தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 17

தென்றல் வந்து என்னைத் தொடும் - பகுதி17

நிமிஷாவின் உதடுகள் “ஆதி!” என உச்சரித்தன.

ஆதித்யா தான் பணியாற்றும் நிறுவனத்து உரிமையாளன் என்பதால் என்னதான் அடிக்கடி மனம் அவனை நினைத்தாலும் அதற்காக ஆதித்யாவை ‘ஆதி’ என்று அவனது பெயரை சுருக்கி மனதுக்குள் எழுதி அவனுக்கும் தனக்குமான இடைவெளியைத் தானே சுயமாய் நீக்கிக் கொள்ளவில்லை நிமிஷா.

மனது அவனை நினைத்து நினைத்து அவனிடம் ஓடியது உண்மைதான் என்றாலும் அவன் தனது ‘பாஸ்’ என்ற
எண்ணம் அவளை எச்சரித்து எச்சரித்துக் கட்டித்தான் போட்டிருந்தது.

ஆனால் எப்போது ஆதி கோயிலில் “ஐ லவ் யூ நிமிஷா!” என்று தன்னிடம் தன் காதலை வெளிப்படுத்தினானோ அப்போதே தன் மனம் அவனிடம் மொத்தமாய்த் தோற்றுப் போனதை
உணர்ந்தாள் நிமிஷா.

மனதில் உரிமையோடு “ஆதி!” என எழுதிக் கொண்டாள்.

ஆனாலும் உறுதியற்ற பாழும் மனது மாற்றி மாற்றி நினைக்க வைத்து அவளைப் பாடாய்ப்படுத்தி வைக்கிறது.

ஒருசமயம் அவனை நினைக்க வைக்கிறது.

திடீரென ‘நிமிஷா ஆதிய நீ நெனைக்காத! விலகிடு. அவன் எப்பேற்பட்ட குடும்பம்? ஆனா, ஒங் குடும்பம்? நெனச்சுப்பாரு குடும்பமா இது?

ஒன்ன விரும்பி காதலித்து கல்யாணம் பண்ணிண்டான்னு வையி ஆதி மாப்ளயா இந்த வீட்டுக்கு வரணுமில்ல?

அவ்வளவு பெரிய அந்தஸ்துல இருக்குற ஆதி இந்த வீட்டுக்கா? ஆதி மட்டுமா? பொண்ணெடுத்த சம்மந்தி வீடுன்னு ஆதிய பெத்தவங்களும் இந்த வீட்டுக்கு வரணுமில்ல?

எத்தன சினிமாவுல நீ பாக்குல வசதியில மிகமிக அதிகபட்ச ஏற்றத்தாழ்வு இருக்குறவங்க புள்ளைங்க பிடிவாதத்தால சம்மந்தம் பண்ணிக்கிட்டாலும் அதுக்கப்புறம் எத்தன பிரர்ச்சன வருதுன்னு.

ஆதிக்கு ஒன்னதா தெரியும்; ஒங்குடும்பத்தப் பத்தி தெரியாது. தெரிஞ்சப்புறம் அவன் ஒனக்காக ஒங் குடும்பத்த ஏத்துக்கிட்டாலும் அவனோட குடும்பம் ஏத்துக்கணுமில்ல. கோடீஸ்வர குடும்பம் அது; ஆனா ஒங்கு டும்பம்?

அவ்வளவு பெரிய அந்தஸ்துல இருக்குறவங்க தங்களுக்கு சமமான அந்தஸ்துல பொண்ணெடுக்க விரும்புவாங்களா? இல்லை ஒன்னாட்டம்!’

மனசு மாத்தி மாத்திச் சொல்லிச் சொல்லி நிமிஷாவைக் குழப்பியது. குழம்பித்தான் போனாள் நிமிஷா.

‘பொறுப்பில்லாத அப்பா, மௌனமாயிருந்தே காரியம் சாதிக்கும் அம்மா, சுயநலத் தங்கை, கால்கள் விளங்காத தம்பி, மனவளர்ச்சி இல்லாத கடைசி தங்கை.

வேலைக்கு மட்டும் போகாமா வீட்லேயே நீ இருந்தீன்னா சோத்துக்கு லாட்ரி அடிக்குமளவுக்குப் பொருளாதாரத்துல பின்தங்கிய நிலை.

