காலை மணி ஒன்பது. தனது அறையில் விக்கித்துப் போய் அமர்ந்திருந்தார் கோவர்த்தன்.
இரவு முழுதும் தூங்காமல் இருந்திருக்க வேண்டும்; கண்கள் சிவந்து போய்க் கிடந்தன.
முதல் நாள் மதியம் இரண்டு மணிக்கெல்லாம் வேளச்சேரி அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து விட்டார் கோவர்த்தன்.
மதியம் வந்து சாப்பிட்டுவிட்டு சற்று ஓய்வெடுக்கலாமென்று தனது அறைக்கு வந்தவரை செல்ஃபோன் அழைத்தது.
பெயரோடு ஒளிர்ந்த நம்பரைப் பார்த்ததும் அவர் கண்களை அவராலேயே நம்ப முடியவில்லை.
‘பத்ரி!’ தன்னுடைய பால்ய வயதிலிருந்து தன் வாழ்க்கையின் பெரும் பகுதி நண்பனாய்த் தன்னோடு பயணித்தவன்.
ஒரே பள்ளி. ஒரே கல்லூரி. கிட்டத்தட்ட தொழில்கூட ஒரேமாதிரி ரியல் எஸ்டேட் தான்.
கோவர்த்தனும் பத்ரியும் செய்யும் தொழிலில்கூட ஒற்றுமையாகவும் உண்மையாகவும்தான் இருந்தார்கள்.
என்ன நேரமோ நடுவில் மூன்றாவதாய் ஒருத்தன் நுழைந்து விளையாட கோவர்த்தனுக்கும் பத்ரிக்குமான நட்பில் விரிசல் வர இருபது வருடத்திற்கு மேலாயிற்று பிரிந்து.
ஆனாலும் கோவர்தனின் நெஞ்சில் பத்ரியின் நட்பும், நண்பனைப் பற்றிய நினைப்பும் சுத்தமாய் துடைத்துப் போய்விடவில்லை. அதனாலேயே பத்ரியின் நம்பரை டெலிட் செய்யாமல் வைத்திருந்தார்.
பரபரப்பாய் செல்ஃபோனைக் கையிலெடுத்தார்.
‘நீண்ட வருடம் கழித்துத் தன் நண்பனின் குரலைக் கேட்கப் போகிறோம்!’ என்ற நினைப்பே அவரை பரவசப்படுத்தியது. ஆனாலும் ‘பேசுவது வேறு யாராவது இருந்தால்’ என்ற சந்தேகமும் தோன்றியது.
இப்படி யோசித்து முடிப்பதற்குள் ‘ரிங் சவுண்ட் நின்றுவிடப் போகிறதே!’ என்று நினைத்தவராய் அழைப்பை ஏற்று “ஹலோ!” என்றார்.
“கோவி!” எதிர்முனையிலிருந்து வந்த குரல்.
‘அவன்தான்! அவன்தான்!’ இருபது வருடங்களுக்கு மேலாய் தான் கேட்காதிருந்த தன் நண்பன் பத்ரியின் குரல்தான்.
அவன் தான் தன்னை ‘கோவி!’ என்று நட்போடு உரிமையாய் அழைப்பான்!’
“பத்ரி! நீயா?” கோவர்த்தன் குரல் உடைந்து தழுதழுத்தது. “எப்பிடி இருக்க பத்ரி?”
“இருக்கேன் கோவி! நீ எப்பிடி இருக்க?”
“நா நல்லாருக்கேன்!”
இருவர் குரலுமே தழுதழுத்துதான் போயிருந்தன.
உண்மையான நட்பும் நிஜமான காதலும் எத்தனை காலம் ஆனாலும் நீரு பூத்த நெருப்பாய் அடி நெஞ்சில் தங்கித்தான் இருக்கும் போலும்.
“நா ஒன்ன பாக்கணும் கோவி!”
