“சக்கரே.. என் சக்கரே..” என்று பாட ஆரம்பித்த நிமிஷா, கால்களை அழுந்த ஊன்றி நிற்க மறந்துபோக, ஓடிவந்து கால்களை முத்தமிட்ட அலை அவளின் காலடி மணலைப் பறித்துக்கொண்டு திரும்பி ஓட பேலன்ஸ் தவறியது நிமிஷாவுக்கு.
எப்படியும் விழாமல் நின்று விடவேண்டும் என முயற்சித்தாள்.
அலை வேகமாய் வந்து மோதியதாலும் காலடி மணல் ‘சரசர’வெனப் பறிக்கப்பட்டதாலும் நிமிஷாவின் முயற்சி தோற்றுப் போனது.
அப்படியே ஆதிமீது சாய்ந்தாள் நிமிஷா.
“நிமிஷா!” என்றபடி அவளைத் தாங்கிப் பிடித்துக்கொண்டான் ஆதி.
அதுவும் அவள் சாய்ந்தது அவனின் அகன்ற மார்பாக இருக்க வேண்டுமா?
‘ஹையோ!’ என்று அழுத்தமாய் முழக்கமிட்டது ஆதியின் மனது.
பாவம்தான் ஆதி. ஆசையாய் முழங்கும் மனதிடம் மாட்டிக் கொண்டான்.
அவன் இதயம் கொள்ளா காதலோடு நேசிக்கும் நிமிஷா, அவன் ஒவ்வொரு செல்லிலும் நிறைந்திருக்கும் நிமிஷா, அவன் மார்பில் சாய்ந்த நேரம் அவனின் ஆக்ஸிடோஸின் அவனின் லவ் ஹார்மோன் காதல் கிராஃப் சார்ட்டில் அதிவேகமாய்ப் பயணித்து உச்சத்தைத் தொட, அது போதாதென்று அவன் வயதும் இளமையும் ஒன்று சேர்ந்து கூட்டுச்சதி செய்ய தன் மார்பில் சாய்ந்த நிமிஷாவை கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம் இறுக்கமாய்த் தன்னோடு அணைத்துக் கொண்டான்.
அதுவும் நிமிட நேரம்கூட இல்லை. வினாடி நேரம்தான்.இது ஒன்றும் மாபெரும் குற்றமில்லை.அவன் வலுக்கட்டாயமாய் நிமிஷாவை இழுத்து அணைக்கவுமில்லை.
சடாரென்று அவன் கைகளை விலக்கினாள் நிமிஷா. அவனிடமிருந்து நகர்ந்தாள்.
முகத்தைத் திருப்பிக் கொண்டு கரையேறி கால்கள் மணலில் புதையப் புதைய வேகமாய் நடக்கத் தொடங்கினாள்.
அதிர்ந்து போனான் ஆதி.
“ஐயோ! நிமிஷா கோபிச்சுக்கிட்டாங்க! தப்பு பண்ணிட்டமோ? வேணும்னு அப்பிடி பண்ணலியே அட கண்ராவியே! நா ஏன் அப்பிடி நடந்துகிட்டேன்” தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.
“நிமிஷா! நிமிஷா! ப்ளீஸ்! ப்ளீஸ்! நில்லுங்க நிமிஷா! நா வேணும்னு அப்பிடி பண்ணல நிமிஷா!
ப்ளீஸ் நிமிஷா! என்ன தப்பா நெனைக்காதிங்க நிமிஷா! நா கேவலமானவன்லா இல்ல நிமிஷா! என்ன மன்னிச்சிடுங்க நிமிஷா!” கெஞ்சிக் கொண்டே நிமிஷாவின் பின்னால் ஓடினான் ஆதி.
ம்கூம் நிமிஷா திரும்பவே இல்லை.
இதற்கு மேல் நிமிஷாவை கெஞ்சவோ பின்னால் ஓடவோ முடியாது என்ற நிலையில் அப்படியே மடங்கி மணலில் அமர்ந்தான் ஆதி.
நிமிஷாவை உயிராய் நேசிக்கும் ஆதி, பண்பான ஆதி, பண்பாட்டை மதிப்பவனும் நல்லவனுமான ஆதி,கைகளை மணலில் ஊன்றி தலைகுனிந்து அமர்ந்தான்.
