தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 18

தென்றல் வந்து என்னைத் தொடும் - பகுதி 18

தன்னைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் கடந்து செல்லும் ஆதியைப் பார்த்தபடி அமர்ந்திருந்த நிமிஷாவுக்கு,
அவன் அலுவலகம் விட்டு வெளியேறியதும் எல்லாமே வெறுமையாகிப் போனது போல் தோன்றியது.

கண்களை மூடி வலது கையைப் பின்கழுத்தில் வைத்துத் தலையை லேசாய்க் குனிந்து மிக மெதுவாய்த் தலையை இப்படியும் அப்படியும் அசைத்தாள்.

மனம் மரத்துப் போனது போல் தோன்றியது. நெடிய ‘பெருமூச்சொ’ன்று எழுந்தது.

“நிமி! மணி அஞ்சர ஆயிட்டு! டல்லாருக்க, கெளம்பல!” தோளில் தொங்கும் பையோடு அருகில் வந்த ப்ரியா கேட்டாள்.

“ஐயோ! ப்ரியா கண்டுபிடிக்கிற அளவுக்கு டல்லாவா தெரியிறோம். மன வருத்தத்த ரொம்ப காட்டிட்டோமோ?

ஜாக்கிரதையா இருக்கணும். இல்லாட்டி வாயப் புடுங்க ஆரம்பிச்சிடுவா. துளி சந்தேகம் வந்தாலும் முடிஞ்சிது கதை!’ என நினைத்தாள்.

சட்டென “அதெல்லாம் ஒன்னுமில்ல ப்ரியா. நா சாதாரணமாதா இருக்கேன்!” முகம் மலர்த்தி செயற்கையாய்ச் சிரித்தாள்.

“ம்.. ம்.. தோ! தோ!” ஹேண்பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் நிமிஷா.

“நிமிஷா! நீ ரொம்ப டல்லாருக்க! என்னாச்சு ஒனக்கு? நானும் காலேலேந்து ஒன்ன பாத்துகிட்டுதா இருக்கேன்!”

லிஃப்டில் ஏறி தரைதளம் இறங்கி டூவீலர்கள் நிறுத்துமிடம் சென்று தனது ஸ்கூட்டியை உருட்டிக் கொண்டு வெளியே வந்து ஸ்டார்ட் செய்யும்வரை ப்ரியோவோடு நடந்த நிமிஷா ப்ரியாவுக்குக் கையாட்டிவிட்டு இடதுபக்கம் திரும்ப, வண்டியில் வலதுபக்கம் சென்றாள் ப்ரியா.

‘குடுத்து வெச்சவங்க ப்ரியா! சல்லுனு வண்டீல கிளம்பிட்டாங்க.

ஆனா நா இனிமே ஆட்டோ புடிச்சி பஸ் ஸ்டாண்ட் போயி பஸ் புடிச்சி ஸ்டேஷன் போயி ட்ரெயினேறி எறங்கி நடந்து வீட்டுக்குப் போக ஏழர ஆகிடும்.

தினமும் இதே பொழைப்பு. ஆஃபீஸ்க்கு பத்து கிலோ மீட்டர்லயே வீடு இருந்து ஸ்கூட்டியும் இருந்தா எப்பிடி இருக்கும்?

வாடகை குடுக்க முடியாதுனுதானே எங்கியோ இருக்குற செங்கல்பட்டுலேந்து இவ்வளவு தூரம் ஆஃபீஸ்க்கு வரோம்?

இதுல ஸ்கூட்டி ஆச வேற!

என் வாழ்க்கையில எல்லாமே கனவாதா இருக்குமோ?

ச்சே! என்ன பொழப்பு?

என்ன வாழ்க்க?’ சலித்துப் போனது நிமிஷாவுக்கு.

‘இதுல! தீக்ஷிதாவ அம்மாக்கு ரோஹிணி ஹாஸ்பிடல்ல சுஜாதா டாக்டர்ட்ட காமிக்கணுமாம்.