“எனக்கும்தான்! நீ எங்க இருக்க பத்ரி? எத்தன வருஷமாச்சு பாத்து”
“நா கோயமுத்தூர்லேந்து இங்க சென்னையில அடையார்க்கு வந்து மூணு மாசமாச்சு. ஒனக்கு ஃபோன் பண்ணணும்னு நெனைப்பேன்.
ஆனா நீ பேசுவியோ மாட்டியோன்னு தயக்கமா இருந்துது கோவி! இன்னிக்குத் துணிஞ்சி பண்ணிட்டேன்.
நீ எங்க இருக்கேன்னு சொல்லு? நானே பாக்க வரேன் ஒன்ன, நா தா எவம் பேச்சையோ கேட்டு ஒம் மனசக் காயப்படுத்தினவன்!”
“சரி! சரி! விடு! விடு! எ அட்ராஸ் இதா! வந்துடு!”
“கிளம்பிக்கிட்டே இருக்கேன்”
“ஃபேமிலிய அழச்சிக்கிட்டு வா!”
“அதப்பத்தி நேர்ல பேசுவோம்!”
பத்ரி வருவதை மனைவி விமலாதேவியிடம் சொன்ன போது “அப்பா! எத்தன வருஷமாச்சு பத்ரி அண்ணன பாத்து! அவர கடைசியா பாத்தப்ப நம்ம ஆதிக்கு எட்டு வயசிருக்கும்.
ஒங்க ஃப்ரெண்டு பத்ரியண்ணனுக்கு ஒருபெண் குழந்த மூணோ நாலோ வயசிருக்கும். பேருகூட மானஸாவோ என்னவோ கார்ல அழச்சிகிட்டு வருவார்ல!”
“ஆமா விமலா! நல்லா நினைவு வெச்சுருக்கியே!” என்றார் கோவர்த்தன்.
அடுத்த ஒருமணி நேரத்தில் பத்ரி வந்துவிட்டார்.
கோவர்த்தனும் விமலா தேவியும் அன்போடு வரவேற்றார்கள்.
இருபது வருட மனஸ்தாபங்களையெல்லாம் மறந்து நண்பர்கள் இருவரும் பேசினார்கள் பேசினார்கள்
இரண்டு மணி நேரத்தில் இருபது வருட விஷயங்களையும் பேசினார்கள்.
பத்ரி தன் மனைவி சுசித்ரா உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் இருப்பதாகவும் ரொம்பவுமே உடல்நலம் பாதிச்சு கடந்த நாலு வருஷமா வீல் சேர்லதா கதியாயிருந்தாங்க.
இப்ப அதுவுமில்ல! அஞ்சாறு மாசமா படுத்த படுக்கையாயிட்டாங்க. நானும் எவ்வளவோ வைத்தியம் பண்ணிப் பாத்துட்டேன் என்று சொன்ன போது ரொம்பவுமே வருத்தமாய் இருந்தது கோவர்த்தனுக்கு.
“பத்ரி! ஒனக்கு ஒரு பொண்ணு இருக்குதில்ல. பேரு மானஸா தானே? நீ கூட நம்ம வீட்டுக்கு அழச்சிகிட்டு வருவியே! அப்ப ஒம் பொண்ணுக்கு நாலு வயசு இருக்கும்ல!” கோவர்த்தன் கேட்டு முடிப்பதற்குள்.
“ஆமா கோவி! நம்ம ரெண்டு பேருக்குமே ஒரே வருஷத்துலதான் கல்யாணமாச்சுன்னாலும் ஒனக்கு பையன் பொறந்து நாலு வருஷங்கழிச்சு தானே எனக்கு மானஸா பொறந்தா!
அவ எம்.பி.பி.எஸ். முடிச்சிட்டு மேற்படிப்புகாக அமெரிக்கா போய் ரெண்டு வருஷமாச்சு.
நாளைக் காலேல அவ அம்மாவப் பாக்க இந்தியா வரா கோவி! நீ ஆதித்யாவப் பத்தி ஒன்னுமே சொல்லலியே!”
