உள்ளே நுழையும்போதே எட்டு ஊருக்குக் கேட்பது போல் சவுண்டாக அலறிக் கொண்டிருக்கும் டிவியில் ஏதோ ஒரு சீரியல் ஓடிக் கொண்டிருந்து.
மாமியாரை மருமகளும் மருமகளை மாமியாரும் ஆள் வைத்து அடித்துப் போட அடுத்தடுத்த சீனில் சீரியாஸாக திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். பயங்கரமான பின்னணி இசை காதைக் கிழித்தது.
சேரில் அமர்ந்து எதிரில் ஸ்டூல் ஒன்றில் கால்களை நீட்டிக் கொண்டு சாவதானமாக டிவியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் கருணாகரன். ஹாலெங்கும் ஜவ்வாது மணம்.
கருணாகரன் நிமிஷா உள்ளே நுழைந்ததும் அவளையும் சுவர் கடிகாரத்தையும் மாறிமாறிப் பார்த்தார்.
தான் என்னவோ ரொம்ப பொறுப்பான குடும்பத் தலைவர் போலவும் கண்டிப்பாக நடந்து கொள்ளும் தந்தை போலவும் வேலைக்குப் போன பொண்ணு லேட்டா வர்ரது தனக்குக் கவலையா இருப்பதுபோலவும் காட்டிக் கொள்ளும் வேஷம் நிமிஷாவுக்கு எரிச்சலைத் தந்தது.
நேற்று இரவு போலவே பிரச்சனை ஆகிவிடப் போகிறதே என்று அவரின் பார்வையைப் பொருட்படுத்தாமல் நகர்ந்தாள்.
சுவரோரம் அமர்ந்து பேப்பரொன்றை கத்தரிக்கோலால் வெட்டி காகிதப்பூ செய்வதில் மும்முரமாய் இருந்த துரை நிமிஷாவை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “அக்கா! வந்தாச்சா?” என்றான்.
“தொர! வைஷாலி எங்க? அம்மாவும் தீக்ஷிதாவும் எங்க போயிருக்காங்க?”
“அக்கா! அம்மா தீக்ஷிதா அக்காவ டாக்டர்ட்ட அழச்சிகிட்டு போயிருக்காங்க!”
“காலேல போகல? சாயந்திரம் தான் போனாங்களா? எத்தன மணிக்கு போனாங்க?”
“ஆமாக்கா சாயந்திரம் அஞ்சுமணிக்கு போனாங்க. மணி ஒம்போதுக்குமேல ஆச்சு இன்னும் வல்ல!”
“ஹாஸ்பிட்டல்ல கூட்டமா இருக்கும். சரி வைஷாலி எங்க?”
“வைஷாலி அவுங்களோட நானும் வருவேன்னு அழுதிச்சி. தீஷிக்கா அத திட்டிச்சி. அதா வைஷாலி அழுதுகிட்டே ஒ ரூமுல போயி படுத்திடுச்சி!”
‘பகீரெ’ன்றானது நிமிஷாவுக்கு; அடிவயிறு கலங்கியது.
சட்டென்று மூடியிருந்த தனது அறையின் கதவில் கைவைத்துத் தள்ளினாள். நல்லவேளை வைஷாலி உள்புறம் தாழ்ப்பாள் போடவில்லை. அறையின் உட்புறம் கும்மிருட்டாக இருந்தது.
அம்மாவும் தீக்ஷிதாவும் டாக்டரைப் பார்க்க போன நேரமான அஞ்சுமணிக்கு இங்கு வந்து அழுதுகொண்டே படுத்திருப்பாள். அப்படியே தூங்கியிருக்கவேண்டும்.
திடீரெனக் கண்விழித்தால் இந்த கொடும் இருட்டைப் பார்த்து நிச்சயம் பயந்திருப்பாள்.
லைட்டைப் போடவேண்டும் என்றும் வைஷாலிக்குத் தெரியாது. கதவு இருக்குமிடமும் இருட்டில் தெரியாது. தெரிந்தாலும் கதவைத் திறக்கவெல்லாம் தெரியாது.
