தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 23

வழக்கமாய் செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகில் நிமிஷா இறங்கிக் கொள்ளும் இடத்தில் காரை நிறுத்தினான் ஆதி.

இறங்கிக் கொண்டாள் நிமிஷா.

“வரேன் ஆதி!” குரல் கரகரத்தது.

“ஹாய் நிமிஷா! பி நார்மல். என்னாச்சுனு இப்பிடி பயப்படுறீங்க. நா சொன்னதுல நம்பிக்க இல்லையா?”

“ம்.. பை ஆதி!” நடக்கத் தொடங்கினாள் நிமிஷா. இரண்டுமுறை திரும்பித் திரும்பிப் பார்த்தாள்.

வீட்டுக்குள் நுழையும் போது வீடு ரொம்பவும் அமைதியாய் இருந்தது.

குறைந்த சப்தத்தோடு டிவியில் நிக் சேனல் ஓடிக் கொண்டிருந்தது.

ஹாலின் சுவற்றில் மாட்டியிருந்த கொஞ்சம் பெரிய சைஸ் முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்து ஹாலின் நடுப்பகுதி வரை கண்ணாடி சில்லுகள் சிதறிக் கிடந்தன.

அதுபோதாதென்று ஜீனி டப்பா திறந்தபடி தரையில் உருண்டு கிடக்க அந்த டப்பாவிலிருந்து ஜீனி தரையில் கொட்டி நசநசத்துப்போய் ஈஷிக் கொண்டிருக்க அதைச்சுற்றி எறும்புக் கூட்டம்.

அந்த எறும்புக் கூட்டத்தின் மேல் காலைத் ‘தொப்தொப்’ என்று சப்தத்தோடு காலை வைத்துக் கொண்டிருந்தாள் வைஷாலி.

வைஷாலியின் இந்த செயலைப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள் நிமிஷா.

வைஷாலி ஹால் சுவற்றில் பந்தை அடித்து அடித்து விளையாடுவாள்.

அப்படி ஹாலில் விளையாடாதே என்றால் கேட்க மாட்டாள்.

அப்படி சுவற்றிலடித்துப் பந்து விளையாடும்போது அது முகம் பார்க்கும் கண்ணாடியில் பட்டு உடைந்திருக்க வேண்டும்.

உள்ளே நுழைந்த நிமிஷாவைப் பார்த்ததும் “நிமிக்கா! நிமிக்கா!” என்று நிமிஷாவை நோக்கி ஓடி வந்த வைஷாலி உடைந்து சிதறிக் கிடந்த கண்ணாடி சில்லுகளில் கால் வைத்து விடாமல் இருக்க “வைஷு! கண்ணாடி கண்ணாடி ஓடிவராத! ஓடிவராத!” என்று கையை ஆட்டி ஆட்டிக் கத்தினாள்.

நிமிக்காவின் கத்தலும் கையாட்டலும் எதற்கென்று புரியாவிட்டாலும் ‘சடக்’கென்று கால் வைத்த இடத்தில் நின்றாள் வைஷாலி.

‘சடக்’கென்று ப்ரேக் போட்டது போல் நின்றதால் வைஷாலியின் உடல் பின்னோக்கித் தள்ளப்பட்டு
சுவற்றில் மோதியதில் பின்னந்தலையில் லேசான அடிபட்டதில் கத்த ஆரம்பித்தாள் வைஷாலி.

ஆயாசமாய் இருந்தது நிமிஷாவுக்கு. வைஷாலி அழ ஆரம்பித்தால் அவ்வளவு சீக்கிரம் நிறுத்தமாட்டாள். அவளை சமாதானப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.

சட்டென கருணாசாகரம் சென்று விட்டு திரும்பும் போது வாங்கி வந்த முறுக்கு பாக்கெட்டையும் சாக்லெட்டையும் பீரோவின் மேல் யார் கண்ணுக்கும் படாமல் கொஞ்சம் தள்ளினாற்போல் மறைத்து வைத்தது ஞாபகம் வந்தது.

நல்லவேளை முறுக்கையும் சாக்லெட்டையும் எடுத்துக் கொடுத்து வைஷாலியை சமாதானப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் பீரோவின் அருகில் சென்று கையை உயர்த்தி பீரோவின் மேல் துழாவிப் பார்த்தாள் நிமிஷா.

ம்கூம். எட்டவில்லை. முறுக்குப் பாக்கெட்டும் சாக்லெட்களையும் போட்டு வைத்திருந்த கேரிபேக் கைக்கு அகப்படவில்லை.

அழுவதை நிறுத்தாமல் நிமிஷாவின் செயல்களைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் வைஷாலி.

