காரின் ஹார்ன் சப்தம் கேட்டதும் வீட்டைச்சுற்றி வந்து கொண்டிருந்த அல்லு, ‘இதுபோல் ஹார்ன் ஒலி எழுப்பினால் அது ஆதியாகத்தான் இருக்கும்’ என அறிந்து வைத்திருந்ததால் நாலே எட்டில் ஓடிவந்து உட்புறமாய் கேட்டருகே வந்து நின்றது.
வெளிவாசலில் கருநீல யூனிஃபாம் அணிந்திருந்த கொஞ்சம் வயதான காவலாளி அரைத்தூக்கத்திலிருந்து மீண்டு பதறியடித்துக்கொண்டு எழுந்து கேட்டைத் திறக்க ஓடிவந்து கேட்டைத்திறந்து விட்டு ஆதியைப் பார்த்து சல்யூட் அடித்தார்.
சிநேகமாய் அவரைப் பார்த்து லேசாய்ச் சிரித்துவிட்டு காரை உள்ளே செலுத்தி அதை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி பார்க் செய்துவிட்டுக் கீழே இறங்கி கதவைச் சாத்திவிட்டு வீட்டுக்குள் நுழைய இருந்தவனை அல்லு ஏதோ ஒருவிதமாய்ச் சப்தம் எழுப்பிக் கொண்டு பின் தொடர்ந்தது.
‘நா ஒன்னப் பாக்கதானே! வீட்ட சுத்தி சுத்தி வந்துக்கிட்டிருந்தவன் அத வுட்டுப் பிட்டு கேட்டாண்ட வந்து நின்னே.
என்ன பாக்காமயே போவுற. ம்கூம்.. ம்கூம்.. நீ முன்னமாரி இல்ல. ஏதோ வித்தியாசமா தோணுதே’ என நினைத்தது போல் குரலில் கொஞ்சமே கொஞ்சமாய் பொய்க் கோபம், செல்லக் கோபம் காட்டுவது போல் அல்லு கோணல் மாணலாய்க் குரைத்தது.
இன்னும் நாலடி வைத்தால் வீட்டுக்குள் செல்லும் அளவில் மேல்படியில் ஏறி நின்ற ஆதி அல்லுவின் வித்தியாசமான குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.
இவனைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்த அல்லுவைப் பார்த்ததும் சிரித்துவிட்டான் ஆதி.
“டேய்.. டேய்.. கோச்சுக்காதடா! ஒன்னப் பாக்காம போய்ட்டேனா ஸாரிடா.. ஸாரிடா..” மீண்டும் படிகளில் இறங்கி கீழே வந்தான்.
தன்னருகே வந்த ஆதியைப் பார்த்து சந்தோஷப்படுவதுபோல் வாலே அறுந்து விழுந்து விடும் போன்ற அளவுக்கு வாலை வேக வேகமாய் ஆட்டித் தள்ளியது அல்லு.
சட்டென இரண்டு பின்னங் கால்களையும் தரையில் ஊன்றி முனங்கால்களை ஆதியின் இடுப்பில் வைத்து நின்றது. வால் வேகமாய் இப்படியும் அப்படியும் ஆடியது.
அதன் கழுத்தைக் கட்டிக் கொண்டு லேசாய் முதுகைத் தடவி விட்டான். மிருதுவாய் முதுகில் முத்தமிட்டான்.
“அல்லு!” என்றான் அன்போடு “நா ரொம்ப சந்தோஷமா இருக்கேண்டா அல்லு! அந்த சந்தோஷத்துல ஒன்ன கொஞ்சம் மறந்துட்டேண்டா! ஸாரிடா கோச்சுக்காத! ம்.. சரியா? நா உள்ள போட்டுமா?”
அனுமதி கொடுப்பதுபோல் ஆதியின் இடுப்பில் வைத்திருந்தக் கால்களை இறக்கிக் கீழே வைத்தது அல்லு.
வீட்டுக்குள் நுழைந்த ஆதியை தாய் விமலாதேவிதான் “வாடா ஆதி!” என்று அழைத்தார்.
