தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 14

தென்றல் வந்து என்னைத் தொடும் - பகுதி 14

வீட்டின் கிரில் கேட்டைத் தாண்டி இன்னோவா வெளியே வந்து மெயின் ரோட்டை நோக்கி சீறிப்பாய்ந்தது.

‘எப்படியும் இன்று கோவிலில் வைத்து நிமிஷாவிடம் தன் காதலைச் சொல்லிவிடுவது’ என்ற முடிவோடு இருந்தான் ஆதி.

‘நிமிஷாட்ட நாம ஐ லவ் யூ சொன்னா எப்பிடி ரியாக்ட் பண்ணுவாங்க? ஸாரி! எனக்கு ஏற்கனவே ஆளு இருக்குறாரு. நீங்க போகலாம்னு சொல்லிட்டா!

ஐயோ அப்டீல்லாம் இருந்துடக் கூடாது!. கந்தசாமி! சாமி நீதா எங்காதல் கைகூட ஒதவணும்!’ ஸ்டியரிங்கில் வைத்திருந்த வலது கையை எடுத்து இரு கன்னங்களிலும் தொட்டு வேண்டிக் கொண்டான்.

கருணாசாகரம் காப்பகத்திலிருந்து நிமிஷா கிளம்பும் போது மதியம் ஒன்னரை ஆகிவிட்டது.

பதைபதைக்கும் வெய்யில்.

காலையில் ஆட்டோவில் வந்திறங்கிய ஸ்டாப்பிங்கில் வந்து நின்று ஆட்டோவுக்காகக் காத்திருந்தாள்.

சோதனையாய் கால்மணி நேரத்துக்கும் மேலாய் நின்றும் ஆட்டோ ஏதும் வரவில்லை.

‘பேசாம பரவால்லன்னு நூறுரூவா குடுத்து ப்ரைவேட் ஆட்டோலன்னா போய்டுவமா! லேட்டாக லேட்டாக திருப்போரூர் போக நேரமில்லாம போய்டும்.

அதென்னமோ இன்னிக்கு காலேலேந்து முருகன் எம் மனசுல வந்து நின்னு வந்து நின்னு திருப்போரூருக்கு வந்து என்னப் பாரேன்கிறா மாரியே இருக்கு.

நமக்குதா லூஸுத்தனமா அப்பிடித் தோணுதா! இல்லாட்டி நெஜமாவே தினம் தினம் நா கும்புடற குட்டிமுருகன் வெளையாட்டுத் தனமா வந்து சொல்லுறானா?

இதுவர திருப்போரூரு போகனும்னுலா தோணினதே இல்லியே! இதென்ன புதுசா இருக்கு?’

யோசனையிலிருந்து மீள்வதற்குள் ஷேர் ஆட்டோவே வந்து நின்றது நிறுத்தத்தில்.

தாம்பரம் பஸ்டாண்டில் செங்கல்பட்டு பேருந்தில் ஏறினாள் நிமிஷா. சுத்தமாய்க் கூட்டமில்லை ‘.அப்பாடா!’ என்றிருந்தது.

ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அவள் அமர்திருந்த சீட்டில் அவள் மட்டுமே அமர்ந்திருந்தாள்.
தனியாய் அமர்ந்திருந்ததால் எந்தத் தொந்தரவும் இல்லை.

செங்கல்பட்டு பேருந்து நிலையம் வரை டிக்கெட்டும் எடுத்தாகி விட்டது. முக்கால் மணிநேரத்தில் போகக் கூடிய தூரம்தான் என்றாலும் கடும் போக்குவரத்து நெரிசலால் கூடுதலாய் அரைமணி நேரமாகும்.

‘பேருந்து செங்கல்பட்டை அடைய. பஸ்ஸை விட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றால் எப்படியும் பத்து நிமிஷம் ஆகும். தொலைகிறது என்று ஷேர் ஆட்டோவில் போனால் இருபது ரூபாய் செலவாகும்.

நல்லவேளை காப்பகத்திலிருந்து தாம்பரம் பஸ் நிலையம் வர ஷேர் ஆட்டோ கெடச்சிது. இல்லாட்டி ப்ரைவேட் ஆட்டோக்கு நூறு ரூவான்னா குடுத்திருக்கனும்.