ஹாலுக்கு வந்து நாற்காலியைத் தூக்கிச் சென்று பீரோ அருகில் போட்டாள்.

பார்த்துக் கொண்டே அழுகையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள் வைஷாலி.

சேரில் ஏறினாள் நிமிஷா. பீரோவின் தலையில் கொஞ்சம் உள்பக்கமாய் நகர்ந்து கிடந்தது கேரிபேக்.

கைநீட்டி கேரிபேக்கை இழுத்தாள்.கையில் அகப்பட்டது. கையில் கேரிபேக்கோடு நாற்காலியிலிருந்து இறங்கினாள் நிமிஷா.

அழுகையை நிறுத்தாமல் ராகமிழுத்துக்கொண்டே நிமிஷாவைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் வைஷாலி.

கையில் கேரிபேக்கோடு வைஷாலியின் அருகில் வந்த நிமிஷா முறுக்கு பாக்கெட்டிலிருந்து இரண்டு முறுக்கையும் பத்துரூபாய் சாக்லெட் ஒன்றையும் எடுத்து வைஷாலியிடம் நீட்டியபடியே “வைஷுக்கு முறுக்கு சாக்லெட். இனிமே வைஷு அழமாட்டாளாம்!” என்று சொல்ல பட்டென்று அழுகையை நிறுத்திவிட்டு ஆசையோடு வாங்கிக் கொண்டாள் வைஷாலி.

அதேசமயம் நிமிஷா பீரோ அருகே சேர் கொண்டு போட்டு அதில் ஏறியது பீரோவின் மேலே கைவிட்டுத் துழாவியது.

கையை வெளியே எடுத்துவிட்டுக் கீழே இறங்கும்போது கையில் முறுக்கு சாக்லெட்டோடு இறங்கியது அனைத்தும் வைஷாலியின் மனதில் பதிந்தது. உடன் மறந்தும் போனது.

குளித்துவிட்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்தான் துரை.

“அக்கா வந்துட்டியா? பாரு வைஷாலி சொன்ன பேச்ச கேக்காம பந்த சொவத்துல அடிச்சடிச்சி வெளையாடிச்சி. பந்து தவறுதலா மூஞ்சி பாக்குகுற கண்ணாடி மேல பட்டு கண்ணாடி ஒடஞ்சி ஹாலு முழுக்க கண்ணாடி சில்லு!”

“பாத்தேன் தொர! புதுஸா கண்ணாடி வாங்கணும். தண்டச்செலவு ..ப்ச்” என்றாள்.

“ஆமாக்கா! தண்டச்செலவு. பாவம்க்கா நீ!” வேதனை தெரிந்தது துரையின் குரலில்.

“ப்ச்! விடு தொர! அம்மாவயும் தீக்ஷிதாவையும் காணும். டாக்டர்ட்ட போயிருக்காங்களா? முந்தா நாளுதானே போனாங்க?”

“இல்லக்கா! தீஷிக்கா மாமியாரு பாத்ரூமுல வழுக்கி விழுந்துட்டாங்களாம். கையிலயும் காலுலயும் ஃப்ராக்சராம்.

தீஷிக்காவ ஒடனே கெளம்பி வரச்சொல்லி மாமா ஃபோன் பண்ணாரு. அம்மா கொண்டு விட்டுட்டு தீஷிதா மாமியார பாத்துட்டு வரேன்னு போயிருக்காங்க.”

தீக்ஷிதா மாமியாருக்காக அனுதாபப்பட்ட மனது ‘அப்பாடா! தீக்ஷிதா இல்ல! வீடு கொஞ்சம் அமைதியா இருக்கும்’ என்றும் நினைத்தது. இப்போது மனது அமைதியை, தனிமையை நாடியது நிமிஷாவுக்கு.

“அக்கா! அம்மா ஒனக்கு அஞ்சாறு தடவ ஃபோன் பண்ணிச்சாம் நீ எடுக்கலயாம். திட்டிக்கிட்டுக் கெடெந்தாங்க.”

ஹேண்ட்பேக்கிலிருந்து செல்லை எடுத்துப் பார்த்தாள்.

மதியம் இரண்டரை மணிவாக்கில் அம்மாவிடமிருந்து ஐந்தாறு கால்கள் வந்திருந்தன.

ஓ! நாம தியேட்டர்ல இருந்தப்ப பண்ணிருக்காங்க. தியேட்டர்ல இருக்கர்ச்சே யாராவது ஃபோன் பண்ணி ரிங் சவுண்டு சப்தமா கேக்கப் போவுதேன்னு வால்யூம குறைத்து வைத்தது ஞாபகம் வந்தது. அதான் அம்மா ஃபோன் பண்ணப்ப காதுல விழல” நினைத்தாள்.