எங்க போவது அத்தன பணத்துக்கு? நா என்ன பணம் காச்சி மரமா என்ன?’

வீட்டை நினைக்கவே பிடிக்கவில்லை நிமிஷாவுக்கு.

ஆட்டோ ஸ்டாண்டில் போய் நிற்பதற்கும் ஆட்டோ வந்து நிற்பதற்கும் சரியாய் இருந்தது. ஆட்டோக்குள் மூன்று பேரே இருந்த நிலையில் நாலாவது பேராய் நிமிஷா ஏறி உட்கார்ந்தாள்.

‘ஆட்டோவில் யார் அமர்ந்திருக்கிறார்கள்?’ என்றுகூட பார்க்கவில்லை. அவளைத் தவிர‌ மூன்று பேருமே ஆண்கள்.

இவள் அமர்ந்ததுமே இவள் அருகில் அமர்ந்திருந்தவன் ஆட்டோ குலுங்கும் போதெல்லாம் வேண்டுமென்றே நிமிஷாவை இடித்தான்.

மற்ற இரு ஆண்களும் பச்சை பச்சையாய்ச் பேசிச் சிரித்தார்கள். அவர்கள் குடித்திருக்க வேண்டும். பயந்து போனாள் நிமிஷா.

“டிரைவரண்ணே! நிறுத்துங்க! நிறுத்துங்க! நா எறங்கிக்கிறேன்!”

இறங்கி இருபது ரூபாயைக் கொடுத்து விட்டு நடக்க ஆரம்பித்தாள்.

ஆட்டோவுக்குள்ளிருந்து படுகேவலமான வார்த்தைகளும் தொடர்ந்து ‘ஹோ! ஹோ!’வென சிரிக்கும் சப்தமும் கேட்டது.

இடிமன்னர்களாலும் குடிமன்னர்களாலும் தினம் தினம் அலுவலகம் சென்று விட்டு வீடு திரும்பும் வரை படும் வஸ்தை, நிமிஷாவுக்கு அலுப்பையும் வெறுப்பையும் தருவது, வீட்டிலுள்ளவர்களுக்கு எப்படித் தெரியும்?

“அப்பாவும் தீக்ஷிதா அக்காவும், எப்ப பாரு ஒன்னைய நீ வேலைக்குப் போவுற திமிருல ஆடுடறதா சொல்றாங்க!” துரை தன்னிடத்தில் சொல்லும் போதெல்லாம் மனம் கசந்துபோகும் நிமிஷாவுக்கு.

பத்து நாள் முன்பு “அக்கா நீ நன்றி இல்லாத இவுங்களுக்கெல்லாம் சம்பாரிச்சி போடாதக்கா! நீ கல்யாணம் பண்ணிக்கிட்டுப் புருஷன் வீட்டுக்குப் போயிடுக்கா! என்னப் பத்திக் கவலப்படாதக்கா!

நானு சைக்கிள் கடையில பஞ்ச்சர் ஒட்டவாவது போயிடுவேன்! இல்லாட்டி ஜவுளிக்கடேல லிஃப்ட்டு ஆபரேட்டராவது போயிடுவேன்க்கா! என் ஃப்ரெண்டுகிட்ட சொல்லி வெச்சுருக்கேன்கா!

நீ ஆஃபீஸ் போனதும் இந்த வீட்டுல இருக்கவே புடிக்கலக்கா!”கோவத்தோடு சொன்ன தம்பியை “தொர!” என்றபடி முதுகைத் தட்டிக் கொடுத்தாள் நிமிஷா.

“தொர வைஷாலி பாவம்ல!”

“ஆமாக்கா! ப்ச்! நாங்க எல்லாருமே ஒனக்கு பாரம்க்கா! ஆனா ஒனக்கான வாழ்க்கைய அமைச்சுக்காத நீ பண்ணுற தியாகம் விழலுக்கு எறைச்ச நீராயிடும்கா!” கண்கள் பனிக்க துரை சொன்னது ஞாபகம் வந்தது நிமிஷாவுக்கு.

