தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 16

தென்றல் வந்து என்னைத் தொடும் பகுதி-16

திருப்போரூரில் பஸ் பிடித்து செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்தே வீடு வந்து சேர்ந்தாள் நிமிஷா.

அவளின் மனம் இருந்த நிலையில் பத்திரமாய் வீடுவந்து சேர்ந்ததே பெரிய விஷயம்.

வீட்டுக்குள் நுழைந்தபோது ஹால் முழுவதும் குப்பையும் கூளமுமாய் தாறுமாறாய் கிடந்தது.

கருணாகரன் அப்போதுதான் சாப்பிட்டுக் கை கழுவிவிட்டு வந்திருக்க வேண்டும் பெரிதாய் ‘பாவ்!’ என்று ஏப்பம்விட்டபடி வேட்டியின் கீழ் நுனியைத் தூக்கி ஈரக்கையைத் துடைத்தபடி டிவியில் பார்வையை செலுத்தியபடி நின்றிருந்தவர் வாசல் கேட் திறக்கப்படும் சப்தம் கேட்டு வாசலைத் திரும்பிப் பார்த்தார்.

கேட்டைச் சாத்திவிட்டு செருப்பைக் கழற்றிப்போட்டு விட்டு உள்ளே நுழையும் நிமிஷாவைப் பார்த்தார். மணி எட்டடே முக்கால் ஆகியிருந்தது.

கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு “ஏய் அம்புஜம்! மணி என்ன ஆகுது இப்போ? இதுதா வீட்டுக்கு வர நேரமா ஒம் பொண்ணுக்கு?

வேலைக்குப் போய் சம்பாரிச்சா கேள்வி கேட்பார் இல்லையினு நெனச்ச நேரத்துக்கு வெளீல போவுறது.

ஊர் சுத்திப்புட்டு இஷ்டப்பட்ட நேரத்துல திரும்பி வர்றது. ஆம்புள பையனா? பொட்டச்சிங்களுக்கு இவ்வளவு ஆவாது.

சொல்லி வையி ஒம் பொண்ணு கிட்ட அப்பன்கிறவன் உசிரோடதா இருக்கான். இன்னும் செத்துப் போலன்னு!

அப்பன்னுதா மதிக்கல. ஒரு மனுஷன்னு ஒரு ஆம்பளைன்னு கூடனா மதிக்கிறது இல்ல. சம்பாதிக்குற திமிரு!” என்று மனைவியிடம் சொல்வதுபோல் நிமிஷாவின் காதில் விழ வேண்டுமென்று சப்தம் போட்டுச் சொன்னார்.

உடலாலும் மனதாலும் தளர்ந்து போயிருந்த நிமிஷாவுக்கு கருணாகரனின் கத்தலுக்கு பதில் சொல்லப் பிடிக்கவில்லை.

சாதாரண மனநிலையில் இருந்தால் ஊர் சுத்திப்புட்டு, பொட்டச்சி, சம்பாதிக்கிற திமிரு போன்ற கச்சடா வார்த்தைகளுக்கு பதிலடி கொடுத்திருப்பாள்.

‘அப்பனாம் அப்பன், ஆம்புளையாம் ஆம்புள, பத்து காசு சம்பாதிச்சி குடும்பத்தக் காப்பாத்த வக்கில்ல. வெட்டியா ஒக்காந்து சோறு திங்கிற திமிரு. நானா சம்பாதிக்கிற திமிருல இருக்கேன்’ கசப்பாய் இருந்தது மனசுக்கு.

தனது அறைக்குச் செல்ல அறையின் கதவருகே சென்றவள் கதவைத் தொட்டபோது கதவு உள்புறம் தாழ்ப்பாள் போட்டிருந்தது.

“தீஷிதாவும் மாப்ளயும் உள்ள தூங்குறாங்க!” அம்மா சொல்லவும் திடுக்கிட்டுப் போனாள் நிமிஷா.

