வழக்கமாய் காலையில் எழுந்ததுமே குளித்து முடித்துவிட்டு ஆஃபீஸ் செல்வதற்குத் தோதாய் ரெடியாகிதான் தன் அறைக் கதவைத் திறந்து கொண்டு ஹாலுக்கு வருவாள் நிமிஷா.
அப்படித்தான் இப்போதும் வெளியே வந்தாள்.
யெஹிகா க்ளோரியஸ் கோல்டன் யெல்லோ கலர் ப்ரின்டட் அனார்கலி சுடிதார் அணிந்து அதே கலரில் டார்க் ப்ரவுன் கலர் பாடரோடு கூடிய துப்பட்டா இடது பக்கத் தோள்பட்டையில் படர்ந்து கழுத்தைத் தொட்டு முதுகுப் பக்கமும் முன்புறமும் இறங்கி முழங்கையைத் தாண்டி வழிந்து நின்றது. செம லுக்காய் நிமிஷாவைக் காட்டியது.
அவள் மட்டும் பரபரப்பான வாகனப் போக்குவரத்து சாலையில் ஒரு ஐந்து நிமிடம் நடந்தால் போதும் நிச்சயமாய் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்துதான் போகும்.
யார் யாரோடு மோதிக் கொள்வார்களோ? எந்த வாகனம் எந்த வாகனத்தோடு மோதிக் கொள்ளுமோ? என்று உறுதியாய் சொல்ல முடியாது.
‘தான் இன்று ஆதியோடு படத்துக்குப் செல்லப் போகிறோம்’ என்ற நினைப்பு அவளுக்கு சந்தோஷத்தையும் அதேசமயம் கொஞ்சம் பயத்தையும் கொடுத்திருந்தது.
‘தியேட்டரில் தானும் ஆதியும் ஒன்றாக அமர்ந்து படம் பார்ப்பதை நமக்குத் தெரிந்தவர்கள் யாராவது பார்த்து விட்டால்?
அடபோ நிமிஷா!.காதல் மழையில நனைய ஆரம்பிச்ச பிறகு முக்காடு எதுக்கு? போவியா! எந்த கெட்டிக்காரன் புளுகும் எட்டு நாளுல வெளீல வந்துடும்.
அப்பிடி ஒங்காதலும் தெரிஞ்சிட்டுப் போட்டுமே? துணிஞ்சவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டும்!’ மனம் தப்போ ரைட்டோ, பொருத்தமோ இல்லியோ..ஏதேதோ சொல்லி நிமிஷாவைத் தைரியப்படுத்தியது.
இன்னும் தீக்ஷிதா எழுந்திருக்கவில்லை.
‘காலேல நா எம்புருஷ வீட்டுக்குப் போறேன். ஷ்ரவண் அப்பாக்கு ஃபோன் பண்ணி வந்து அழச்சுக்கிட்டுப் போகச் சொல்றேனு’ சொன்னவ ஷ்ரவணை அணைத்தபடி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த நிமிஷா ‘இவளாவது ரோஷப்படுறதாவது!’ என்று நினைத்தபடி கிச்சனுக்குள் நுழைந்து சாமி கும்பிட்டாள்.
டைனிங் டேபிளுக்கான சேரில் அமந்தவளை ஏற இறங்க பார்த்தார் அம்புஜம்மா.
‘இன்னிக்கு என்ன நிமிஷாவப் பாக்க வித்தியாசமா இருக்குறாப்புல தோணுது. ஆஃபீஸ்க்கு இதுமாதிரி ட்ரெஸ்லாம் போடமாட்டா. சாதாரணமா சுடிதார்தா போடுவா.
கொஞ்சநாளாவே மொகம் கொஞ்சம் செண்டிப்பா இருக்காப்புல தோணிகிட்டே இருக்கு. ரொம்பல்ல ‘பளிச்’சினு தெரியிறா!’ என நினைத்தவர் மனதில் கவலையும் பயமும் லேசாய் எட்டிப் பார்த்தன.
‘ஐயோடி! இவ பாட்டுக்கு காதலு கீதலுன்னு எவம் மேலாவது ஆசப்பட்டு கல்யாணம் கார்த்தினு குண்டத் தூக்கிப் போட்டுடப் போவுறா.
அப்றம் குடும்பம்? இருக்க எடம், படுக்க பாயி, கட்ட துணி, திங்க சோறு? நாலு பேரு வயிறு நனஞ்சாவணுமே?’ கவலைப்பட்டுப் போனார் அம்புஜம்மா.
தொன்னூற்றொன்பது விழுக்காடு தாய் என்பவள் தியாகிதான். சுயநலமற்றவள்தான்.தான்.
பெற்ற பிள்ளைகள் அனைவரையும் ஒன்றாகப் பார்ப்பவள்தான். ஒரே மாதிரி பாசத்தைச் செலுத்துபவள்தான்.
ஆனாலும் ஒரே ஒருவிழுக்காடு தாயினம் வேறுபட்டு நிற்பதும் உண்டு.
சில குடும்பங்களில் உடன் பிறப்புகள் இருந்தாலும் தான்மட்டும் உழைத்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை அந்தக் குடும்பங்களில் பிறந்த ஓர் ஆணுக்கோ அல்லது ஓர் பெண்ணுக்கோ அமைந்து விடுகிறது.