சேப்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் வந்து பஸ் ஏறி இறங்கி பீச் ஸ்டேஷனுக்குள் நுழைந்து விட்டாள்.

ஆட்டோவிலிருந்து பாதி வழியில் இறங்கி நடந்து பஸ் ஏறி வந்ததால் வழக்கமாய் அவள் ஏறும் மின்சார வண்டி போய் விட்டிருந்தது. அடுத்த வண்டி வரு ம்வரைக் காத்திருக்க வேண்டியதுதான்.

காலியாகக் கிடந்த நீள சிமென்ட் பெஞ்ச்சில் அமர்ந்தாள்.

இளம் வயது கணவன் மனைவி. கணவனின் வலது கையில் ஒன்னரை வயதிருக்கும் பெண்குழந்தை.

மனைவி கணவனின் இடது கையோடு தன் வலது கையைக் கோர்த்துக் கொண்டு லேசாய் அவன் தோளில் சாய்ந்தபடி ஏதோ சொல்லிச் சிரிக்க, அவள் என்ன சொன்னாளோ அவனும் சிரிக்க, இருவரும் சிரித்தபடி நிமிஷாவைக் கடந்து சென்றனர்.

அவர்கள் தன்னைக் கடந்து பத்தடி செல்லும் வரை பார்த்துக் கொண்டே இருந்தாள் நிமிஷா. அவள் இப்படியெல்லாம் பார்ப்பவள் இல்லை. ஆனாலும் இன்று ஏனோ அப்படி பார்க்கத் தோன்றியது.

‘குழந்தையை வைத்திருக்கும் அந்த ஆணை ஆதியாகவும் அந்தப் பெண்ணை தான் என்றும், அப்படியிருந்தால் எப்படியிருக்கும்?’ என்றும் தோன்றியது; நினைப்பே சுகமாய் இருப்பதை உணர்ந்தாள் நிமிஷா.

‘இதெல்லாம் நிஜத்தில் நம் வாழ்க்கையில் நடந்துவிடுமா என்ன?’ என நினைத்தவள் தலையைக் குலுக்கி நினைப்பை விரட்ட நினைத்தாள்.

‘ஏனிப்படி ஆகிட்டேன். இப்டீல்லாம் நெனைக்கிறது தப்பில்ல!’ மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

ஆனாலும் ஆதியை நினைப்பதை விடமாட்டேன் என்றது மனசு.

“ஆதி!” என்று தனக்குள் சொல்லிப் பார்த்தாள்.

‘ஆதி ஆஃபீஸ்லேந்து என்ன திரும்பிப் பாக்காமகூட வெளீல போய்ட்டீங்களே! ஸாரி ஆதி! காலேல பாத்தப்ப ஒங்க முகம் சோர்வா இருந்துது. அது என்னால தானே? ஸாரி ஆதி! ஸாரி! ஸாரி!’

“மிஸ்.நிமிஷா!” ஆதி அழைப்பது போலவே இருக்க, தூக்கி வாரிப் போட்டது நிமிஷாவுக்கு.

‘அடக்கடவுளே! ரொம்பன்னா ஆதி நெனப்புல லூஸாயிட்டேன். ஸ்டேஷனுக்கு வந்து ஆதி கூப்புடுவாரா என்ன?’ மனசு கேட்டாலும் கண்கள் அங்குமிங்கும் அலைந்தன.

மறுபடியும் “மிஸ்.நிமிஷா!” என்று பின்புறத்திலிருந்து ஆதி அழைப்பதுபோல் கேட்கவே, சடாரெனத் திரும்பிப் பார்த்த நிமிஷா கண்களை நம்ப முடியாதவளாய் தூக்கி வாரிப் போட எழுந்து நின்றாள்.

‘ஆதி! ஆதி! ஆதியேதான்!’ கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான்; முகம் சோர்ந்து போய் இருந்தது.