“ஆதி எல்லாம் நல்லபடியா நடந்திச்சா? சாப்டியா? ரொம்ப வெய்யிலு! பாவம் ஒனக்கு அலைச்சல்!” என்றார்.
“தோ இருக்குற தாம்பரத்துக்கு ஏ.சி காருல போய்ட்டு வந்துருக்காரு ஒம்மகனாரு! வெய்யிலாமே வெய்யிலு!” மனைவியைக் கிண்டலடித்துக் கொண்டே தனது அறையிலிருந்து வெளியே வந்தார் கோவர்த்தன்.
“அப்பா! போய்ட்டு வண்ட்டேம்ப்பா!”
“அங்க மொத்த பேருக்குமான சாப்பாட்ட நீயே சாப்ட்டுட்டியாமே! நந்தினியம்மா ஃபோன் பண்ணி சொன்னாங்க”
“ஹோ! ஹோ! ஹோ!” சிரித்தார் விமலாதேவி.
“நல்ல வேளப்பா நீங்க வல்ல. வந்திருந்தீங்கன்னா சாப்பாட்டுல பாதிய ஒங்குளுக்குல்ல குடுக்க வேண்டியிருந்திருக்கும்”
மறுபடியும் குரலெடுத்துச் சிரித்தார் விமலாதேவி.
“அப்பாவும் புள்ளையும் சேந்துட்டாபோதும் ஒருத்தர ஒருத்தர் கேலி பண்ணிக்குறத கேட்டாலே சிரிச்சு சிரிச்சே வயித்த வலிக்கும்”
சிரித்ததினால் கண்களில் தளும்பிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் விமலாதேவி.
“நீங்க ரெண்டு பேரும் சாப்டாச்சா?”
“இனிமேதான்!”
“சாப்டுங்க. நான் போயி ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிகிட்டு வந்துடறேன்”
“நீயும் வா ஆதி. அங்க என்ன அழகுல சாப்ட்ருப்பேன்னு தெரியாதா?” சொன்ன மனைவியின் வார்த்தையை ஆமோதித்தார் கோவர்த்தன்.
“வேண்டாம்மா!”
“ஆதி வா சாப்ட! அங்க நீ சாப்ட்டெல்லாம் இருக்க மாட்ட?” அழுத்திச் சொன்னார் கோவர்த்தன்.
“சரிப்பா!” சொல்லிக் கொண்டே படிகளில் தாவியேறி தன் அறையை அடைந்து பேண்ட் ஷர்ட்டைக் களைந்து பெட்டில் எறிந்தான்.
கப்போர்டைத் திறந்து கைக்குக் கிடைத்த பெர்முடா ஷார்ட்ஸை எடுத்து மாட்டிக்கொண்டு குளியலறை சென்று பைப்பைத் திறந்து கொட்டும் தண்ணீருக்கு நேராய் கைகளை நீட்ட, அடிக்கும் வெய்யிலால் ஓவர் டேங்க் தண்ணீர் சூடேறிக் கிடக்க நூறு டிகிரி செல்ஷியஸ் சூட்டுடன் தண்ணீர் கொட்டியது.
“யம்மாடி! என்னா சூடு!” வெடுக்கெனக் கைகளை இழுத்துக் கொண்டான்.
சில வினாடிகளில் சூடான தண்ணீர் வெளியேறிவிட இப்போது தண்ணீர் குளிர்ந்திருந்தது.
இரு கைகளிலும் தண்ணீர் பிடித்து கண்களை மூடி முகத்தில் அடித்ததுக் கொண்டபோது மூடிய விழிகளுக்குள் நிமிஷா
தெரிந்தாள்.
“தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிரினில் கலந்து விட்டாள்
நெஞ்சினில் நுழைந்தாள் என் மூச்சினில்!” பாட்டை மெலிதாக ரசித்துப் பாடிக் கொண்டே பாத்ரூமை விட்டு வெளியே வந்தான்.
