கையைவிட்டுப் பறந்து சென்ற அர்ச்சனைச் சீட்டைப் பிடிப்பதற்காக அவசரமாய் நிமிஷா திரும்ப பறந்து வந்து காலடியில் விழுந்த அர்ச்சனைச் சீட்டைக் குனிந்து எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டபடியே நிமிர்ந்தவன்
அர்ச்சனைத் தட்டுடன் எதிரில் நிற்கும் நிமிஷாவைப் பார்த்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனான்.
அழகு தேவதையாய் நிமிஷா.
எந்த அளவுக்கு நிமிஷாவைப் பார்த்து ஆதி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனானோ அதே அளவு ஆதியைப் பார்த்ததும் மனசுக்குள் எதிர்பாராத சந்தோஷம் ஆர்ப்பரித்தது நிமிஷாவுக்கு.
ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் அமைதியாய் நின்றாள்.
“மிஸ் நிமிஷா! வாட் எ சர்ப்ரைஸ்! இன்னிக்கு ரெண்டாவது தடவையா சந்திக்கிறோம்!”
அதே எண்ணம்தான் தோன்றியது நிமிஷாவுக்கும். மௌனமாய் நின்றாள் நிமிஷா.
அவனை நேருக்குநேர் பார்க்க முடியாமல் ஏதோ ஒன்று தடுக்க அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். மனசு படபடத்தது.
“ஓ! ஒங்குளுக்கு இன்னிக்குப் பிறந்தநாளில்ல! அதா கோவிலுக்கு வந்தீங்களா?”
‘ஆமாம்!’ என்று சொல்ல நினைத்தவளின் வாயிலிருத்து வார்த்தை வெளிவர மறுத்து நாக்கு உலர்ந்து போனது.
“பேசமாட்டீங்களா நிமிஷா?”
“ம்..”
“ம்.. னா.. பேசுவேன்.. மாட்டேன். இதுல எதன்னு எடுத்துக்கிறது?” சன்னமாய்ச் சிரித்தான்.
ஆதியை நேருக்கு நேராய்ப் பார்ப்பதைத் தவிர்க்க தலைகுனிந்து நின்றிருந்தவள் மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“அர்ச்சனை பண்ணனும்!”
“அதுக்கு?”
“அர்ச்சனை சீட்டு!”
“ஓ! இது ஒங்குளுதா? ஸாரி! இதக்குடுக்காம ஒங்கள நிக்க வெச்சுப் பேசிட்டேன்ல, இந்தாங்க!” சீட்டை நீட்டினான்.
“எதுக்கு ஸாரில்லாம். பரவால்ல!” குரல் தடுமாறியது நிமிஷாவுக்கு.
“இல்ல! சாமிக்கு அர்ச்சனை பண்ண வந்த ஒங்கள நிக்க வெச்சு பேசினது தப்புதானே அதான்!”
“அப்டீல்லாம் ஒன்னுமில்ல!”
“நன்றி!” எனச் சொல்லி சீட்டை கைநீட்டி வாங்கிய போது, ‘ஒங்க காது ரிங் கழண்டு லிஃப்ட்ல விழுறத பாத்தேன். இது ஒங்குளுது தானே!’ என்று தன் கையில் ஆதித்யா தன்னுடைய கை இடித்து விடாதவாறு ஜாக்கிரதையாய்ப் போட்டது நினைவில் வந்தது.
அன்று காது ரிங்! இன்று அர்ச்சனைச் சீட்டு! ஏனோ சிரிப்பு வந்தது நிமிஷாவுக்கு. சிரிப்பை வெளிக்காட்டாமல் மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.
“ஓ.கே. நீங்கபோய் அர்ச்சன பண்ணுங்க! நா கெளம்புறேன்!” ஆதியின் குரலில் ஏமாற்றம் தெரிவதாய்த் தோன்றியது நிமிஷாவுக்கு.
அதற்காக ‘இருங்க நாம் போய் அர்ச்சன பண்ணிகிட்டு வந்துடறேன்னு சொல்ல முடியுமா? இல்லாட்டி
என்னோட நீங்களும் வாங்களேன்னு கூப்பிடதா முடியுமா?’