“என்னை நம்புங்க நிமிஷா! சத்தியமா நா கேவல புத்தியோட ஒங்கள அணைக்கல நிமிஷா!” கண்களில் கண்ணீர் அரும்பியது.
வேகவேகமாய் நடந்தாள் நிமிஷா. ஆதி மேல் கோபமாய் வந்தது.
‘ஏய்! நிமிஷா ரொம்பல்லாம் சீன் போடாத! நெஜமா சொல்லு.
ஆதி கொஞ்சம் இறுக்கமா ஒன்ன அணச்சப்ப அந்த நொடி நீ ஆதியோட அணைப்ப ரசிக்கில சத்தியமா சொல்லு.
இல்லேன்னு பொய் சொல்லாத, என்னமோ ஆதிய மட்டுமே குற்றவாளியாக்குற.
ஆதி ஒன்ன வேணும்னே இழுத்து அணைச்சுக்கிட்டானா என்ன? நீ அவம் மேல போய் சாஞ்சீன்னா?
நீ கீழ விழுந்திடக்கூடாதுனு இறுகப் பிடிச்சிருக்கலாமில்ல. பாவம் ஆதி! எப்பிடி ஒம் பின்னாடியே ஓடிவந்து கெஞ்சுறான்; மன்னிப்பு கேக்குறான்.
ரொம்பதான் அலட்டுற; ரொம்ப பண்ணாத. இந்த காலத்துல ஆதிமாரி டீசன்ட்டான பண்பான ஒருத்தன பாக்க முடியும்கிற!
அப்படியொருவன் காதலனா கெடைக்கனும்னா குடுத்து வெச்சிருக்கனும். தெரியுமில்ல?’ மனம் காண்டாகி நிமிஷாவைக் கஞ்சி காச்சியது.
வேகநடையை நிதானப்படுத்தினாள் நிமிஷா.பின்னால் கெஞ்சிக் கொண்டே ஓடிவந்த ஆதியின் குரல் கேட்கவில்லை.
திரும்பிப் பார்த்தாள். தூரத்தில் ஆதி கைகளை மணலில் ஊன்றி தலைகுனிந்து அமர்ந்திருப்பது தெரிந்தது.
‘ஐயோ ஆதிய ரொம்ப வேதனப்பட வெச்சுட்டமோ? ஆமா! பண்றதெல்லாம் பண்ணிட்டு, இப்ப ரொம்ப ஃபீல் பண்ற?’ மனசு கோவப்பட்டது.
‘சரேலெ’னத் திரும்பினாள்; ஆதியை நோக்கி விரைவாய் நடந்தாள்.
குனிந்தபடி அமர்ந்திருந்த ஆதியின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தாள்.
அப்படி அவன் அமர்ந்திருந்ததைப் பார்த்தவளுக்கு ‘கடவுளே! ஆதி இந்த அளவுக்கு வேதனையா உட்காருற அளவுக்கு எப்பிடி மோசமா நடந்திருக்கோம். பாவி நான்.
மனசு சொல்றாப்புல அப்பிடி என்ன ஆதி செய்யக்கூடாதத செஞ்சிட்டார். நா எங்கே தண்ணிக்குள்ள விழுந்துடப் போறேறேன்னு கொஞ்சம் இறுக்கமா கட்டிப் புடிச்சிருப் பாரு.
அந்த அணைப்பு எனக்கும் ஃபீல்குட்டாதானே இருந்தது.அத ஏன் மறச்சு இவர குற்றவாளியாக்கினேன்?’ தவித்துப் போனாள் நிமிஷா.
“ஆதி!” என்றாள் இதமாக.
ஆதி நிமிரவே இல்லை.
“ஆதி! ஸாரி ஆதி! ப்ளீஸ் ஆதி! என்ன பாக்கமாட்டீங்களா? நா அப்பிடி செஞ்சது தப்புதா ஆதி! இதோ பாருங்களேன் ஆதி.! இங்க பாருங்க! ப்ளீஸ் ஆதி!”
ஆதி வேறுபக்கம் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“ஆதி ப்ளீஸ்! ஆதி ஸாரி! ஸாரி! ஸாரி! என்னப் பாருங்க ஆதி!” என்ன நினைத்தாளோ ஆதியின் தாவாங்கட்டையைத் தொட்டு அவன் முகத்தைத் தன்பக்கம் திருப்பினாள்.