துண்டால் முகம் கழுத்து என்று துடைத்துக்கொண்டபோதுதான் தான் மொத்தமாய் நனைந்துபோய் இருப்பதும் பெரமுடா முழுவதுமாய் ஈரமாகி தண்ணி சொட்டுவதும் புரிந்தது.
‘வர வர நிமிஷா நெனைப்புல லூசாயிடுவோம் போலருக்கு! முகம் கழுவப் போனவன் முழுசா குளிச்சிட்டோம் போல! நினைப்பும் சுகமாய்த்தான் இருக்கு’ சிரித்துக் கொண்டான்.
“டேய் ஆதி! தூங்கிட்டியா?” அம்மா கீழிருந்து கத்தினார்.
“தோ வந்துட்டேம்மா!” கைக்குக் கிடைத்த ஷார்ட்ஸை மாட்டிக் கொண்டு டீஷர்ட்டைப் போட்டுக்கொண்டு ஜிப்பை இழுத்துவிடபடி படிகளில் இறங்கி ஹாலில் கால் வைத்தான்.
தட்டில் சாப்பாடு பரிமாறப்பட்டபோது “அம்மா! என்னம்மா இது? பாத்ரூம்ல மொகம் கழுவலாம்னு பைப்பத் தொறந்து தண்ணிக்கு நேரக் கைய நீட்டுறேன். தண்ணி என்னா சூடும்மா சுடுது. கையே சூட்டுல கொப்புளிச்சிடும் போல ஆயிடுச்சும்மா!”
“நல்லவேளடா ஆதி! கையோட போச்சு!” சொல்லிவிட்டு கோவர்த்தன் சிரித்தார்..
“ஹோ! ஹோ! ஹோ!” கணவரின் வார்த்தையைக் கேட்டு பலமாய்ச் சிரித்தார் விமலாதேவி.
“காமெடி! ம்.. காமெடி! சிரிச்சுடறேன்பா!” தானும் வாய்விட்டுச் சிரித்தான் ஆதி.
சாப்பாட்டில் கை வைத்தவனை “ஆதி காப்பகத்துல இன்னி சாப்பாட்டு மெனு என்ன? ஸ்வீட் என்ன பரிமாறினாங்க?” அப்பா கேட்ட கேள்விக்கு “மெனு! மெனு! ஹி! ஹி! ஹி!” பல்லைக் காட்டினான்.
‘நா எங்க தட்டுல வெச்ச மத்த பதார்த்தங்களப் பாத்தேன். எனக்கு நிமிஷா தெரிஞ்சாங்க. அவுங்க எந்தட்டுல வெச்ச ஜாங்கிரி தெரிஞ்சிது. வேற என்னல்லாம் பரிமாறினாங்கன்னு யார் பாத்தா? இதெப்பிடி அப்பாகிட்ட சொல்லுறது?’ நெளிந்தான்.
“ஹையோ! ஒன்னப் போய் அனுப்பினேம் பாரு!” சிரித்தார் கோவர்த்தன்.
சாப்பாடு முடிந்தது. வழக்கம் போல் கடலை மிட்டாய் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ஹால் சோஃபாவில் வந்தமர்ந்தார் கோவர்த்தன்.
தானும் அப்பா அமர்ந்திருந்த சோஃபாவுக்கு எதிரில் கிடந்த மற்றொரு சோஃபாவில் வந்து உட்கார்ந்தான் ஆதி.
“ம்! அப்பறம் சொல்லு ஆதி. என்ன நீ ரெடியா? டெண்டருல கலந்துக்க நுழைவுக் கட்டணத்த கட்டிடலாமா? யோசிச்சியா? இல்ல இன்னும் ரெண்டு நாளு யோசிச்சி சொல்லுறியா?”
ஏற்கனவே முடிவெடுத்தபடி “இன்னிக்கு கட்டிடுவோம்ப்பா! நம்ம நிறுவனம் ஆரம்பிச்ச நாளுல இந்த முயற்சிய செய்யலாம்னு தோணுதுப்பா. முன் வெச்ச கால பின் வெக்க வேண்டாம். முயன்றால் முடியாததில்லனு நீங்கதானேப்பா சொல்லுவீங்க!”