“வரேன்!” என்று சொல்லிவிட்டு ‘என்னைப் பாக்க வாயேன்! என்னைப் பாக்க வாயேன்!’ என்று மனதுக்குள் வந்து வந்து சொல்லிய கந்தசாமியைப் பார்க்க சந்நிதியை நோக்கி நடந்தாள் நிமிஷா.
அவள் செல்வதையே பார்த்தபடி நின்றிருந்தான் ஆதி.
‘இன்னிக்கு எப்படியும் காதலைச் சொல்லிவிடுவது’ என்ற முடிவோடு வந்தவனுக்கு, ஏனோ ‘நிமிஷா நம்ம காதலை ஏற்றுக் கொள்வாளா?’ என்ற சந்தேகம் மனதில் எழுந்தது.
‘மறுத்துட்டா? ஐயோ! அந்த ஏமாத்தத்த தாங்க முடியாது!’
‘டேய்! டேய்! ரொம்பத்தா அலட்டிக்காத! மனசுக்குப் புடிச்ச பொண்ணுகிட்ட ஐ லவ் யூன்னு சொன்னா அந்தப் பொண்ணு ஒடனேயே ஐ டூ லவ்யூன்னு சொல்லிடுமா என்ன? அப்பிடில்லாம் நடக்காது தம்பி.
மனசுக்குப் புடிச்ச பொண்ண ப்ராக்கெட் போடனும்னா அதும் பின்னாடி நாயா பேயா அலையணும்.
சினிமாவுலல்லாம் பாக்கல நீ, ஹீரோ எப்புடி ஹீரோயினு காதல ஏத்துக்குற வர பின்னாடி பின்னாடி மனந்தளராம அலையுவாரு! அதாட்டம் அலையணும்.
கஜினி முகமது பதினேழு மொற வந்து வந்து நம்ம நாட்டு மேல மனந்தளராம படையெடுத்தாராம். பதினெட்டாவது தடவதா ஜெயிச்சாராம்.
நீ படிச்சதில்ல! அது மாரி நீ ஒங்காதலுல ஜெயிக்க நிமிஷா பொண்ணுகிட்ட அப்ளிகேஷன் போட்டுக்கிட்டே இரு! நிச்சயமா ‘க்ளிக்’ ஆவும்.
சாமி கும்புட்டுட்டு நிமிஷா வர்ர வர காத்துக்கிட்டு நில்லு. காலு வலிச்சா ஒக்காந்துக்க. ஹி! ஹி! ஹி! ஜோக்கடிச்சேன். கோவப்படாத! ம்.. ம்.. எங்க வுட்டேன்.
அதா.. அதா.. அந்த நிமிஷாப் பொண்ணு கண்ணுல படுறாப்புல பாவமா பாவம் காட்டிக்கிட்டு நில்லு. மறுபடி நீயா போய்ப் பேசு.
ஒருவேள நீ அதோட பாஸ் ஆச்சேன்னு நெருங்காம வெலகிப் போகலாம். அதையெல்லாம் நீதான் பேசித் தீத்துக்கணும்.
நீ ஒ காதல அதுங்கிட்ட சொல்ல அது பிடிகுடுக்காத பேசிட்டுக் கிளம்பிடுச்சுனா! எல்லாம் முடிஞ்சுட்டதா நெனச்சி தேவதாஸா ஆயிடாத!
தம் மனசுலயும் காதல் இருந்தாலும் ஒடனே ஓப்பனா சொல்லிடாதுங்க பொண்ணுங்க.
ட்ரைப் பண்ணு! ட்ரைப் பண்ணு! அதோ அந்தப் பொண்ணு வருது. ஆல் தி பெஸ்ட்! பி ப்ரேவ்!’ மனசு ஒளிந்து கொண்டது.
சாமிக்கு அர்ச்சனை செய்து விட்டு பிரசாதத் தட்டுடன் வெளியே வந்தாள் நிமிஷா.
சந்நதியில் சுவாமிக்கு எதிரில் நின்றவரை வேறு எந்ந எண்ணமும் தோன்றாமல் கைகூப்பிக் கண்கள் மூடி
நிர்மலமான மனத்தோடு நின்றவளின் மனதில் இப்போது முழுவதுமாய் ஆதி நிரம்பி நின்றான்.