ஆரம்பத்தில் அந்த மகனையோ மகளையோ பற்றிக் கவலைப்படும் அந்தத் தாய் போகப் போக அந்த மகனையோ மகளையோ சம்பாதித்துப் போடும் கருவியாய் மட்டுமே நினைக்கத் தொடங்கி விடுதுண்டு.
அவர்களுக்குள்ளும் விருப்பு, வெறுப்பு, ஆசா, பாசம் உண்டு என நினைப்பதில்லை.
அந்த ஆணோ பெண்ணோ தங்களின் வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிடக் கூடாதே என்றும், அப்படி சிந்திக்க ஆரம்பித்தால் அவர்களின் உழைப்பை நம்பியிருக்கும் குடும்பம் என்னாவது என பயப்படுகிறார்கள்.
அதுவும் உதாவாக்கரையாய்க் குடும்பத் தலைவன் இருந்துவிட்டாலோ குடும்பத் தலைவன் உயிரோடவே இல்லாவிட்டாலோ கேட்கவே வேண்டாம்.
அந்த ஒரு சதவிகிதத்தைச் சேர்ந்த தாயாய் இருக்கும் அம்புஜம்மா மகளைக் கேட்டே விட்டார்.
“நிமிஷா! என்ன இன்னைக்கு இந்த மாதிரியான ட்ரெஸ்ஸ போட்ருக்க! சாதாரணமா சுடிதார்தானே போடுவ?”
“சுடிதார்க்கும் இந்த ட்ரெஸ்க்கும் அவ்வளவு என்ன வித்தியாசம் தெரியிது ஒனக்கு?”
“ம்.. கொஞ்சம் வித்தியாசமாதா தெரியிது!”
“இதுமாதிரி நா போடக் கூடாதா?”
“போடலாம். ஆஃபீஸ்குலா போட மாட்டியே!”
அம்மா தன்னை கவனிக்க ஆரம்பித்துவிட்டாள் என்பது புரிந்தது நிமிஷாவுக்கு.
“இன்னிக்கு கூட வேல பாக்குறவரு ஒருத்தரு வேற பிராஞ்சுக்கு மாத்திப் போறாங்க. அவுங்களுக்குப் பார்ட்டி.. அதா, இன்னிக்கு இப்பிடி போடலாம்.”
“ஓ!” நிறுத்திக்கொண்டார் அம்புஜம்மா.
இட்லி கொண்டு வைத்தார். சட்னியைத் தட்டில் வைக்குபோது “இது என்ன சட்னி?” என்று கேட்டாள் நிமிஷா.
“பூண்டு. ஏங் கேக்குற?”
“பூண்டு சட்னி வேண்டாம்!”
“ஏ? வழக்கமா சாப்புடுவதானே! ஏ வேண்டாங்குற?”
“ப்ச்! வேண்டாம்னா விடேன். யார் பக்கத்துலயாவது நின்னு பேசினா பூண்டு நாத்தம் அடிக்கும்!”
“அப்பிடி யார்கிட்ட மூஞ்சோடு மூஞ்சி வெச்சுப் பேசப் போவுற? தினமும் கிட்ட நின்னு பேசுறவுங்க தானே?”
‘இதுக்குப் பேர்தா தனக்குத் தானே காசக் குடுத்து சூனியம் வெச்சுக்கிறதோ!’ நினைத்தாள் நிமிஷா.
“அம்மா! என்ன பிரர்ச்சன ஒனக்கு? ஆயிரம் கேள்வி கேக்குற? டைமாச்சு எனக்கு!”
நிமிஷாவுக்குப் பிடிக்காத இட்லிப் பொடி.மூன்று இட்லி சாப்பிடுபவள் இரண்டோடு நிறுத்திக் கொண்டு எழுந்தாள்.
காபியை விழுங்கிவிட்டு வாய் கொப்பளித்துவிட்டு ஹேண்ட்பேக்கை மாட்டிக் கொண்டு “வரேன்!” என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடந்தபோது தீக்ஷிதா படுக்கையில் எழுந்து கண்களை அகல விரித்து நிமிஷாவைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
பொறாமை கண்களில் டன் கணக்கில் பொங்கியது.
“டிஃபன் பாக்ஸ்!” அம்புஜம்மா நினைவுபடுத்தினாள்.
“வேண்டாம்! பார்ட்டில சாப்டுப்பேன்!” டிஃபன்லயும் பூண்டு சட்னியோ, இட்லி பொடியோதான் இருக்குமென்று ‘பார்ட்டில சாப்டுவேன்’ என்று இல்லாத பார்ட்டியைச் சொல்லி டிஃபன் பாக்ஸைத் தவிர்த்தாள்.
வழக்கமாய் பூண்டுசட்னி சாப்பிடுபவள்தான் நிமிஷா, ஆனாலும் ஆதியின் அருகே அமர்ந்து பேசும்போது அவனுக்குப் பூண்டு வாடை அடித்தால் ‘அது ஆதிக்குப் பிடிக்காமலிருந்தால்’ என நினைத்தே பூண்டு சட்னியைத் தவிர்த்தாள்.
கேட்டைத் திறந்து கொண்டு வெளியேறினாள் நிமிஷா.