ஒந்தலைய அழுத்தும் கடன்னு இருக்குற குடும்பம்த்துல ஒனக்கு காதல் தேவதானா?

அப்பிடியே நீ ஆதிய லவ் பண்ணி கல்யாணம் பண்ணி ஆதியின் மனைவியா, அவன் வீட்டு மருமகளா அவன் வீட்டுக்குப் போயிடறன்னு வெச்சுக்கோ அப்பறம் இந்த குடும்பத்து நெலம?

இவுங்களலாமும் ஒன்னோட நீ வாழப் போற எடத்துக்கு அழச்சிகிட்டுப் போவியா?

இல்ல நா தொடர்ந்து வேலைக்குப் போயி சம்பாதிச்சி மாசாமாசம் என்வீட்டுக்கு என் சம்பளத்த குடுக்குறேன்னு சொல்லுவியா?

இல்லாட்டி இவுங்களையெல்லாம், எப்பிடியாவது தொலைங்க. எனக்கு என் வாழ்க்கைதா முக்கியம்னு கை கழுவிடுவியா?’

வாய்விட்டு அழ வேண்டும் போல் இருந்தது நிமிஷாவுக்கு.

படுக்கப் பிடிக்கவில்லை; படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டாள். இரு முழங்கால்களுக்கிடையே முகம் வைத்து அழுதாள்.

நாளை அலுவலகம் சென்றால் ஆதியை சந்திக்க வேண்டியிருக்குமே? எப்படி ஆதியின் முகத்தில் விழிப்பது?

தினம் தினம் ஆதியை சந்திப்பதும், பணி சம்மந்தமாய் பேசவேண்டியிருந்தால் பேசுவதும் இயலக்கூடிய காரியமா?

வேறு வேலைக்கு முயல்வமா? நினைத்தவுடன் வேறு வேலை கிடைத்து விடுமா?’ என்று யோசிக்கும் அளவுக்கு ஆகிப் போனாள் நிமிஷா.

ஹாலில் பேச்சுக்குரல்கள் அடங்கிப் போயிருந்தன. அனைவருமே தூங்கியாயிற்று நிமிஷாவைத் தவிர‌.

திருப்போரூர் கோவிலிலிருந்து வீடு வர எட்டு மணியாகி விட்டது.

ஆதி காரை அதனிடத்தில் நிறுத்திவிட்டுக் கீழே இறங்க வழக்கம்போல் ஓடி வந்தது அல்லு. அதனைக் கொஞ்சும் மனநிலையில் இல்லை ஆதி.

லேசாய் அதன் முதுகில் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவனை ஹாலில் அமர்ந்திருந்த கோவர்த்தனும் விமலாதேவியும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தவர்கள்போல் வரவேற்றார்கள்.

வெளியில் சென்றுவிட்டு உள்ளே வருவதற்கு முன்பு அல்லுவைக் கொஞ்சுவதும், கொஞ்சி முடித்துவிட்டு “ஹாய் ஹூய்!” என்று எதையாவது சொல்லிக் கொண்டே ஜாலியாக உள்ளே நுழைவதுமாய் இருக்கும் ஆதி அல்லுவைப் புறக்கணித்து விட்டு அமைதியாய் உள்ளே நுழைந்தது கண்டு வியந்து போனார்கள் கோவர்த்தனும் விமலாதேவியும்.

வழக்கமாய் “ஹாய்ப்பா! ஹாய்மா!” என்று அழைத்துக் கொண்டே முகம் முழுதும் சிரிப்போடு உள்ளே வரும் மகன் ஆதி அமைதியாய் முகத்தில் சுரத்தில்லாமல் ஆர்ப்பாட்டமில்லாமல் நுழைவதை இதுவரைப் பார்த்ததே இல்லாத அவர்களுக்கு கொஞ்சம் ‘பக்’கென்றுதான் ஆனது.

“ஆதி என்னாச்சுப்பா! ஒரு மாதிரியா இருக்க?” இருவரும் ஒரே நேரத்தில் கேட்டார்கள்; குரலில் கவலையும் பதட்டமும் தெரிந்தது.

சட்டென எழுந்து ஆதியின் அருகில் சென்றார் விமலாதேவி “ஆதி! என்னாச்சு கண்ணு! ஏ எப்டியோருக்க? நல்லபடியா சாமி பாத்தியா?” கேட்டுக் கொண்டே மகனின் கையைப் பற்றிக் கொண்டார்.