பயத்தில் கத்தித் தீர்ப்பாள்.லைட்டைப் போடு என்று எத்தனை முறை சொன்னாலும் புரிந்து கொள்ளமாட்டாள்.
அப்படியே தான் கதவைத் திறக்க எப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் புரிந்து கொள்ள மாட்டாள்.
வெளியே இருப்பவர்களால் அவள் கத்துவதை தடுக்கவோ, சமாதானாப்படுத்தவோ முடியாது. ஏற்கனவே ஒருமுறை இப்படி நடந்திருக்கிறது.
ஆளைக் கூட்டி வந்து கதவுத் தாழ்ப்பாளை உடைத்து அவளை மீட்டிருக்கிறது. அதற்குள் அவள் பயத்தில் கத்திய கத்தலும் அலறலும். நினைத்துப் பார்க்கவே பயமாயிருந்தது நிமிஷாவுக்கு.
‘நல்ல வேள இப்ப கதவ உட்புறம் தாப்பா போட்டுக்கல வைஷாலி!’ என்ற நிம்மதியோடு உள்ளே சென்று லைட்டைப் போட்டாள் நிமிஷா.
தூங்கும் வைஷாலியைக் குனிந்து பார்த்தாள் நிமிஷா. ஃபேனும் போட்டுக் கொள்ளாததால் வியர்வையில் குளித்திருந்தாள் வைஷாலி.
ஃபேனும் இல்லாமல் லைட்டுமில்லாமல் எந்த உணர்வுமின்றி தூங்கும் வைஷாஷாலியைப் பார்த்துவிட்டுக் தாங்க முடியாத வேதனையில் கேவினாள் நிமிஷா.
‘வைஷாலி எதிர்காலத்துல நீ என்னடி பண்ணப் போற?
பெத்த அப்பனுக்கும் ஆத்தாவுக்குமே இவள்ட்ட அக்கறை இல்லையே? இனிவரும் எதிர்காலம் இவுளுக்கு எப்பிடி இருக்கும்?
இதுபோல ஒரு பரப்பிரம்மமா இருக்குற இவள நானும் காதல், கல்யாணம், குடும்பம்னு சுயநலமா சிந்திச்சா இவள யாரு பாத்துப்பா?
இவளப் போய்த் திட்டவும் அடிக்கவும் கிள்ளவும் தீக்ஷிதாவுக்கு எப்பிடி மனசு வருது?’ மனம் விம்மியது.
ஃபேனைப் போட்டாள். காற்று உடம்பில் பட்டதும் புரண்டு படுத்தாள் வைஷாலி .படுத்திருந்த இடத்தில் வியர்வை குளம் கட்டியிருந்தது. அழுது விட்டாள் நிமிஷா.
பாத்ரூம் போய் முக கழுவி நைட்டிக்கு மாரி ஹாலுக்கு வந்தபோது மணி ஒன்பதரை ஆகியிருந்தது.
“அக்கா! பசிக்கிதுக்கா!” என்றான் துரை.
“தோ.. மாவு இருந்தா தோச ஊத்தித் தரேன்!”
ப்ரிட்ஜதைத் திறந்து பார்த்தபோது நல்லவேளை மாவு இருந்தது.தொட்டுக்க சாம்பார் இல்லை. டப்பாக்களைத் திறந்து பார்த்தாள். ம்கூம்! தோசை மிளகாய்ப் பொடி கூட இல்லை.
இனிமேல் வெங்காயம் தக்காளி வதக்கி சட்னி அரைத்து அலுப்பாய் இருந்தது. நிமிஷாவுக்கு.இருந்தாலும் செய்துதானே ஆக வேண்டும்.
நின்றபடியே சமையல் மேடையில் வெங்காயம் உரித்து நறுக்கும்போது வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சப்தம் கேட்டது.
வாசலிலிருந்து “நிமிஷா! நிமிஷா!” என்று அம்மா கூப்பிடும் சப்தம் கேட்டது.