‘அய்யோ!’ என்று கத்தவேண்டும் போல் இருந்தது.

“நா டிரஸ் சேஞ்ச் பண்ண வேண்டாம்? எங்க படுக்குறது நான்? ஒனக்கு அவகிட்ட சொல்லனும்னு தோணல?

நா டிரஸ்கூட மாத்தாத இப்பிடியே நிக்கவா? இந்த வீட்டுல எனக்குன்னு எந்த ஒன்னும் கெடையாதா?

நா அவள எழுப்ப மாட்டேன். நீதான் எழுப்பணும். மணி ஒம்போது கூட ஆகல. அதுக்குள்ள தூங்கப் போயிடனுமா? ச்சே!” என்றாள்.

இத்தனைக்கும் மெதுவாய்தான் பேசினாள் நிமிஷா. உள்ளே இருப்பவர்களுக்கு இவள் பேச்சு காதில் விழுந்திருக்க வேண்டும்.

‘பட்’டென்று கதவு திறந்தது.

“அடியம்மா! மன்னிச்சுக்கோ! தப்புதா ஒன் ரூமுல படுத்தது. இவர் தலைய வலிக்கிறதா சொன்னதால இங்க வந்து படுக்கச் சொன்னேன்.

எழுப்பி விட்டுடறேம்மா! இது ஒன்ரூம்ல! நீயே படுத்துக்க! ஒன் சம்பாத்தியத்துல தானே இந்தக் குடும்பம் நடக்குது. நீ என்ன சொன்னாலும் கேக்கணும். நீ வெச்சதுதா சட்டம்!” கோபமாய் சொல்லிக் கொண்டே கட்டிலில் தூங்கும் குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டாள்.

தூங்குவது போல் கண்களை மூடிப் படுத்துக்கிடந்த கணவனின் தோளை உலுக்கி உலுக்கி எழுப்பினாள்
தீக்ஷிதா.

“நா இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்பிடி கோச்சுக்கிற தீக்ஷி! நா ட்ரெஸ் மாத்த வேண்டாமா?” தணிந்த குரலில் கேட்டாள் நிமிஷா.

“அதா நாங்க ரூம காலி பண்றமே! அப்பறம் என்ன?” கணவனோடும் குழந்தையோடும் வெளியே ஹாலுக்குப் போனாள்.

உள்ளே நுழையப் போனவளை “நிமிஷா! தோச ஊத்தவா?” அம்மாவின் குரல் நிறுத்தியது.

காலை பதினொன்னரை மணிக்குக் காப்பகத்தில் ‘சாப்பிட்டேன்!’ என்று பெயர் பண்ணியது. இதோ இரவு ஒன்பதைத் தாண்டியும் ஒரு காபி கூட குடிக்கவில்லை. எதுவும் பிடிக்கவில்லை நிமிஷாவுக்கு “வேண்டாம்!” என்றாள்.

“எல்லாம் ஹோட்டலுல சாப்பாட்ட முடிச்சிகிட்டு வந்ருப்பா!” அப்பா தாழ்ந்த குரலில் முணுமுணுத்தது காதில் விழுந்தது நிமிஷாவுக்கு.

“அதானே!” என்று தீக்ஷிதாவும் அப்பாவின் முணுமுணுப்பை ஆமோதித்ததும் காதில் விழவே செய்தது.

ஹாலில் மூலையில் தூங்காமல் படுத்திருந்த துரை நிமிஷா வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து, அப்பாவின் முணுமுணுப்பை தீக்ஷிதா ஆமோதித்தவரை நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்ததால் அவன் மனதில் எரிச்சல் மண்டியது.

“அம்மா!” அம்மாவை அழைத்தான்.

“என்னடா?”

“நிமிஷா அக்காக்கு இன்னிக்கி பர்த் டே தானே? சாயந்திரம் திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்குப் போய்ட்டு வரதா சொல்லிட்டுதானே போச்சி?

