தென்றல் வந்து என்னைத் தொடும் பகுதி-25

காலை மணி ஒன்பது.

‘அம்மா என்ன இன்னும் டிஃபன் சாப்பிட கூப்புடல? நாமே கீழே இறங்கிப் போகலாம்’ என்று நினைத்தபடி மாடிப்படிகளில் ‘தடதட’வென இறங்கினான் ஆதி.

ஹாலில் கால் வைத்தபோது ஹால் வெறிச்சோடி இருந்தது.

‘என்னது இத்தன நேரம் அப்பா டைனிங் டேபிள் நாற்காலில ஒக்காந்து எனக்காக காத்துக்கிட்டுருப் பாரு.

நா மாடிலேந்து கீழே இறங்கி வந்ததுமே என்னப் பாத்து சிரிச்சுகிட்டே கிண்டலா எதாவது சொல்லு வாரு. ஆளையே காணும்!

நேத்து நைட்டே அம்மா சொன்னாங்கள்ள அப்பா டயர்டா இருக்குறதா சொல்லி படுத்துட்டாருன்னு. ஒடம்பு கிடம்பு சரியில்லையா?’ சின்னதாய்க் கவலைப்பட்டான் ஆதி.

‘அம்மாவையும்னா காணும்!’ என நினைத்தவன் ‘அப்பாவோட ரூமுக்குப் போய்னா பாக்கலாமா?’ என நினைத்தவனாய் அறையின் வாசலுக்குச் சென்று சாத்தியிருந்த கதவில் கை வைத்தபோது ‘ப்ளக்’ என்ற சப்தத்தோடு திறந்த கொண்டது கதவு.

“அப்பா! குட்மார்னிங்! என்னப்பா இது கண்ணெல்லாம் செவந்து கெடக்கு. மொகம் வாடிருக்கு. ஒடம்பு சரியில்லியாப்பா? தூங்கவே இல்லபோலத் தெரியுது?” ‘படபட’வென ஆதி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் “ம்.”.என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்துவிட்டு டைனிங் டேபிள் எதிரில் வந்தமர்ந்தார் கோவர்த்தன்.

“அப்பா! என்னப்பா ஒடம்பு ரொம்ப முடியிலயா? பேசாமவே இருக்க மாட்டீங்க! இப்ப பதிலே சொல்லாம போறீங்க!” சொல்லிக் கொண்டே தந்தையின் அருகில் வந்து அப்பாவின் கழுத்தில் கை வைத்துப் பார்த்தான்.

‘சூடாகவெல்லாம் இல்லை. ஜுரம் அடிப்பதாகத் தெரியவில்லை. பின் அப்பா ஏன் இப்படி இருக்கிறார்?’ புரியவில்லை ஆதிக்கு.

“அம்மா!” கொஞ்சம் சப்தமாகத் தாயை அழைத்தான்.

“தோ வரேன்!” அம்மா சுவாமி அறையில் இருந்திருக்க வேண்டும். அங்கிருந்துதான் விமலாதேவியின் குரல் வந்தது.

“ஆண்டனே! குலதெய்வமே கந்தசாமி! குடும்பதுல இப்ப எழுந்துருக்குற பிரர்ச்சனய நீதாம்ப்பா தீர்த்து வைக்கணும்! ரொம்ப பயமா கவலையா இருக்குப்பா! நீதாம்பா பாத்துக்கணும்!’ கண் மூடி ப்ராத்தனை செய்துவிட்டு விமலாதேவி சுவாமி அறையிலிருந்து வெளியே வந்தார்.

டைனிங் டேபிள்.

ஹாட் பாக்ஸ்களில் இட்லியும் சாம்பாரும் இருக்க, இரண்டு கிண்ணங்களில் சட்னிகள் இருக்க, அவற்றை தயாரித்து வைத்துவிட்டு ஒருமணி நேரம் அனுமதி பெற்று வெளியே சென்றிருந்தார் சமையல்காரம்மா சங்கரியம்மா.

கவிழ்த்து வைத்திருந்த தட்டுகளை நிமிர்த்தி வைத்து இட்லி வைத்து சாம்பாரை ஊற்றினார் விமலாதேவி.

“அம்மா நீங்கம்மா?” என்றான் ஆதி.

“ப்ச்!” என்றார் விமலாதேவி.

“என்னாச்சு ஒங்க ரெண்டு பேருக்கும்.உம்முனு இருக்கீங்க?”