அந்த நூறுரூவாய ஆட்டோக்கு செலவு பண்ணாம நம்ம தொரைக்கும் வைஷாலிக்கும் திங்க ஏதாவது வாங்கிகிட்டுப் போனாலும் உண்டு. வைஷாலி, அக்கா ஏதாச்சும் வாங்கிட்டு வரும்னு எதிர்பாத்துக்கிட்டு இருப்பா.

நல்ல வேளையா ஷேர் ஆட்டோ கெடச்சிது. ப்ச்! எப்பப்பாரு பற்றாக்குறைதான்! என்ன வாழ்க்கையிது?’ அலுப்பாய் இருந்தது நிமிஷாவுக்கு.

தலையை மெல்ல சீட்டின் பின்புறம் சாய்த்துக் கண்களை மூடினாள்.

“ஹாய்! ஹேப்பி பர்த்டே மிஸ் நிமிஷா!” காதருகே ஆதியின் குரல்.

சட்டெனக் கண்களைத் திறந்து இங்குமங்கும் பார்த்தாள்.

‘ஆதியின் நினைவு ஆட்டிப் படைக்க ஆரம்பிச்சிடிச்சா என்ன? ச்சீ! என்ன இது? இப்பிடியாயிட்டோம். மீளமுடியாது போலருக்கே! ஏ மனசே! சும்மா கெடக்க மாட்டியா?’ அலைபாயும் மனதை அடக்கப் பார்த்தாள். நிமிஷா.

ம்ஹும்! எதை நினைத்துப் பார்க்கக் கூடாது என்று இதயம் தடைபோடுகிறதோ அதையே நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. ஆணையிடும் இதயமே தோற்றுத் தோற்றுப் போகிறது.

‘ஆதி ‘மெனிமோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே!’ என்று சொல்லிவிட்டுக் குறும்பாய்ச் சிரித்த போது கொஞ்சமே கொஞ்சமாய் மேலேறி இறங்கும் புருவங்கள். அது என்ன அது அந்த போஸில் அப்படியே மனதை வாரிச் சுருட்டும் அழகாய்த் தெரிகிறார்.

இன்றைக்குச் சிரித்தது போலவேதானே அன்றைக்கும் முதல் முறை அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் சிரித்தார். அன்னிக்கு லேசா அசைய ஆரம்பித்த மனம் இன்னிக்கு.. இன்னிக்கி.. ரொம்பன்னா தடுமாறிடுச்சி.

அதுசரி மிஸ்டர் ஆதித்யாவுக்கு நம்ம பர்த்டே இன்னிக்குன்னு எப்டித் தெரியும்?எப்பிடி யோசிச்சாலும் விடை கிடைக்க மாட்டேங்குதே?

எப்டி தெரியும் எப்டி தெரியும்?’ தலை வெடித்து விடும் போல் இருந்தது நிமிஷாவுக்கு.

மூடிய கண்களைத் திறந்து வெளியில் பார்த்தாள்.

வேறு எதிலாவது மனதைச் செலுத்தி மறுபடி மறுபடி ஆதியின் நினைவே வந்து வந்து மனதை ஆக்ரமித்து ஆட்டி வைப்பதை உதற நினைத்தாள். அதில் தான் தோற்றுப் போவதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

‘சரி விடேன்! ஆதித்யாவுக்கு ஒம் பர்த்டேன்னு எப்டியோ தெரிஞ்சிது. நம்ம நிறுவன ஸ்டாஃபாச்சே பர்த்டே விஷ் பண்ணுவமேன்னு பண்ணிருக்கலாம். அதப்போயி பெருஸ்..ஸா நெனச்சிகிட்டு மனசுல அதையும் இதையும் நெனச்சுக்குற. விட்டுடு’ என்றது மனது.

‘அந்த சிரிப்பு! அந்த குறுகுறுத்த பார்வ! எங்காதுக்கு மட்டும் விழறாமாரி கிசுகிசுப்பா தேங்ஸ் சொல்ல மாட்டீங்களா? சாக்லேட்?

அதுகூட வேண்டாம். ஸ்மைல்கூட கெடையாதான்னு சிரிப்பும் கெஞ்சலுமா விரல்களைக் குமிச்சி கைய இப்பிடியும் அப்பிடியும் கொஞ்சமா ஆட்டிக் கேட்டது? அது என்னவாம்?’ தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள் நிமிஷா.