பின் ஆதியிடமிருந்து காலோ வாட்ஸ்ஸப் மெஸேஜோ வந்திருக்குமோ என்ற நப்பாசையோடு செல் திரையை நோட்டமிட்டாள். ம்கூம் ஒன்றுமில்லை.

‘எட்டுமணிதானே ஆகுது?. அதுக்குள்ள ஆதி என்னைப் பத்தி எனக்கும் ஆதிக்குமான காதலப் பத்தி சொல்லிருப்பாரா என்ன? ஆதியோட அம்மா அப்பா சம்மதம் தருவாங்களா?

கடவுளே முருகா! நீதான் ஆதியோட அம்மா அப்பாவ எங்க காதலுக்கு பச்சைக்கொடி காட்ட வைக்கணும்’ மனம் பயமும் கவலையுமாய் தவித்தது.

தனது செல்லையும் ஹேண்ட் பேக்கையும் மறந்துபோய் டைனிங் டேபிளில் வைத்துவிட்டு சிதறிக் கிடக்கும் கண்ணாடிச் சில்லுகளைப் பெருக்கி அள்ள தகர முறத்தையும் துடைப்பத்தையும் எடுத்து வந்தாள் நிமிஷா.

‘பரபர’வென்று கண்ணாடி பீஸ்களைப் பெருக்கி அள்ளி முறத்தில் போட்டு வெகு ஜாக்கிரதையாய் அவற்றை கேரிபேக்கில் கொட்டி முடிச்சு போட்டு குப்பைக்கூடையில் போட்டு விட்டு ஜீனி கொட்டி பிசுபிசுத்துப் போயிருந்த தரையைத் துடைக்க மாப்பை எடுத்து வரச் சென்றாள்

அதை எடுத்து வரும்போது வைஷாலி ஹேண்ட்பேக்கைத் திறந்து பார்ப்பதையும் அதிலிருந்து ஷாப்பிங் மாலில் ஆதி வாங்கித் தன்னிடம் தந்து வைத்திருந்த நான்கு சாக்லெட் அடங்கிய கேரிபேக்கை வெளியே எடுப்பதையும் பார்த்தாள் நிமிஷா.

“வைஷு அத எடுக்காத! எடுக்காத!” கத்திக்கொண்டே மாபைக் கீழே போட்டுவிட்டு வைஷாலியிடம் ஓடி அவளிடமிருந்து சாக்லேட் பையைப் பிடுங்கினாள் நிமிஷா.

கேரிபேக்கில் சாக்லேட் இருப்பதைப் பார்த்த வைஷு அதைக் கொடுக்க மறுத்து கத்தினாள்.

‘அது ஆதி வாங்கித்தந்த சாக்லேட்.அதை யாரும் தின்ன அனுமதிக்க முடியாது!’ என நினைத்த நிமிஷா வைஷாலியிடமிருந்து வலுக்கட்டாயமாய்ப் பிடுங்கிக் கொண்டாள்.

வைஷாலியிடமிருந்து பிடுங்கிய சாக்லேட் பையை எடுத்துக் கொண்டு தனது அறைக்குள் சென்று பீரோவின் அருகில் கிடந்த சேரில் ஏறி பையை பீரோவின் தலையில் வைத்துக் கொஞ்சம் உள்ளே நகர்த்தி வைத்துவிட்டு இறங்கி சேரை எடுத்து வந்து ஹாலில் அதனிடத்தில் வைத்தாள்.

நிமிஷாவின் செயல் ஒவ்வொன்றையும் அழுது கொண்டே பார்த்தபடி இருந்தாள் வைஷாலி.

அழும் வைஷாலியிடம் மீண்டும் தான் வாங்கி வந்திருந்த சாக்லேட்டில் மீதமிருந்த ஒன்றைத் தர அழுகையை நிறுத்தினாள் வைஷாலி.

மணி ஒன்பதே கால்.

ரவா உப்புமாவும் தேங்காய் சட்னியும் செய்து துரைக்கும் வைஷாலிக்கும் கொடுத்து விட்டு தனக்காக தட்டில் வைத்துக் கொண்டபோது கேட்டைத் திறந்து மூடும் சப்தம்.

ஜவ்வாது வாசனை முன்னேவர உள்ளே நுழைந்தார் கருணாகரன்.

தனக்காக உப்புமாவை எடுத்து வைத்திருந்த தட்டைக் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்தாள்.

“க்கும். யாருக்கு வேணும் ரவா உப்புமா?”

