இப்போதெல்லாம் நிமிஷா முன்போல் இல்லை. குளிக்கும் போது மெலிதாய்ப் பாடுகிறாள்; ஹம்மிங் செய்கிறாள்.
கண்ணாடி பார்த்து லேசாய் ஒப்பனை செய்து கொள்ளும் போது மனதுக்குப் பிடித்த பாடலை ‘ஹம்மிங்!’ செய்து கொண்டே பவுடர் பூசி முடித்து முகத்தை ‘இப்படியும் அப்படியும் திருப்பி சரியாக இருக்கிறதா?’ என்று பார்த்துக் கொள்கிறாள்.
மொத்தத்தில் தன் தோற்றத்தில் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தாள் நிமிஷா. முன்போல் ஏனோ தானோ என்று இருப்பதில்லை.அதன் காரணமாய் ஏற்கனவே அழகில் மிரட்டும் அவள் பட்டை தீட்டிய வைரமாய் ஜொலித்தாள்.
ஞாயிற்றுக்கிழமைகூட அலுவலகம் இருந்தால் தேவலாம் போல் இருந்தது. அந்த ஒருநாள் லீவில் ஆதியைப் பார்க்காமல் இருப்பது கஷ்டமாய்தான் இருந்தது.
அவளுக்கே அவள் மாற்றம் சிரிப்பைத் தந்தது. ‘என்ன இப்பிடியாயிட்டோம்?’ என்று நினைத்துக் கொள்வாள் நிமிஷா.
இதோ இப்போதுகூட..ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்தவள் ‘ப்ச்!’ நாளைக்கு சன்டேல்ல ஆபீஸ் கெடையாது. ஆதிய பாக்கமுடியாதில்ல!’
நாளையைப் பற்றி இப்போதே கவலைப்பட்டாள்.
“சரி நா கெளம்புறேன்!” சொல்லிக் கொண்டே ஹேண்ட்பேக்கைத் தோளில் மாட்டிக் கொண்டு வெளியே வந்து காலில் செருப்பை மாட்டியபோது அம்புஜம்மா “நிமிஷா! நிமிஷா!”வென்று அழைத்துக்கொண்டே
ஓடி வந்தார். கையில் நிமிஷாவின் டிஃபன் பாக்ஸ்.
“நிமிஷா! பாரு டிஃபன் பாக்ஸ மறந்துட்ட! இப்பலாம் டிஃபன் பாக்ஸ எடுத்துக்க அடிக்கடி மறந்து போற!”
அம்புஜம்மா சாதாரணமாய் தான் சொன்னார். தன் சின்னச் சின்ன மாற்றங்கள் அம்மாவை சிந்திக்க வைத்துவிடுமோ!’ என்று பயமாய் இருந்தது நிமிஷாவுக்கு.
அம்புஜம்மாவுக்கு நிமிஷாவின் சின்னச் சின்ன மாற்றங்கள் கண்ணில்பட்டதோ இல்லையோ துரைக்கு நிமிஷா அக்காவின் முகமலர்ச்சியும் அக்காவின் அறையிலிருந்து அக்கா பாடும் மெலிதான பாடலும் ஹம்மிங்கும் காதில் விழாமல் இல்லை.
அக்கா இப்போது கொஞ்சம் சந்தோஷமாய் இருப்பதாய்த் தோன்றியது துரைக்கு. ‘அக்கா எந்தவிதத்திலாவது மகிழ்ச்சியாய் இருந்தால் சரி!’ என்று நினைத்தான். அதிகமாய் அதன் காரணம் என்னவாக இருக்குமென்று யோசிக்க வில்லை.
“நிமிஷா!”.
“சொல்லு!” அம்மாவைப் பார்த்தாள் நிமிஷா.
“மளிக சாமான்லாம் தீரப்போகுது. தீஷிதாவுக்கு மருந்து டானிக் ஹார்லிக்ஸ்லாம் வேற வாங்கணும்!”
“அதுக்கு?”
“பணம் வேணுமே!”
“தேதி பதினஞ்சுதா ஆகுது. அதுக்குள்ள குடுத்த பணம் தீந்திடுச்சா? நா மட்டும் பணத்துக்கு எங்க போவேன்?
ஒம் புருஷன வேலலைக்குப் போய் சம்பாதிச்சிப் போடச் சொல்லு! நல்லாதானே இருக்காரு! வெட்டியா ஊர் சுத்திகிட்டு, சீட்டு ஆடிக்கிட்டு, வீட்டுல அதிகாரம் பண்ணிகிட்டு, தண்டமா!” அதற்கு மேல் பேசவேண்டாமென நினைத்து நிறுத்திக் கொண்டாள்.