ஆதியின் கிசுகிசுப்பான குரலும் அவன் சிரிப்பும் கெஞ்சலும் கையை ஆட்டிய விதமும் இப்போதுகூட நினைவில் வந்து நிமிஷாவை வெட்கப்பட வைத்தது.

‘நிமிஷா! த பாரு! மறுபடி மறுபடி சொல்றேன். தேவையில்லாத கற்பனையெல்லாம் செய்யாத! காதல், கல்யாணம், கணவன், குழந்தை என்ற வரமான வாழ்க்கைக்கெல்லாம் நீ ஆசப்படக் கூடாது.

நீ யாரு? ஒங் குடும்ப நெலம என்னன்னு கொஞ்சம் நெனச்சுப் பாரு! ஆதி யாரு, அவன் எப்பேர்ப்பட்ட குடும்பத்த சேர்ந்தவன்னும் நெனச்சுப் பாரு.

குடும்பப் பொறுப்பு கொஞ்சமுமில்லாமல் வீட்டுப் பாத்திரம் பண்டங்களக்கூட கொண்டுபோய் வித்துட்டு அதுல வர்ர பணத்த வெச்சு சீட்டாடுற அப்பா, கணவன தட்டிக் கேக்காத அம்மா, திருமணமாகியும் பிடுங்குற வரைக்கும் ஆதாயம் என்று ஒன்னோட உழைப்பை உறிஞ்சும் சுயநலம்மிக்க தங்கை, கால்கள் விளங்காத தம்பி, மனவளர்ச்சி இல்லாத கடைசி தங்கை.

உன் வருமானம் ஒன்றையே நம்பியிருக்கும் குடும்பம். வீடு என்ற பெயரில் நாலு சுவற்றோடு, மூட்டைப் பூச்சிகளோடு எவ்வித வசதியுமின்றி நிற்கும் வாடகை வீடு.

தங்கை திருமணத்திற்காக வாங்கிய தலையை அழுத்தும் கடன் சுமை. இதுதானே நிமிஷா உன் நிலைமை.

ஆனா ஆதித்யா! எப்பேர்ப்பட்ட குடும்பத்தச் சேர்ந்தவன். ஒருகோடி ரெண்டுகோடி இல்ல, பலகோடி ரூபாய் சொத்துக்கு ஒரே வாரிசு. நிமிஷா கொஞ்சம் நெனச்சுப் பாரேன்.

ஆதித்யாவோட குடும்பத்து நிறுவனத்துல வேல பாத்து கைநீட்டி மாச சம்பளம் வாங்கறவ நீ. அவன் மல, நீ மடு.

நீ நெனச்சுக்கூட பாக்க முடியாத உயரத்துல இருக்குறவன் ஆதித்யா. மரமேறத் தெரியாதவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படக் கூடாது.’

வாழ்க்கையின் எதார்த்தம் புரியாதவள் இல்லை நிமிஷா.

ஆனாலும்.. ஆனாலும்.. ஆதியின் நினைவு அவளை ஆட்டித்தான் வைத்தது.

இதுவரை உணர்ந்தறியாத ஓர் உணர்வு உடலையும் மனதையும் ஆக்ரமித்தது.

சாக்லேட் கேட்டு அடம் பிடிக்கும் குழந்தையாய் ஆதியைப் பற்றி நினைப்பதை மறக்க மாட்டேனென்று இதயம் அடம் பிடித்தது.

அடம் பிடிக்கும் இதயத்தை அடக்க முடியாமல் தவித்தாள் நிமிஷா.

மதியம் இரண்டுமணி வெய்யிலால் சூடேறியிருந்த காற்று பஸ்ஸுக்குள் எட்டிப் பார்த்தது. அதுவும் நிறுத்தங்களில் நின்று மீண்டும் கிளம்புவதற்குள் அனலடித்தது.

ஒருவழியாய் செங்கல்பட்டு பேருந்து நிலையதில் இறங்கி கடையொன்றில் வைஷாலிக்கும் துரைக்கும் பிஸ்கெட், சாக்லேட், முறுக்கு பாக்கெட் வாங்கிக் கொண்டாள்.

‘செலவு அதிகம்தான் ஆகிறது. இன்னிக்கு தேதி அஞ்சுதான் ஆகிறது. சம்பளம் வந்து ரெண்டுநாள்தான் ஆவதால் செலவு செய்யும்போது அதனாலென்ன பரவால்ல இதவாங்க அதவாங்கன்னு மனசு ஆட்டம் போடுது.

