முடிந்ததோ?

அவன் லேசாய்த் தலைசாய்த்து வலது கைவிரல்களை ஒன்றாய்க் குவித்து ஒரு இஞ்ச் அளவு இப்படியும் அப்படியும் ஆட்டி பிறர் பார்த்துவிடாதபடி ‘ஒரு ஸ்மைல்கூட கிடைக்காதா?’ என்று கிசுகிசுப்பாய்க்கேட்ட அந்த அவன் செயலைப் பார்த்து ‘குப்’பென்று கன்னம் சிவந்து போனாள் நிமிஷா. காது மடல்கள் வெட்கத்தால் சூடேறிப் போயின.

‘நிமிஷா! வேண்டாம்! வேண்டாம்! வெக்கப்படுறது, காதுமடல் சூடாறது, வயித்துக்குள்ள ஆயிரம் பட்டாம் பூச்சிங்க பறக்குறமாரி ஃபீல் பண்ணுறது இதெல்லாம் வேண்டாம் நிமிஷா!

நீ இந்த உணர்வுக்கெல்லாம் ஆட்படக் கூடாது. நீ அதையெல்லாம் அனுபவிக்கப் பொறக்குல’ மனசு அவளைக் கட்டிக்கட்டி இழுத்து இழுத்து தளைகளைப் போட்டது.

ஆதி கேட்ட அந்த ஸ்மைலை செய்யக் கூடாதென்று கட்டிப் போட்ட மனதின் தளைகள்.

ஆதி மீண்டும் “மிஸ் நிமிஷா! ஸ்மைல்கூட பண்ணமாட்டீங்களா?” என்று கெஞ்சலாய் எதிர்பார்ப்போடு கேட்டபோது நிமிஷாவின் மனது இரும்புச்சங்கிலிகளாய்ப் போட்டிருந்த தளைகள் ஒவ்வொன்றாய் தெறித்து வீழ்ந்தன.

மெல்ல நிமிர்ந்து ஆதியைப் பார்த்து புன்னகைத்தாள் நிமிஷா.

சட்டென அந்த இடத்தைவிட்டு நகர்ந்து ஆதிக்கு அடுத்ததாய் அமர்ந்திருந்த‌ பிள்ளையிடம் சென்றாள்.

நிமிஷாவின் புன்னகையால் ஆதியின் மனது சந்தோஷத்தால் நிறைந்து போனது.

தட்டில் எந்த பதார்த்தத்தையும் ஆதி அதிகம் வைத்துக் கொள்ளவில்லை; மிகக் குறைவாகவே இருந்தது.

தட்டில் பரிமாறப்பட்டவைகளை அப்படியே வைத்துவிட்டு எழுதுவது நாகரீகம் ஆகாது என்பதால் கொஞ்சமாய் எடுத்து சாப்பிட்டு சாப்பிட்டதாய் பேர் பண்ணினான்.

நிமிஷா வைத்த ஜாங்கிரியை மட்டும் முழுவதுமாய் தின்றான். மனதின் மகிழ்ச்சியால் அதிகம் சாப்பிடாமலேயே வயிறு நிறைந்து போயிருந்தது.

தன்னோடு அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த அனைவரிடமும் சொல்லுவதைப்போல நான் எழுந்து கொள்கிறேன் என்று டேபிள் மேனர்ஸ்க்காகப் பொதுவாய்ச் சொல்லிவிட்டு எழுந்தான்.

வாட்சில் மணி பார்த்தான்.நேரம் பனிரெண்டு ஐந்தாகியிருந்தது.

வாஷ்பேசினில் கை கழுவி வாய் கொப்பளித்து கர்சீஃப்பால் கை ஈரத்தைத் துடைத்தபடி வந்தவனின் காதுகளில் நந்தினியம்மாவிடம் நிமிஷா சொல்லிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது.

“மேம் நா கெளம்புறேன்!”

“நிமி! சாப்டக்கூட இல்ல. கெளம்புறேங்குற?”

“இல்ல மேம்!நா ஒங்களப் பாத்து வாழ்த்து பெறத்தான் வந்தேன் மேம்!”

“அப்ப நீ சாப்ட மாட்ட?”

“இல்ல மேம் அது வந்து..”

“அப்ப நானும் இன்னிக்கி சாப்படப் போறதில்ல!”

அவர்கள் இருவர் அருகேயும் நின்ற காப்பகப் பணியாளர்களும் நிமிஷா “நீங்க சாப்பிடாமப் போனீங்கன்னா நாங்களும் சாப்ட மாட்டோம். ஏன் என்னாச்சு? ஏ சாப்டமாட்டேன்றீங்க?” என்றனர்.

“அது அது ஒன்னுமில்ல. நா இப்ப கிளம்பினாதா ரெண்டு மணிக்கு வீட்டுக்குப் போவேன். கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்திட்டு நாலு மணிக்கெல்லாம் கிளம்பி திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்குப் போலாம்னு இருக்கேன்!”

“ஓ! கோவிலுக்குப் போகனும் சரி, அதுக்கு சாப்டாமயே போவிங்களா?”

“ஆக எங்களையெல்லாம் பட்னி போடப் போறீங்க. அதானே!”

சுற்றி நின்ற பெண்களில் ஒருவர் சொல்ல நந்தினியம்மாள் உட்பட அனைவரும் சிரித்தனர்.

நடந்த சம்பாஷணைகள் அனைத்தையும் கேட்டு மனதில் வாங்கிக் கொண்டான் ஆதி.

கை கழுவிவிட்டு வரும் ஆதியைப் பார்த்த நந்தினியம்மா ஆதியிடம் வந்து “சாப்டீங்களா மிஸ்டர் ஆதித்யா?” எனக் கேட்டார்.