‘வேட்டி ஷர்ட்டில்தான் ஆதித்யா எப்பிடியோரு அழகா இருக்கார். எங்கையிலேந்து அர்ச்சன சீட்டு
அவர நோக்கிப் பறந்து அவர் கைக்குக் கிடைப்பானேன்?
பிறந்த நாள்னு அர்ச்சன பண்ண கோவிலுக்கு வந்தீங்களா? ஸாரி! ஒங்கள நிக்க வெச்சுப் பேசினது தப்புதானேனு! எவ்வளவு சாஃப்டா பவ்யமா பேசுறாரு!
நா யாரு அவுரு நிறுவனத்து ஸ்டாஃப்பு. எங்கிட்ட பாக்குற எடத்துலல்லாம் பேசனும்னு அவுருக்கு அவசியமா என்ன?
அடடா! அடடா! ரொம்பத்தா பம்முற! ஒன்ன தன் நிறுவனத்தோட ஸ்டாஃப்னு மட்டுமே நெனச்சிருந்தா
காலேல காப்பகத்துல ஒன்னப்பாத்து சிரிக்கிறதும் ஹேப்பி பர்த் டே சொல்றதும், ஸ்மைல் கூட கெடையாதான்னு கேக்குறதும், கைய ஆட்டுறதும் ஆதித்யாவோட குறும்பப் பாத்து நீ வெக்கப்பட்டுக் கன்னம் செவக்குறதும், ஆதித்யாவ அடிக்கடி நெனச்சு நெனச்சு லூஸாயிடுவேம் போலருக்குனு பின்னந்தலேல தட்டிக்கிறதும், ஒங்கூடவே இருக்குற ஒம்மனசு நானு! எனக்குத் தெரியாம போயிடுமா என்ன? யாருகிட்ட? எங்கிட்டயேவா?’
மனதிற்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தாள் நிமிஷா.
கையில் அர்ச்சனை முடித்த பிரசாதத் தட்டுடன் ப்ரகாரம் சுற்றி வர நடந்து கொண்டிருந்த நிமிஷாவை ‘ஒருமுறையாவது சுற்றி வரட்டுமென’ அவள் கண்ணில்படாதவாறு தள்ளி நின்றான் ஆதி.
அன்று என்னவோ ஆறுமணிக்கு மேலாகியும் கோயிலில் கூட்டமில்லை.
அங்கொருவரும் இங்கொருவருமாகவே தென்பட்டனர். கூட்டமில்லாமை நல்லது என்றே தோன்றியது ஆதிக்கு.
ஒருசுற்றை முடித்துவிட்டு கொடிமரத்தின் அருகில் வந்து நின்று நேராய்த் தெரியும் சந்நதிக்குள் நிற்கும் கந்தசாமியைப் பார்த்து வலது கையால் இருகன்னங்களிலும் தொட்டுக் கொண்டாள்.
ரெண்டாவது பிரதட்சணம் செய்ய நினைத்து அடியெடுத்து வைத்தவள் “மிஸ் நிமிஷா!” என்று அழைக்கும் குரல் கேட்டு ‘என்னது ஆதித்யா கூப்புடறாப்ல இருக்கு?’ ‘சரேலெ’னத் திரும்பினாள்.
அர்ச்சகர் கொடுத்த விபூதி வாங்கி நெற்றியில் கீற்றாய் இட்டுக் கொண்டிருந்தான் ஆதி.
அவன் மிகநேர்த்தியாய் கட்டியிருந்த ‘பளீர்’ வேட்டியும் அவனின் சிவந்த மேனிக்கு கனகச்சிதமாய்ப் பொருந்தியிருந்த ‘பளிச்’சென்றிருந்த பச்சைக்கலர் ஷர்ட்டும் நெற்றி விபூதியும் ஆதியைப் பார்ப்பவர்களை அது ஆணோ பெண்ணோ அவர்களை வயது வித்தியாசமில்லாமல் நொடி நேரம் அவனைப் பார்த்துக் கொண்டே நடக்க வைக்கும். அப்படித்தான் நடக்கவும் நடந்தது.