“ஆதி எம்.ஆர்க்.எம்.பி.ஏ. முடிச்சிட்டு சேப்பாக்கம் பிராஞ்ச பாத்துக்குறான். வேளச்சேரி, மதுரவாயல்னு நா போய்ட்டு வந்துகிட்ருக்கேன். பல்லாவரத்துல புதுசா ஒரு கிளைய ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்!”
“இன்னும் ஒன்னு, ரெண்டு பிசினஸ் நடத்திக்கிட்டிருந்தீல்ல!”
“ஆமா! எல்லாமே நல்லாபோவுது பத்ரி!”
“ஆதித்யாவுக்குக் கல்யாணம் பண்ணிட்டியா கோவி?” பத்ரியின் குரலில் ஆர்வம் தெறித்தது.
“இன்னும் இல்ல. வயசு இருவத்தொம்போது ஆயிட்டு. இன்னும் நேரம் வல்ல போல!”
“கோவி!”
“சொல்லு பத்ரி!”
“எ.ஒய்ஃப் சுசித்ரா தா கண்ண மூடுறத்துக்குள்ள பொண்ணு கல்யாணத்தப் பாக்கணும்னு பொலம்பித் தவிக்கிறா! மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு கோவி!”
“ப்ச், தங்கச்சி சுசித்ரா பத்தி நீ சொல்றத கேக்கும்போது ரொம்ப வேதனையா இருக்கு பத்ரி.
அவுங்க பெத்த பொண்ணு கல்யாணத்தப் பாக்கணும்னு ஆசப்படுறது சரிதானே?
மானஸாக்கு கல்யாணத்தப் பண்ணிட வேண்டிதுதானே? நாளைக்கு இந்தியா வரப் போவுதுங்குற நல்ல இடமா பாத்து முடிச்சிட வேண்டியதுதானே?”
“கோவி! கேக்க தயக்கமாதா இருக்கு. ஆனாலும் கேக்குறேன்.
ஃப்ரெண்டா இருக்குற நாம ஏன் சம்மந்தியாவும் ஆகக் கூடாது?”
‘அதானே ஏன் ஆகக்கூடாது?’ மனசுக்குள் நினைத்தவர் ஹாலைவிட்டு வெளியே சென்றிருந்த மனைவி விமலாவை அழைத்தார்.
“ரொம்ப வருஷங்கழிச்சு ஃப்ரெண்டுங்க நீங்க ரெண்டுபேரும் சந்திக்கிறீங்க. நல்லா பேசட்டும்னுதா வெளிய போனேன்!” என்றபடி ஹாலுக்கு வந்தார் விமலா தேவி.
“விமலா! பத்ரி சொல்லுறத கேட்டியா?”
“அண்ண என்ன சொல்றாரு?”
“நாம ஏன் சம்மந்தியாகக் கூடாது கோவின்னு கேக்குறா!”
“ஆமா தங்கச்சி .இங்க பாருங்க!” சொல்லிக் கொண்டே சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஃபோட்டோ ஒன்றை எடுத்து விமலாதேவியிடம் நீட்டினார் பத்ரி.
ஃபோட்டோவில் வெகு அம்சமாய் இருந்தாள் மானஸா.
“மானஸா ரொம்ப அழகா இருக்குறா!” சொல்லிக் கொண்டே கணவரிடம் ஃபோட்டோவை நீட்டினார்.
“பாரேன் விமலா! மானஸாவ நாலு வயசுல பாத்தது. இப்ப எப்பிடி வளந்துட்டா பாரு? ரொம்ப க்யூட்டில்ல!”
“விமலா கப்போர்டுலேந்து ஆதி ஃபோட்டோவ எடுத்து வாயேன்!”
“பத்ரி பாரு நம்ம ஆதித்யா! ஆதி!”
“கோவி! ஆதித்யாவ எட்டு வயசுல பாத்தது. அப்பவே அவ துறுதுறுனு ஆக்டிவா அழகா இருப்பான். இப்ப அடேங்கப்பா! செமயால்ல இருக்கான்!” பத்ரியின் கண்கள் பளபளத்தன.