இருவது தேதியானா தெரியும் வெறும் நூறு இருநூறோடு கைப்பை பல்லிளிப்பது. அடுத்த மாத சம்பளம் வர்ற‌வரை எதிர்பாராம குடும்பத்துல பெரிய செலவா எதுவும் வந்துவிடக் கூடாதெ’ன்று மனம் கவலைப்படும்.

கால் செருப்பை கழற்றி சப்பல் ஸ்டேண்டில் இடது கையால் வைக்கும்போது காதில் விழுந்தது உள்ளேயிருந்து வந்த வைஷாலியின் அழுகுரல்.

காட்டுக் கத்தலாய்க் கத்தும் தீக்ஷிதாவின் குரலும் கேட்க ‘திக்’ என்று ஆனது நிமிஷாவுக்கு.

‘இவ எப்ப வந்தா? ஏ வைஷாலி அழறா?’ ஒன்றும் புரியாமல் உள்ளே நுழைத்தாள் நிமிஷா.

உள்ளே நுழைந்த நிமிஷாவைப் பார்த்ததும் “அக்கா! நிமிக்கா!” அழுது கொண்டே ஓடிவந்து நிமிஷாவின் இடுப்பைக் கட்டிக் கொண்டாள் வைஷாலி. அழுதழுது முகம் சிவந்து கிடந்தது.

“வைஷு ஏ அழுவுற? என்னாச்சு வைஷு குட்டிக்கு?” கேட்டுக் கொண்டே வைஷாலியின் கண்களைத் துடைத்துவிட்டாள்.

தான் உட்கார்ந்திருப்பதைக்கூட பார்க்காமல் வைஷாலியிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் நிமிஷாவை எரிச்சலோடு பார்த்துக் கொண்டிருந்தாள் தீக்ஷிதா.

‘ஏதுடா, மயக்கம், தலைசுத்தல், வாந்தி, ஒமட்டல், குமட்டல்னு எல்லாத்தோடயும் போராடிண்டு வயத்துப் புள்ளகாரி முடியாம வந்துருக்காளே!

அவள ஆசையா ‘தீக்ஷிதா எப்ப வந்த? ஒடம்பு இப்ப எப்பிடி இருக்கு? எதாவது சாப்டியா’ன்னுன்னு கேக்காம அப்டியே வைஷாலி வைஷாலின்னுனா உருகிப் போறா.

அழுதா தேஞ்சா போயிடும் அந்த லூஸு!’ தீக்ஷிதா நினைத்து முடிப்பதற்குள் நிமிஷா வைஷாலியைத் தன்னோடு அணைத்துக்கொண்டே கழுத்தைத் திருப்பி தீக்ஷிதாவைப் பார்த்து “நீ எப்ப வந்த தீக்ஷி? தலைசுத்தல் தேவலையா!” என்று கேட்டாள்.

“அப்பாடி! இப்பவாவது கேக்க தோணித்தே!” என்றாள் தீக்ஷிதா குத்தலாய்.

நெஞ்சுவரை வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு தீக்ஷிதாவுக்குப் பதில் சொல்ல முயன்றபோது “அக்கா! அக்கா! அக்கா! நிமிக்கா! நிமிக்கா! நிமிக்கா! இங்க பாரு! இங்க பாரு!” நிமிஷாவின் முகத்தைக் கையால் தன் பக்கம் திருப்பித் திருப்பி தன்னைப் பார்க்க வைத்தாள் வைஷாலி.

“தீஷிக்கா கிள்ளிட்டா! பாரு! பாரு! பாரு!” சட்டெனப் பாவாடையை தொடைவரை உயர்த்தி காண்பித்தாள் வைஷாலி.

தொடையில் கருநீலமாய் பத்து ரூபாய் காயின் அளவுக்கு ரத்தம் கட்டிப்போய் இருந்தது கிள்ளப்பட்ட இடம். பார்த்ததும் அப்படியே அதிர்ந்து போனாள் நிமிஷா.

“தீக்ஷி! எதுக்கு இப்பிடி இவள கிள்ளி வெச்சுருக்க. இந்தக் கொழந்தையக் கிள்ள ஒனக்கு எப்பிடி மனசு வந்துது?” வெடித்து வந்த ஆத்திரத்தை விழுங்க முடியாமல் வெளி வந்த வார்த்தைகள்.