“நா சாப்டாச்சு.யாரு கேட்டா இந்த உப்புமாவ?” அலட்சியமாய் சொல்லும் பெற்றவனைப் பார்க்க எரிச்சலாய் இருந்தது நிமிஷாவுக்கு.

தொரயும் வைஷாலியும் தூங்கியாயிற்று. சமயலறை வேலைகளை முடித்துவிட்டு நிமிஷா தன் அறைக்குச் சென்றபோது மணி ஒன்பதே முக்கால் ஆகியிருந்தது.

அம்மாவுக்கு ஃபோன் செய்தாள்.

“மத்யானம் அஞ்சாறு தடவ ஃபோன் பண்ணினேன் நீ எடுக்கல. ஆபீஸ்லதானே இருந்த?”

“பின்ன ஆஃபீஸ்ல இல்லாம எங்க போய்டுவேன். கேக்குற?”

“அப்ப ஏன் ஃபோன எடுக்கல?”

“நாதான் ஒருத்தரு வேற ப்ராஞ்சு மாத்திப் போறாரு அவுருக்குப் பார்ட்டினு சொன்னேன்ல!”

“பார்ட்டினா சாயந்திரம் தானே வெப்பாங்க..மதியம் ரெண்ர மணிக்கா பார்ட்டி வெப்பாங்க? பார்ட்டின்னா ஃபோனுல ரெண்டு வார்த்த பேசக் கூடாதா?” அம்மாவின் வார்த்தைகளில் சந்தேகம் அப்பியிருந்தது.

“இப்ப என்னான்ற? துருவி துருவி கேள்வி கேக்குற. நா ஃபோன் சவுண்ட கம்மியா வெச்சிருந்தேன். ஃபோன் ஹேண்ட்பேக்குல கெடக்கவும் ரிங் சவுண்டு காதுல விழல!”

“எதக் கேட்டாலும் தயாரா பதில் வெச்சுருக்க. நா நாளை காலேல பத்து பதினோரு மணிக்குதா வருவேன். நீ லீவுன்னா எடுக்கிறியா?”

“லீவுல்லாம் கெடைக்காது!”

அறை விளக்கை அணைத்து விட்டுப் படுத்தாள் நிமிஷா.

மணி பத்தாகப் போவுது.

‘ஆதி ஃபோனுக்கும் வல்ல வாட்ஸப்புல மெஸேஜோ வாய்ஸ் மெஸேஜோ இல்ல’ லேசாய் கவலை எட்டிப் பார்த்தது நிமிஷாவின் மனதில்.

‘ராத்திரி என்னேரமானாலும் பேசுவேன்னு சொன்னாருல்ல ஆதி. பேசுவாரு! அவசரப்படக் கூடாது’ மனதை சமாதானப்படுத்தினாள்.

தூக்கம் வருவதற்கான வாய்ப்பே இல்லை. புரண்டு புரண்டு படுத்தாள் நிமிஷா.

ஆதியை முதன் முதலாய் சந்தித்தது முதல் இன்று அவன் தன்னைச் செங்கல்பட்டு ஸ்டேஷனருகில் காரில் கொண்டு விட்டது வரை திரைப்படமாய் மனதில் ஓடியது.

ஆதியின் இதமான பேச்சு, அவனின் டீசன்ட்டான பண்பாடான நடத்தை, அவன் ‘நிமிஷா!’ என்று காதலோடு அழைப்பது, அவனின் அந்த காந்தச் சிரிப்பு, க்ரேட்டில்ல ‘ஆதி!’ என்று நிமிஷாவை நினைக்க வைத்தது.

‘பாவம்ல ஆதி! கடற்கரையில நேத்து அவுரு வேணும்னே இறுக்கமா கட்டிப் புடிச்சாருனு அவர தப்பா நெனச்சி குற்றவாளியாக்கி என்ன பாடு படுத்தி வெச்சுட்டோம்.

பின்னாடியே எப்பிடி ஸாரி ஸாரின்னு சொல்லி கெஞ்சிக்கிட்டே வந்தாரு. நா ரொம்ப மோசம்தா! அப்பிடி அவுர பாடாப்படுத்திட்டு இன்னிக்கு கடற்கரையில நானாதானே அவர ஈஷிக்கிட்டு ஒக்காந்தேன்’ தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள்.

மணி பதினொன்றைத் தொடவிருந்தது நேரம்.சன்னமான சவுண்டோடு ஒளிர்ந்தது செல்ஃபோன்.

‘ஆதி!’ நெஞ்சு படபடத்தது நிமிஷாவுக்கு.