பஸ்ல போய்ட்டு பஸ்ல திரும்ப இம்மாம் நேரம் ஆவாதா? அப்பா அக்காவ இப்பிடி கேவலமா பேசுறாரு! நீயும் கேட்டுகிட்டு அமைதியா இருக்குற?

தீக்ஷி அக்கான்னா, நிமிஷா அக்காவ வாயில வந்தபடி பேசுது, நீ அத கண்டிக்க மாட்டியா?

நிமிஷா அக்காவ எல்லாரும் ஏ இப்பிடி ஆளாளுக்குப் பேசுறீங்க? அக்கா இல்லாட்டி நாமல்லாம்
கோவிலடியிலயோ பஸ்டாண்டுலயோ தட்டு ஏந்த வேண்டியதுதான்!”

“டேய்! பயலே! அப்பன்கிற மரியாத இல்லாம எனக்கே புத்தி சொல்லுறையா!” என்று கத்தியபடி தொரையின்
உடல் குறைபாட்டைச் சொல்லி இழிவுபடுத்திக் கொண்டே அவனை நோக்கி ஓடிவந்தார் கருணாகரன்.

சூம்பிப் போயிருந்த வலது காலை ஓங்கி உதைத்தார்.

“அய்யோ!” கத்திக் கொண்டே எழுந்திருக்க முயன்றான் துரை. சட்டென எழுந்திருக்க முடியவில்லை.

“தொர!” கத்திக் கொண்டே கருணாகரன் அடுத்த உதை உதைக்கும் முன்னே அவனை நோக்கிக் குனிந்து நின்று இரு கைகளையும் விரித்துக் கொண்டாள் நிமிஷா.

இதைச் சற்றும் எதிர்பாராத கருணாகரன் அடுத்த உதையை உதைக்க, அந்த உதை நிமிஷாவின் வலதுகால் ஆடுசதையில் விழுந்தது.

“அய்யோ!” கத்திக் கொண்டே கீழே படுத்திருக்கும் துரைமேல் விழுந்து விடாமல் தடுமாற்றத்துடன் சமாளித்துக் கொண்டு சுவற்றில் கைவைத்து கீழே விழுவதைத் தவிர்த்தாள் நிமிஷா.

சட்டென மயான அமைதி நிலவியது வீட்டில்.

தாங்க முடியாமல் வலித்தது. கால் வலியைப் பொறுத்துக் கொண்டு திரும்பி கருணாகரனை சுட்டெறிப்பது போல் பார்த்தாள் நிமிஷா.

“ஏய்! அந்தப் பய என்ன பேச்சுப் பேசுறான். அவன இத்தோட விட்டதே பெரிசு!”

“த பாரு! இந்த மொறைக்கிற வேலையெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காத! நூறு ரூவாய்க்குக்கு ஒங்கிட்டக் கையேந்துற ஆளில்ல நா. இப்ப பாரு பாரு பாத்துக்கிட்டே இரு.

ஒருநாளு ஒந்திமிரு அடங்கிடும். அன்னிக்கு நீ என்னைய அப்பான்னு கூப்புடுவ. நீங்கதாம்பா என்னக் காப்பாத்தனும்னு சொல்லி கால்ல விழுந்து அழுவ! ரொம்ப சீக்கிரமே இது நடக்குதா இல்லியான்னு பாரு!” சாபம் இடுவதுபோல் பேசும் கருணாகரனைப்பார்த்து எரிச்சல் மண்டியது நிமிஷாவுக்கு.

வெகு சீக்கிரமே வட்டிக் கடைக்காரன் நாகேந்திரன் கொடுக்கப் போகும் குடைச்சலுக்கு தன்னைப் பெற்றவனும் துணையாயிருந்து தரப்போகும் துன்பத்தை அறியாத நிமிஷாவுக்கு கருணாகரனின் எகத்தாளப் பேச்சு புரியவுமில்லை; புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகவும் படவில்லை.