ஆதியைப் பார்த்த அதிர்ச்சியில் எழுந்து நின்றவள் பேச்சு எழாத நிலையில் உறைந்து போனாள்.

“பேசமாட்டீங்களா? மிஸ் நிமிஷா!”

“ம்.. ம்.. நீங்களா? நீங்க எங்க இங்க?”

“ஒங்களப் பாக்கதான்! ஒங்ககிட்ட பேசணும்!”

“இங்கயா?”

“இல்ல! மெரினாவுக்குனா போலாமா?”

“ஐயோ! பீச்சுக்கா?”

“ஏ! மிஸ் நிமிஷா! என்னோட வரக் கூடாதா ?நா மோசமானவனெல்லாம் இல்ல!”

“ஐயோ! நா அப்டீல்லாம் நெனைக்கில! ஆனா”

“ப்ளீஸ்! மறுக்காதீங்க!”

“பீச்சுக்கெல்லாம் தனியா எப்பிடி வர்ரது? வீட்டுக்குப் போணும்.”

“அப்ப வரமாட்டீங்க!” ஏமாற்றம் தெரிந்தது ஆதியின் குரலில்.

“சரி, ஒங்கள வற்புறுத்த நா யாரு?” திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

“ஆதி!” தன்னை அறியாமல் அழைத்தாள் நிமிஷா.

‘சரேலெ’னத் திரும்பினான் ஆதி.

“எப்டி கூப்டீங்க? எப்டி கூப்ட்டீங்க? ஆதின்னா!” ரெண்டே எட்டில் அவளருகில் வந்து நின்றான்.

அப்போதுதான் தான் ஆதித்யாவை ‘ஆதி!’ என்று தன்னை அறியாமலேயே அழைத்ததை உணர்ந்தாள் நிமிஷா.

“ஸாரி! ஏதோ தடுமாற்றத்துல அப்பிடி கூப்டுட்டேன்!”

பேன்ட்டின் இருபுற பாக்கெட்டிலும் கைகளை நுழைத்துக் கொண்டு மிகலேசாய் உடலை வளைத்து நிமிஷாவின் கண்களைப் பார்த்து சிரித்தான் ஆதி.

‘குப்’பென்று வியர்த்துப் போனாள் நிமிஷா. இதயம் தாறுமாறாய்த் துடித்தது. அவன் மூன்றாவது முறையாகத் தன்னைப் பார்த்து இப்படிச் சிரிக்கிறான்.

முதல்முறை அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, இரண்டாம் முறை காப்பகத்தில் பர்த்டே விஷ் பண்ணிவிட்டு, இப்போது மூன்றாம் முறையாய்.

அவள் மனதைப் பறிக்கும் ஆதியின் அந்தக் குறுஞ்சிரிப்பில் ‘இனி மீளவே முடியாது!’ என்ற அளவில் வசமாய் இம்முறை சிக்கிக் கொண்டாள் நிமிஷா.

வீடு, அம்மா, அப்பா, தங்கைகள், தம்பி, கடன் சுமை எல்லாம் மறந்து போயிற்று அவளுக்கு. ஆதி மட்டுமே தெரிந்தான்.

கடற்கரை. அஸ்தமிக்கத் தயாரான மாலைச் சூரியன் பொன்மஞ்சள் நிறத்தில் தன் கிரக‌ணம் படும் அனைத்தையும் பொன்னிறமாக மாற்றியிருந்தான்.

மாலைத் தென்றல் இதமாய் வீச கடற்கரை மணலில் ‘பொற்சிலை’யென தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் நிமிஷா.

‘அதெப்படி அதெப்பிடி இவரோடு இங்கு வந்து அமர்ந்திருக்கிறோம்.

நம்மைக் குழப்பிக் குழப்பித் தவிக்க வைத்த மனதும் அல்லவா இப்போது அமைதியாய் அடங்கிப் போய் விட்டது. காதல் எனும் உணர்வு அனைத்து மனப்பிரச்சனைகளையும் அடித்துத் துவைத்து காலடியில் போட்டு மிதித்துவிட்டு, தான் மட்டுமே மனது முழுதும் வியாபித்து நிற்குமா என்ன?’