“ஒன்னுமில்ல ஆதி! நீ சாப்புடு!”

“ம்கூம். அப்பா ஏன் இப்பிடி இருக்கார்? நீயும் கலகலப்பா இல்ல. எதாவது ப்ரர்ச்சனையா? அப்பா! சொல்லுங்கப்பா! ஏ இப்பிடி இருக்கீங்க! நக்கலும் நையாண்டியுமா பேசுவீங்க! அமைதியா இருக்கீங்க!”

‘என்னடா இது எப்பிடியும் இன்னிக்கு தனக்கும் நிமிஷாவுக்குமான காதலைச் சொல்லி அப்பா அம்மாவை சந்தோஷப்படுத்தி சம்மதம் வாங்கலாம்னு பாத்தா ரெண்டு பேருமே இப்புடி டல்லடிச்சுப் போயிருக்காங்க!’
தவிப்பாய் இருந்தது ஆதிக்கு.

“ஆதி!” விமலாதேவிதான் அழைத்துவிட்டு நிறுத்தினார்.

“என்னம்மா? சொல்லுங்கம்மா!”

“ஆதி! நேத்து மத்தியானம் நம்ம வீட்டுக்கு யார் வந்திருந்தாரு தெரியுமா?”

“யாரும்மா! யாரும்மா வந்தாங்க?”

“நீ சின்னப்புள்ளையா இருக்குறப்ப அப்பாவோட ஃப்ரெண்டு பத்ரினு ஒருத்தரு நம்ம வீட்டுக்கு அடிக்கடி வருவாறே ஞாபகமிருக்கா ஆதி ஒனக்கு?”

ஆதியின் முகம் ப்ரகாசமானது.

“அம்மா என்னம்மா இப்பிடிகேட்டுட்டீங்க? பத்ரி அங்கிள நல்லா ஞாபகம் இருக்குமா! எப்பிடிமா அங்கிள மறந்து போகும்? ஆனா அங்கிள் தீடீர்னு வராம போய்ட்டாரு! ரொம்ப ரொம்ப வருஷமாச்சுல்ல பத்ரி அங்கிள் வர்ரது நின்னுபோயி தீடீர்னு எப்பிடிம்மா?” அதிசயத்தோடு ஆர்வமும் மகிழ்ச்சியுமாய்க் கேட்டான் ஆதி.

“சந்தோஷமான விஷயம்தானே. ரொம்ப வருஷங்கழிச்சி பிரிஞ்சி போன ஃப்ரெண்டு அதுவும் உயிர்த்தோழரு திரும்பி வந்துருக்காரு அவர பாத்ததுக்கு சந்தோஷப்பட்டு ஜாலியா என்ஜாய் பண்ணாம அப்பா ஏன் இப்பிடி உம்முனு இருக்காரு!” அப்பாவைக் கிண்டல் செய்து இயல்புக்குக் கொண்டுவர முயன்றான் ஆதி.

“அப்பா பேசுங்கப்பா! நீங்க இப்டி இருக்குறது புடிக்கிலப்பா..

“ஆதி! ஒங்கிட்ட நா கொஞ்சம் பேசனும்!” என்றார் கோவர்த்தன்.

“நா ரெடிப்பா! நீங்கதாம்ப்பா உம்முனு இருக்கீங்க!”

“ஆதி உன் திருமணத்தப் பத்தி பேசணும்!”

‘என்னதான் தன் காதல் மேட்டரை இன்று இப்போது சொல்லிவிடுவது’ என்ற தீர்மானத்தோடு இருந்தாலும்
ஆதிக்கு லேசாய் தயக்கமாய்தான் இருந்தது.

ஆனாலும் “அப்பா நானும் ஒங்ககூட பேசணும்ப்பா!” என்றான் மனதை தயார்செய்து கொண்டு.

“மொதல்ல நாம் பேசுறேன்.நா பேசறத குறுக்க பேசாம முழுசா கேளு!” என்றார் கோவர்த்தன்.
குரலில் கண்டிப்பு தெரிந்தது.

“சொல்லுங்கப்பா!” என்றான் ஆதி, ‘எத்தனை பெரிய இடியைத் தன் தலையில் அப்பா இறக்கப்போகிறார்!’ என்று தெரியாமல்.