“மிஸ் நிமிஷா!” என்று அழைத்த ஆதியின் குரல்கேட்டு ‘சரேலெ’னத் திரும்பிய நிமிஷா, பின்னால் நிற்கும் ஆதியைப் பார்த்தநொடி தடுமாறித்தான் போனாள்.
‘கெளம்பறேன் என்று சொன்னவன் இன்னுமா இங்கேயே இருக்கான்!’ என்று நிமிஷா நினைத்துவிடப் போறாங்களே என வெட்கமாக இருந்தது ஆதிக்கு.
தன்னைத் திரும்பிப் பார்த்த நிமிஷாவிடம் “நா.. நா.. ஒங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!” தயங்கித் தயங்கிச் சொன்னான்.
‘என்ன பேசனும்?’ என்பதைப் போல் அவனைப் பார்த்தாள் நிமிஷா.
கோவிலின் வெளியே பக்கவாட்டில் கிளை பரப்பி நின்றிருந்தது மகிழமரம்.
கீழே கொட்டிக் கிடந்த மகிழம் பூக்களின் நறுமணம் அந்த பிரதேசத்தையே நறுமணத்தால் நிரப்பிக் கொண்டிருந்தது.
மரத்தடியில் நின்றிருந்தார்கள் ஆதியும் நிமிஷாவும்.
வெய்யிலின் தாக்கம் வெகுவாகக் குறைந்து குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச் சென்றது. அப்படிச் செல்லும் மகிழம்பூவின் வாசத்தையும் தன்னோடு கடத்திச் சென்றது குளிர்ந்த காற்று.
இப்போது அதிகப்பேர் கோவிலுக்கு வர ஆரம்பித்திருந்தார்கள்.
மௌனத்தின் ஆட்சியில் சில நிமிடங்கள் கரைந்தன.
‘பேசணும்னு கூப்பிட்டுப் பேசாமல் இருந்தால்?’ என்பது போல் ஆதியைப் பார்த்தாள் நிமிஷா.
“நா போணும்! பஸ் புடிச்சி வீடுக்குப் போக லேட்டாயிடும். தெரிஞ்சவங்க யாராவது கோயிலுக்கு வந்தா?அவுங்க நா இங்க ஒங்களோட நிக்கிற தப்பாத்துட்டா? பயமாருக்கு. நா கிளம்பறேன்!” மிக மெதுவான குரலில் சொன்னாள் நிமிஷா.
குரலில் பயம் தெரிந்தது.
ஷர்ட் பாக்கெட்டிலிருந்து கர்ச்சீப்பை எடுத்து முகத்தையும் கழுத்தையும் துடைத்துக் கொண்டான் ஆதி. இதமாய்க் குளிர்ந்த காற்று வீசும் நிலையிலும் வியர்ப்பது போல் ஒரு உணர்வு.
‘ம்கூம் நீல்லாம் வேஸ்ட்! பயந்தாங்குளி! என்னிக்கி ஒனக்கு தைரியம் வந்து தயக்கம் போயி நீ ஐலவ்யூ சொல்லி! கிழிஞ்சிது போ!’ மனம் முனகியது.
உண்டான தைரியத்தை வரவழைத்துக் கொண்டான்.
மனதில் கந்தசாமியை துணைக்குக் கூப்பிட்டுக் கொண்டான்.
“நி.. நி.. நிமிஷா நா ஒங்கள விரும்புறேன். ஐ லவ் யு நிமிஷா!” என்று சொல்லி முடிப்பதற்குள் வியர்த்துப் போயிருந்தான்.
ஆதி! பெரும் பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசு. படித்தவன்; பேரழகன்.
அவனிடமிருக்கும் பணத்தால் பணத்துக்கு இசையும் எத்தனையோ பெண்களை விலைக்குக்கூட வாங்கலாம்.
பல பணக்கார வீட்டுப் பிள்ளைகளைப் போல் பெண்களைக் காதலிப்பதாய்ச் சொல்லி விருப்பம்போல் பழகிவிட்டுப் பின்னர் ஏமாற்றலாம். எது வந்தாலும் பணத்தால் சரி கட்ட முயலலாம்.