வெங்காயம் நறுக்கியதால் கண் எரிச்சலாய் எரிந்தது நிமிஷாவுக்கு.
‘வாசல்ல நின்னுகிட்டு இப்பிடியா பேரச் சொல்லிக் கத்துவா இந்த அம்மா!’ என்று கோபமாய் வந்தது.
எரிச்சலாய் எரியும் கண்களோடு வாசலுக்கு வந்தாள்.
“வாசல்ல நின்னுகிட்டு இப்பிடியா பேரச் சொல்லி கத்துவ? எதுக்கு கூப்புடற?”
“ஆட்டோவுக்கு நூத்தம்பது ரூவா பணம் குடுக்கணும்”
“ஏ! ஒங்கிட்ட இல்ல!”
“இல்லனுதானே கேக்குறேன்!”
“அம்மா ஒங்க பஞ்சாயத்த அப்பறம் வெச்சுக்கங்க.பணம் குடுங்கம்மா லேட்டாவுது!” ஆட்டோக்காரர் அவசரப்படுத்தினார்.
தன் அறைக்குச் சென்று ஹேண்ட் பேக்கைக் கையிலெடுத்தபோது பேக்குக்குள் இருந்த செல்ஃபோன் சிணுங்கியது.
‘இந்த நேரத்துல யார்?’ என்று திரையைப் பார்த்தபோது புது நம்பர்.
நிமிஷா நூற்று ஐம்பது ரூபாய் எண்ணி எடுப்பதற்குள் சிணுங்கிய செல்ஃபோன் நின்று போனது.
பணத்தை எடுத்துக்கொண்டு ஹேண்ட்பேக்கை கட்டிலில் போட்டபோது மீண்டும் செல் அழைத்தது.
அழைப்பைப் பொருட்படுத்தாமல் வெளியே வந்து ஆட்டோவுக்குப் பணம் கொடுத்துவிட்டு உள்ளே வருவதற்குள் அம்புஜம்மா சமையலறைக்குள் நுழைந்து பால்பாக்கெட்டைக் கட் பண்ணி பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டிருந்தார்.
“ஏன் நிமிஷா பால்கூடவா காச்சி வெக்கமாட்ட? ஆஃபீஸ் விட்டு வந்து அப்பிடி என்னதா செஞ்ச?”
“நானே ஒம்போது மணிக்குதா வந்தேன்!”
“ஏன் லேட்டு? ஏழர மணிக்கில்லாம் வந்துடுவல்ல!”
சட்டென தடுமாறிப் போனாள் நிமிஷா.
“இப்பெல்லாம் முன்னமாரி இல்ல. ஆபீஸ்ல வேல அதிகமாருக்கு. இனி மேவே லேட்டாதா வருவேன்” தான் சொல்வது அப்பட்டமான பொய் என்பது நிமிஷாவுக்குக் குற்றமாகப்பட்டாலும் இது ஒன்றும் சொல்லக் கூடாத பொய்யாய் தோன்றவில்லை.
‘இனிமே டாண்ணு ஏழர மணிக்கெல்லாம் வரமுடியாது. அவ்வப்போது ஆதியோட ஒன்னா ஒக்காந்து
பேசர சூழ்நில வந்தா?
முன்னாடியே லேட்டாதா வருவேன்னு அதுக்கான காரணமா ஆஃபீஸ்ல இப்பல்லாம் அதிகமா வேலருக்குனு சொல்லி வெச்சுட்டா லேட்டா வந்தா ஏன் லேட்டுனு கேக்கமாட்டாங்க இல்ல!”
வீட்டில் காதலிப்பதை மறைக்க விதவிதமாய்ப் பொய் சொல்லும் காதலர்கள் லிஸ்டில் நிமிஷாவும் சேர்ந்து கொண்டாள்.
“ஓ! அப்ப இது ஓவர் டைம் வேலையா? அப்ப எக்ஸ்ட்ரா சம்பளம் குடுப்பாளா?”