“ஆதி ஒனக்கு வயசு முப்பதாகப் போகுது. இனிமேலும் ஒன் வெளையாட்டுத்தனமான லட்சியமான ஒருபொண்ணப் பாத்ததும் மனசுல லைட்டு எரியிறது பச்சுனு வந்து மனசுல ஒட்டுறது இதல்லாம் இனிமே வேலைக்கு ஆகாது.

நானும் அம்மாவும் ஒருதீர்மானத்துக்கு வந்துட்டோம். நாங்களே ஒனக்குப் பொண்ணு பாத்துக் கட்டிவைக்கிறதுன்னு!”

“அப்பா!”

“ம்! நா பேசும்போது குறுக்க பேசாதன்னு ஏற்கனவே சொல்லிட்டேன்!”.சைகையாலும் அவனைப் பேசாமல் இருக்கும்படி கை ஆட்டினார்.

“த பாரு ஆதி! நேத்து எம் ஃப்ரெண்டு பத்ரி வந்திருந்தான். ஒனக்கும் பத்ரியத் தெரியும்.அவனும் நானும் எத்தன நெருங்கிய ஃப்ரெண்ட்ஸுங்கன்னும் ஒனக்குத் தெரியும்.

கடந்த இருபது வருஷமா அவுனுக்கும் எனக்கும் ஃப்ரெண்ஷிப்ல விரிசல் இருந்தது நிஜம்தான். ஆனா இப்ப எங்களுக்குள்ள இருந்த விரிசல் இல்லாம போயிடுத்து.நாங்க பழையபடி நண்பர்களாயிட்டோம்.

நீ சின்னப்பையனா இருந்தப்ப பத்ரி தன்னோட. பொண்ண நாலு வயசிருக்கும் நம்ம வீட்டுக்கு அழச்சிக்கிட்டு வருவான் ஒனக்கு ஞாபகம் இருக்கும்னு நெனைக்கிறேன்.

மானஸான்னு பேரு அந்த பொண்ணு பேரு..நீ கூட அந்த பொண்ணுகூட வெளையாடுவ. ஒன்னோட பொம்மையக்கூட அந்த பொண்ணுக்கு வெளையாட குடுப்ப ஞாபகம் இருக்கா?

அந்தப் பொண்ணு ஒன்னவிட நாலு வயசு சின்னவ. எம்பிபிஎஸ் முடிச்சிட்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா போய் ரெண்டு வருஷம் ஆகுதாம்.

நாளைக் காலேல ஒடம்புமுடியாம படுத்த படுக்கையா இருக்குற தன்னோட அம்மாவப் பாக்க வருதாம் அந்தப் பொண்ணு மானஸா.

பத்திரி கேக்குறான் ‘ஏங், கோவர்த்தன் ஃப்ரண்டா இருக்குற நாம ஏன் சம்மந்தியாகக் கூடாதுனு.’ அவன் சொன்னது சரிதானே? நானும் சரினுட்டேன்.”

ஆதிக்கு நெஞ்சு படபடத்தது.

“அப்பா என்ன சொல்ல வராரு? அப்பா!” என்றான் கொஞ்சம் சத்தமாக.

“ஏ என்னாச்சு ஆதி? மானஸா டாக்டருக்கு படிச்சிருக்கா அமெரிக்காவுல மேற்படிப்பு படிக்கிறா.

நல்ல அந்தஸ்தான குடும்பம். ஒரே பொண்ணு. பாக்கவுமம் ஃபோட்டோவுல நல்லா அழகாருக்குறா பொண்ணு.

அழகு, படிப்பு, அந்தஸ்த்து எல்லாமே இருக்கு. வேறென்ன வேணும்? நமக்கு ஈக்வலான குடும்பம்.அப்பறம் என்ன? நா ஓகே சொல்லிட்டேன்.

த பாரு பொண்ணு ஃபோட்டோவ. மானஸா எப்பிடிருக்கா பாரு. ஷர்ட் பாக்கெட்டிலிருந்து மானஸாவின் ஃபோட்டோவை எடுத்து ஆதியின் முன் வைத்தார் கோவர்த்தன்.

வியர்த்துப் போனான் ஆதி. “அப்பா வேண்டாம்ப்பா! என்னக் கேக்காம அங்கிள்ட்ட ஏம்ப்பா ஓகே சொன்னீங்க?”

“ஏ ஆதி ஒனக்கு பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வைக்க எங்களுக்கு உரிம இல்லியா?” என்ற விமலாதேவி “மொதல்ல பொண்ணு ஃபோட்டோவப் பாரு. அப்றம் நீ வேண்டாங்க மாட்ட!”