அவள் வெளியேறிவிட்டாள் என உறுதியான பிறகு “அம்மா பாத்தியா! இப்ப ஒம் பெரிய பொண்ணு முன்னபோல இல்ல. பாத்து பாத்து ட்ரெஸ் பண்ணிக்குறா, கண்ணாடி முன்னாடி ரொம்பநாழி நிக்கிறா,
மொகத்துல அடிச்சாப்புல பேசறா, மூஞ்சி இப்பல்லாம் ரொம்ப ப்ரைட்டா இருக்கு. எல்லாத்தியும் வெச்சுப் பாத்தா, அவ யாரையாச்சும் லவ்வு, கிவ்வு பண்ணுறாளோன்னு சந்தேகமா இருக்கு..
அதுமட்டும் நெசமா இருந்தா நீ கூடாரத்த கலச்சிட்டு கோயிலடிக்கு பிச்சயெடுக்க போக வேண்டிதுதான்!”
“அதா தீக்ஷிதா! எனக்கும் பயமாருக்கு” என்றார் அம்புஜம்மா.
படுத்திருந்தபடியே அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்த துரை எழுந்து அமர்ந்தான்.
“ஏ நீ லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கில. நிமிஷா அக்காவவிட நீ ரெண்டு வயசு சின்னவ. ஒனக்குக் காதலும் கல்யாணமும் கேட்டிச்சி.
நீ பண்ணலாம். அக்கா லவ் பண்ணுனா தப்பா? நிமிஷா அக்கா நமக்கெல்லாம் சம்பாதிச்சி போட்டுக்கிட்டே இருக்கணுமா? அதுக்குதா அது பொறந்திச்சா?” கத்தினான் துரை.
“ஏ நீ சம்பாதிச்சி போடேன். இப்பிடி இருக்குறப்பையே இத்தினி வாயி!” கேவலப்படுத்தினாள் தீக்ஷிதா. அவளைத் தடுக்கவில்லை அம்புஜாம்மா.
“ச்சீ! நீ எல்லாம்.. ” என்றான். அதற்குமேல் பேசவில்லை துரை.
மணி ஒன்பது இருபதுக்கு அலுவலகத்துக்குள் நிமிஷா நுழைந்தபோது பெரும்பாலும் அனைவருமே வந்திருந்தார்கள் ப்ரியம்வதாவைத் தவிர.
ஆண் ஊழியர்கள் அனைவரின் பார்வையும் உள்ளே நுழைந்த
நிமிஷாவின் மீது பதிந்தது.
‘அப்பாடி! இந்த பொண்ணுதா எத்தன அழகு? தினமுந்தா பாக்குறோம் இன்னிக்கு ரொம்பல்ல அழகாருக்காங்க. ஏற்கனவே அழகு இவுங்க. அதுலயம் இவுங்க இன்னிக்கு போட்ருக்குற ட்ரெஸ்ஸுல’ அவர்கள் விட்ட பெருமூச்சால் அந்த ஏசி அறையே சூடாகிப் போனது.
மணி ஒன்பது முப்பது. அலுவலக நேரம் தொடங்கியும் ப்ரியம்வதா வரவில்லை.
‘ஏன் ப்ரியா வல்ல?’ நிமிஷா நினைத்து முடிக்கும் முன் இன்னிக்கு மிஸ்.ப்ரியா லீவாம். மேனேஜர் சொன்னாரு!” என்று தினேஷ் வெங்கட் சாரிடம் சொன்னது நிமிஷாவின் காதில் விழுந்தது.
மணி ஒன்பது நாற்பது. உள்ளே நுழைந்தான் ஆதி. அனைவரும் எழுந்து நின்றார்கள். ஆதியின் பார்வை நிமிஷாமீது விழுந்து அகன்றது. தனது அறைக்குள் நுழைந்தான்.
மேனேஜர் ஆதியின் அறைக்குள் சென்று வந்தார். பணியாளர்கள் ஒருசிலரை அழைத்துப் பேசினான் ஆதி.
‘மதியம் லீவுக்குச் சொல்ல வேண்டும் மேனேஜரிடம். இப்போதேனா போய் சொல்லிடலாமா!’ நினைத்துக் கொண்டபோதே மேனேஜர் அழைப்பதாக ப்யூன் பாண்டி வந்து சொல்ல மேனேஜர் அறைக்குச் சென்றாள் நிமிஷா.
“சார்! வரச் சொன்னீங்களாம்?”
“ஆமாம்மா. இன்னிக்கி ப்ரியம்வதா லீவு. அவுங்க கிட்ட இருக்குற ஃபைல்ல இது இதெல்லாம் வேணும். எம்.டி.பாக்கணும்னாரு. அந்த ஃபைலுங்கள நா பாத்தப்புறம் எம்டிட்ட அனுப்பலாம்!” என்றார்.
“ஓ.கே. சார் எடுத்து வரேன்!” தயங்கி நின்றாள் நிமிஷா.
“என்னம்மா ஏதாவது சொல்லணுமா?”
சார் மதியம் அரைநாள் லீவு வேணும்.