குனிந்தபடி அழகுச் சிலையென அமர்ந்திருக்கும் நிமிஷாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, அவளெதிரே நான்கடி இடைவெளிவிட்டு அமர்ந்திருந்த ஆதியின் மனதில் சந்தோஷ அலை கடலலையைவிட அதிக வேகத்தோடு எழும்பி எழும்பி ஆர்ப்பரித்தது.

‘அப்பப்பா நிமிஷாவை இந்த கடற்கரைக்கு அழைத்து வருவதற்குள் எத்தனை பாடுபட வேண்டியிருந்தது!
ஐயோ நால்லாம் பீச்சுக் கெல்லாம் வரமாட்டேன்! வீட்டுக்கு போணும்! லேட்டாயிடும்!

யாராவது நம்மள பாத்துட்டா? பஸ்ஸல்லாம் வேண்டாம். அய்யோ ஆட்டோவுலயா பக்கத்து பக்குத்துலனா ஒக்காரணும். கார்லயா? அய்யோ அதுலலாம் ஏறமாட்டேன்!

பின்ன எப்பிடிதாம் போருது? நடந்தே போலாமா?

அம்மாடி நடந்தா? அஞ்சாறு கிலோ மீட்டர்லாம் எப்பிடி நடக்குறது? அதுவும் ஒன்னாச் சேந்து எப்பிடி நடக்கிறது?
மாட்டேன்! மாட்டேன்!’

கடைசியாய் இரண்டு ஆட்டோ பேசி முன் ஆட்டோவில் நிமிஷாவும் பின் ஆட்டோவில் ஆதியுமாய் கடற்கரை வந்து சேர்ந்தார்கள்.

‘அப்பப்பா நிமிஷாதான் எவ்வளவு ஜாக்கிரதை?’ மனதுக்கு சிரித்துக் கொண்டான் ஆதி.

கையால் மணலை அள‌ந்து அள‌ந்து அள்ளிப் போட்டுக் கொண்டு இருந்தாள் நிமிஷா.

கனத்த மௌனமே இருவரிடையேயும் நீடித்தது.

மௌனத்தை ஆதியே உடைத்தான்.

“நிமிஷா!” என்று மிக மெலிதாய் அழைத்தான். அழுத்தமாய் அழைத்தால் அந்தப் பெயருக்கு வலிக்குமோ என்பது போலிருந்தது அவன் மென்மையாய் “நிமிஷா!” என்று உச்சரித்த தொனி.

‘மிஸ்.நிமிஷா!’ என்றே அழைக்கும் அவனின் அழைப்பில் இப்போது மிஸ் என்ற வார்த்தை மிஸ்ஸாகிப்
போயிருந்தது.

ஆதியின் அந்த மென்மையான அழைப்பில் தெரிந்த காதலும் அன்பும் நெகிழச் செய்தது நிமிஷாவை.

இதுவரை அனுபவித்தறியாத உணர்வு; மெல்ல நிமிர்ந்து ஆதியைப் பார்த்தாள் நிமிஷா.

வீசும் இதமான காற்றில் நிமிஷாவின் நெற்றியில் அவள் கூந்தலின் சின்னச் சின்ன முடிக் கற்றைகள் சிலுப்பிக் கொண்டு வந்து குறும்பு செய்யும் சிறு பிள்ளைகள் போல் விளையாடின.

அப்படி நெற்றியில் வந்து வந்து புரண்டு விளையாடும் முடியை விரல்களால் தள்ளித் தள்ளிவிடும் நிமிஷாவின் விரல்களை ஆதி அசந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவ்வப்போது நிமிஷாவின் நெற்றியில் பிடிவாதமாய் புரண்டு விளையாடும் முடிக்கற்றைகளைத் தொட்டு நகர்த்திவிட ஆசையாய் இருந்தது ஆதிக்கு.