“அப்ப சம்மந்தியாயிடுவமா கோவி?” ஆசையும் ஆர்வமுமாய்க் கேட்டார் பத்ரி.
“நாம முடிவெடுத்தா போதுமா? நம்ம புள்ளைங்க அபிப்ராயத்த கேக்கணுமில்ல!” என்றார் விமலாதேவி.
“ஆதி மானஸா ரெண்டு பேருமே அழகு, படிப்பு, அந்தஸ்த்து எல்லாத்துலயுமே சமமா இருக்கும்போது மாற்று அபிப்ராயம் என்ன இருக்கு இதுல தங்கச்சி!” என்றார் பத்ரி.
“அதானே!” என்றார் கோவர்த்தன்.
“எனக்கு இருக்குறது ஒரே பொண்ணு! ஒங்குளுக்கு இருக்குறது ஒரே பையன்! இன்னும் வேறென்ன வேணும்?” என்றார் பத்ரி.
“ஓகே. பத்ரி! செஞ்சிடுவோம்” இருவரும் ஹைஃபை அடித்துக் கொண்டார்கள். கை குலுக்கிக் கொண்டார்கள்.
“கோவி ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஞாயித்திக்கிழம தங்கச்சி, ஆதி ரெண்டு பேரையும் அழச்சிகிட்டு வீட்டுக்கு வாயேன்.
வீட்டுக்கு வந்தாப்புலயும் இருக்கும் ஆதியும் மானஸாவும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக் கிட்டாப்புலயும் இருக்கும். வந்துடுங்க தங்கச்சி!” என்றார் விமலாதேவியைப் பார்த்து.
“ஓ.கே. பத்ரி!” என்று கோவர்த்தன் சம்மதம் சொன்ன அதே சமயம் விமலாதேவி பதில் தராமல் புன்னகையோடு நிறுத்திக் கொண்டார்.
கோவர்த்தனும் பத்ரியும் ஒரே ஊரில் ஒரே தெருவில் எதிரெதிர் வீட்டில் வாழ்ந்து வளர்ந்து ஒரே பள்ளி ஒரே கல்லூரியில் படித்த இளவயது வாழ்க்கையைப் பேசிப் பேசி முடித்தபோது மாலை ஆறரை ஆகிவிட்டது.
ஞாயிறன்று குடும்பத்தோடு தன் வீட்டுக்கு வருவதாய்ச் சொன்ன நண்பன் கோவர்த்தனின் வார்த்தையை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டு விடைபெற்றார் பத்ரி.
பத்ரி விடைபெற்றுச் சென்றதும் கணவரிடம் விமலாதேவி கோவப்பட்டுப் பேசினார்.
“ஏங்க! என்ன தைரியத்துல ஒங்க ஃப்ரெண்டுகிட்ட சம்மந்தி ஆகிக்கலாம்னு ஒத்துக்குறீங்க? ஞாயித்துக் கெழம அவுரு வீட்டுக்கு ஆதியையும் அழச்சுக்கிட்டு வரேன்றீங்க?
ஆதி மானஸாவ கட்டிக்க சம்மதிப்பாங்கிறீங்களா?
அவன் தன் கண்ணுல ஒரு அழகான பொண்ணு படணும். அந்தப் பொண்ணப் பாத்ததுமே மனசுல லைட்டு எரியணும்.
‘பச்’சுனு அந்தப் பொண்ணு தன் நெஞ்சுக்குள்ள வந்து ஒட்டனும்.
அப்பிடியான பொண்ணதா கட்டுவேங்குறான்.
நீங்க பத்ரியண்ணன் பொண்ணக் கட்டிக்கோன்னா கட்டுவானா? அவசரப்பட்டு சம்மதம் குடுக்குறீங்க.. ஆதி சம்மதிக்கமாட்டாங்க. அவ சம்மதிக்கிலீன்னா?”