“விமலா! கொழந்த இப்பதானே உள்ள நொழையிறான். ‘நய்யி நையினு’ கேள்வி கேக்குற” தனக்கும் ஆதியின் சுரத்தில்லாத முகம் பார்த்து கவலையாயிருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு மனைவியிடம் கேள்வி கேட்டார் கோவர்த்தன்.

‘கூடுமானவரை தன் மன வருத்தத்தைக் காட்டிக் கொள்ளக்கூடாது இயல்பாய் இருப்பதுபோல்தான் நடந்து
கொள்ள வேண்டும்’ என்று தான் ஆதி நினைத்திருந்தான்.

ஆனாலும் ரொம்பவும் நடிக்கத் தெரியவில்லை ஆதிக்கு.

“ஆதி! ரொம்ப டல்லா இருக்குற? என்னாச்சு ஒனக்கு? கோவில்ல ரொம்ப கூட்டமா? சாமி பாக்க முடிஞ்சிதில்ல?” கோவர்த்தன் தன் பங்குக்கு அடுத்தடுத்து கேள்வி கேட்டார்.

“ப்ச்!” என்றான் ஆதி.

“கோவில்ல கொஞ்சம் கூட்டம்தான்; சாமில்லாம் பாத்தேன். தலைய லேசா வலிக்குது அதான். வேறொன்னுமில்லை; நாம் போய் ரெஸ்ட் எடுக்குறேன்!”

விமலாதேவி கவலையோடு பிள்ளையின் நெற்றியிலும் கழுத்திலும் கை வைத்துப் பார்த்தார்.

“ஜொரம்லா இல்ல! காலேல தாம்பரம், சாயந்திரம் திருப்போரூர் கார்ல போனாலும் அலைச்சல்தானே?
அலைச்சல் ஆகல. அதான் தலை வலிக்குது. காபி குடியேன் ஆதி!” என்றார் விமலாதேவி.

“வேண்டாம்மா! ரெஸ்ட்டெடுத்தால் சரியாகிடும் நா ரூமுக்குப் போறேன்!”

“ஆதி நீ போய் ரெஸ்ட் எடு. கோவிலுக்குப் போய்ட்டு வந்தியே விபூதி, ப்ரசாதம் வாங்கிட்டு வந்தியா?” கேட்டார் கோவர்த்தன்.

‘திக்’கென்றது ஆதிக்கு.

‘அதானே! கோயிலுக்கு அதுவும் குலதெய்வம் கோவிலுக்குப் போய்ட்டு வரோம். பெத்தவங்க விபூதி ப்ரசாதம் கேப்பாங்கன்னு தோணலயே? நிமிஷாவப் பாத்ததுல எல்லாமே மறந்து போச்சு.

அதுவும் சந்தோஷமாகூட திரும்பி வரல; ஏமாற்றத்தோட திரும்பறச்சே விபூதியாவது ஒன்னாவது?

நா விபூதி வாங்கிக்கிட்டு வராததுக்கு இதாங்காரணம்னா சொல்ல முடியும்?’ என்று நினைத்தவன் சட்டென சட்டைப்பையிலும் வேட்டியிலிருந்த பாக்கெட்டிலும் விபூதி பொட்டலத்தைத் தேடுவதுபோல் பரபரபரப்பாய்த் தேடினான்.

“எங்க வெச்சேன்? இங்கதானே வெச்சேன்!” என்று சொல்லிக் கொண்டான்.

“சரி! சரி! விடு ஆதி. தலைய வலிக்கிதுனுட்டு! போய் ரெஸ்ட் எடு!”

விட்டால் போதுமென மாடியேறி தன் அறைக்குள் நுழைந்து ‘தொப்’பெனப் படுக்கையில் விழுந்தான் ஆதி.

வேட்டி ஷர்ட்டைக்கூட மாற்றவில்லை. நிஜமாகவே தலையை வலிப்பது போல் இருந்தது; மனம் கனத்துப் போயிருந்தது.

ஆதி வந்து படுத்து அரைமணி நேரம்தான் ஆகியிருக்கும்.

“ஆதி!” கீழேயிருந்து அம்மா அழைப்பது காதில் விழுந்தது.