‘க்கும்! நிமிஷா இன்னும் ‘ஐ லவ் யு!’ னே வாய்விட்டு சொல்லல; அதுக்குள்ள ஆசையப் பாரு!’மனம் ஆசைக்கு வேட்டு வைத்தது.

தன்னை நிமிர்ந்து பார்த்த நிமிஷாவிடம் “நிமிஷா! ஐ லவ் யூ நிமிஷா! நீங்க ஐ லவ் யூ ஆதின்னு ஒருதடவ சொல்ல மாட்டீங்களா?” ஆதியின் கண்களில் ஆசையும் எதிர்பார்ப்பும் பொங்கி வழிந்தன.

வெட்கப்பட்டுப் போனாள் நிமிஷா; கன்னம் சிவந்து போயிற்று; வார்த்தை வெளிவர மறுத்தது; ஊமையாகிப் போனது போல் மௌனமாகிப் போனாள்.

“நிமிஷா! நாங்கேட்டு அஞ்சு நிமிஷமாச்சு!” வாய்விட்டுச் சன்னமாய்ச் சிரித்தான் ஆதி.

“ஐ.. ஐ.. ஐ லவ் யூ!”

“ம்கூம்.. ம்கூம்.. எம்பேர சேத்து சொல்லனும்!”

“அய்யோ! ஒங்க பேர! நா எப்பிடி?”

“ஸ்டேஷன்ல ஆதின்னு கூப்டீங்க!”

“அது.. அப்ப ஒரு ஃப்ளோல வந்திடுச்சி!”

“இல்ல நிமிஷா! நீங்க என்ன ஆதின்னு கூப்புடறத எம் மனசு விரும்புது ப்ளீஸ்!”

‘ஐ லவ் யூ ஆதி! போதுமா?”

முதல் முறையாக காதலைக் கலந்து அவன் முகம் பார்த்துச் சிரித்தாள் நிமிஷா.

சந்தோஷத்தில் “ஐ ஆம் தி ஹேப்பியஸ்ட் பர்சன் இன் தி வேர்ல்ட்! ஹேப்பியஸ்ட் மேன் ஆன் எர்த்!” என்று கைகளை விரித்து தலைக்குமேல் உயர்த்தி வானம் பார்த்துக் கத்தினான் ஆதி.

எழுந்து அலையடிக்கும் தண்ணீரை நோக்கி ஓடி கைகளால் தண்ணீரை அள்ளி அள்ளி நிமிஷாவை நோக்கி வீசினான். முகம் முழுதும் மகிழ்ச்சி. அவன் கால்களில் அலை வந்து வந்து மோதியது.

அவன் செயல் பார்த்துக் கண்களில் கண்ணீர் அரும்பியது நிமிஷாவுக்கு.

ஆனாலும் ஆதியின் கால்கள் மீது அலைகள் வேக வேகமாய் வந்து வந்து மோதுவது பார்த்து பயமாய் இருந்தது நிமிஷாவுக்கு.

“ஆதி வந்திடுங்க! ஆதி அலை வேகமா அடிக்கிது!” கத்தினாள்.

தண்ணீரைவிட்டு கரையேறி நிமிஷாவின் எதிரில் வந்து அமர்ந்தான் ஆதி. பேன்ட்டின் கால்பகுதி பாதியளவு நனைந்திருந்தது.

‘எங்கே மோதும் அலைகளால் நமக்கு ஏதும் ஆபத்து வந்து விடுமோ?’ என்று நிமிஷா பயந்துபோய் கத்தித் தன்னைக் கூப்பிட்டது ஆதியை நெகிழ வைத்தது.

“ஆதி இருட்ட ஆரம்பிச்சிடிச்சி! ரொம்ப லேட்டா வீட்டுக்குப் போனா ஆயிரம் கேள்வி எழும். பதில் சொல்ல முடியாது. நா கெளம்புறேன்!”