‘என்னது! என்னது! நிமிஷா என்னைத் தொட்டு முகத்தைத் திருப்புறாங்களா?’ ஆதியால் நம்ப முடியவில்லை.
ஆதியின் முகத்தைத் தன் பக்கம் திருப்பியவள் “ஆதி! ஸாரி ஆதி! என்றபடி கைகளை குறுக்காகக் கொண்டுபோய் இரு காதுமடல்களையும் தொட்டு பிள்ளையார்க்குத் தோப்புக்கரணம் போல் செய்தாள்.
“ஆதி நா உங்கள வேதனப்படுத்தினது தப்புதான் ஆதி! மன்னிக்க மாட்டீங்களா ஆதி?” என்றாள்.கண்களில் கண்ணீர் பளபளத்தது.
“அய்யோ! நிமிஷா! இப்டீல்லாம் பண்ணாதிங்க நிமிஷா! மொதல்ல கண்ணத் தொடைங்க நிமிஷா!” என்றான்.
ஆதி நிமிஷாவின் கண்களில் கண்ணீர் பார்த்து பதைபதைத்துப் போனான். வருத்தம் விடைபெற்றுப் போயிருந்தது.
“நீங்க என்ன மன்னிச்சிட்டேன்னு சொல்லுங்க ஆதி!”
“மன்னிக்கிற அளவுக்கு நீங்க ஒன்னும் செய்யில நிமிஷா! விடுங்க!” சிரித்தான்.
“நெஜமாவே கோபமில்லையா ஆதி? மேலுக்கு சிரிக்கிறீங்களா?”
“இல்ல நெஜமாவே எனக்கு கோபம்லா இல்ல. நீங்க என்ன மோசமானவன்னு நெனச்சுடுவீங்களோன்னு பயமும் வேதனையும் இருந்துது.
ஆனா நிமிஷா! தன்னை நேசிக்கும் காதலனா இருந்தால்கூட தன்னைத் தொடக்கூடாதுன்னு நீங்க அலெர்ட்டா இருக்குறது பெருமையா இருக்கு நிமிஷா!” சொன்ன அவன் அவளை
பெருமையோடு பார்த்தான்.
“ஆனாலும் இப்ப பாருங்க ஆதி நாந்தானே ஒங்க முகத்த தொட்டு எம்பக்கம் திருப்புறாமாரி ஆயிடுச்சு”
“அதுக்காகவே அடிக்கடி கோச்சுக்கலாம்னு தோணுது நிமிஷா!” சிரித்தான்.
“என்னது! என்னது! அப்பிடிவேற ஐயாக்கு ப்ளானா?” சிரித்தபடி மணலை அள்ளி அவன்மீது வீசினாள் நிமிஷா.
இருட்டத் தொடங்கியது.
“நிமிஷா மணி ஏழாகப் போவுது! நீங்க வீட்டுக்குப் போக லேட்டாயிடப் போவுது.கெளம்புவோம் வாங்க!” என்றபடி எழுந்தான் ஆதி.
‘ஆதிக்குதான் நம்மமேல எத்தன அக்கற! நா நேரத்தோட வீட்டுக்குப் போகணும்னு நெனைக்கிறாரு பாரு. கார்ல பத்ரமா அழச்சிகிட்டுப் போயி நா எறங்க வேண்டிய எடத்துல எறக்கிவிட்டுட்டு நா திருப்பத்துல திரும்புறவர பாத்துக்கிட்டேல்ல நிப்பாரு. இவரப்போயி வேதனப்படுத்திட்டேனே! ச்சே! நா ஒரு மடச்சி’ தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.
காரின் பின் கதவைத் திறந்தான் ஆதி நிமிஷா ஏறுவதற்காக.
அவனைத் தாண்டிக் கொண்டு போய் முன்புறக் கதவைத் திறந்து ஏறி அமர்ந்தாள் நிமிஷா.
“ஹை! நிமிஷா என்னதிது?”
தானும் காரில் ஏறி அமர்ந்து ஸ்டியரிங்கைத் தொட்டவன் அருகில் அமர்ந்திருந்த நிமிஷாவைப் பார்த்து சிரித்தான்.
“நா ஒழுங்கா டிரைவ் பண்ணுவேனா தெரில!”
“ஏனாம்?”