“த பாரு விமலா! வயசு முப்பதாகப் போவுது ஆதிக்கு. நாலு வருஷமா அவ சொல்லுற டயலாக்கை சொல்லிக்கிட்டுதா இருக்கான்.
வயசுதாம் போவுதே தவிர அவங்கண்ணுல அவ நெனைக்கிறாப்புல எந்தப் பொண்ணும் கெடைக்கில. ஆதிய இப்பிடியே விடக்கூடாது.
நல்ல நல்ல எடத்துலேந்து எத்தனையோ பேரு பொண்ணு குடுக்குறேன்னு வந்தாங்க. இவம் பேச்ச கேட்டு எல்லாத்தியும் விட்டாச்சி. இனி மேலும் இவம் பேச்ச நா கேக்குறதா இல்ல.
பத்ரியோட பொண்ணு எல்லாவிதத்துலயும் ஆதிக்குப் பொருத்தமான பொண்ணு. ஆதி மாட்டேன் கீட்டேன்னு சொன்னா நா சும்மா இருக்க மாட்டேன்.
எப்பிடியாவது பத்ரி பொண்ண ஆதிக்கு முடிச்சிடனும். நீ வழவழா கொழகொழான்னு இருக்காத! ஆதி அவனுக்கு நாம நல்லதுதா செய்வோம்னு நம்பணும்!”
அழுத்தமாய் உறுதியாய்ச் சொல்லும் கணவரைக் கொஞ்சம் கவலையோடு பார்த்தார் விமலாதேவி.
கணவர் சொல்வதும் நியாயம் தான் என்று தோன்றினாலும் ‘ஆதி ஒத்துக் கொள்வானா?’ என்று பயமாய் கவலையாய் இருந்தது.
மணி ஏழு.
தனது அறையிலிருந்த டி.வி.யில் ந்யூஸ் சேனலில் செய்திகள் பார்த்தபடி அமர்ந்திருந்தார் கோவர்த்தன்.
பக்கதிலிருந்த செல்ஃபோனில் வாட்ஸ்ஸப் மெஸேஜ் வந்திருப்பதுபோல் சின்ன சப்தம்.
செல்லை எடுத்துப் பார்க்கப் தோன்றாமல் ந்யூஸைக் கவனித்துக் கொண்டிருந்தார் கோவர்த்தன்.
ஐந்து நிமிடம் கடந்திருக்கும் மீண்டும் ஒரு வாட்ஸ்ஸப் மெஸேஜ்.
‘என்ன அடுத்தடுத்து ரெண்டு மெஸேஜ்?’ என நினைத்தபடி ஆர்வமாய் செல்லை உயிரூட்டி வாட்ஸப்புக்குள் நுழைந்தவரின் பார்வை அப்படியே நிலைகுத்திப் போய் நின்றது.
வந்திருந்த இரண்டு மெஸேஜ் டி.பி.யிலும் பிக்ச்சர் ஏதுமின்றி நிழல்படமே தெரிந்தது.
முதல் மெஸேஜை விரல் வைத்து ஓப்பன் செய்தார் கோவர்த்தன். அதிலிருந்த ஃபோட்டோ அவரை அதிரச் செய்தது.
‘ஆதி! ஆதி பக்கத்தில் ஆதியை ஒட்டினாற்போல் ஒரு பெண். இந்தப் பொண்ணு நம்ம சேப்பாக்கம் ஆஃபீஸ்ல வொர்க் பண்ணுற நிமிஷால்ல!
ஆமா ஆதியும் நிமிஷாவும் அருகருகே சினிமா தியேட்டர் போலன்னா இருக்கு. ஸ்கிரீன் தெரியுதே!’ வியர்த்துப் போனது கோவர்த்தனுக்கு.
‘அப்ப.. அப்ப.. ஆதி நிமிஷாவ லவ் பண்ணுறானா?’
கை நடுங்க, விரல் நடுங்க அடுத்த மெஸேஜை ஓப்பன் செய்தார்.