“நோ.. நோ.. நோ.. இன்னிக்கு லீவெல்லாம் கேக்காதிங்க நிமிஷா. எம்.டி. அர்ஜ்ஜெண்டா சில ஃபைல பாத்து தேவப்பட்டா சிலபேருக்கு பதில் அனுப்பணும்னு நேத்தே சொன்னாரு.. ப்ரியம்வதாதான் அந்த ஃபைலுங்கள கையாள்றாங்கன்னாலும் அவுங்க ரொம்ப முக்கியமான வேல லீவு வேணும்னு ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணி கேட்டதால மறுக்க முடியல. ஒங்கள வெச்சு பாத்துகலாம்னுதா அவுங்க லீவுக்கு ஓகே சொன்னேன். இப்ப நீங்களும் லீவு கேட்டா?”
‘திக்’கென்றது நிமிஷாவுக்கு.
“சார், முக்கியமானா வேலருக்கு சார்” என்றாள்.
மேனேஜர் என்ன நினைத்தாரோ “இருங்க எம்.டி.ய கேக்குறேன்!” என்றபடி இன்ட்டர்காமில் தொடர்பு கொண்டார்.
“சார் மிஸ்.நிமிஷா மதியம் ஹாஃப் டே லீவு கேக்குறாங்க. நீங்க ஃபைல் பாக்கணும் பதில் அனுப்பணும்னீங்க. ப்ரியம்வதாவும் லீவு..என்ன செய்ய?”
“ஓகே.. ஓகே.. நோ ப்ராப்ளம். அவுங்களுக்கு லீவு குடுத்திடுங்க. ஃபைல் நாளைக்குப் பாத்துக்கலாம்!” என்றான் ஆதி.
“தேங் யூ சார்!” பேச்சை முடித்து நிமிஷா பக்கம் திரும்பி நிமிஷா “லீவ் க்ராண்டட்!” என்றார் சிரித்தபடி.
“அப்பாடா! நல்ல வேள இவுரு லீவு குடுக்கமாட்டேன்னு சொல்ல. நாம போயி ஆதிட்ட சொல்ல. அவுரு இவுருட்ட நிமிஷாவுக்கு லீவு குடுங்கன்னு சொல்ல. பத்தியா நாம லீவு குடுக்கமாட்டேன்னு சொன்னோம்.
நிமிஷா எம்டிட்ட சொல்லி லீவு வாங்கிடுச்சி அப்ப நம்ம மரியாத என்னாச்சுன்னு நம்மள தப்பா நெனச்சிருப்பாருல்ல. நல்ல வேள மேனேஜர் ஆதிட்ட தானே கேட்டது நல்லதா போச்சி’ நினைத்துக் கொண்டாள் நிமிஷா.
“நன்றி சார்!” என்று சொல்லிவிட்டு மேனேஜர் அறையை விட்டு வெளியே வந்தாள் நிமிஷா.
மதியம் மணி பனிரெண்டு ஐம்பது. கிளம்ப ரெடியாகி விட்டாள் நிமிஷா. மனசு பரபரப்பாய் இருந்தது.
மணி ஒன்று. ஹேண்ட்பேக்கை தோளில் மாட்டிக் கொண்டு எழுந்தவளின் பார்வை ஆதியின் அறையை மோதி மீண்டது.
அலுவலகம்விட்டு வெளியேறி லிஃப்டில் ஏறி இறங்கி வளாகத்தைவிட்டு வெளியே வந்தவளுக்கு ‘அடடா!ஆதிகிட்ட எங்க வெயிட் பண்ணுறது?ன்னு கேக்கலையே!’ என்று நினைக்கும் போதே ஃபோன் சிணுங்கியது. ஆதிதான்.
“நிமிஷா!”
“ம்”
“எங்க இருக்கீங்க?”
“ம்.. நடுத்தெருவுல நிக்கிறேன்!” சிரித்தாள்.
“அய்யோ!” சிரித்தான் ஆதி.
“நிமிஷா நீங்கன்னா ஸ்வஸ்திகா ஷாப்பிங் மால்லனா வெயிட் பண்ணுங்களேன். வெளீல ரொம்ப வெய்யிலாருக்கும்னு நெனைக்கிறேன்.
மால்ல ஏசி இருக்கும்ல. நீங்க அங்க வெயிட் பண்ணுங்க. சரியா? நான் அங்க வந்து ஒங்கள பிக்கப் பண்ணிக்குறேன். நிமிஷா சாப்டீங்களா?
“ம்கூம்”
“நானும்தா இப்ப மணி ஒன்னு பத்து. இன்னும் பத்து நிமிஷத்துல கிளம்பிடறேன் நிமிஷா!”
“ஓகே.” நிமிஷா நடக்க ஆரம்பித்தாள். மிக பக்கத்திலேயே இருந்த ஸ்வஸ்திகா ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்தாள்.
காக்க வைக்காமல் சொல்லியபடி பத்தாவது நிமிடம் மாலுக்குள் ஆதி நுழைந்தான்.
“நிமிஷா!”
“ஆதி!”
நிமிஷாவைப் பார்த்து சிரித்தபடி கண்களை மெல்ல மூடித் திறந்தான் ஆதி.
“என்னாச்சு ஆதி?”
“யப்பா!” என்றான். ஒற்றை வார்த்தையில் ஓராயிரம் அர்த்தங்களோ?
“பசிக்கில நிமிஷா!”
“ம்…”
சட்டென சாக்லெட் பிரிவுக்குள் நுழைந்தான். நீள நீளமான ஷெல்ஃப் ரேக்குகளில் விதவிதமான சாக்லெட்டுகள்.