“ஏம்ப்பா ரொம்ப பெரும் பணம் வெச்சு ஆரம்பிக்கிற வேல சரியா வருமா? இவ தொழிலுக்குப் புதுசு. கத்துக்குட்டி. இவன நம்பி எறங்குனான்னு தயக்கமா இருக்காப்பா!”
“அட போ ஆதி! என்னமோ கான்ட்ராக்ட் எடுத்து வேலய ஆரம்பிச்சதும் இவ எதாச்சும் செஞ்சிகிட்டம்னு ஒன்ன தனியா விட்டுட்டு ஒதுங்கிடுவேனா என்ன?
குருவி தலேல பனங்காய வெச்சாப்புல பெரும் ப்ராஜக்ட நீயே பாத்துக்கன்னு சொல்லிடுவேனா.
முன் பின்ன ஒனக்கு அனுபவமா இருக்கு? ஒம் பேருல டெண்டர்ல கலந்துகுவோம். கெடச்சிசின்னா நாம் பாத்துக்குறேன்.
எங்கூட இருந்து நீ கத்துக்க. எனக்குப் பிறகு நீதானே மை சன் நம்ம நிறுவனத்த ஆலமரமா கிளை பரப்பச் செய்யனும்”
“அப்பா!” என்றபடி எழுந்து வந்து அப்பாவின் தோளில் முகம் பதித்தான் ஆதி.
“ஓகே! ஓகே!” மகனின் முதுகில் தட்டிக் கொடுத்தார் கோவர்த்தன்.
“இன்னைக்கு வியாழக்கெழ! குளிகை, எமகண்டம், ராகு காலம் எல்லாம் முடிஞ்சிடுச்சி. மரணயோகம்கூட இல்ல. சித்தயோகம் நடக்குது. டெண்டர்ல கலந்துக்க நுழைவுக் கட்டணம் கட்ட நல்ல நாளு. இன்னிக்கு குருவாரம் வேற. ப்ரமாதமான நாள்!” என்றபடி சுவாமி அறையிலிருந்து வெளியே வந்தார் விமலாதேவி.
நேரம் மணி மூன்றாகி இருந்தது. அடுத்த அரைமணி நேரத்திற்குள் டெண்டரில் கலந்து கொள்ள நுழைவுக் கட்டணம் கே.ஆர்.ஜி. நிறுவனத்திற்காக ஆதித்யாவின் பெயரில் ஜி.பே. மூலம் கட்டப்பட்டது.
சுவாமி அறைக்குள் சென்று நமஸ்கரித்துவிட்டு அப்பாவையும் அம்மாவையும் ஒன்றாய் நிற்க வைத்து நமஸ்கரித்தான் ஆதி.
சந்தோஷ மிகுதியில் கண் கலங்கிப் போனார்கள் கோவர்த்தனும் விமலாதேவியும்.
“அப்பா! அம்மா!”
“சொல்லு ஆதி!’
“இன்னிக்கு ஒங்க ரெண்டு பேரோட ஆசிர்வாதத்தாலயும் சப்போர்ட்டாலயும் முதல்முதலா ஒரு புது முயற்சில இறங்கிருக்கேன். எனக்கு என்னவோ கோவிலுக்குப் போய் முருகன தரிசிச்சிட்டு வரணும்னு தோணுது.
அதுனால நா திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்குப் போயி கடவுள பாத்து, எல்லாத்துலயும் பக்கத்துலயே நின்னு ஜெயிக்க வைக்கனும்னு வேண்டிக்கிட்டு வரலாம்னு!” அவன் முடிப்பதற்குள்
“வெரிகுட் ஆதி போய்ட்டு வா! கந்தசாமி நம்ம குலதெய்வமாச்சே!” என்றார் கோவர்த்தன்.