“அம்மா! வேண்டாம்மா! எந்த ஃபோட்டோவையும் நான் பாக்கப் போறதில்ல!”

“அப்ப நீ கல்யாணமே பண்ணிக்கப் போறதில்ல அப்டித்தானே?”

“அப்பா! அம்மா! நா.. நா.. ஒரு பொண்ண லவ் பண்றேன். அத ஒங்ககிட்ட சொல்லனும்னு நெனச்சுக்கிட்டேதான் மாடிலேந்து எறங்கி வந்தேன்!”

“யார? நீகூட எம்டியா இருக்குறியே சேப்பாக்கம் பிராஞ்சு அந்த ஆஃபீஸ்ல ரிசப்ஷனிஸ்டா வேல பாக்குதே நிமிஷா அந்தப் பொண்ண தானே நீ லவ் பண்ணுற?”

கேட்டதும் தூக்கி வாரிப் போட “அப்பா!” என்று கத்திக் கொண்டே எழுந்து நின்று விட்டான் ஆதி.
“அப்பா! அப்பா! எப்பிடிப்பா தெரியும்?”

“நீ அந்தப் பொண்ணோட சினிமாக்குப் போனதும் பீச்சுல கைக்குள்ள கைவெச்சு ஒக்காந்திருந்ததும் கைய கோத்துகிட்டு பீச் மணல்ல நடந்ததும் எல்லாமுந்தெரியும்.”

“அப்பா!” கத்திவிட்டான் ஆதி.

“த பாரு!” என்றபடி செல்லை எடுத்து சினிமா தியேட்டரில் ஆதியும் நிமிஷாவும் இடைவேளையின் போது பால்கனியிலிருந்து அருகருகே நடந்தபடி வெளியேறும் ஃபோட்டோவைக் ஆதியிடம் காட்டினார் கோவர்த்தன்.

ஃபோட்டோவைப் பார்த்த ஆதி அப்படியே அதிர்ந்து ஸ்தம்பித்துப் போய் நின்றான்.

“அ..ப்பா..”என்றான் குரல் திக்கியது.

“இதுக்கே இப்பிடியாயிட்ட. இதப் பாரு!” பீச்சில் நெருக்கமாய் ஆதியும் நிமிஷாவும் அமர்ந்திருக்க ஆதி நிமிஷாவின் கையை தன் கைக்குள் வைத்திருக்க அப்பாவின் கையிலிருந்த செல்லில் பதிவாகியிருந்த ஃபோட்டோவைப் பார்த்து வியர்த்துப் போனான் போனான் ஆதி.

“இதுக்கே இப்பிடி அதிர்ச்சியாயிட்ட..இதப் பாரு!” ஆதியும் நிமிஷாவும் கைகோர்த்தபடி பீச் மணலில் நடப்பதுபோல்.

“அப்பா! இது.. இது.. இந்த போட்டோல்லாம்..”

“யாரு அனுப்பினதுன்னு கேக்குறியா? யாரு அனுப்பினா என்ன? இந்த ஃபோட்டோல்லாம் நிஜம் தானே?

“அப்பா நிஜம்தான்ப்பா! நிமிஷாவ நா விரும்பறேம்ப்பா! அப்பா நீங்களும் அம்மாவும் என்ன கல்யாணம் பண்ணிக்கடா ஆதின்னு சொல்லும் போதெல்லாம் நா சொல்லுவேன்ல எந்தப் பொண்ணப் பாத்ததும் எம் மனசுல லைட் எரியுதோ எந்தப் பொண்ணோட உருவம் எம் மனசுல வந்து பச்சுனு ஒட்டுதோ அந்தப் பொண்ணதா நா கல்யாணம் பண்ணிப்பேன்னு!

“நிமிஷாவப் பாத்ததும் ஒம்மனசுல லைட்டு எரிஞ்சிது. அந்தப் பொண்ணோட உருவம் ஒன்நெஞ்சுல பச்சுனு ஒட்டிடிச்சு. அப்பிடித்தானே!”

“ஆமாம்ப்பா! ஆமாம்ப்பா! நிமிஷா ரொம்ப அழகுப்பா! ரொம்ப நல்ல பொண்ணுப்பா!”

“ஓ! பொண்ணு அழகு. நல்ல பொண்ணு!..இது மட்டும் போதுமா?”