“அதெல்லாம் குடுக்க மாட்டாங்க!”
“அம்மா அங்க என்னம்மா தொணதொணன்னு பேச்சு. பால் காச்சினியா இல்லியா? ஷ்ரவண் அழ ஆரம்பிச்சிடுவான். அவனுக்குப் பசிக்காது?” ஹாலிலிருந்து சத்தம் போட்டாள் தீக்ஷிதா.
“தோ வந்துட்டேண்டி! பாலை ஆற்றி ஃபீடிங் பாட்டிலில் ஊற்றி எடுத்துக் கொண்டு ஹாலுக்கு செல்ல இருந்த, அம்மாவிடமிருந்து பாட்டிலை வாங்கிக் கொண்டு ஹாலுக்கு வந்தாள் நிமிஷா.
அழ ஆரம்பித்திருந்தான் ஷ்ரவண்.
“ஷ்ரவண் செல்லம்! ஷ்ரவண் செல்லத்துக்குப் பாலு ரெடி! இங்க வா! இங்க வா!” ஹாலில் அமர்ந்து மடியைத் தட்டிக் காண்பித்தாள் நிமிஷா.
அதற்குள் அழுத குழந்தை ஷ்ரவணை தன் மடியிலிருந்து தூக்கித் ‘தொப்’பென்று தரையில் உட்கார வைத்தாள் தீக்ஷிதா.
“பிசாசு! பிசாசு! அழுவறதப் பாரு!”
“தீக்ஷி கொழந்தைய திட்டாத! அவுனுக்குப் பசிக்கிது. அதா அழுவுறான்!” என்றாள் நிமிஷா.
“ஷ்ரவண் அழுவான்னு தெரியும்ல! பாலக்காச்சி வெச்சுருக்க வேண்டியது தானே? அவ அழ ஆரப்பிச்சதும் தான் பால அடுப்புல வெப்பீங்களா?”
“அம்மா ஒன்னோட டாக்டர பாக்க வந்தாச்சு. நானும் ஒம்போதுக்குதான் வந்தேன். அப்புறம் யாரு பாலக்காய்ச்சி வெப்பா?” சொல்லிக் கொண்டே “ஷ்ரவண் கண்ணா!” என்று கொஞ்சி அழைத்துக் கொண்டே ஷ்ரவணைத் தொட்டாள் நிமிஷா.
நிமிஷாவிடம் வரமறுத்து தரையில் விழுந்து கைகாலை உதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தான் ஷ்ரவண்.
“அதானே பாத்தேன். எங்க நீ கூப்ட்ட நாழிக்கும் ஒங்கிட்ட வந்துடுவானோன்னு. அடிக்கடி கொழந்தையத் தூக்கிக் கொஞ்சினாதானே கொழந்தைக்கும் ஒங்கிட்ட ஒரு ஒட்டுதல் இருக்கும். தீடீர்னு வந்து தொட்டா, கொஞ்சறாப்ல நடிச்சா. விடு! பால எங்கிட்ட குடு! நா குடுத்துக்குறேன் எம் புள்ளைக்கு” நாக்கில் நரம்பின்றி ‘வெடுக்’கெனப் பேசினாள் தீக்ஷிதா.
“எங்கேந்து தங்கச்சி பெத்த புள்ளைய தூக்கவும் கொஞ்சவும் நேரமிருக்கு?
காலேல ஏழு மணிக்கு வேலைக்குப் போறேன்னு போயி ராத்திரி ஊரடங்குற நேரத்துல மணி ஒம்போதுன்னும் பத்துன்னும் வீடு திரும்புனா?
லேட்டா வீட்டுக்குப் போனா வீட்டுல கேள்வி கேப்பாங்களேன்னு அச்சமோ பயமோ இருந்தாதானே? ஒன்னு பெத்தவங்கிட்ட இல்லாட்டி பெத்தவகிட்ட. யார்ட்டயும் பயமில்லேனா?