“நிமிஷா! சாக்லெட் சாப்டுறீங்களா?”
“ம்கூம்.. வேண்டாமே!”
“ஏ வேண்டாம். இங்க பாருங்களேன் ஹர்ஷேஸ் எக்ஸோடிக் டார்க் சாக்லெட்.. இந்த சாக்லெட்லாம் ஒடம்புக்கு
கெடுதல் இல்ல!” டார்க் சாக்லெட்டுல்ல நாலு எடுத்தான்.
பில்லிங் செக்ஷினில் ஜிபே மூலம் எண்ணூற்று நாற்பது ரூபாய் செலுத்தினான்.
‘என்னது நாலு சாக்லேட் எண்ணூத்தி நாப்பது ரூபாயா?’ அதிர்ந்து போனாள் நிமிஷா.
ஆயிரம் ரூபாயைத் தாண்டிகூட சாக்லெட் விலை இருப்பது நடுத்தர வர்க்கத்தினரால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
“இந்தாங்க நிமிஷா. ஹேண்ட்பேக்குல போட்டுக்குங்க!”
தயங்கினாள் நிமிஷா.
“ஏன் நிமிஷா தயங்குறீங்க? நா வாங்கினா சாப்ட மாட்டீங்களா?”
“அய்யோ! அப்டீல்லாம் இல்ல. எதுக்கு நாலு?”
“ஒங்குளுக்கு ரெண்டு. எனக்கு ரெண்டு” சொல்லிக் கொண்டே வாட்சில் மணி பார்த்தான். மணி ஒன்னு நாற்பது.
பகல் நேரம். பளீரென்ற வெளிச்சம். காருக்குள் ஏறுவதற்குத் தயக்கமாய் இருந்தது நிமிஷாவுக்கு.
‘தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிட்டால்!’ கவலையாக இருந்தது.
“நிமிஷா! ஏ கார்ல ஏறல?” கார்க் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த படியே கேட்டான் ஆதி.
“ஆதி!”
“சொல்லுங்க நிமிஷா!”
“நான்னா ஆட்டோவுல வரேனே! எந்த தியேட்டர்னு சொல்லுங்க ஆதி”
“ஏ..என்னாச்சு நிமிஷா?”
“பகல் நேரம்.ரொம்ப வெளிச்சமாருக்கு..நா கார்ல ஏறுறத தெரிஞ்சவுங்க யாராவது பாத்துட்டா பயமாருக்கு ஆதி”
சிரித்தான் ஆதி.
“நிமிஷா! காருக்குப் பக்கத்துல நின்னிகிட்டு எங்கூட பேசிக்கிட்ருக்கீங்கதானே.. அதமட்டும் பாக்கமாட்டாங்களா?”
“அதானே?” சட்டென ஆதியில் பக்கத்தில் ஏறி அமர்ந்தாள் நிமிஷா.
“ஆதி!”
“சொல்லுங்க நிமிஷா!”
“நாம சினிமாவுக்குப் போய்தா ஆகணுமா? தியேட்டர்ல தெரிஞ்சவங்க யாராவது பாத்துட்டா ?பயமாருக்கு ஆதி!”
“நிமிஷா! அப்பிடி யாராவது நேரிடையா கேட்டாங்கனா, ஆமா கே.ஆர்.ஜி.நிறுவன ஓனர் திரு.கோவர்த்தன் அவர்களோட ஒரே மகன் ஆதி என்கிற ஆதித்யாவ நா லவ் பண்றேன். ஆதித்யாவும் என்னை லவ் பண்றாருன்னு தைரியமா சொல்லுங்க நிமிஷா!”
“ஆதி!”
தியேட்டர் வாசலில் கார் வந்து நின்றபோது மணி இரண்டாகியிருந்தது.
“ஆதி! லைட்ட அணச்சு படம் ஆரம்பிச்சதும் போலாமே? முன்னாடியே போனா தெரிஞ்சவங்க யாரும் பாத்துட்டா?”
“படம் ஆரம்பிச்சாச்சுனா இருட்டுல சீட்ட தேடுறது கஷ்டம். ஒக்காந்திருக்குறவங்க கால மிதிச்சுகிட்டே போனா உச்சு கொட்டுவாங்க. அது தேவையா?”
அதுவும் ‘சரிதானெ’னப்பட்டதால் நிமிஷா அமைதியானாள்.
பால்கனி கோல்டு சீட். ரொம்பவும் லக்ஸுரியான இருக்கைகள். ஏசியின் ஜில்லிப்பு. ஆனாலும் ஆதியின்
அருகே அமர்ந்திருந்த நிமிஷாவுக்கு ரொம்பவும் பயமாகவும் படபடப்பாகவும் இருந்தது.
“இப்பிடீல்லாம் வந்து சினிமா பாக்குறது தப்பில்ல!” நெளிந்தாள் நிமிஷா.
“நிமிஷா! ஏன் இவ்வளவு நெர்வஸா இருக்கீங்க?”
“யாராவது தெரிஞ்சவங்க பாத்துட்டா?”