பரந்து விரிந்த கடற்கரை மணல்.ஆதியும் நிமிஷாவும் மிகநெருக்கமாய் அமர்ந்திருக்க நிமிஷாவின் கையைத் தன் கையில் வைத்து மற்றொரு கையால் மூடியபடி ஆதி.
அடுத்த ஸ்டில் ஆதியும் நிமிஷாவும் கைகோர்த்தபடி மணற்பரப்பில் நடப்பது போல்.
ஃபோட்டாவுக்குக் கீழே நிமிஷாவைப் பற்றிய விபரங்கள்.
1.பெயர் நிமிஷா..பி.எஸ்ஸி.
2.வயது:—-
3.வேலைபார்க்குமிடம்: கே.ஆர்.ஜி.ரியல் எஸ்டேட், சேப்பாக்கம்.
4.தந்தையின் தொழில்: ஊர்சுற்றி, சீட்டாடி, வீட்டுப் பொருட்களைத் திருடி விற்று சீட்டாடுவது.
5.தாய்:கணவனைத் தட்டிக் கேட்காதவர்.
6.தங்கை: காதலித்து திருமணம் செய்தவர்.
7.தம்பி: உடல் ஊனமுற்றவர்.(மாற்றுத்திறனாளி)
8.கடைசி தங்கை: மனவளர்ச்சி இல்லாதவர்.(ஆடிசம்)
9.கடன்: மூன்று லட்ச ரூபாயும் அதற்கான வட்டித்தொகையும்.
10.வீடு: வசதிகளற்ற வாடகை வீடு.
விபரங்களைப் படித்த கோவர்த்தன் அப்படியே ஆடிப் போய்விட்டார்.
“விமலா!” கத்தினார்.
“என்னங்க! என்னங்க! என்னாச்சுங்க!” பயந்தபடி வேகமாக நடந்து வந்தார் விமலாதேவி.
“இதப் பாரு! படி!” செல்ஃபோனைக் கொடுத்தார்.
அதிர்ந்து போனார் விமலாதேவி.
“நம்ம ஆதியா! இப்படி? ஏங்க, இந்தப் பொண்ணு நம்ம நிறுவனத்துல சேப்பாக்கத்துல வேல பாக்குறதா போட்ருக்கு. அப்ப நீங்க இந்த பொண்ண பாத்துருக்கீங்கள்ள?”
“பாத்ருக்கேன்!”
“பொண்ணு பேரு நிமிஷா! பேரு நல்லாருக்குல! பாக்கவும் ரொம்ப அழகாருக்குல பொண்ணு! அதா ஆதி..”
“விமலா! வாய மூடு!” முதன்முதலாய் வாழ்க்கையில் மனைவியிடம் கத்திப் பேசினார் கோவர்த்தன்.
நடுங்கிப் போய்விட்டார் விமலாதேவி.
“அந்தப் பொண்ணோட விபரங்களப் படிச்சியா? அதப் படிச்சுமா அந்தப் பொண்ணப்பத்தி விசாரிக்குற?
த பாரு விமலா! ஆதி ஆசப்படுற பொண்ணு ஏழையா இருந்தாலும் நாம மருமகளா ஏத்துக்கணும்னு சொன்னது நிஜம்தான்.
பொண்ணு ஏழையா இருந்தா அதப்பத்தி ஒன்னுமே இல்ல. ஆனா அந்தப் பொண்ணோட குடும்பப் பிண்ணனி நல்லா இருக்கணும்.
ஆனா இந்தப் பொண்ணு நிமிஷாவோட குடும்பப் பிண்ணனி பத்தி படிச்சியா?”
“நாளைக்கே இந்தப் பொண்ணோட ஆதிக்கு கல்யாணம் செய்ய நினைச்சோம்னு வையி கல்யாணத்துக்கு நம்ம பக்கத்துல எப்பேர்ப்பட்ட பெரிய மனுஷங்க அந்தஸ்து கொண்டவங்க. அரசியல்வாதிங்கனு வருவாங்க.