ஆதி அமைதியாகப் படுத்திருந்தான்.

அம்மா மாடிப்படி ஏறிவரும் காலடியோசை கேட்டது.

‘ஐயோ! அம்மாவை படியேறி வர வைத்து விட்டோமே!’ என்றிருந்தது ஆதிக்கு.

“ஆதி ரொம்ப தலைய வலிக்குதா? சாப்பிட வா. சாப்ட்டா தலைவலி சரியாயிடும். மணி ஒம்போதாகப் போகுது பாரு. அப்பா ஒனக்காக வெயிட்டிங்!” சொல்லிக்கொண்டே உள்ளே வந்தவர் “ஆதி! என்னப்பா வேட்டி சட்டையக்கூட மாத்தாம படுத்துட்ட! அவ்வளவு தலைவலியா இருக்கா?” கவலை தெரிந்தது குரலில்.

“இல்லம்மா! லேசாதா வலிக்கிது. எனக்கு சாப்பாடு வேண்டாம். நீங்களும் அப்பாவும் சாப்டுங்கம்மா!”

“அதெப்டி? ராத்திரி பட்னி கெடந்தா ஒடம்பு என்னத்துக்கு ஆறது? பாலோ ஹார்லிக்ஸோ எதாவது குடி!”

கையிலிருந்த செல்ஃபோன் மூலம் சமையல்கார அம்மா சங்கரியம்மாவுக்கு சூடாய் ஹார்லிக்ஸ் கொண்டுவரச் சொன்னார் விமலாதேவி.

அம்மாவின் வற்புறுத்தலால் ஹார்லிக்ஸைக் குடித்துவிட்டு டிரஸ்சேஞ்ச் செய்து கொண்டு படுத்தவன் மனதில் நிமிஷாவின் கண்களில் முட்டி நின்ற கண்ணீரே வந்து நின்றது.

‘அப்பிடி நிமிஷா அழும் அளவுக்கு அவுங்களுக்கு என்ன பிரர்ச்சன இருக்கும்?’ இரவு முழுதும் தூங்காமல் புரண்டு புரண்டு படுத்திருந்தவன் காலையில் எழுந்து படுக்கையில் அமர்ந்தபோது கண்கள் எரிச்சலாய் எரிந்தன.

படுக்கையில் எழுந்து அமர்ந்த நிமிஷாவுக்கு முதல்நாள் சரியான சாப்பாடு இல்லாததாலும் தூக்கமின்மையாலும் ரொம்பவும் சோர்வாய் இருந்தது.

‘ஆஃபீஸ் போவமா? வேண்டாமா?’ எனத் தோன்றியது.

“ஐயோ! இந்த வீடுங்குற நரகத்துல இருக்குறதவிட ஆஃபீஸ் போறதே பெட்டர்!’ எனத் தோன்றியது.

‘ஆஃபீஸ் போனா ஆதிய சந்திக்கணுமே அவுர எப்பிடி
பாக்குறது?’ குழம்பிப் போனாள் நிமிஷா.

ஆனாலும் ஆதியைப் பார்க்க வேண்டும் போலும் இருந்தது.

‘நேத்திக்கு அப்பிடியோரு பதில சொல்லிட்டமே ஆதிக்கு. ரொம்ப அப்செட் ஆயிருப்பாரோ?

பாவம்ல ஆதி. எம் பதிலால ரொம்ப ஏமாற்றம் அடஞ்சிருப்பாரோ? ஒருவேள இன்னிங்கு ஆஃபீஸ்க்கு வராம இருந்துடுவாரோ?’ மனதுக்குள் பொங்கி எழுந்த வேதனையோடு நிமிஷா குளிக்கச் சென்றாள்.

‘சாப்பிடிப் பிடிக்கிறதோ இல்லையோ சாப்பிட்டுதான் ஆகணும். எங்கியாவது மயக்கம்போட்டு விழுந்துட்டா!’
என நினைத்தவள் காலை உணவை சாப்பிட்டோம் எனப் பேர் பண்ணிவிட்டு டிஃபன்பாக்ஸை ஹேண்ட்பேக்கில் போட்டுக் கொண்டு அலுவலகம் கிளம்பினாள் நிமிஷா.

வாசல் நோக்கி நடந்தவளின் பின்னால் அம்மா வந்தாள்.