அப்போதுதான் ஆஃபீஸில் குடுத்த அமேசான் கிஃப்ட் வவுச்சர் பற்றி ஞாபகம் வந்தது.
“சரி! சரி! நாளைக்கு மளிகை வாங்கலாம்! தொர வரேன்!” என்றபடி கேட்டைத் திறந்து கொண்டு தெருவில் கால் வைத்தாள்.
“அப்பாடி! நாளைக்கு மளிகை வாங்கப் போறேன்னு சொல்லி வெளீல போலாம். ஆதியும் வருவாரு!”
ஆதியை சந்திக்கக் காரணம் கிடைத்தது பற்றி நினைத்த நிமிஷாவுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி அவளை தானாக பேசிக் கொள்ளும் நிலைக்கு ஆளாக்கியது.
அவள் வாய்விட்டு என்ன சொன்னாளோ? பக்கத்தில் நடந்து கொண்டிருந்த கிழவியொருத்தி, “பாப்பா! என்ன பாப்பா! எதாவது என்னைய கேட்டியா?” என்று கேட்டபோது அப்படியே வெட்கிப் போனாள்.
அலுவலகம்.
வழக்கமாய் பார்ப்பது போலவே தன் பணிகளைப் பார்த்தாள் நிமிஷா.
ஆதியும் அப்படித்தான் இயல்பாய் இருந்தான்.
ஆபீஸ் விட்டு பீச்ஸ்டேஷனுக்கு வந்தபோது அவளுக்கு முன்பாகவே வந்து நின்றிருந்தான் ஆதி.
“ஆதி! நா இன்னிக்கு நேரத்தோட வீட்டுக்குப் போயிடறேன். நாளைக்கு சன்டேல்ல! வீட்டுல அம்மா மளிகை வேணும்னாங்க..அப்பதா நீங்க குடுத்திருந்த அமேசான் கிஃப்ட் வவுச்சர் ஞாபகம் வந்திச்சி. அதுமூலம் நாளைக்கு மளிகை வாங்கித் தரதா சொல்லிட்டு வரேன். அப்ப பாக்கலாம் ஆதி!” என்றாள்.
“நிமிஷா! அமேசான்ல மளிகைலாம் ஆன் லைன்ல தானே வாங்க முடியும்? டோர் டெலிவரி தானே உண்டு?”
சிரித்தாள் நிமிஷா.
“அது அம்மாக்கு தெரியாது. அமேசான்னும் சொல்ல மாட்டேன். எனக்கு முக்கியமா எதும் வாங்கனும். அப்டியே மளிகை லிஸ்ட்டை சூப்பர் மார்க்கட்டுல குடுத்துட்டு வரேன்னு சொல்லிடுவேன். அமேசான்லேந்து டோர் டெலிவரி பண்ணாலும் ப்ரர்ச்சன ஒன்னுமில்ல. அம்மா கண்டுபுடிக்க மாட்டாங்க!”
“எப்ப வருவ நிமிஷா?”
“சாயந்திரம்தான் வருவேன்!”
வரும் நேரம் பற்றி ஃபோனில் தெரிவிப்பதாகச் சொன்னாள்.
மின்வண்டி ஏறி நேரத்தோடு வீடு வந்தாள்.
மறுதாள் ஞாயிற்றுக் கிழமை. காலை டிஃபன் சாப்பிடும் போதே அம்மாவிடம் சொல்லிவிட்டாள்.
“சாயந்திரம் கடைத்தெரு போறேன்.நேத்தே மகளிக சாமான் வேணும்னீல! லிஸ்ட் போட்டுக் குடு. சூப்பர் மார்க்ட்லனா லிஸ்ட்ட குடுத்துட்டு வரேன். டோர் டெலிவரி வந்திடும்ல!”
“ம். நீ எதுக்குப் போவுற? வழக்கமா நாந்தானே போவேன்?”
“எனக்கு முக்கியமான தேவ ஒன்னு வாங்கணும். அத வாங்கிக்கிட்டு லிஸ்ட்ட குடுத்துட்டு வரேன்!”
“எப்ப போவுற?”
“சாயந்திரம்!”
“அதென்ன சாயந்திரம்? காலேலயே போனா ஆகாதா?”
“ஞாத்திக்கெழம ஒருநாள்தா லீவு.. நா ட்ரெஸ்ஸெல்லாம் தோய்க்க வேண்டாமா? இன்னிக்கு தோய்த்து அயர்ன் பண்ணாதான் உண்டு.காலேல கடைத்தெரு போய்ட்டு வந்து எப்ப வாஷிங் மெஷின்ல போட்டு அது தோச்சி முடிச்சி காயப்போட்டு அயர்ன் பண்ணி…”
நிமிஷா சொல்வதும் ‘சரி’தானென வாயை மூடிக் கொண்டார் அம்புஜம்மா.