அவனை மாப்பிள்ளையாக்கிக் கொள்ள பெண்களைப் பெற்ற எத்தனையோ குடும்பத்தினர் காத்துக் கிடக்கையில் தான் நேசிக்கும் தன் மனதுக்குப் பிடித்த நிமிஷாவிடம் தன் காதலைச் சொல்லத் தயங்கியதையும் சொல்லி முடிப்பதற்குள் வியர்த்துப் போனதையும் என்னவென்று சொல்ல?
பெண்களை ஆண்களுக்குச் சமமாய் நினைப்பவன் ஆதி. பெண்களை மதிப்பவன்; பெண்களிடம் கண்ணியமாய் நடந்து கொள்பவன்; ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவன்.
தன் மனம் விரும்பும் நிமிஷாவிடமிருந்து ‘ஐ டூ லவ் யூ ஆதி!’ என்ற வார்த்தைக்காக அவளிடம் யாசிப்பவன் போல் நிமிஷாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி.
மின்சாரம் தாக்கியதுபோல் உடல் ஒருமுறை குலுங்கியது நிமிஷாவுக்கு.
‘சரேல்’ என ஆதியை நிமிர்ந்து பார்த்து விட்டுத் தலைகுனிந்து கொண்டாள்.
நெஞ்சு முழுதும் படபடப்பு. வியத்துக் கொட்டியது. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. இதயத்தில் ரத்தம் வேகமாய்ப் பாய்வதுபோல் உணர்ந்தாள்.
‘என்னது! என்னது! ஆதித்யா எங்கிட்ட ஐலவ்யூன்னா சொன்னார்? கடவுளே இப்பிடிக்கூட நடக்குமா?’
‘தன் மனசு அடிக்கடி இவரை நினைப்பது உண்மைதான். இவரின் சின்னச்சின்ன உடலசைவுகூட நம்மை ரசிக்க வைப்பது உண்மைதான்.
ஆனாலும்.. ஆனாலும் இவரை எந்த மனசு நினைக்க வைக்கிறதோ, எந்த மனசு இவரை ரசிக்கிறதோ அந்த மனசே ‘நிமிஷா! வேண்டாம் நிமிஷா! கற்பனையெல்லாம் பண்ணிக்காதே!
காதல், கணவன், குடும்பம்னுலாம் நீ ஆசப்படக்கூடாது. நீ அதையெல்லாம் அனுபவிக்கப் பொறக்கல. அவன் மல; நீ மடு.
நீ பரம ஏழ, ஆதித்யா எப்பேர்ப்பட்ட பணக்காரக் குடும்பத்தச் சேர்ந்தவன். ஆதித்யா குடும்பத்து நிறுவனத்துல வேல செஞ்சு மாசசம்பளம் வாங்குறவ நீ. ஆதித்யாவுக்கு ஒங்குடும்பத்தப் பத்தி தெரியாது.
ஒன்னப் பெத்தவங்களப் பத்தியும் தங்கை தம்பியப் பத்தியும் தெரிஞ்சா ஒம்மேல வெச்ச காதல் நீடிக்கும்கற! வேண்டாம் ஆதித்யாவ நெனைக்காத! விட்டுடுங்குதே!’ குழப்பத்தில் கலங்கிப் போனாள் நிமிஷா.
அடிபட்ட புறாவின் உடலைப் போல் துவண்டு போனாள் நிமிஷா.
தன் முகத்தையே பார்த்துக் கொண்டு தன் பதிலுக்காக ஆவலுடன் காத்து நிற்கும் ஆதித்யாவுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்தாள் நிமிஷா.
கலங்கிப் போன நிமிஷாவின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
“மிஸ் நிமிஷா! பதில் சொல்லமாட்டீங்களா?” கேட்ட ஆதியின் குரலில் தவிப்பு தெரிந்தது.
நிமிஷாவின் மௌனம் அவனை ஏதேதோ நினைக்க வைத்து பயமுறுத்தியது.
‘எங்கே நான் ஏற்கனவே ஒருத்தரை விரும்பறேன்னு சொல்லிடுவாங்களோ’ன்னு பயந்தான் ஆதி.
மெல்ல நிமிர்ந்து ஆதியைப் பார்த்தவளின் கண்களில் திரண்டு நின்று கண்ணீர் கன்னங்களில் வழிந்து கோடு போட தயாராய் இருக்க, சட்டெனக் கர்ச்சீப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
நிமிஷாவின் கண்ணீர் கண்டு பதறிப் போனான் ஆதி.