“நிமிஷா!” அழைத்த அம்மாவைத் திரும்பிப் பார்த்தாள்.

“தீக்ஷிதாவ லேடி டாக்டர்ட்ட காமிக்கணுமில்ல. ரோஹிணி ஹாஸ்பிடலுக்குனா அழச்சிக்கிட்டுப் போயி டாக்டர் சுஜாதாகிட்ட காமிக்கவா!”

“ரோஹிணி ஹாஸ்பிடலா? நம்மால சமாளிக்க முடியுமா? நமக்கு ஏத்தாப்புல வேற ஹாஸ்பிடலே இல்லியா? அவ புருஷனே டெலிவரி வரைக்குமான செலவ பாத்துக்கப் போறாரா?”

பதில் சொல்லாமல் நின்றார் அம்புஜம்மா.

கேட்டைத் திறந்து கொண்டு வெளியே கால் வைத்தாள் நிமிஷா.

கை கடிகாரத்தில் மணி பார்த்தபோது நேரம் ஏழு ஐம்பது.

பழக்கப்பட்ட கால்கள் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நடைபோட, மனம் செக்குமாடு போல் மீண்டும் மீண்டும் ஆதியையே சுற்றிச் சுற்றி வந்தது.

நேத்து ஆதிட்ட நாம ‘எனக்கு ஒங்க காதல ஏத்துக்குற தகுதி இல்ல! நா எந்த விதத்துலயும் ஒங்குளுக்குப் பொருத்தமில்லாதவன்னு’ சொன்னப்ப அவர் முகம் ஏமாற்றத்துல எப்பிடியாயிடுச்சி?

பாவம்ல ஆதி! நம்ம மாரியே அவுரும் ராத்திரி முழுக்க தூங்காம நேத்து நடந்தது பத்தியே நெனைச்சுக்கிட்டு இருந்துருப்பாரோ?

ப்ச்! பாழும் மனமே ஆதியயே நெனைக்க வெச்சு நெனைக்க வெச்சு என்னப் பைத்தியமாக்கிடாத ப்ளீஸ்!’ மனதிடம் கெஞ்சினாள் நிமிஷா.

அலுவலகம் சுறுசுறுப்பாய் செயல்பட ஆரம்பித்திருந்தது. மணி ஒன்பதே முக்கால்.

மேனேஜர் அறையிலிருந்து அழைப்பு. எழுந்து மேனேஜர் அறைக்குச் சென்றாள்.

“மிஸ்.நிமிஷா! ஒக்காருங்க!”

“இருக்கட்டும் சார். பரவால்ல நிக்கிறேன்!”

“இந்தாங்க மிஸ்.நிமிஷா!” ரூ 5000 க்கான அமேசான் கிஃப்ட் வவுச்சர் அடங்கிய கவரை நீட்டினார் மேனேஜர்.

“என்ன சார் இது?” தயக்கத்துடன் கை நீட்டினாள்.

“கிஃப்ட் வவுச்சர். நேத்து ஐந்தாம் தேதி நம்ம நிறுவனம் தொடங்கின நாளாம்.

அதோடுகூட மிஸ்டர் ஆதித்யா புது எம்.டி.யா பொறுப்பேத்துருக்காரில்ல அதுக்காக நம்ம நிறுவனத் சேர்ந்த அனைத்துப் பணியாளர்களுக்கும் ரூபாய் 5000க்கு கிஃப்ட் வவுச்சர் நிறுவனம் சார்பா நேத்து குடுத்தாரு நம்ம எம்.டி.மிஸ்டர் ஆதித்யா.

நீங்க நேத்து லீவாச்சே. அதான் இப்ப குடுக்குறேன்!”

நன்றி சொல்லியபடி கவரை வாங்கிக் கொண்டாள் நிமிஷா.

‘ஓ! அதான் கருணாசாகரத்துல ஸ்பெஷல் டே கொண்டாடப்பட்டதா? நந்தினியம்மா சொன்னாங்கள்ள!’ மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

‘ஆஃபீஸ்ல எல்லாரும் ஆதிக்கு கிஃப்ட் வவுச்சர வாங்கிக்கிட்டு நன்றி தெரிவிச்சிருப்பாங்கள்ள. நானும் தானே சொல்லனும்? ஆதிட்ட முகம் பார்த்து எப்பிடி நன்றி சொல்வேன்!’ தவிப்பாய் இருந்தது நிமிஷாவுக்கு.