ஆதி சொல்லப் போகும் பதில்தான் தன் வாழ்க்கையையே தீர்மானிக்கப் போகிறது. ‘என்ன சொல்லப் போகிறார் ஆதி? முருகா முருகா!’ என்று உதடுகள் உச்சரிக்க நடுங்கும் விரலால் தொட்டு ஆதியின் அழைப்பை ஏற்றாள். பதட்டமாயிருந்தது. மூச்சு முட்டியது.

“ஆதி!”

“ஹாய் நிமிஷா!”

‘அப்பாடி! ஆதியின் குரல் சாதாரணாமாதான் இருக்கு.’ கொஞ்சம் நிதானப்பட்டாள்.

“நிமிஷா எங்கால்காக காத்துக்கிட்ருக்கீங்களா?”

“ம் ஆதி! என்னாச்சு? நீங்க என்ன சொல்லப் போறீங்களோன்னு பயந்துகிட்டே..” தொண்டை அடைத்தது நிமிஷாவுக்கு.

“நிமிஷா! கவலப்பட்டுகிட்டு இருக்கீங்களா? ஸாரி! ஸாரி! நா முன்னாடியே பேசிருந்திருக்கணும். நிமிஷா அப்பா அம்மாகிட்ட இன்னும் நம்ம விஷயம் பத்திப் பேசல. நா வீட்டுக்கு வரும்போது மணி ஓம்பதாயிடுத்து.

அப்பா கொஞ்சம் டயர்டா இருக்குனு படுத்துட்டாராம். அதுனால அப்பாகூட பேசமுடியல.

நாளைக் காலேலதா அப்பா அம்மாகிட்ட நம்ம விஷயத்தப் பேசணும்.

அதுனால நா நாளைக்கு ஆஃபீஸ்க்குக் கொஞ்சம் லேட்டாதா வருவேன். வரும்போது நல்ல பதிலோடதா வருவேன் நிமிஷா சரியா? நிம்மதியா தூங்குங்க! பை”

காலை மணி எட்டரை.

ஆதி கொஞ்சம் பரபரப்பாக இருந்தான். டிபன் சாப்பிடும் போது தனக்கும் நிமிஷாவுக்குமான காதல் பற்றி சொல்லி விடவேண்டும். அம்மா அப்பா ரொம்ப சந்தோஷப் படுவாங்க..

நம்ம புள்ள கண்ணுல எப்படா அவுனுக்குப் புடிச்சாப்ல ஒரு அழகுப் பொண்ணு படுவா. அந்தப் பொண்ணப் பாத்ததும் நம்ம புள்ள மனசுல எப்படா லைட் எரியும்னு காத்துக்கிட்டு இருக்காங்க..

நிமிஷாவப்பத்தி சொன்னாப் போதும். அடுத்தது கெட்டி மேளம்தான். அதிரடி சரவெடிதான். நிமிஷாகிட்ட எங்கப்பாவும் அம்மாவும் சம்மதம் சொல்லிட்டாங்கன்னு சொன்னா.

நிமிஷா என்ன பண்ணுவாங்க? பூவா சிரிப்பாங்கள்ள! பாவம்ல நிமிஷா! தா ஒரு சாதாரண குடும்பத்த சார்ந்த பொண்ணு, ஆதியப் பெத்தவுங்க நம்மள ஏத்துப்பாங்களான்னு ரொம்பல்ல பயப்படுறாங்க..

அவுங்ககிட்ட சொல்லணும். நிமிஷா நா சொன்னேன்ல என்னோட அப்பா அம்மா பணம், காச பெரிசா நெனைக்கமாட்டாங்க.

புள்ளையோட விருப்பம்தான் பெரிசுன்னு நெனைப் பாங்கன்னு’ நிமிஷாவை நினைக்கும்போதே நெகிழ்ச்சியாய் இருந்தது ஆதிக்கு.

வழக்கமாய்..அம்மா “ஆதி! அப்பா டைனிங்டேபிளுக்கு வந்தாச்சு. நீ இன்னுமா டிஃபன் சாப்ட ரெடியாகல! கீழ இறங்கி வா!” என்று மாடிப்படிக்குக் கீழே நின்று ஆதியை அழைக்கும் அம்மா மணி ஒன்பதாகப் போகும் நிலையிலும் ஆதியை அழைக்கவில்லை.

“ஏ! இன்னும் அம்மா கூப்புடல? சரி நாமே இறங்கிப் போவோம்” என நினைத்தவனாய் மாடிப்படிகளில் தடதடவென இறங்கினான் ஆதி.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

Comments

“தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 23” மீது ஒரு மறுமொழி

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.