“அப்பா நிமிஷா நம்ம அளவுக்கு வசதியானவங்க இல்லதா! ஆனா ரொம்ப நல்லவங்கப்பா! அப்பா நீங்களும் அம்மாவும் சொல்லுவீங்கள்ள..ஆதி நீ விரும்புற பொண்ணு ஏழவீட்டுப் பொண்ணா இருந்தாலும் பணம் ஒரு பொருட்டே இல்ல.

அந்தப் பொண்ணையே ஒனக்குக் கட்டிவைப்போம்.. சீக்கிரம் மனசுக்குப் புடிச்ச பொண்ணா பாத்து லவ் பண்ணுடாம்பீங்கள்ள!

நிமிஷா ஏழைனாலும் நல்ல பொண்ணுப்பா, அப்பா நா நிமிஷாவதா..”

“ஆதி நிறுத்து!” குரலை உயர்த்திக் கத்தினார் கோவர்த்தன்.”நீ விரும்புற பொண்ணு ஏழைப் பொண்ணா இருந்தா அதப்பத்தி எனக்கோ அம்மாக்கோ எந்தப் ப்ரர்ச்சனையும் இல்ல. ஆனா அந்தப் பொண்ணோட குடும்பப் பின்னணி நல்லா இருக்கணும்!”

“அப்பா!”

“அப்பா! என்னடா அப்பா? நீ விரும்புற அந்தப் பொண்ணோட குடும்பத்தப் பத்தி நா சொல்லவா?”

“அந்தப் பொண்ணோட அப்பங்காரன் காசு வெச்சு சீட்டாடுறவன்;.வேல வெட்டி இல்லாம ஊரச் சுத்துறவன்.
வீட்டுப்பொருளையே திருடிவித்து சீட்டு ஆடுறவன் சரியா?

அந்தப் பொண்ணோட தம்பி ஒரு மாற்றுத்திறனாளி சரியா? ஒரு தங்கச்சி காதல் கல்யாணம் பண்ணிருக்கா.
கடைசி தங்க மூளை வளர்ச்சி இல்லாத பொண்ணு.சரியா?

அம்மா வீட்டுக்கு ஒதவாத சீட்டாடிக் கணவனத் தட்டிக் கேக்காத பொம்பள! மூணு லட்சம் கடன் நீ விரும்புற நிமிஷாமேல! வசதி எதுமில்லாத வாடகை வீடு.”

பதில் சொல்ல முடியாமல் தவித்தான் ஆதி.

“இதெல்லாம் ஒரு ப்ரர்ச்சனையாப்பா! அந்தப் பொண்ணு எப்பிடிங்குறதுதானேப்பா முக்கியம். நிமிஷா ரொம்ப நல்ல பொண்ணுப்பா!”

“ஆதி ஒனக்கு அந்தப் பொண்ணப் புடிச்சிருக்குங்கறதுநால நாங்க ஓகே சொல்ல முடியாது.”

“ஏம்ப்பா! வேற என்ன வேணும்?”

“குடும்பப் பின்னணி நன்னாருக்கணும். அந்தப் பொண்ணக் கட்டிக்க நாங்க சம்மதம் குடுக்குறோம்னு வெச்சுக்க. நம்ம வீட்டு கல்யாணத்துக்கு யாருல்லாம் வருவாங்க.

நெனச்சுப் பாரு.வி.ஐ.பி.ங்க, அரசியல்வாதிங்க, பிஸினஸ் மென்க, அதிகாரிங்க, பெரிய பெரிய பணக்காரவுங்க, பெரிய மனுஷங்க, சொந்த பந்தங்கன்னு எத்தன பேரு வருவாங்க நெனச்சுப் பாரு!

அவுங்க கிட்டல்லா இது என் சம்மந்திக்காரவுங்க குடும்பமினு ஊர் சுத்துர வேல வெட்டி இல்லாத காசு வெச்சு சீட்டாடுற ஒத்தர இவுருதா எவ்வீட்டுக்கு மருமகளா வரப்போற பொண்ணுக்கு அப்பானு அறிமுகப்படுத்துவனா!

காலு வெளங்காத தம்பியையும், மூள வளர்ச்சி இல்லாத தங்கச்சியயும் அறிமுகப்படுத்துவனா? சொந்த பந்தம்லா சிரிக்காது?”