சொன்னது போலவே டிரஸ்களை வாஷிங்மெஷினில் போட்டெடுத்தாள். காயப் போட்டாள். சில டிரஸ்களை அயர்ன் செய்தாள். மதியம் சாப்பிட்டு சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்தாள்.
சரியாய் நாலரை மணிக்கு நிமிஷா அறையைவிட்டு வெளியே வந்தபோது தீக்ஷிதா தூங்கி எழுந்து கொட்டாவி விட்டபடி ஹாலில் அமர்ந்திருந்தாள்.
கொட்டாவி விட்ட வாயை மூடாமலே நிமிஷாவைப் பார்த்து பிரமித்தாள். டாப்ஸும் பலாஸ்ஸோ பேன்ட்டும் அணிந்திருந்த நிமிஷாவைப் பார்த்து கண்களை மூடவும் மறந்து போனாள் தீக்ஷிதா.
‘இதென்ன இப்பிடியோரு அழகாருக்கா இவ! ஏற்கெனவே அழகுதான்னாலும் தீடீர்னு ரொம்ப அழகாய்ட்டாப்ல இருக்கு.ட்ரெஸ்ப் பாரேன்! பலாஸ்ஸோ பேன்ட்டுனா போட்ருக்கா? டாப்ஸுதா எவ்ளோ சூப்பரா இருக்கு? மொகத்துல ஏதோவொரு சந்தோஷம் தெரியுது? அழகு, படிப்பு, வேல!’ வழக்கமாய் பொறாமையால்
காதில் புகைவரும் தீக்ஷிதாவுக்கு இப்போது அதிகமாய் மனம் புகைந்தது.
‘எதாவாது காரணம் இருக்குமோ? இவ மொகத்துல தெரியிற சந்தோஷத்துக்கு?’ மனம் காரணம் தேடியது.
“கிளம்பியாச்சாக்கா?” என்று கேட்டவள் குத்தலாய் எதாவது சொல்ல நினைத்து ஏனோ வாயை மூடிக் கொண்டாள்.
அம்மா கொடுத்த மளிகை லிஸ்ட்டை வாங்கி ஹேண்ட்பேக்கில் போட்டுக் கொண்டு “வரேன் தீக்க்ஷி! வரேன் தொர!” என்றவாரே வாசலுக்கு வந்தாள்.
விரைவாய் நடை போட்டாள்.
‘அமேசான்ல வேண்டாம். வழக்கமா வாங்குற சூப்பர் மார்க்கெட்லயே லிஸ்ட குடுத்து எவ்வளவு ஆகும்னு தெரிஞ்சிகிட்டு பணத்த கட்டிடுவோம். அமேசான்ல இன்னும் ஒருமாசமிருக்கு வவுச்சர் காலாவதியாக. நல்லதா டிரஸ் எடுத்தாலும் உண்டு’ என நினைத்தவளாய் மெயின் பஜாருக்குள் நுழைந்தாள்.
ஜே ஜே என்றிருந்தது கடைத்தெரு. வழக்கமாய் வாங்கும் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்தாள்; கூட்டமில்லை.
பத்தே நிமிடத்தில் லிஸ்டிலுள்ள பொருட்களுக்கான தொகையைக் கட்டிவிட்டு முகவரி சொன்னாள்.
இரவு ஒன்பதுமணிபோல் டெலிவரி செய்தால் போதுமென்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.
‘நிமிஷா! கையில இருக்குற பணத்த கட்டிட்டயே இந்த மாசம் முழுக்க தேவைனா பணத்துக்கு என்ன செய்வ?’ மனம் கேட்டது.
‘அது சரி அமேசான் வவுச்சர் எதிர்பாராம கெடச்சதுதானே? அது கெடைச்சிருக்காட்டி கைக்காசதானே குடுத்திருப்பேன்!’.மனதுக்கு பதில் சொன்னாள்.
ஸ்டேஷன் நோக்கி நடந்து கொண்டே ஆதிக்கு தான் கிளம்பிவிட்டதாக ஃபோன் செய்தாள்.
பீச் ஸ்டேஷனில் இறங்கியபோது மணி ஐந்தரை ஆகியிருந்தது.
நிமிஷா வழக்கமாய் அமரும் சிமென்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தான் ஆதி.
நிமிஷாவைப் பார்த்ததும் முகம் கொள்ளா மகிழ்ச்சி.
“ஆதி வந்துட்டீங்களா?”
“பின்ன மேடம் சொன்னா பத்து நிமிஷம் முன்னாடியே ஆஜராயிட வேண்டாமா?” சிரித்தான்.