“ஆமா! கொழந்த! வயசு பதினாலு ஆகுது. ஆளப்பாத்தா இருவது வயசு பொண்ணாட்டம் இருக்கு. அறிவு மட்டும் அஞ்சு வயசாட்டம்கூடன்னா இல்ல!”

“தீக்ஷீ!”கத்திவிட்டாள் நிமிஷா.

“என்ன பேச்சு பேசற நீ. இன்னிக்குதா வைஷாலிய நீ பாக்குறியா? கூடப்பொறந்த தங்கடி அவ.

மூணுவருஷம் முன்னாடி வரைக்கும் இவளோடதானே இந்த வீட்டுல நீ வாழ்ந்த! புதுஸா இப்பதா வைஷாலியப் பத்தித் தெரிஞ்சாப்புல பேசற!”

“த பாரு! நா ஒன்னாட்டம் இல்ல. வயித்துப் புள்ளக்காரி. ஒன்னாட்டமெல்லாம் கத்தில்லாம் பேச முடியாது. வயித்துல புள்ளைய சொமந்தவளுக்கும் சொமக்குறவளுக்கும் தா தெரியும் கஷ்டம்.”

“அப்டீன்னா? நீ என்ன சொல்ல வர தீக்ஷி!”

“ஒன்னும் சொல்லல!” கொஞ்சம் அடங்கினாள் தீக்ஷிதா.

அந்த அடங்கிப் போதலுக்கும் காரணம் இருந்தது. சுயநலத்தோடு கூடிய அடங்கல்.

டெலிவரி ஆகும்வரை இங்க இருக்கனும். டெலிவரி ஆனப்புறம் ஆறுமாசம் தங்கணும்.

முடிஞ்சவரை அதையும் இதையும் வாங்கித்தரச் சொல்லி மூட்டகட்டிண்டு புருஷன் வீடு போகணும். எல்லாம் இவ சம்பளத்த நம்பிதானே? சுயநலத்தால் அடங்கிப் போனாள் தீக்ஷிதா.

அப்போதுதான் குளித்துவிட்டு வந்தவர் போல் ஈரத்தலையில் துண்டை சுற்றிக்கொண்டு வந்தார் அம்புஜம்மா.

“நிமிஷா வந்துட்டியா? நானே போய் தீக்ஷிதாவ அழச்சுகிட்டு வந்துட்டேன். இங்கேந்து ஓலா புக் பண்ணி சம்மந்தி வீட்டுக்குப்போய் அரைமணிதா அங்க இருந்தேன். ஒடனே தீக்ஷிதாவயும் பேரனையும் அழச்சிட்டு வந்துட்டேன்.

சம்மந்தி வீட்டுக்கு போகையில கைய வீசிகிட்டுப் போக முடியுமா? பூ, பழம், ஸ்வீட்டு எல்லாம் வாங்கிட்டுப் போனேன்.

வரச்சே இவ ரொம்ப வீக்கா இருக்காளே புள்ளத்தாச்சி பொண்ணாச்சேன்னு பழங்க, ஹார்லிக்ஸ், பாதாம்லாம் வாங்கிட்டு வந்தேன்.

நீ மாச செலவுக்குன்னு குடுத்த பணத்துல ரெண்டாயிரம் செலவாயிடுச்சு. மீதி இருக்குறது இந்தமாசம் முழுக்கக்கி போதுமா தெரியல!”

நிமிஷா காதில் பணப்பற்றாக்குறை ஏற்படும் என அறிவித்துவிட்ட நிம்மதியில் “ஒனக்கு காபி கொண்டு வரேன்!” என்று கிச்சனுக்குள் நுழைய இருந்தவரை “காபி வேண்டாம்!” என்ற நிமிஷாவின் வார்த்தை ஹாலிலேயே இருக்கச் செய்தது.

தீக்ஷிதா கிள்ளியதைப் பற்றி நிமிஅக்காவிடம் சொல்லிவிட்ட நிம்மதியில் சுவற்றோரம் படுத்து தூங்கிப் போயிருந்தாள் வைஷாலி.

நெடுநேரம் அழுததாலோ என்னவோ தூக்கத்திலும் அவளிடமிருந்து அவ்வப்போது கேவல் வெளிப்பட்டது.

எதுவுமே தெரியாத வளர்ந்த குழந்தையான தங்கையைப் பார்த்து பெருமூச்சுவிட்டாள் நிமிஷா. கண்களில் கண்ணீர் திரையிட்டது.