“அப்பா என்னப்பா நீங்களா இப்பிடிப் பேசுறீங்க? நிமிஷாதானேப்பா நம்ம வீட்டுக்கு வாழ வரப் போறாங்க இந்த வீட்டு மருமகளா? அவுங்க வீட்டுல மத்தவங்க எப்பிடி இருந்தான்ன? அவுங்கள்ளாம் நம்ம வீட்டுலயா வந்து தங்கப் போறாங்க?”

“பேசாத ஆதி. பொண்ணெடுக்குற வீடு ஏழ்மையா இருக்கலாம் ஆனா கௌரவமா இருக்கணும்.

நல்லது கெட்டது எதுக்கும் அவுங்க நம்ம வீட்டுக்கும் நாம அவுங்க வீட்டுக்கும் போறாப்புல வராப்புல இருக்கணும். ச்சே! அந்த வீட்டுக்கெல்லாம் நானும் அம்மாவுமா?

நம்ம சொந்த பந்தம்லாமும் அங்க வரணுமில்ல..காரித் துப்பமாட்டாங்க! இந்த வார்த்தைய நா சொல்லக்கூடாதுதா ஆனாலும் சொல்லத்தான் வேண்டிருக்கு.

ரெண்டு காலும் வெளங்காத தம்பியும் மனவளர்ச்சியில்லாத தங்கச்சியும் மூணுலட்சம் கடனும் யாருக்கு வேணும் இந்த சம்மந்தம்?

இதுங்கள்ளாம் கல்யாண சபையில வந்து நின்னாலே அவமானம்தான். எனக்குன்னு ஒரு கௌரவமிருக்கு சொஸைட்டியில. பணங்காசு இல்லாம இருக்கலாம். ஆனா அந்த குடும்பத்தச் சேர்ந்த மத்தவங்க பளிச்சுனு கௌரவமா இருக்க வேண்டாம்? பொண்ணு மட்டும் அழகாருந்தா போதுமா?”

“அப்பா நீங்களாப்பா பிறரப் பத்தி இப்பிடி கேவலமா பேசுறீங்க?”

“ஆமாம்! தனக்குனு வந்தா எல்லாரும் இப்பிடிதா பேசுவாங்க!”

“அப்பா! விட்டுப் போன ஒங்க ஃப்ரெண்ஷிப்பு மறுபடியும் ஒங்களத் தேடி வந்திருக்கு.

அத ஸ்ட்ராங்கா புதுப்பிச்சுக்க ஒங்க ஃப்ரெண்டோட பொண்ண எனக்குக் கட்டி வெக்க ஆசப்படுறீங்க.

அதானே அப்பா ஒங்க எண்ணம். என்னோட விருப்பம் ஒங்குளுக்கு பொருட்டே இல்ல. ஒங்க சந்தோஷத்துக்கு என்ன பலிகடா ஆக்குறீங்க!

“நிச்சயமா இல்ல! பத்ரி வராம இருந்து நானும் அவனும் சம்மந்தி ஆறதுன்னு பேச்சு எழாட்டாலும் அப்பகூட நிமிஷாவ நீ கட்டிக்கிறதா சொன்னா நா சம்மதிக்க மாட்டேன்.

எந்த விதத்துலயும் என் அந்தஸ்த்துக்குப் பொருத்தமில்லாத குடும்பம் அது!”

தடுமாறிப் போனான் ஆதி.

“அம்மா! அப்பா என்னம்மா இப்பிடிப் பேசறாரு? நா நிமிஷாவ ரொம்ப விரும்பறேம்மா.

நீங்க என்னம்மா சொல்றீங்க? அம்மா ப்ளீஸ்மா! அப்பாட்ட சம்மதம் குடுக்கச் சொல்லுங்கம்மா. நா ஒங்க ஆசப் புள்ள இல்லியா!

நீங்க அடிக்கடி சொல்வீங்கள்ள ஆதி கண்ணா! ஒவ்விரும்பம்தாண்டா எங்க விருப்பம்னு.அம்மா நிமிஷாதாம்மா என்னோட விருப்பம்.

நீங்க நிமிஷாவப் பாத்தா சந்தோஷத்துல அப்பிடியே அசந்து போய்டுவீங்கம்மா! நல்ல பொண்ணுமா நிமிஷா. நம்ம வீட்டுக்கு நல்ல மருமகாளா இருப்பாம்மா.