தனது இருக்கையில் அமர்ந்து கணிணியை உயிரூட்டி அலுவலகம் சம்மந்தப்பட்ட ஏதோ ஒன்றைப் பார்ப்பதும் அருகே அடுக்கடுக்கி வைக்கப்பட்டிருந்த நான்கைந்து ஃபைல்களில் ஒன்றைப் பிரித்துப் பார்ப்பதுமாய் வேலையில் நிமிஷா ஈடுபட்டிருந்தாலும் மனது முழுதுமாய் அலுவலில் ஈடுபடாமல் சண்டித்தனம் செய்தது.

‘மணி பத்தாகப் போவுது ஏன் இன்னும் ஆதி வல்ல? ஷார்ப்பா ஒம்பதரை மணிக்கெல்லாம் வந்துடுவாரு.

ஐயோ! ஆதி இன்னிக்கு வராம இருந்துட்டா! அவர பாக்காம இருக்க முடியாது போலருக்கே!

பின்ன நேத்து கோவில்ல வெச்சு ஆதிட்ட அப்பிடி சொல்லிட்டு வந்த? இப்ப ரொம்பதா தவிக்கிற? இப்படி கேள்வி கேட்டு கேள்வி கேட்டு மடக்காத ப்ளீஸ்!’ மறுபடியும் மனதிடம் கெஞ்சினாள்.

சின்னதாய் சப்தம் கேட்டாலும் ‘ஆதியா இருக்குமோ?’ என்று வாசபுறத்தைப் பார்த்துப் பார்த்து ஏமாந்தாள். மனசு சுருண்டு போனது.

“ஆதி! தலைவலி தேவலையா? சாதாரணமா ஆயிட்டியா?” அம்மாவும் அப்பாவும் மாற்றி மாற்றிக் கேட்க, வலுக்கட்டாயமாய்ச் சிரித்தான்.

இயல்பாய் இருப்பதாய்க் காட்டிக் கொண்டான். “தலைவலி போயே போச்சு!” என்று முகத்தில் மலர்ச்சி காட்டி இருகைகளையும் விரித்துத் தோள்களைக் குலுக்கினான்.

“ஆதி! இன்னிக்கின்னா ஆஃபீஸ் போ வேண்டாம். வீட்லயே ரெஸ்ட் எடேன். நீயே போக வேண்டாம்னுதா இருந்தியா? மணி ஒம்பதர ஆகப் போவுது?”

ஆதியும் கூட காலை ஒன்பது மணி வரை ‘ஆஃபீஸ் போக வேண்டாம்!’ என்றுதான் நினைத்தான். நேரம் ஒன்பதரையைத் தொட்டபோது மனம் பரபரத்தது.

‘ஆஃபீஸ் தொடங்கியிருக்கும் நிமிஷா வந்ருப்பாங்க! வந்ருப்பாங்களா? வந்திருக்க மாட்டாங்களா? நிமிஷா வந்துருக்காங்களான்னு எப்பிடி தெரிஞ்சிக்கிறது?

ஏன் நிமிஷா வந்துருக்காங்களான்னு மேனேஜர்ட்ட ஃபோன் பண்ணிக் கேளேன்.

இல்லாட்டி அந்தப் பொண்ணு பேரென்ன ப்ரியம்வதா அதுண்ட கேளேன். வேற வெனையே வேண்டாம். நேரப் போய் பாப்பியா?அதவுட்டுப்பிட்டு

ட்ரைப் பண்ணு! ட்ரைப் பண்ணு! எறும்பு ஊற கல்லும் தேயும்! ஒன்னப் பாக்கப் பாக்க அந்த நிமிஷாப் பொண்ணோட மனசு மாறாதா? கெளம்பு! கெளம்பு!’ மனசு தூண்டிவிட்டது.

“வீட்டுல ரெஸ்ட் எடேன்!” என்ற அப்பா அம்மாவிடம் “இல்ல! இல்ல! கொஞ்சம் லேட்டா போலாம்னு நெனச்சேனே தவிற போவேண்டாம்னு நெனைக்கில! தோ! கெளம்பிண்டே இருக்கேன்!” என்றான்; கிளம்பினான்.