“நிமிஷா! அழுவுறீங்களா? நா தப்பா ஏதாவது சொல்லிட்டேனா? ஸாரி! ஸாரி! என்ன மன்னிச்சிடுங்க நிமிஷா!”
“இல்ல! இல்ல! நீங்க என்ன விரும்பறதா சொல்லிட்டீங்க. ஆனா! ஆனா! எனக்கு ஒங்க காதல ஏத்துக்குற தகுதி இல்ல. நா ஒங்களுக்கு எந்த விதத்துலயும் பொருத்தமானவ இல்ல. என்ன மன்னிச்சிடுங்க! நா வரேன்!”கண்களில் கண்ணீரோடு ஆதியை நிமிர்ந்து பார்த்து விட்டு, ‘சட்டெ’னத் திரும்பி நடக்க ஆரம்பித்தாள் நிமிஷா.
நடந்து செல்லும் நிமிஷாவை பிரமை பிடித்தவன்போல் பார்த்தபடி நின்றிருந்தான் ஆதி.
நடக்கக்கூட தெம்பற்றவனாய் துவண்டுபோய் தன் காரை நோக்கி நடந்தான்.
காரில் ஏறியவன் காரை ஸ்டார்ட் செய்யக்கூடத் தோன்றாமல் ஸ்டியரிங்கில் கை வைத்தபடி கோயில் கோபுரத்தையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
நிமிஷாவின் கண்களில் கண்ணீரைப் பார்த்தது மனசை கலங்க அடித்தது.
‘ஒங்க காதல ஏத்துக்க எனக்குத் தகுதியில்ல; நா ஒங்குளுக்குப் பொருத்தமானவ இல்லன்னு சொன்னவங்க கண்ணுல கண்ணீரு தேங்கின்னா நின்னிச்சு. ஏ அழுதாங்க தெரியலயே! நின்னுகூட பேசாத கிளம்பிப் போய்ட்டாங்களே! ப்ச்!’ நெற்றியைக் கையால் தேய்த்துக் கொண்டான்.
வாழ்க்கையே வெறுமையாகிப் போனதாய்த் தோன்றியது.
‘ஆதி! ஏ இப்பிடி எல்லாமே முடிஞ்சி போய்ட்டாப்ல சலிச்சிக்கிற! என்னாச்சுப்ப? நிமிஷாப் பொண்ணு நீ
அதுங்கிட்ட லவ் யூன்னு சொன்னப்ப
இல்ல.. இல்ல.. நா ஒங்க காதல ஏத்துக்க முடியாது. நா ஏற்கனவே ஒருத்தர விரும்பறேன்னா சொல்லிச்சு. நெனைச்சுப் பாரு. நா ஒங்க காதல ஏத்துக்க தகுதி இல்லாதவ. நா ஒங்குளுக்குப் பொருத்தமில்லாதவன்னுதானே சொல்லிச்சு.
ஒங்காதல ஏத்துக்கறதுல அந்தப் பொண்ணுக்கு குடும்ப பிரர்ச்சன ஏதாவது இருக்கும். தகுதி இல்லேன்னுச்சுனா ஒன்னமாரி பணக்காரக் குடும்பத்து பையன விரும்பற தகுதி தனக்கில்லேன்னு நெனச்சு சொல்லிருக்கும்.
ஆதி மறுபடி சொல்றேன் அந்தப் பொண்ணு நா ஏற்கனவே ஒருத்தற விரும்பறதா சொல்லிருந்தாதா ஒன்னும் பண்ண முடியாது.
அந்தப் பொண்ணு அப்பிடி சொல்லல. வேற எந்தப் பிரர்ச்சனைனாலும் பேசித் தீத்துக்கலாம் ஆதி. பி வித் ஹோப்!’ வேதனையில் துவளும் ஆதிக்கு நம்பிக்கை கொடுத்தது மனசு.
சின்னதாய் நெஞ்சில் நம்பிக்கைப் பூ பூத்தது ஆதிக்கு.
காரை ஸ்டார்ட் செய்தான் அந்த நம்பிக்கையோடு.
(தென்றல் வீசும்)
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்