வர வேண்டிது; சாப்டவேண்டியது; படுத்துட வேண்டியது; மகாராணி வாழ்க்கதான்!” அநியாயமாய் வெறுப்பை உமிழ்ந்தார் கருணாகரன்.
பசியும் தூக்கமுமாய் சுவற்றில் கண்மூடி சாய்ந்திருந்த துரை தீக்ஷிதாவும் அப்பாவும் பேசிய பேச்சுக்களைக் கேட்டுவிட்டு முணுமுணுத்தான்.
“தொர! பேசாம இரு! பேசிட்டுப் போகட்டும்!” என்று சொல்லி விட்டு தங்கைக்கோ கருணாகரனுக்கோ பதில் ஏதும் சொல்லாமல் எழுந்தாள் நிமிஷா.
இத்தனை நேரத்துகு மேல் வைஷாலியை எழுப்பி தோசையையெல்லாம் சாப்பிட வைக்க முடியாது.
‘பாவம்! வைஷாலி எப்ப சாப்ட்டாளோ? ராத்திரி முழுக்க பட்டினின்னா கிடப்பா?’ என்ற அக்ஞானம் கிடந்து அடித்துக் கொண்டது நிமிஷாவுக்கு.
பெரிய டம்ளரொன்றில் ஹார்லிக்ஸைக் கலந்து கொண்டு வந்து வைஷாலியின் அருகே அமர்ந்து அவளை எழுப்பினாள்.
“அக்கா! நிமிக்கா!” பேரைச் சொல்லிக் கொண்டே எழுந்து அமர்ந்த வைஷாலி நிமிஷா வாயில் ஊற்றிய ஹார்லிக்ஸை ‘மடக் மடக்’கென்று குடித்தபோது அது வயிற்றில் இறங்கும் போதெல்லாம் ‘டொர் டொர்’ரென்று வயிற்றில் இறங்கி வயிறு காலியாகிக் கிடந்ததை சொல்லிற்று.
குடித்து முடித்துவிட்டு “நிமிக்கா! தீஷிக்கா திட்டிச்சி!” என்று சொல்லிக்கொண்டே நிமிஷாவின் மடியிலேயே படுத்துத் தூங்க ஆரம்பித்தாள் வைஷாலி.
‘நிமிக்கா! நிமிக்கா!ன்னு எம்மேல இவ்வளவு பாசம் வெச்சுருக்கயேடி வைஷாலி. நா ஒன்னப் பாத்துப்பேன்னு
நம்பிக்க வெச்சிருக்காப்ல அவா திட்டினா இவா அடிச்சா கிள்ளினான்னு எங்கிட்ட சொல்லிட்டு நிம்மதியா தூங்கிடுறியே!
ஒன்ன எப்பிடி வைஷாலி இவுங்ககிட்ட விட்டுட்டு எனக்குனு ஒரு வாழ்க்கைய தேடிப்பேன். வேண்டாம்!
“எனக்கு காதல் வேண்டாம்! கல்யாணம் வேண்டாம்! குடும்பம் வேண்டாம்! ஒனக்காகவே நா வாழ்ந்துடறேண்டி வைஷாலி!” மடியில் படுத்துத் தூங்கிப் போன வைஷாலியின் கன்னத்தை நிமிஷாவின் கண்களிலிருந்து விழுந்த கண்ணீர் நனைத்தது.
ஒருவழியாய் பத்தரை மணிக்கு படுக்கையில் விழுந்தாள் நிமிஷா.
‘மணி பத்தர; ஆதி தூங்கிருப் பாருல்ல!’ மனம் மெதுவாய் ஆதியைத் தேடி ஓடியது.
காலையில் அலுவலகம் சென்றது முதல் வீட்டிற்குத் திரும்பியது வரை மனதில் திரைப்படமாய் ஓடியது.
‘ஆதிதான் எவ்வளவு நல்லவர். சித்த முன்னாடி காதலாவது கல்யாணமாவது வைஷாலிக்காக வாழ்க்கைய
அர்ப்பணிக்கிறாப்புல நெனச்சு ஃபீல் பண்ணின!’
‘ப்ச்! முடியல!