ஆனாலும் கணவர் பெற்ற மகளைப் பேசிய பேச்சையோ, கால்கள் விளங்கா மகனை ஆவேசத்தோடு உதைத்ததையோ அம்புஜம்மா கண்டு கொள்ளவுமில்லை; கணவரை அடக்கவுமில்லை.

மனம் வலித்தது நிமிஷாவுக்கு.

தன் அறைக்குள் நுழைத்து கதவைத் தாழிட்டுக் கொண்டாள் நிமிஷா. வாய்விட்டு அழ வேண்டும் போல் இருந்தது.

பொங்கிவரும் அழுகையை அடக்க மாட்டாதவளாய் விம்மினாள்.

சுடிதாரைக் களைந்துவிட்டு நைட்டிக்கு மாறினாள்.

பாத்ரூம்போய் கொண்ட மட்டும் அழுதாள்.

அவள் அழுவது ஆதியை நினைத்தா தன் குடும்பத்தை நினைத்தா? பாவம்தான் நிமிஷா.

முகம் கழுவிவிட்டு வெளியே வந்ததவளுக்கு நா வரண்டு போயிருந்தது.

சமையலறை சென்று தண்ணீர் குடிக்க நினைத்து அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வர முயன்ற போது ஹாலில் பேச்சுக்குரல் கேட்டது.

‘தனக்குதான் அர்ச்சனை நடக்குமெ’ன்று நினைத்துக் கொண்டாள் நிமிஷா.

வெளியே வந்தவளின் பார்வையில் சுவரோரம் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த வைஷாலி தெரிந்தாள்.

வைஷாலியின் தலைமாட்டில் அரையடி தூரத்தில் கொத்தாய் சிகப்பு எறும்புக் கூட்டம்.

பிஸ்கெட் துண்டோ ஏதோ கிடந்திருக்க வேண்டும் அதை மொய்த்துக் கொண்டு கொத்தாய் நின்று கொண்டிருந்தன எறும்புகள்.

‘நிச்சயமாய் சிறிது நேரத்தில் எறும்புகள் கலைந்துபோய் வைஷாலி உடம்பில் ஏறி கடித்துப் பிடுங்கும். அவளின் காதுக்குள் புகும் ஆபத்துகூட உண்டு.

அப்படி நேர்ந்துவிட்டால் வைஷாலி வலிதாங்காமல் கத்தும் கத்தலை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

‘பாதி ராத்திரியில் கத்தி ஊரைக் கூட்டுகிறோமே!’ என்றேல்லாம் அவளுக்குப் புரிந்து கொள்ளத் தெரியாது.

பாவம் வைஷாலி! அவள எறுப்பு கடிச்சுடப் போகுதே!’ என்ற பரிதவிப்பில் சமயலறை சென்று அடுப்பு மேடை துடைக்கும் துணியை நனைத்துக் கொண்டு வந்தாள்.

செருப்பு ஸ்டாண்ட் அருகில் வைத்திருந்த எறும்புப் பவுடரைக் கொண்டு வந்து எறும்புக் குவியல்மீது போட்டு அவை கலைந்து நாலாபுறமும் போவதற்குள் அப்படியே ஈரத்துணியைப் பிரித்து எறும்புகள் மீது போட்டு வழித்து எடுத்தாள்.

அத்தனை எறும்பும் குத்துயிரும் கொலையுயிருமாய் ஈரத்துணியில் ஒட்டிக் கொண்டன. நிமிஷாவின் கையைப் பதம் பார்த்தன சில எறும்புகள்.

சமையலறை சிங்க்கில் துணியை அலசிப் போட்டுவிட்டுத் தாகம் அடங்கத் தண்ணீரைக் குடித்துவிட்டு ஹாலுக்கு வந்தபோது கூடம் அமைதியாய் இருந்தது.