“ஆதி கந்த சாமிய பாக்க போற! அவன் சீக்கிரமா ஒனக்குப் புடிச்சா மாரி ஒருபொண்ண ஒங்கண்ணுல காட்டணும்னு நா இங்கிருந்தே வேண்டிககிறேன். அவந்தா சீக்கிரமா கண்ணத் தொறக்கணும்!” என்றார் விமலாதேவி.
“மணி நாலாகப் போகுது. இன்னும் அரைமணி, முகாமணி நேரத்துல கெளம்பினாதான் ஆறு மணிக்காவது கோயிலுக்குப் போகலாம். போய் முருகனப் பாத்துட்டு வீடு திரும்ப எட்டாயிடும். நாம் போய்க் கிளம்புறேன்!” சொல்லிக் கொண்டே மாடிப்படிகளில் விரைவாக ஏறினான் ஆதி.
“பாருங்களேன் நம்ம புள்ளைய ஒரு நல்ல காரியத்த செய்ய ஆரம்பிக்கும்போது குலதெய்வத்தக் கும்பிடனும்னு நெனைக்கிறத! எந்தப் பொண்ணு குடுத்து வெச்சுருக்காளோ இப்பேர்ப்பட்ட புள்ளைய புருஷனா அடைய!
என்னிக்கு இவுனுக்குப் புடிச்சாப்புல இவங்கண்ணுல ஒரு பொண்ணு ஆம்ப்ட்டு அந்த பொண்ணுக்கு இவனப் புடிச்சி! கந்தசாமி யப்பனே! நீதா இவனுக்கு சீக்கிரமே கல்யாணத்த முடிச்சி வெக்கணும்.
இந்த வீட்டுக்கு நல்ல மருமக வரணும். பேரனும் பேத்தியுமா வீடு ஜேஜேன்னு இருக்கணும்” விமலாதேவி அங்கலாய்ப்புடன் சொல்லிப் புலம்பினார்.
“ஆமா விமலா எனக்கும் இப்பிடிதா தோணுது! இன்னும் கொஞ்ச நாளு டைம் குடுப்போம். இவங்கண்ணுல இவ விரும்புறாப்புல எந்தப் பொண்ணும் விழலன்னு வெய்யி, நாமளே நல்ல பொண்ணாப் பாத்து கட்டி வெச்சுடுவோம். நம்ம புள்ள நம்ம வழிக்கு வருவான்!” என்றார்
கோவர்த்தன் நம்பிக்கையோடு.
தனது அறையில் கண்ணாடி முன் நின்று தலைவாரிக் கொண்டிருந்த ஆதியின் வாயிலிருந்து
“நீ வந்ததும் மழை வந்தது!
நெஞ்செங்கும் ஆனந்தம்!
நீ பேசினால் என் சோலையில்!
எங்கெங்கும் பூவாசம்!
என்காதல் நிலா!
என்று வாசல் வரும்!
அந்த நாள் வந்து தான்
என்னில் சுவாசம் வரும்!”
பாடல் கொஞ்சம் சப்தமாக வெளியே வர சட்டென நிறுத்திவிட்டு தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.
“நா என்ன இப்பிடியாயிட்டேன்!” தன்னையே கேட்டு பின்னந்தலையில் தட்டிக் கொண்டான்.
‘என்ன டிரஸ் போடலாம்? கோவிலுக்குப் போறோம். பேண்ட் ஷர்ட் வேண்டாம். வேட்டியும் ஷர்ட்டும் போதும்’ நினைத்தவனை பிராண்ட ஆரம்பித்தது செல்ல மனசு.
‘நெஜமா சொல்லு! நீ கோவிலுக்கும் போறது சாமிய குடும்புடறதுக்கு மட்டும்தானா? திடீர்னு திருப்போரூர் போயி சாமிகும்புட ஆசப்படுற? தெரிஞ்சிகிட்டே ஏங்கேக்குற?
ஃபிப்டி பர்சென்ட் சாமி பாக்க, பாக்கி, காப்பகத்துல நிமிஷா நந்தினியம்மாட்ட என்ன சொன்னாங்க நீ கேக்கல?