“நிமிஷா இதையேவா சொல்வீங்க? டயம் ஆயிடுச்சு. லைட்ட அணைச்சுடுவாங்க..படம் ஆரம்பிச்சிடும். அப்பறம் யாரு பாக்கப் போறாங்க? பயப்படாதிங்க நிமிஷா!” கொஞ்சம் முகம் திருப்பி நிமிஷாவின் காதுதருகே முகம் வைத்து தைரியம் சொல்லிச் சிரித்தான்
ஆதி.தன் கை தப்பித்தவறிகூட நிமிஷாமேல் படாமல் பார்த்துக்கொண்டான்.
காதிலும் கன்னத்திலும் பட்ட அவனின் மூச்சுக் காற்று, அவனின் அருகாமை, ‘நிமிஷா!’ என்று காதலைக் கொட்டிக் கலந்து கிசுகிசுப்பாய் அவன் அழைக்கும் குரல்
அந்த ஷேவிங் க்ரீமின் வாசனை அவன் உபயோகித்திருந்த உயர்தர சென்ட்டின் மணம் அனைத்தும் ஒன்றாய்ச் சேர்ந்து நிமிஷாவைக் கட்டித்தான் போட்டன.
கொஞ்சம் தைரியமானாள்.
அவனிடம் ஏதோ சொல்ல ஆதி சிரித்தான்.
விளக்குகள் அணைந்து படம் ஆரம்பிக்கவிருந்த அந்த பத்து நிமிடங்களுக்குள் பத்து முறையாவது சிரித்துப்பார்கள்.
“நிமிஷா! என்னதா சொன்னாலும் வீட்டுக்குத் தெரியாத லவ் பண்றதும் ஜோடியா திருட்டுத்தனமா சினிமா பீச்சுனு சுத்தறுதும் ஒரு தனி கிக்குதான்ல” சிரித்தான் ஆதி..
“ஆமாமா! எங்கள மாரி பொண்ணுங்களுக்குதா தெரியும் மனசு கெடந்து ‘வதக் வதக்’குனு பயப்புடறது”
“அதென்ன வதக் வதக்”
“தெரீல”
“தெரீலயா? தெரியலன்னுதா சொல்லுவாங்க.. அதென்ன தெரீல?”
கைக்குட்டையால் வாயைப் பொத்திச் சிரித்திள் நிமிஷா.
பால்கனியில் நுழைந்து தனக்கான சீட்டில் அமர்ந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து கொஞ்சமாய் குடித்துவிட்டு பாட்டிலை மூடியால் திருகி மூடிக் கொண்டே தன்னைச் சுற்றி அமர்ந்திருப்பவர்களைப் பார்வையைச் சுழற்றிப் பார்த்தாள் ப்ரியம்வதா.
சுழன்று பார்த்த கண்கள் அதிர்ச்சியில் அப்படியே ப்ரேக் போட்டு நின்றன.
தான் அமர்ந்திருக்கும் வரிசைக்கு முன் வரிசைக்கு முந்தின வரிசையில் ஆதியும் நிமிஷாவும்.
அப்படியே அதிர்ந்து போனாள். ஆதியும் நிமிஷாவும் அருகருகே அமர்ந்து கிசுகிசுப்பாய்ப் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பதை அதிர்ச்சியோடு வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் ப்ரியம்வதா.
‘அடிப்பாவி! இந்த பூனையும் பாலைக் குடிக்குமாங்குறாப்புல சாதுமாரி இருந்துகிட்டு கே.ஆர்.ஜி. நிறுவனத்து ஒரே வாரிச கவுத்து கைக்குள்ள போட்டுகிட்ருக்கியே அடேங்கப்பா! எத்தன கைகாரி நீ நிமிஷா!’ பொருமினாள் ப்ரியம்வதா.
பொறாமை மனதுக்குள் கொழுந்துவிட்டு எரிந்தது. காதில் புகை வராத குறை.
விளக்குகள் அணைந்து படம் ஆரம்பித்து முதல் பகுதி முடியும் நேரம்.
“படம் புடிச்சிருக்கா நிமிஷா?”
“ப்ச்..மொரட்டு மொக்க”
இடைவேளை.
விளக்குகள் ஒளிர்ந்தன.
“வாங்க நிமிஷா! கிளம்பிடலாம்”
இருவரும் அங்கு இங்கு எங்கும் பார்க்காமல் இருக்கையை விட்டு எழுந்து வெளியே செல்வதற்காக அருகருகே நடந்து சென்றபோது அது இடைவேளைநேரம் என்பதால் ப்ரியம்வதாவின் அருகே இருந்த இருக்கைகளில் அமந்திருந்தவர்கள் ஸ்னாக்ஸ் வாங்கவோ ரெஸ்ட்ரூம் செல்லவோ வெளியே போயிருந்ததால்
இருக்கைகள் காலியாய்க் கிடக்க இருந்த ஓரிருவரும் செல்ஃபோனில் பேசியபடி இருக்க சட்டென அருகருகே
நடந்து சென்ற ஆதியையும் நிமிஷாவையும் செல்லில் படம் பிடித்துக் கொண்டாள் ப்ரியம்வதா.
தாங்கள் அமர்ந்திருந்த இருக்கைக்குப் பின் வரிசைக்குப் பின் வரிசையில் அமர்ந்திருந்த ப்ரியம்வதா படமே பார்க்காமல் தங்களையே பார்த்தபடி அமர்ந்திருந்ததையும் இடைவேளையின் போது தாங்கள் பால்கனியை விட்டு வெளியேறும்போது தங்களிருவரையும் செல்லில் ஃப்போட்டோ எடுத்ததயும் அறியாத ஆதியும் நிமிஷாவும் தியேட்டரை விட்டு வெளியேறினர்.