இடது கையைத் திருப்பி மணி பார்த்தாள் நிமிஷா. மணி பத்தரை.

‘ஆதி வல்ல! ஆதி! ஸாரி! ஆதி! என்னாலதானே!’ எதை நினைத்து மனதுக்குள் புலம்ப ஆரம்பித்தாளோ அதை நினைத்துப் புலம்பி முடிப்பதற்குள் யாரோ உள்ளே நுழையும் சிறு ‘சரக் சரக்’ சப்தம். அனிச்சைச் செயலாய் நிமிர்ந்து வாசலைப் பாத்தாள் நிமிஷா.

உள்ளே நுழைந்த ஆதியின் பார்வை நிமிஷாவின் மேல் விழ நிமிஷாவின் பார்வை ஆதியின் கண்களைச் சந்திக்க, அவன் கண்களில் தெரிந்த சோகமும் வாடிப் போயிருந்த அவன் முகமும் நிமிஷாவை குற்ற உணர்வால் அவனிடமிருந்து பார்வையை மீட்டுக் குனியச் செய்தது.

‘கிஃப்ட் வவுச்சருக்கு நன்றி சொல்லுற சாக்குல ஆதியோட ரூமுக்குப் போயி ஆதியன்னா பாப்பமா? ஸாரி சொல்லுவமா?

கூப்புடாம எம்.டி.ரூமுக்குப் போறது தப்பாச்சே! முருகா! ஆதி என்ன கூப்புடறா மாரி ஒரு சிசுவேஷன ஏற்படுத்தேன்!’ வேண்டிக் கொண்டாள்.

‘ப்ரியம்வதாட்டன்னா நன்றி சொல்லிட்டாங்களான்னு கேப்பமா? கேக்க வேண்டாம். நேத்து வாங்கினதுமே நன்றி சொல்லிருப்பாங்க! நா மட்டும்தானே இன்னிக்கி வாங்கினேன்!’

பத்து நிமிடம் கடந்து சென்றது.

பத்து நிமிடத்திற்குள் முப்பது தடவையாவது நிமிஷாவின் பார்வை ஆதியின் அறையைக் கதவைத் தொட்டுத் தொட்டு மீண்டது.

ப்ரியம்வதாவே அருகில் வந்தாள்.

“கூப்பன் வாங்கிடியா நிமிஷா?”

“ம்! வாங்கிட்டேன் ப்ரியா! இன்னும் எம்.டி.க்கு தேங்ஸ் சொல்லல?”

“சொல்லனும்!” என்றாள் ப்ரியா.

“ஏம் ப்ரியா! நேத்தே நீங்க வாங்கிருப்பீங்களே? அப்பவே சொல்லல!”

“எம்.டி.எங்க குடுத்தாரு? மேனேஜர குடுக்கச் சொல்லிட்டு வேல இருக்கறதா சொல்லிட்டுப் போயிட்டாராம்!”

“ஓ!”

ப்ரியா தன்னிடத்திற்குப் போய்விட்டாள்.

அடுத்த பத்து நிமிடங்களுக்குள் ஒவ்வொருவராய் அழைக்கப்பட்டு எம்.டி.ஆதித்யா அறைக்குச் சென்று வந்தனர்.

“கூப்பன் வாங்கிக்கிட்டீங்களான்னு கேட்டாரு! நிறுவன வளர்ச்சிக்காக பணியாற்றும் உங்களுக்கு நன்றின்னாரு! நானும் கிஃப்ட் கூப்பனுக்கு நன்றின்னு சொன்னேன்!” என்று அருகே வந்து சொல்லிவிட்டுப் போனாள் ப்ரியம்வதா.

தானும் அழைக்கப்படுவோம் என அந்த நேரத்திற்காகக் காத்திருந்தாள் நிமிஷா.

மாலை அலுவலகம் முடிவதற்கு பத்து நிமிடம்வரை அழைக்கப்படவே இல்லை நிமிஷா. ஏமாற்றத்தில் மனசு அடித்துக் கொண்டது.

அலுவலகம் முடிய ஐந்து நிமிடம் முன்னதாக நிமிஷா பக்கமே திரும்பாமல் நடந்து சென்று அலுவலகத்தை விட்டு வெளியேறினான் ஆதி.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்