சாயந்திரம் நிமிஷா திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு போப் போறதா சொல்லல. அதா பாக்கி ஃபிப்டி பர்சென்ட் ஹி! ஹி! ஹி!’
‘அடங்கொய்யால! பார்ரா அதெல்லாம் காதுல வாங்கி வெச்சிருக்கிறத! அதுசரி திடீனு அவுங்க முடிவ மாத்திகிட்டு வராம வெச்சா?’
‘அதிகப்பிரசங்கி! அபஸ்மாரம்!’ மனதைத் திட்டினான்.
வேட்டிக்கு மாறி, பாட்டில் க்ரீன் கலர் ஃபுல்ஹேண்ட் ஷர்ட்டைப் போட்டுக்கொண்டு வழக்கம் போல் ஷர்ட்டின் கைகளை முழங்கைக்கு சற்று கீழாய் இறக்கிவிட்டு மடித்தான்.
‘பளீரெ’ன்று வேஷ்ட்டியும், ‘பளிச்’சென்று ஷர்ட்டும் ஆதியை இப்படித்தான் இருக்கிறான் என்று சொல்ல முடியாத அழகனாய்க் காட்டின.
மீண்டும் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டான் ஆதி.
கிட்டத்தட்ட பண்டைக்கால சிற்பங்களில் காணப்படும் கிரேக்க ஆண்களின் சிற்பம்போல் அத்தனை அழகாய் இருந்தான்.
ஆதி பேண்ட் ஷர்ட்டில் அழகாய்த் தெரிகிறானா வேட்டி ஷர்ட்டில் அழகா என்று பட்டிமன்றம் வைத்தால் நிச்சயமாய் நடுவர் தீர்ப்பு சொல்ல முடியாமல் தவித்துதான் போவார்.
செல்லை ஷர்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கார் சாவியைக் கைவிரலில் மாட்டிச் சுழற்றிக் கொண்டே மாடிப்படிகளில் ‘தடதட’வென்று இறங்கி வந்தவனை “டேய்! டேய் மெள்ள இறங்குடா! மெள்ள இறங்குடா!” என்றார் விமலாதேவி.
அவருக்குத் தெரியுமா ஆதி நிமிஷாவைப் பார்க்கப்போகும் சந்தோஷத்தில் இருக்கிறானென்று?
கீழே இறங்கி வந்து நின்ற மகனைப்பார்த்து அதிசயித்தார் கோவர்த்தன்.
“என்ன ஆதி வேட்டி கட்டிருக்க? வெளீல வேற போகுற? அவுந்துடாது? பெல்ட் போட்ருக்கியா?” சிரித்தார் கோவர்த்தன்.
“அப்பா இது ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டிப்பா! ராம்ராஜ் வேட்டி! அட்ஜஸ் பண்ணிக்குற பேஸ்ட்டிங் வேட்டிப்பா! வெல்க்ரோ பாக்கெட்கூட இருக்கு பாருங்கப்பா! அவுந்தெல்லாம் விழாது!” சொல்லிக் கொண்டே சட்டென ஷர்ட்டை இடுப்புக்கு மேல் தூக்கிக் காட்டினான்.
கோவர்தனும் விமலாதேவியும் பிள்ளையின் விளையாட்டுத்தனத்தைப் பார்த்துச் சிரித்து
விட்டார்கள்.
“வேட்டி சட்டையில எம்புள்ளதா எத்தன அழகு?” சொல்லிக் கொண்டே ஆதியின் கன்னங்கள் தொட்டுத் திருஷ்ட்டிக் கழித்தார் விமலாதேவி.
“சரிப்பா! சரிம்மா! நா கிளம்புறேன்!” சொல்லிக் கொண்டே வாசலுக்கு வந்தவன், சப்பல் ரேக்கில் வெகு நேர்த்தியாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த சப்பல் ஜோடிகளிலிருந்து தனக்கு மிகவும் பிடித்த ஹஷ் பப்பீஸ் சப்பல் ஜோடியை எடுத்து அணிந்துகொண்டு காரை நோக்கி நடந்தான்.
(தென்றல் வீசும்)
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்