தியேட்டரைவிட்டு வெளியே வந்தாயிற்று.
“பசிக்கில நிமிஷா!”
“ம்”
“நல்ல ஹோட்டலா போவமா?”
“வேண்டாம்! வேண்டாம்!”
“ஏ நிமிஷா பயமாருக்கா? சொல்வீங்களே? சொல்லல?” சிரித்தான்.
“ம் ஒங்குளுக்கென்ன? நீங்க ஆம்பள சொல்வீங்க”
“சரி! சரி! கோச்சுக்காதிங்க நிமிஷா!”
சொன்னாளே தவிர நிமிஷாவுக்கு பசிக்கதான் செய்தது. காலையில் வெறும் இரண்டே இரண்டு இட்லி சாப்பிட்டது.
அருகாமையில் இருந்த உயர்தர ஹோட்டல்.
மெனுகார்டை கொண்டு வைத்தார் வேயிட்டர்.
“நிமிஷா! என்ன சாப்புடுறீங்க? வேணும்கிறத ஆர்டர் பண்ணுங்க!”
“ஆதி மெனுகார்டு பாத்து ஆர்டர் பண்ணில்லாம் எனக்குப் பழக்கமில்ல.. நீங்களே ஆர்டர் பண்ணுங்க, ரொம்ப சிம்ப்பிளா போதும்!”
ஆதியே எதையோ ஆர்டர் செய்தான்.
நிமிஷாவின் கண்கள் கொஞ்சம் அச்சத்தோடு இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தன.
“நிமிஷா! தெரிஞ்சவுங்க யாராவது பாத்துடுவாங்களோன்னு பயமாருக்கு சரியா?”
“ஆமா ஆதி!”
“நிமிஷா! இனிமேவும் ஒங்கள பயப்பட வெக்கப்போறதில்ல. இன்னிக்கு வீட்ல நம்ம காதலப்பத்தி சொல்லிடப் போறேன்!”
‘திக்’கென்றது நிமிஷாவுக்கு; அடி வயிற்றை பயம் கவ்வியது; ரத்த ஓட்டமின்றி விரல்கள் மரத்துப் போனதுபோல் தோன்றியது. படபடப்பை உணர்ந்தாள் நிமிஷா.
அவளின் பயத்தை உணர்ந்தான் ஆதி.
“நிமிஷா! எங்க வீட்டுல என்ன சொல்லுவாங்களோன்னு பயப்படுறீங்க! சரியா? ரிலாக்ஸ் நிமிஷா!”
“ஏற்கனவே நா லவ் பண்ணிதா கல்யாணம் பண்ணிப்பேன்னு எ அம்மா அப்பாட்ட சொல்லிட்டேன்.
அவுங்களும் ஓகேடா மகனே! நீ லவ் பண்ணுற பொண்ண நாங்க எங்க மருமகளா ஏத்துக்க ஆவலோட காத்திருக்கோம்..
நீ எப்படா லவ் பண்ணப்போறேன்னு அடிக்கடி கேப்பாங்க..என் அன்பான காதலிய பாக்கக் காத்துக் கிட்டும் இருக்காங்க நிமிஷா!
ஐ லவ் யூ! ஐ லவ் யூ! ஐ லவ் யூ! வித் ஆல் மை ஹார்ட் நிமிஷா!” நெகிழ்ச்சியோடு சொல்லும் அன்பான ஆதியை
கண்களில் நிரம்பி கன்னத்தில் வழியக் காத்திருக்கும் கண்ணீரோடு நெகிழ்ந்து போய்ப் பார்த்தபடி
அமர்ந்திருந்தாள் நிமிஷா.
ஹோட்டலை விட்டு வெளியே வந்து காரில் ஏறி அமர்ந்து நேரம் பார்த்தான் ஆதி. மணி ஐந்தைத் தொட இருந்தது.
“நிமிஷா! நீங்க வீட்டுக்குப் போறீங்களா? பீச்சுக்குப் போவமா?”
வீட்டை நினைத்தாலே வெறுப்பாய் இருந்தது நிமிஷாவுக்கு.
“ப்ச்!” என்றாள்.
“வாங்க கொஞ்ச நாழி பீச்ல ஒக்காந்திருப்போம். ரிலாக்ஸா இருக்கும்”
கடற்கரை.
மௌனமாகவே அமர்ந்திருந்தாள் நிமிஷா.
அதிசயமாய் ஆதியை நெருங்கி அமர்ந்திருந்தாள். அடைக்கலம் தேடும் புறாக் குஞ்சென அவனின் அருகாமையைத் தேடியது நிமிஷாவின் நெஞ்சம்.
“நிமிஷா! என்னாச்சு? ஏன் எப்பிடியோ இருக்கீங்க?”
“ஆதி பயமாருக்கு!”
“நிமிஷா ஒங்களக் கேக்காம ஒங்க கையத் தொடுறேன் ஸாரி!” நிமிஷாவின் வலதுகையைப் பற்றி தன் வலது கைக்குள் வைத்துத் தன் இடது கையை நிமிஷாவின் கைமேல் வைத்துப் பொத்தினான் ஆதி.