தன் அறைக்குள் நுழைந்தவள் அறை இருக்கும் அலங்கோலம் பார்த்து அதிர்ந்து போனாள்.

கப்போர்டில் ஒரு பொருள் இல்லை. கப்போர்டில் இருந்த அத்தனை பொருட்களும் அறையெங்கும் இறைந்து கிடந்தன.

ஏனிப்படி கப்போர்டிலிருந்த பொருட்களெல்லாம் தாறுமாறாய் இறைந்து கிடக்கென யாரிடமும் கேட்கப் பிடிக்கவில்லை.

கை கடிகாரத்தில் மணி பார்த்தாள். மணி நாலைத் தொடவிருந்தது.

‘லேட்டாயிட்டு. இன்னும் அரைமணி நேரத்தில் திருப்போரூர் பஸ்ஸில் இருந்தால்தான் அஞ்சரமணிக்காவது கோவிலுக்குள்ள போகமுடியும்.

முருகா திருப்போரூர் கோவில்ல எனக்கு நீ என்ன வெச்சிருக்க? காலேலேந்து வாவான்னு கூப்புடற?’ சுவற்றில் நிற்கும் குட்டி முருகனைப் பார்த்துக் கேட்டாள் நிமிஷா. குட்டி முருகன் லேசாய் சிரிப்பதுபோல் தோன்றியது.

தான் படுக்கும் கட்டிலில் தூங்க வைக்கப்பட்டிருந்த தீக்ஷிதாவின் ஒன்னரை வயது மகன் ஷ்ரவணைப் பார்த்தவள் “செல்லக் குட்டிப்பையா!” என்றபடி குனிந்து நெற்றியில் முத்தமிட்டாள்.

கழுத்து மணி, கைவளையல், வாட்ச் அனைத்தையும் கழற்றி பீரோவில் வைத்துவிட்டு பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்தவள் ‘கோவிலுக்குப் போறமே புடவை கட்டுவதா? சுடி, லெஹங்கா எதும் போடலாமா?’ யோசித்தாள்.

‘ம்ஹும்! கோவிலுக்கு ஒன்னு பொடவ கட்டணும். இல்லாட்டி ஒடம்ப மூடுறாப்புல சுடிதார்தா போடனும். லெஹங்கால்லாம் சரியா வராது!’ என்று நினைத்தவளாய் ராஜஸ்தான் குல்மொஹரின் வெந்தயக் கலரில் சின்னச் சின்னதாய் பூக்கள் போட்டிருந்த டார்க் ப்ரவுன் கலர் டாப்பும், ரெட்கலர் லெக்கின்ஸும், ரெட்கலர் துப்பட்டாவும் அணிந்து கொண்டாள்.

நிமிடநேரத்திற்குள் தலைமுடியை வாரி க்ளிப் போட்டுக் கொண்டாள். வழக்கமாய் அணியும் தங்கச் செயினைப் போட்டுக்கொண்டு ப்ரவுன் கலரில் கைக்கு ஒன்றாய் பட்டை வளையல் போட்டுக் கொண்டு லேசாய் முகத்தில் பவுடர் போட்டு பொட்டு வைத்துக்கிளம்பி செல்லில் மணி பார்த்தபோது
மணி நாலு இருபதாகியிருந்தது.

கைப்பையை எடுத்தவள் ஜிப்பைத் திறந்து நிதிநிலைமையைப் பார்த்துக் கொண்டாள். வைஷாலிக்கும் தொரைக்கும் வாங்கிய ஸ்னாக்ஸ் வகையறாவை எடுத்து மறைவாய் பீரோமேல் வைத்துவிட்டு அறையைவிட்டு வெளியே வந்தவள் ‘வைஷாலி இன்னும் தூங்கறாளே!’ என்று நினைத்தாள்.

“அம்மா நா திருப்போரூர் கந்தசாமி கோயில் வர போய்ட்டு வரேன்!” கிச்சனிலிருந்த அம்மாவிடம் சொன்னபோது, “இப்பதா தாம்பரம் காப்பகத்துக்குப் போய்ட்டு வர! வந்த ஒடனேயே திருப்போரூர் போறேங்கிற!” என்றார் அம்புஜம்மா.

“நா என்ன சினிமாவுக்கா போறேன்? கோவிலுக்குதானே போறேன்!”

ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருந்த தீக்ஷிதாவிடம் சொல்லிவிட்டு வெளியே வந்ததும் வாசலில் செருப்பு ஸ்டாண்டின் அருகே அமர்ந்திருந்த ராஜதுரை “அக்கா!” என்றான்.

“தொர! ஏ இங்க ஒக்காந்திருக்க?”

“ப்ச்! யார்கூடவும் பேசப் புடிக்கிலக்கா! பாவங்க்கா வைஷாலி. நீ கோவிலுக்குப் போய்ட்டு வாக்கா. அப்பறமா சொல்லுறே!”

“சரி தொர! வந்து பேசறேன்.”

மணி ஐந்தரை.

ஆதி காரை கோவிலின் வாசலில் ஒதுக்குப்புறமாய் நிறுத்திவிட்டு காருக்குள்ளேயே செருப்பைக் கழற்றிப் போட்டுவிட்டுக் கீழே இறங்கினான்.

‘சீக்கிரமா வந்துட்டமோ? நிமிஷா வந்ருப்பாங்களா? கார்கிட்டயே நிக்கிறதா? உள்ள போய் பாக்குறதா? நோ! நோ! மொதல்ல கந்தசாமிய பாப்போம். அவந்தா எல்லாத்தியும் நல்லபடியா நடத்திக் குடுக்கனும்!’ எனத் தீர்மானித்தவனாய் கோவிலுக்குள் நுழைந்தான்.

ஆனாலும் நிமிஷா வந்திருப்பாங்களோ என்ற எண்ணத்தில் கண்களை அங்குமிங்கும் அலைய விட்டான்.

கோவிலில் அதிகமாய்க் கூட்டமில்லாததால் சந்நதியில் ஓரிருவர் மட்டுமே நிற்க அமைதியாய் சாமி கும்பிட்டான்.

மனதின் ஆசையையெல்லாம் மௌனமாய் சொல்லி ‘அனைத்தையும் நல்லபடியா நடத்திக் குடுப்பா கந்தசாமி!
நீ வள்ளிய காதலிச்சப்ப ஒன்னோட அண்ணன் வினாயகர் யான வடிவத்துல வந்து ஒங்காதலுக்கு ஹெல்ப் பண்ணினாப்புல. நீ நா விரும்புற நிமிஷாவ எங்கூட சேத்து வைக்கணும்ப்பா!’ என்று வேண்டிக் கொண்டான்.

வெளியே வந்து ‘ப்ரகாரம்னா சுத்தலாமா? ஒருவேள ப்ரகாரத்துல நிமிஷா இருந்தா!’ என நினைத்தவன் ப்ரகாரத்தை சுற்றிவர நாலடி வைத்து நடந்தபோது காற்றில் அடித்து மோதிக்கொண்டு பறந்து வந்து காலடியில் விழுந்தது கோயில் அர்ச்சனைச் சீட்டு ஒன்று.

சின்ன மூங்கில் தட்டில் இருந்த அர்ச்சனை சாமான்களான தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, சூடம், பூ முதலியவை சின்னத்தட்டு என்பதால் இடம் பற்றாமல் திணறிக் கொண்டிருந்தன.

அர்ச்சனை சீட்டை, சீட்டு வினியோகிக்கும் இடத்தில் வாங்கி தட்டில் வைத்து ‘அடிக்கும் காற்றில் சீட்டு பறக்காமல் இருக்க சீட்டை தேங்காய்க்குக் கீழே வைக்கலாம்!’ என நினைத்தவளாய்த் தேங்காயை எடுப்பதற்குள் வேகமாய் வீசிய காற்றில் கையிலிருந்த அர்ச்சனைச்சீட்டு கையைவிட்டு பறந்து ஓடியது.

“அட ஆண்டவனே!” என்று சொல்லிக்கொண்டே பறந்து செல்லும் சீட்டைப் பிடிக்க திரும்பினாள் நிமிஷா.

பறந்து வந்து காலடியில் விழுந்த சீட்டினைக் குனிந்து பொறுக்கி ‘அடடா! அர்ச்சன சீட்டு! கால்லன்னா பட்டுடுச்சி!’ என்று நினைத்தவனாய் சீட்டைக் கண்களில் ஒற்றிக் கொண்டு நிமிர்ந்தான் ஆதி.

கையில் அர்ச்சனைத் தட்டுடன் எதிரில் நின்றாள் நிமிஷா.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்