“ஓகே நிமிஷா! நீங்க சொல்றது கரெக்ட்தான். ஆனா ஒன்னு!”

“சொல்லுங்க ஆதி!”

“நிமிஷா! ஒன்னு கேப்பேன் தப்பா நெனைக்க மாட்டீங்களே?”

“ம்கூம்!”

“நேத்து கோயில்ல நா ஐ லவ் யூ னு சொன்னப்ப ஏ ஒங்க கண்ணுல கண்ணீர் வந்துது. நா ஒங்குளுக்குத் தகுதி இல்லாதவன்னு சொல்லிட்டு ஏம் போனீங்க நிமிஷா? சொல்லாம்னா சொல்லுங்க. வற்புறுத்தல!

ஆனா ஒங்க கண்ணுல கண்ணீரப் பாத்த நா ராத்திரில்லாம் தூங்கல தெரியுமா? அப்பிடி என்ன ப்ரர்ச்சன ஒங்குளுக்கு நிமிஷா! இப்பிடி கேக்குறது அநாகரீகம்னு நெனச்சீங்கன்னா சொல்ல வேண்டாம். ஆனா நிமிஷா இனிமே ஒங்களுக்கான ப்ரர்ச்சனைலாம் எனக்குமானது தான்!”

தன் குடும்ப சூழ்நிலையை ஆதி தெரிந்து கொள்வதில் தவறில்லை. தெரிந்து கொள்வது அவசியமும் கூட என்று
தன் குடும்பம், வாழும் வாடகை வீட்டின் அவலம், தன் தந்தையின் குணாதிசயம், தன் தாய், வைஷாலி, துரை, தீக்ஷிதா அனைவரைப் பற்றியும் ஒளிவு மறைவின்றி அனைத்தையும் கூறியவள் தன் தோளை அழுத்தும் மூன்று லட்சம் கடனைப் பற்றி சொல்லாமல் மறைத்தாள்.

அப்படிக் கடனைப் பற்றிச் சொன்னால் தானே பணம் தருவதாகச் சொல்லிவிட்டால் என்ற அச்சமும் அப்படியெல்லாம் கைநீட்டிப் பணம் பெறுவது கேவலம் என்றும் நினைத்தாள் நிமிஷா.

“இவ்வளவு பிரர்ச்சனைகள் இருக்குற நா ஒங்குளுக்கு தகுதியானவளா?

சொல்லுங்க ஆதி?

நீங்க எங்க?

ஒங்க நிறுவனத்துல வேல பாத்து ஒங்ககிட்ட கை நீட்டி சம்பளம் வாங்குற நா எங்க?

என்ன நீங்க ஏத்துக்கிட்டாலும் ஒங்க அப்பா அம்மா என்ன ஏத்துப்பாங்களா? ஒங்க அந்தஸ்த்து எங்க? நா எங்க? நீங்க மல! நா மடு ஆதி!” சொல்லும்போதே கண் கலங்கியது நிமிஷாவுக்கு.

“அய்ய! நிமிஷா! என்ன இது? நா ஒங்களத்தா விரும்புறேன்.

ஒங்க குடும்பத்துப் பின்னணில்லாம் எனக்கு ஒன்னுமில்ல.

என்னப் பெத்தவங்க ரொம்ப நல்லவங்க நிமிஷா! என் விரும்பம்தான் அவுங்க விருப்பம்.

பணம், காச அவுங்க பெரிசா நெனைக்கிறது இல்ல. அது பத்தில்லாம் கவலப்பட்டு குழப்பிக்காதிங்க நிமிஷா!

ஒங்க தங்கைய நல்ல மருத்துவராப் பாத்து ட்ரீட்மெண்ட் குடுக்கலாம். மருத்துவம் எவ்வளவோ நம்ப முடியாத அளவு வளர்ந்திடிச்சி. ஒங்க தம்பிக்கும் அப்பிடித்தான்.