“தேங்க்யூ மேடம்! சாப்ட்டேன்! ரொம்ப அருமையா ஏற்பாடு செஞ்சிருக்கீங்க. சிறப்பா செஞ்சு மூடிச்சிட்டீங்க. ஒங்களுக்கும் காப்பகப் பணியாளர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். நான் கிளம்புறேன்”

ஆதிக்குக் கை குவித்து வணக்கம் தெரிவித்தார் நந்தினியம்மா.

“அப்பா அம்மாவிடம் எங்கள் அனைவரின் வணக்கத்தையும் நன்றியையும் சொல்லிடுங்க. நானும் ஃபோன் செய்கிறேன் சார்க்கு!” என்றார் நந்தினியம்மா.

காப்பக வாசலை நோக்கி நடந்தவனின் பின்னால் நந்தினியம்மாவும் காப்பகப் பணியாளர்களும் வந்தார்கள்.

தன்னை வழியனுப்ப வாசல்வரை வந்த அனைவரையும் கைகூப்பி வணங்கிவிட்டு காரில் ஏறினான் ஆதி.

காரை ஸ்டார்ட் செய்தவனின் கண்கள் ‘நிமிஷா தென்படுகிறாளா?’ எனத் தேடின.

ம்கூம்! தென்படவில்லை. ஆனாலும் ஆதி வருத்தமேதும் படவில்லை. அவன் மனதில் மகிழ்ச்சி மட்டுமே தளும்பிக் கொண்டிருந்தது.

காப்பகத்தின் பிரம்மாண்ட கிரில் கேட்டைத் தாண்டி ஆதியின் கார் வெளியே வந்து மெயின் ரோடில் ஏறி பரபரக்கும் போக்குவரத்தில் கலந்தது.

வரும்போது இன்ச் பை இன்சாய் நகர்ந்த வாகனங்கள் ஏற்படுத்திய எரிச்சல் இப்போது இல்லை ஆதிக்கு.

நிதானமாய் காரைச் செலுத்திக் கொண்டிருந்த ஆதியின் மனதில் ‘கடந்த ஒருவாரமா ஆஃபீஸ்ல நிமிஷாவ சுடிதாரில் மட்டுமே பாத்ருக்கோம்ல. சுடிதார்லயே அவுங்க ஆள அடிக்குற அழகு.

இன்னிக்கு சேலேல பாக்கும்போது யப்பாடி! எப்பிடி அம்சமா இருக்காங்க! அதுவும் டார்க் ப்ளு கலர் சேலையும் ஜாக்கெட்டும் சேலைக்குப் பொருத்தமா அவுங்க போட்டுருந்த காதணியும் வளையலும் கழுத்துமணியும் இடுப்புல போட்ருந்தாங்களே அந்த அதென்ன! அதென்ன! ஒட்டியாணம், ஒட்டியாணம் எல்லாமே செம சூப்பரில்ல!’

‘ஆதி! பொல்லாப் பயடா நீ! அத்தன பேரு சுத்தி நிக்கையில இப்பிடி அந்தப் பொண்ண இன்ச் இன்ச்சா கண்ணாலயே ஃபோட்டோ எடுத்திருக்குற!

நடத்து! நடத்து! அது சரி அந்தப் பொண்ணு காலுக்கு என்னா போட்ருந்துது. கட்ஷுவா? சப்பலா? பாத்தியா!’ மனம் கிண்டலடித்தது.

‘ம்.. பாக்காம! சப்பல்தா போட்ருந்தாங்க. சப்பல்ல பொறங்கால மூடுற பட்டையில பூ, பூவா போட்ருந்திச்சி! செம்மையால்ல இருந்து அந்த சப்பல் அவுங்க காலுக்கு!

நெத்தியில மரூன்கலர்ல குட்டியூண்டு பொட்டு, கை வெரல்களுல மரூன் கலர் நெயில் பாலிஷ்.

டார்க் ப்ளூ ஸ்ட்ராப் போட்ட வாட்ச், இடது கையில போதுமா? இனிமே ஒன்னும் கேக்க மாட்டியே?’ மனதின் கிண்டல் கேள்விக்குப் சாதுப் பிள்ளைபோல் பதில் சொன்னான் ஆதி.

‘அடப்பாவி! ஏய் ஆதி! கெட்ட பையன்டா நீ!’ ஆதியை அன்பாய்த் திட்டிவிட்டு அடங்கிப் போனது மனசு.

கைபேசி அழைத்தது.

அப்பா.

ஆன் செய்து “ஹாய் அப்பா!” என்றான்.

“என்னப்பா ஆதி? எல்லாம் நல்லபடியா முடிஞ்சிதா? கிளம்பிட்டியா?”

“ஆமாம்ப்பா டிராஃபிக்ல இருக்கேன். கருணாசாகர தலைவியம்மா ரொம்ப சூப்பரா எல்லா ஏற்பாடும் செஞ்சிருந்தாங்கப்பா!”

“வெரிகுட்! வீட்டுக்கு வா ஆதி! பேசுவோம்”

“சரிப்பா! நீங்களும் அம்மாவும் சாப்டீங்களாப்பா?”

“இனிமேதா ஆதி! சரி மை சன்! நந்தினியம்மா கால் பண்ணுறாங்க!”

“சரிப்பா, வெச்சுடறேன்!”

வீட்டு வாசலில் ஆதி காரை நிறுத்தி வாட்சில் மணி பார்த்தபோது நேரம் இரண்டைத் தொட பத்து நிமிடம் இருந்தது.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்