தீக்ஷிதாவின் கணவன் ரகுபதி சேரில் அமர்ந்திருக்க எங்கே அவனை நலன் விசாரிக்காமல் போனால் தப்பாகிவிடுமே என்று “சௌக்கியமா? எப்ப வந்தீங்க!” என்று விசாரித்தாள்

“சாயந்திரம் வந்தேன்!” பேச்சை முடித்துக் கொண்டான்.

நைட்டியில் அழகு தேவதையாய்த் தெரிந்த நிமிஷாவின் மீது விஷமத்தனமாய் ஓடி அலைந்தது அவன் பார்வை.

கூசிப் போனாள் நிமிஷா.

கனவு கினவு கண்டாளோ என்னவோ “அக்கா! நிமிக்கா!” என்றபடி புரண்டு படுத்தாள் வைஷாலி.

‘நிமிக்கா!’ என்றபடி புரண்டு படுக்கும் வைஷாலியைத் திரும்பிப் பார்த்த நிமிஷாவுக்கு ‘வைஷாலியும் துரையும் மட்டும் இல்லாவிட்டால் இந்த வீடு தனக்கு நரகமாகவே இருக்கும்!’ என்று தோன்றியது.

வைஷாலியின் நைட்டி லேசாய் மேலேறி முழங்கால் முட்டியைத் தொடும் நிலையில் இருக்க, ‘தன்னையே தீக்க்ஷிதாவின் கணவன் பார்க்கும் பார்வையில் வளப்பமாய் வளர்ந்து நிற்கும் ஒன்றுமறியா வைஷாலி எம்மாத்திரம்!’ என நினைத்து போர்வையை கழுத்துவரை இழுத்துவிட்டு மூடினாள்.

“தீக்ஷி! நீ வேணும்னா ரூம்ல போய்ப்படேன்!” என்றாள் ஒப்புக்காக.

“வேண்டாம்!” என்றாள் தீக்ஷிதா, ‘இன்னொருமுறை வற்புறுத்தட்டுமே!’ என்று.

நிமிஷா வற்புறுத்தவில்லை; தனிமை தேவைப்பட்டது அவளுக்கு.

அறைக்குச் சென்றுக் கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.

“பாரேன்! இவர் இந்த வீட்டு மாப்ள இல்ல? ஏதுடா மாப்ள வந்திருக்காரே! அவரை அந்த ரூமுல படுக்கச் சொல்லுவம்னு இல்லாத மகாராணியாட்டம் தாம் போய் படுக்குறத!

தாம் அழகாருக்கோம், படிச்சிருக்கோம் வேலபாத்து சம்பாதிக்கிறோம்னு அசாத்ய திமிர்தான்!” தீக்ஷீதா பொறாமையும் ஆத்திரமுமாய்ப் பொங்கிப் புலம்பினாள்.

கட்டிலில் படுத்துக் கண்களை மூடிக் கொண்டாள் நிமிஷா.

பொங்கி வந்த அழுகை அடங்க மறுத்தது.

தேக்கி வைத்திருந்த வேதனைகள் அழுகையாய் வெடித்து கண்ணீர் கண்களில் பெருக்கெடுத்து விழியோரமாய்த் தேங்கி கன்னங்களில் கோடு போட்டு இறங்கி தலையணையை நனைத்தது.

விம்மினாள் நிமிஷா.

மனம் முழுவதுமாய் வந்து நின்றான் ஆதி. வழக்கமாய் “ஆதித்யா!” என்றே அவன் பெயரை மனதால் உச்சரிப்பவள் முதன் முதலாய் இதயத்தில் ‘ஆதி!’ என்று எழுதிக் கொண்டாள்.

உதடுகள் “ஆதி!” என்று உச்சரித்தன; தன் மனம் ஆதியை நெருங்குவதை தடுக்க முடியாமல் தடுமாறினாள்.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்