“கை ஏன் இப்பிடி ஜில்லிட்டுப் போயிருக்கு? நம்ம காதல் ஜெயிக்குமான்னு பயப்படுறீங்களா நிமிஷா!
இதோ ஒங்க கையத் தொட்ட என் கை இனி வேற எந்தப் பொண்ணோட கையையும் தொடாது நிமிஷா.ப்ராமிஸ் போதுமா?
நிச்சயமா வீட்டுக்குப் போனதும் என் அம்மா அப்பாட்ட நம் காதல சொல்லி சம்மதம் வாங்கிடுவேன்.நிச்சயமா எதிர்ப்பே இருக்காது.
காத்துக்கிட்டே இருங்க நிமிஷா! ராத்திரி எத்தன மணியானாலும் சந்தோஷமான தகவல ஒங்குளுக்கு சொல்லுவேன் நிமிஷா!
நிமிஷா ஒங்க வீட்டுல சம்மதம் தருவாங்களா?” கவலையோடு கேட்டான் ஆதி.
“ஒங்க வீட்டுல என்னை ஏத்துக்குறதுதா ப்ரர்ச்சன ஆதி. அதுதா கவலப்பட வேண்டிய விஷயம்”
“எங்க வீட்டுல எந்தப் பிரர்ச்சனையும் வராது என் அன்பான காதலியே!” என்றவன் “எங்க சிரிங்க நிமிஷா! இந்த ஆதித்யா, இந்த ஆதி என்னிக்கும் ஒங்களோட ஆதிதா! சிரிங்க நிமிஷா!” என்றான்.
மெலிதாய் “ஆதி!” என்றாள். நம்பிக்கையோடு அவன் முகம் பார்த்துச் சிரித்தாள் நிமிஷா.
“கிளம்புவோம் நிமிஷா!.ஃப்ரீயா இருங்க”
கார் நோக்கி நடந்தார்கள். நிமிஷா அவளையறியாமல் ஆதியின் கைபற்றி நடந்தாள்.
இவர்கள் கைக்குள் கை வைத்தபடி அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவர்களுக்குச் சற்று தூரத்தில் நின்றபடி சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றிருந்த அந்த ஆள் நிமிஷாவையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘இந்தப் பொண்ண எங்கியோ பாத்ருக்கோம்ல. எங்க.? எங்க?” தலையில் தட்டிக் கொண்டான்.
‘ஓ! இதுஅந்தப் பொண்ணில்ல. நம்ம வட்டிக்கட மொதலாளி நாகேந்திராகிட்ட மூணுலட்சம் கடன் வாங்க வந்த பொண்ணில்ல இது. நம்ம மொதலாளி வேற ஒரு திட்டத்துல இருக்காரு.
இந்தப் பொண்ணு எவங்கூடயோ ஜோடி போட்டுல்ல சுத்துறாப்புல இருக்கு’ சட்டென சட்டைப் பையிலிருந்த செல்ஃபோனை எடுத்து ஆதியையும் அவன் கைபற்றி அவனுடன் நெருங்கி அமர்ந்திருக்கும் நிமிஷாவையும் ஜோடியாய் செல்லில் ஃபோட்டோ எடுத்துக் கொண்டான்.
ஆதியின் கைபற்றி அவனை ஒட்டினாற்போல் ஜோடியாய் நடக்கும் நிமிஷாவை மீண்டும் தன் செல்லுக்குள் புகைப்படமாய்ச் சிறைப்படுத்திக் கொண்டான் அந்த ஆள்.
காரில் ஏறியாயிற்று. நிமிஷா மௌனமாகவே வந்தாள்.
“நிமிஷா! என்னயிது? எம் பேச்ச நம்ப மாட்டீங்களா? இப்பிடி மூடியா சைலன்ட்டா இருக்காதிங்க. நா இன்னிக்கு நைட் என்னேரம் ஆனாலும் குட் ந்யூஸ் சொல்லுவேன். நா குட் ந்யூஸ் சொன்னா நீங்க எனக்கு என்ன தருவீங்க?”
“ம்.. என்னது? என்னது? என்ன தருவீங்களாவா? ஆச, தோச, அப்பளம், வட” சிரித்தாள் நிமிஷா “ம்…… நீங்க ஸ்வஸ்திகாவுல வாங்கின நாலு சாக்லேட் எங்கிட்டதானே இருக்கு அதுல ஒங்க பங்கு ரெண்டு சாக்லெட் தானே? போனாப் போவுதுன்னு மூணாவேணாத் தரேன்..
“ஹுக்கும் அய்யோடி! ரொம்ப தாராளம். யாருக்கு வேணும் சாக்லெட்? சாக்லெட்ட நீங்களே வெச்சுக்குங்க!”
சிரித்தான் ஆதி.
“சரி நிமிஷா! நீங்க இறங்குற எடம் வந்தாச்சி. வீட்டுக்குப் போனதும் தேவையில்லாம எதுவும் யோஜன பண்ணிக்கிட்டு கவலப்பட்டுக்கிட்டு இருக்காதிங்க. ஓகே.வா?” வலதுகை கட்டைவிரலை உயர்த்தி ‘தம்ப்ஸ்ஸப் ‘காட்டினான்.
காதல் அணைத்துக் கொண்ட அவர்களை காலம் என்ன செய்யக் காத்திருக்கிறதோ?
(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!