அவுங்ககிட்ட எங்க சம்மந்திக்காரங்க இவுங்கனு நிமிஷாவோட குடும்பத்துக்காரங்கள எப்பிடி அறிமுகப்படுத்துறது?
ஊர் பொறுக்கிய! சீட்டாடுரவன! வீட்டு சாமான திருடி விக்குறவுன! இவருதா பொண்ணோட அப்பானு அறிமுகப்படுத்துவியா?
காலு வெளங்காத தம்பி, மூளை வளர்ச்சி இல்லாத தங்கச்சினு இவுங்கள்லாம் மருமகளா வரப்போற பொண்ணோடகூடப் பொறந்தவங்கனு நம்ம சொந்த பந்தங்கள்ட்ட அறிமுகப்படுத்துவியா?
நா யாரையும் மட்டப்படுத்துல! யாரு கொறையையும் கேவலமா பேசல! எனக்கு இப்பேர்ப்பட்ட சம்மந்தம்
வேண்டாம்கிறேன்.நிச்சயமா வேண்டாம் அவ்வளவுதான்!
நா ஒருநாளும் ஆதி விரும்புற இந்தப் பொண்ண மருமகளா ஏத்துக்கமாட்டேன்.
பொண்ணு அழகா இருக்கலாம். நல்ல குணவதியாகூட இருக்கலாம். ஆனா நல்ல குடும்பப் பின்னணி இல்லாத இந்தப் பொண்ணு நம்ம வீட்டுக்கு வேண்டாம்.
ஆதி தலகீழ நின்னாலும் நா ஏத்துக்கமாட்டேன்!” முகம் ஜிவுஜிவுக்கக் கத்தினார் கோவர்த்தன்.
மௌனமாய் நின்றிருந்தார் விமலாதேவி. கணவர் சொல்வதும் ‘சரி தானோ!’ என்று தோன்றியது.
“ஏங்க இந்த ஃபோட்டோவல்லாம் யாருங்க அனுப்பிருப்பாங்க? அவுங்க நோக்கம் என்னவாங்க இருக்கும்?”
“யாரு அனுப்பினா என்ன? இது நம்ம ஆதிங்கறது நெஜம் தானே?அனுப்புனது யாருனு கண்டுபுடிக்கிறதவிட இந்த விஷயத்தோட சீரியஸ்ஸதா நாம பாக்கணும்!”
இரவு எட்டரை மணிக்கெல்லாம் சாப்பிடாமலேயே மனம் முழுதும் கவலையும் வேதனையும் பொங்க படுத்துவிட்டார் கோவர்த்தன். தூக்கம் தொலைந்து போனது கோவர்த்தனுக்கு.
மணி ஒன்பதைத் தாண்டிய நேரம். உள்ளே நுழைந்தான் ஆதி. முகத்தில் எதையும் காட்டாமல் ஆதியை வவேற்றார் விமலாதேவி.
‘ஆஃபீஸ் முடிஞ்சி ஆறரை ஏழு மணிக்கே வரவேண்டியவன் அந்தப் பொண்ணு யாரு நிமிஷா.. நிமிஷா.. அதுங்கூட சுத்திருப்பாம் போல மணி ஒம்போதுக்குமேல ஆகுது இப்பதான் வரான்!’ என்று நினைத்தார்.
பின் “ஆதி அப்பா டயர்டா இருக்குனு படுத்துட்டாரு..நீ சாப்பிட வா!” என்றார்.
“ஓ! அப்பா படுத்தாச்சா? ஓகேம்மா. எனக்கு சாப்பாடு வேண்டாம். நீங்க சாப்டீங்களா?”
“ம்..”
“அப்ப நீங்க போய்ப் படுங்க. காலேல பாக்கலாம். குட் நைட் மா!” சொல்லிவிட்டுத் ‘தடதட’வென மாடிப்படி ஏறினான்.
(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!