“ஓ! அப்பிடியாங்க சார்!” சிரித்தாள் நிமிஷா.
சிரித்தான் ஆதி.
ஞாயிற்றுக்கிழமை என்பதாலோ என்னவோ பீச்சில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது.
அதிகம்பேர் இல்லாத இடமாக பார்த்து அமர்ந்தார்கள்.
“நிமிஷா! இந்த ட்ரெஸ்ல நீங்க ரொம்ப அழகாருக்கீங்க நிமிஷா!”
“ஆதி! அழகான பொண்ணப் பாத்தா எழுதப் படிக்கத் தெரியாத ஆண்கூட கவிஞனாயிடுவானாமே?
நீங்க கவித சொல்வீங்களா ஆதி?”
“அய்யோ! அம்மா! ஆள1விடுங்க! கவிதைக்கே கவித எப்பிடி சொல்றது? நிச்சயமா எவனாலயும் ஒங்களப் பாத்து கவிதை சொல்ல முடியாது. வார்த்தையே கெடைக்காதில்ல.”
சிரித்தார்கள்; பேசினார்கள்.
“நிமிஷா வாங்களேன்! தண்ணீல போய் நிப்போம். அலையடிக்கும்போது தண்ணி கால்ல மோதி காலடி மண்ண பரபரன்னு பறித்து இழுக்கும். அப்ப கால்ல குறுகுறுனு செம ஜாலியா இருக்கும் தெரியுமா?” அவன் சொன்னவிதம் பார்த்து சிரிப்பு வந்தது நிமிஷாவுக்கு.
“அய்யய்யோ! எனக்கு பயம். நாவல்ல!”
“இதுவர நீங்க கடல் தண்ணீல காலே வெச்சதில்லையா?”
“ம்கூம்!”
“அப்ப வாங்க நிமிஷா. நாதா இருக்கேன்ல. ப்ளீஸ்!”
காருக்குள்ளேயே ஷுவையும் செருப்பையும் கழற்றிப் போட்டுவிட்டதால் வெற்றுக் கால்களோடு தண்ணீரை
நோக்கிக் கடற்கரை மணலில் கால்கள் புதையப் புதைய நடந்தார்கள்.
காதலர்கள் என்றால் கடற்கரை மணலில் கை கோர்த்துதான் நடக்கவேண்டுமென்ற இலக்கணத்தை உடைத்தார்கள். இடைவெளி விட்டே நடந்தார்கள்.
காதல் என்ற போர்வையில் ஆங்காங்கே சில ஜோடிகள் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்க பண்பாடு
மீறாமல் கலாச்சாரம் காத்தார்கள் ஆதியும் நிமிஷாவும்.
தண்ணீரில் இறங்கி நின்றான் ஆதி.
பயந்தபடி கரையிலேயே நின்றாள் நிமிஷா.
“நிமிஷா! எறங்குங்க நிமிஷா! பயப்படாதீங்க!”
“ம்கூம்!”
“அட! எறங்குங்க! இப்பிடியா பயப்படுவீங்க. ஹையோ!” என்றான் சிரித்தபடி.
காலைத் தண்ணீரில் வைப்பதும் எடுப்பதுமாய் இருந்தவள் ஒருகட்டதில் தண்ணீரில் இறங்கி நின்றாள்.
கை தட்டினான் ஆதி.
“நிஜம்தான் ஆதி! அலை வந்து நம்மள தொட்டுட்டு திரும்பப் போகும்போது காலடி மணலையும் பரபரன்னு எப்பிடி பறிக்கிது. நல்லாதான் இருக்கு!”
“சொன்னேல்ல! சொன்னேல்ல!” என்றவன் திடீரென “ஹே மின்னலே! ஹே மின்னலே! என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லொணா கன்னலே!” என்று கைகளை விரித்துப் பாடினான்.
அவனையே பார்த்தாள் நிமிஷா
அச்சு அசலாய் ஹரிசரண் குரல் போலவே அப்படியே பாடினான் ஆதி.
“சக்கரே! என் சக்கரே!” என்று தானும் ஆரம்பித்தவள் அடுத்த அடி எடுப்பதற்குள் கவனக்குறைவாய் அழுத்தமாய் நிற்காமல் போக அலை வந்து அவள் கால்களை முத்தமிட்டது.
முத்தமிட்டுத் திரும்பிச் செல்கையில் காலடி மணலை சுரண்டி இழுக்க எப்படி பேலன்ஸ் பண்ணி நிற்க முயன்றும் முடியாமல் போக அப்படியே பக்கத்தில் நின்ற ஆதி மீது கொஞ்சமும் எதிர்பாராமல் சாய்ந்தாள் நிமிஷா.
(தென்றல் வீசும்)
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!