மாற்றுத்திறனாளிங்க அவுங்க யார் உதவியுமில்லாம தானே நடக்குறாமாரி கண்டுபிடிப்பு வந்தாச்சி.

அந்த ஏற்பாடுகளப் பண்ணி ஒங்க தம்பிய நடக்க வெச்சு ஒரு தொழிலையும் ஏற்படுத்திக் குடுத்துட்டம்னா அப்புறம் உங்குளுக்கு என்ன கவல நிமிஷா?” ஆறுதலாய்ச் சொல்லும் ஆதியின் பேச்சு நிமிஷாவின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

‘ஆதிதான் எவ்வளவு நல்லவர்!’ அவள் மனதில் ஆதி முழுவதுமாய் நிறைந்து போனான்.

“சரி நிமிஷா! ரொம்ப இருட்ட ஆரம்பிச்சிடிச்சி! நீங்க அவ்வளவுதூரம் போகணும்; கிளம்புவோம்!”

கிளம்பினார்கள்.

“நிமிஷா! ரெண்டு ஆட்டோ கூப்புடனுமா?” சிரித்தான் ஆதி.

“ஒரே ஆட்டோ!”

ஆனாலும் டிரைவர் அருகே அமர்ந்து கொண்டான் ஆதி.

பீச் ஸ்டேஷன்.

“நிமிஷா இப்பவே மணி ஏழே முக்கால் ஆயிடுத்து. கார்ல வாங்க! எப்ப ட்ரெயினேறி எப்ப வீட்டுக்குப் போவீங்க? நீங்க சொல்லுற எடத்துல டிராப் பண்ணுறேன்; பயப்படாதிங்க!” கெஞ்சலாய்க் கேட்டான் ஆதி.

மறுப்பேதும் சொல்லவிலை நிமிஷா.

செங்கல்பட்டு ஸ்டேஷனருகில் இறங்கி கொண்டாள்.

பயத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தாள்.

‘தான் காரிலிருந்து இறங்குவதை தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிட்டால்!’

“பத்ரமா வீட்டுக்குப் போய்டுவீங்களா நிமிஷா!” நிஜமான அக்கறை இருந்தது ஆதியின் கேள்வியில்.

“ம்! வரேன்!” அவசரமாய் நடக்க முயன்றாள்; குரலில் பதட்டம் இருந்தது

“பை கூட சொல்லமாட்டீங்களா நிமிஷா?”

“பை!” சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

“நிமிஷா! நிமிஷா!” அவசரமாய் கூப்பிட்டான்; அருகில் வந்தான்.

‘என்ன?’ என்பது போல் பார்த்தாள் நிமிஷா.

“செல் நம்பர்!”

நம்பர் தந்து விட்டு நடையை வேகமாக்கினாள்.

வேகமாக நடந்து செல்லும் நிமிஷாவையே பார்த்தபடி நின்றிருந்தான் ஆதி.

‘பெண்கள் பாவம்! வாழ்க்கையில் அவர்கள் எல்லாவற்றிற்கும் பயப்பட வேண்டியிருக்கு! பாவம்ல நிமிஷா! அவுங்ளுக்குதா குடும்பத்துல எவ்வளவு பிரச்சன? நிமிஷாவ பூமாரி பாத்துக்கணும்’ நினைத்துக் கொண்டான் ஆதி.

காரை ஸ்டார்ட் செய்த ஆதியின் மனம் முழுதும் நிமிஷாவே நிறைந்திருக்க எக்கச்சக்க சந்தோஷத்தில் இருந்தான் ஆதி.

நிமிஷா வீட்டு கேட்டைத் திறந்தபோது வீட்டுக்குள்ளிருந்து டிவியின் சப்தம் மிகவும் சவுண்டாய் ஒலித்துக் கொண்டிருந்தது.

செருப்பைக் கழற்றி ஸ்டேண்டில் வைத்துவிட்டு நிமிஷா ஹாலுக்குள் கால் வைத்தபோது ஹால் கடிகாரம் நேரம் ஒன்பது என்று காட்டியது.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்