ஆதி இல்லாத ஒரு வாழ்க்கைய என்னால இனிமே நெனச்சுப் பாக்கவே முடியாது போல இருக்கே!
அதுக்காக வைஷாலியயும் விட்டுட மாட்டேன். ஆதிதா வைஷாலிய பத்தியும் தொரயப் பத்தியும் பாத்துதுகலாம்னு நம்பிக்க குடுத்துருக்காறே!’ கேள்வி கேட்ட மனதுக்குப் பதில் சொன்னாள்
கண்களை மூடிக் கொண்டாள் நிமிஷா. தூக்கம் வரவில்லை. கண்ணுக்குள் ஆதிதான் வந்து நின்றான்.
பழக்க தோஷத்தில் வலது கை செல்லைத் தேடி துளாவியது.
‘இன்னும் ஹேண்ட்பேக்லேந்து செல்லையே எடுக்கலீல்ல!’ எழுந்து எடுத்தாள்.
‘ஆட்டோக்கு பணம் எடுக்கையில் ஏதோ புது நம்பர்லேந்து கால் வந்துதில்ல. ஒரே நம்பரிலிருந்து ஏழு அழைப்புகள் யாராருக்கும்? மணி பத்தேமுக்கால் ஆகுது. இனிமே போய் யார்னு எப்பிடி கேக்குறது?
வாட்ஸப்புக்குள் நுழைந்தாள்.
புதிதான சேர்க்கையொன்று தெரிந்தது. சட்டென டிபியைப் பார்த்தாள். வட்டத்திற்குள் அம்சமாய் அழகனாய் கம்பீரமாய் ஆதி.
‘ஆதி!’ கண்கள் விரிந்தன. நெஞ்சு படபடத்தது.
‘ஆதீ! நீங்களா? என் நெஞ்சில் நுழைந்தவன் செல்லுக்குள்ளும்!’
இரண்டு தலையணைகளை ஒன்றின்மீது ஒன்று வைத்து அதன்மீது முதுகு வைத்து சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
கைகளில் செல்; விரல் நடுங்கியது. நடுங்கும் விரலால் ஆதியின் வாட்ஸப் மெஸேஜைத் தொட்டாள்.
‘ஹாய் நிமிஷா! பத்ரமா வீட்டுக்குப் போனீங்களா? லேட்டாயிடுச்சுனு வீட்ல ஒன்னும் ப்ரர்சனை இல்லியே?
சாப்டீங்களா? நா ஏழு மொற கால் பண்ணினேன். நீங்க எடுக்கல. ஒங்குளுக்கு தூக்கம் வருதா? எனக்கு வல்ல. ஒருவேள நீங்க தூங்கிப் போயிருந்தா இந்த மெஸேஜ நீங்க காலேலதா பாப்பீங்க!ன்னு நெனைக்கிறேன்.
குட்நைட் நிமிஷா!’ லவ் சிம்பல் எமோஜி வைத்து ஆதி என்று முடித்திருந்தான். ஆங்கிலத்தில் மிக நேர்த்தியாய் டைப் பண்ணியிருந்தான்.
‘நா எங்க தூங்குறது ஆதி?’ சிரித்துக் கொண்டாள்.பத்து முறை படித்தாள்.
பத்தாவது முறை படிக்கும் போது பச்சை கலரில் ‘டைப்பிங்’ என்று வந்தது.
“ஹாய்! ப்ளு டிக் பாத்தேன். ஆன்லைன்ல இருக்கீங்க. இன்னும் தூங்கலையா?” வந்தது கேள்வி..
“ம்கூம்!” இது பதிலாய் அளித்தாள் நிமிஷா.
“என்ன பண்றீங்க?”
“ம்.. ஆதிக்கு டைப்படிச்சி பதில் சொல்லிட்ருக்கேன்!”
“ஹக்! காமெடி?. சிரிச்சிட்டேன். லேட் நைட்டாயிடுத்து தூங்குங்க..நாளை ஆஃபீஸ்ல பாக்கலாம்; பை நிமிஷா!”.ஆதி அகன்றான்.