“இப்பிடி அழகு தேவத பக்கத்துல ஒக்காந்தா மனசு பரபரக்குதில்ல! காரு ரோட்டுல போகுதா வானத்துல பறக்குதான்னு கொழம்பிடுமில்ல?””
“அய்யோ அம்மாடி!.என்னால கொழப்பம்லாம் வேண்டாம்ப்பா! வண்டிய நிறுத்துங்க சார். நா பின் சீட்டுக்கே போயிடறேன்.”
“நிமிஷா!” என்றபடி கழுத்தைத் திருப்பி பக்கத்தில் அமர்ந்திருந்த நிமிஷாவைப் பார்த்து சிரித்தான் ஆதி.
“நிமிஷா!”
“சொல்லுங்க ஆதி!”
“நாம ஏன் எதாவது படத்துக்குப் போகக்கூடாது?”
“நாளைக்கு டிக்கெட் புக் பண்ணவா? போலாமா?” ஆதியின் குரலில் எதிர்பார்ப்பு அதிகமிருந்தது.
“ஆதி! நாளைக்கு மண்டே..ஆஃபீஸ் உண்டு தெரியுமில்ல! மறந்துட்டீங்களா?”
“இல்ல, காலேல நீங்க ஆஃபீஸ் வந்ததுமே மதியம் அரைநாள் லீவு சொல்லிடுங்க. ஒருமணிக்கெல்லாம் கெளம்பிடுங்க..நா கால்மணி நேரம் கழிச்சு கெளம்புறேன். சரியாருக்கும் நிமிஷா!”
யோசனையாய் நெற்றியைச் சொரிந்தாள் நிமிஷா.
“தயக்கமா இருந்தா வேண்டாம் நிமிஷா!” என்றான் ஆதி. ஏமாற்றம் குரலில் தெரிந்தது.
“இல்ல! இல்ல! இல்ல ஆதி! நா வரேன்!” என்றாள் நிமிஷா.
நிமிஷா வீட்டுக்குள் நுழைந்த போது மணி எட்டு ஆகியிருந்தது.
ஹால் களேபரமாகக் கிடந்தது.
ஃபேன் காற்றில் வெங்காயத் தோலும் பூண்டுத் தோலும் நாலா பக்கமும் பறந்து கிடந்தது.
ஷ்ரவண் ஒன்னுக்குப் போனானோ என்னவோ நடுகாலில் காய்ந்தும் காயாமலும் ஓடியிருந்தது. மூலையில் ஃபீடிங் பாட்டில் உருண்டு கிடக்க குப்பை நாற்றம் நாறியது ஹால்.
வெறுந்தரையில் தலையணையை வைத்து தலைவைத்துப் படுத்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் தீக்ஷிதா.
சமையலறையில் அம்மா பாத்திரங்களை உருட்டும் சப்தம் கேட்டது.
“தீக்ஷி! ஹால் இப்பிடிக் குப்பையாக் கெடக்கு நடுப்பற படுத்திருக்க! கூட்டிட்டுப் படுக்கலாம்ல!” என்றாள் நிமிஷா வெகுசாதாரணமாய்.
பட்டென்று எழுந்து அமர்ந்தாள் தீக்ஷிதா.
“தப்புதா! தப்புதா! நா கூட்டிருக்கணும்தா. முடியலயேன்னுதா பொறந்த வீடு வந்தேன்.ஆனாலும் இந்த குடும்பம் ஒன்னாலதானே ஓடுது. ஒனக்குப் புடிச்சா மாரிதானே நா நடந்துக்கணும்.
வயத்துப் புள்ளக்காரிக்கு ஒருநேரம் போல ஒருநேரம் இருக்குமா? என்னமோ தீடீர்னு முடியல படுத்துட்டேன். படுத்தது தப்புதான்.தோ..கூட்டுறேன்” எழுந்தாள்.
“தீஷி! நா ஒன்ன திட்டினேனா, கோவப்பட்டேனா! ஏ இப்பிடி தேவயில்லாம டென்ஷனாவுற?”
சமையலறையிலிருந்து வெளியே வந்தார் அம்புஜம்மா.
“நிமிஷா வந்துட்டியா? நாலு மணிக்குப் போன. எட்டாவுது இப்பதா வர்ர. உள்ளூர் கடத்தெரு போய் மளிகை லிஸ்ட் குடுத்துட்டு வர இவ்வளவு நேரமா?”
“ப்ச்! எப்ப பாரு இதே கேள்வியா?”