‘ம்கூம். தூக்கம் வருவேனா?’ என்றது.
என்று ஆதி மனதுக்குள் நுழைந்தானோ அன்று எதேச்சையாய் யூட்யூபில் ஷார்ட்ஸ்ஸில் பார்த்த அந்த
வாத்தி படத்துக்காக ஸ்வேதா மோகன் பாடிய அந்தப் பாடலுக்கு ஸ்ருதிராஜ் வாயசைத்து நடனமாடிய நடன அசைவுகளும் அந்த பாடலும் நிமிஷாவை அடிமையாக்கி வைத்திருந்தது.
வாத்தி படத்தில் ஹீரோயின் சம்யுக்தா மேனனுக்கு இந்த பாட்டில் அவ்வளவாய் வேலை இல்லை.ஷார்ட்ஸில் ஸ்ருதிராஜ்தான் எத்தனை அழகாய் அபிநயம் பிடிக்கிறார்.
பாடல் வரிகளும், ஜி.வி. ப்ரகாஷின் இசையும் அப்பப்பா! ஆதியை நினைத்து நான் பாடுவதுபோல் அல்லவா இருக்கு?’ என்று நினைத்து தினமும் நாலு தடவையாவது பார்க்கும் நிமிஷாவுக்கு இப்போதும் பார்க்க வேண்டும் போல் இருக்க காதுகளில் வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்ஸெட்டை மாட்டிக் கொண்டு தான் சேவ் செய்து வைத்திருந்த தன் மனதை மயக்கும் அந்தப் பாடலை கண்களுக்கும் செவிகளுக்கும் கொண்டு வந்தாள்.
ஸ்வேதா மோகனின் குரல் தேனாய் இழைந்தது. ஸ்ருதிராஜ் அமர்க்களப்படுத்தினார் நடன அசைவுகளால்.
ஒம்பேர தினம் கூவும் குயிலா ஆனேனா?
நீ பாக்க புதுமாரி ஸ்டைலா ஆனேனா?
பாக்கெட்டில்.. ஒங் ஹீரோ பேனா ஆனேனா?
மனசோரம் ஒன்னோட ஃபேனா ஆனேனா?
கொஞ்சம் பாக்கணும் கைகள் கோர்க்கணும்
ஜோடி சேர்ந்து லவ்வர்ஸாக ஊரச் சுத்தணும்
பேண்டு வாசிச்சு க்ரேண்டா மேரேஜு..
கெட்டி மேளம் எங்கும் கேக்கணும்
அடியாத்தி இது என்ன ஃபீலு?
இனிமே நா ஒ ஆளு
ஐந்தாவது முறை அலுக்காமல் பார்த்தபோது மீண்டும் ஆதி வாட்ஸ்ஸப்பில். வாய்ஸ் மெஸேஜில் வந்திருந்தான். “நிமிஷா இன்னுமா தூங்கல? என்ன பண்றீங்க?” கேட்டிருந்தான்.
“ம் வீடியோ பாத்திக்கிட்ருந்தேன்!” சிரித்தாள். “அனுப்புறேன் பாருங்க!”
ஷார்ட்ஸை ஆதிக்கு அனுப்பினாள்.
ஐந்தே நிமிஷத்தில் “நிமிஷா!” என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் சொல்லிச் சிரித்திருந்தான்.
“பை!” என்று பதிலளித்துவிட்டு செல்லை ஆஃப் செய்து தலைமாட்டில் வைத்துவிட்டு ஹெட்ஸெட்டை நீக்கிவிட்டுப் படுத்துக் கழுத்து வரைப் போர்வையை இழுத்து விட்டுக் கண்களை மூடிக் கொண்டாள் நிமிஷா.
(தென்றல் வீசும்)
![](https://i0.wp.com/www.inidhu.com/wp-content/uploads/2024/03/KanjiThangamaniSwaminathan-e1721463540917.webp?resize=127%2C150&ssl=1)
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!