“காரணமில்லாம லேட்டாகுமா? எங்காலேஜ் ஃப்ரெண்ட பாத்தேன். அதுவும் ரெண்டு பேர. பேசிக்கிட்டிருந்ததுல நேரமாயிடுச்சி. அதுக்கென்னப்ப?”
“இவ்வளவு நேரமா பேசுவீங்க. நம்புற மாரியாருக்கு?”
“அம்மா!” கத்தினாள் நிமிஷா.
இதுவரை நிமிஷா ஓங்கிய குரலில் பேசியதே இல்லையென்பதால் வாயடைத்துப் போனார் அம்புஜம்மா.
“நல்லா கேளுக்கா! கத்துக்கா!” என்றான் துரை தாழ்ந்த குரலில். “இது ஒரு நரகம். வெளீல இருக்குறதே தேவல!” என்றான்.
“அக்கா! நிமிக்கா!” ஷ்ரவணிடமிருந்து நிமிஷாவின் ஹேர் க்ளிப்பை பிடிங்கிக் கொண்டு ஓடி வந்து நிமிஷாவின் கையில் கொடுத்தாள் வைஷாலி.
கையையும் காலையும் உதைத்துக் கொண்டு அழும் ஷ்ரவணைப்பார்த்த தீக்ஷிதாவுக்கு வைஷாலி மேல் வந்த கோபத்தில் சட்டென எழுந்து வைஷாலியின் முடியைப் பிடித்து இழுத்து கையை ஓங்கினாள்.
ஓங்கிய அவள் கையைப் பற்றி நிறுத்தினாள் நிமிஷா.
“த பாரு! வைஷாலி மேல கைய வெச்ச நா சும்மா இருக்கமாட்டேன். ஷ்ரவணுக்கு இருக்குற புத்திகூட வைஷாலிக்குக் கிடையாது.
அவ பச்சமண்ணு. அவள திட்டுறது கிள்ளுறது அடிக்கிறது இதையெல்லாம் நிறுத்திடு. நா இருக்கும்போதே இப்பிடி செய்யிறயே! நா இல்லாதப்ப. அவள எப்டீல்லாம் நடத்துவ?”
“அப்டி கேளுக்கா. நீ இல்லாதப்ப கொடுமதா நடக்குது இங்க” முணுமுணுத்தான் துரை.
“அம்மா! நா எம் புருஷ வீட்டுக்குப் போறேன். மட்டு மரியாத இல்லாத வீட்டுல நா இருக்கனும்னு எனக்கு விதியில்ல.
காலேல நா கிளம்புறேன்.ஷ்ரவண் அப்பாவுக்கு ஃபோன் பண்ணி காலேல வந்து அழச்சுகிட்டுப் போகச் சொல்றேன்” வராத அழுகையை வரப் பண்ணிக் கொண்டு அழுது மாயமாலம் செய்தாள் தீக்ஷிதா.
அயற்சியாய் இருந்தது நிமிஷாவுக்கு.
முதன் முதலாய் ‘இவர்களுக்காக, இந்த குடும்பத்துகாக உழைப்பது வேஸ்ட்!’ என்ற எண்ணம் எழுந்தது அவளுள்.
‘தொர சொன்னதுமாரி தன் உழைப்பு விழலுக்கு இறைக்கும் நீர்தானோ!’ என்று தோன்றியது.
சொல்லி வைத்தபடி ஒன்பது மணிக்கு மளிகை சாமான்கள் வந்தது.
சாப்பிட்டதாய்ப் பேர் பண்ணிவிட்டுப் பத்து மணிக்குப் படுத்தாள் நிமிஷா.
படுக்கையில் விழுந்ததும் ‘அப்பாடா!’ என்றிருந்தது.
‘ஆதி சாப்ட்டுப் படுத்திருப்பாரா?’ நினைத்து முடிப்பதற்குள் ஃபோனில் வந்தான் ஆதி.
பேச்சுக்கிடையே நிமிஷா சிரித்தாள்; வெட்கப்பட்டாள். ஆதியை கலாய்த்தாள். எதற்கோ “முடியாது! முடியாது!” என்றாள்.
பேச்சை முடித்துவிட்டு தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள்.வழக்கம்போல் போர்வையைக் கழுத்து வரை
இழுத்துப்போர்த்திக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்.
(தென்றல் வீசும்)
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!