அம்மா! அம்மா! ப்ளீஸ் மா! அப்பாக்கு எடுத்துச் சொல்லுங்கம்மா!” அம்மாவிடம் சென்று அம்மாவின் கைபற்றிக் கெஞ்சினான் ஆதி. குரல் உடைந்து அழுதுவிடுவான் போலிருந்தது.

பிள்ளையின் கெஞ்சல் விமலாதேவியை தவிக்க வைத்தது. ஆனாலும் ‘கணவர் சொல்வதும் சரின்றே பட்டது.

“ஆதிகண்ணா! அப்பா சொல்றதும் சரிதானேப்பா. சொஸைட்டியில நமக்குனு ஒரு கௌரவமிருக்குல்ல? அப்பா எவ்வளவு பெரிய பிஸினஸ் மேன். அவரு சம்மந்தி வீடும் அந்த வீட்டச் சேர்ந்தவங்களும் பாக்க கௌரவமா இருக்கணும்ல.

வேண்டாம் அந்தப் பொண்ணோட ஸ்நேகம். விட்டுடு! பத்ரி அண்ணன் குடும்பம் நமக்கு எல்லா விதத்துலேயும் சமமானது. மானஸாவும் பாக்க நல்லாருக்கா! டாக்டருக்குப் படிச்சிருக்கா. எனக்கும் அப்பா
சொல்றதுதான் சரின்னு படுது.”

“முடியாது! முடியாது! நிமிஷாவத் தவிர வேற எந்தப் பொண்ணையும் நா நெனச்சுகூடப் பாக்கமாட்டேன்.

நீ பணக்கார வீட்டுப்பிள்ளைனு நிமிஷாவுக்குத் தெரியாதா? கைநீட்டி சம்பளம் வாங்குறவ, அந்த சம்பளம் குடுக்குறவன் மகனையே வளச்சுப் போட்ருக்கான்னா அவ எத்தனை பெரிய கைகாரியா இருக்கணும்?

த பாரு ஆதி! அந்தப் பொண்ணுக்கு தேவ பணம்தானா இருக்கும். கேக்குற பணத்த குடுத்துட்டு பை சொல்லிட்டு வந்திடு. பணக்கார வீட்டுப் பசங்க இதுபோல செய்யுறது ஒன்னும் புதிசில்ல!”

“அப்பா!” தன்னைக் கன்ட்ரோல் பண்ணிக் கொள்ள முடியாமல் காதைப் பொத்திக் கொண்டு கத்தினான் ஆதி.

“நிமிஷாவ இவ்வளவு கேவலமாவா பேசுவீங்க?” டேபிள் மீது தண்ணீரோடிருந்த டம்ளரை எடுத்து சுவற்றை நோக்கி வீசினான்.உடம்பு ‘கிடுகிடு’வென ஆடியது.

ஆதியின் கத்தல் கோவர்த்தனையும் விமலாதேவியையும் கொஞ்சம் அதிரத்தான் வைத்தது. ஆனாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

“த பாரு ஆதி! நீ எங்குளுக்கு ஒரே புள்ள. அத்தன சொத்துக்கும் ஒரே வாரிசு.நீ ஒனக்கு சமமான அழகு, படிப்பு அந்தஸ்துனு எல்லாம் அமைஞ்சிருக்குற பொண்ணுதா ஒன் வாழ்க்கைக்கு சரியா வரும்.

இளம் வயசுல உணர்ச்சிக்கு அடிமப்பட்டு எடுக்குற முடிவு சரியா வராது. பெத்தவங்க நல்லததா சொல்லுவாங்கனு நம்பு ஆதி!” தாழ்ந்த குரலில் இணக்கமாய்ச் சொன்னார் கோவர்த்தன்.

“இல்லப்பா! மன்னிச்சிடுங்கப்பா!” நிமிஷாவத்தவிர வேற எந்தப் பொண்ணையும் ஏறெடுத்தும் பாக்கமாட்டேன்பா! நிமிஷா பணத்துக்காக என்ன விரும்பல!”

“கடைசியா நீ என்ன சொல்ற ஆதி?”

“நிமிஷாதாம்ப்பா எனக்கு மனைவியா வரணும். அதுக்கு நீங்களும் அம்மாவும் சம்மதிக்கணும்ப்பா!”

“ஆதீ!” ஆவேசமாய்க் கத்த ஆரம்பித்தார் கோவர்த்தன்.

“நீ மட்டும் பத்ரியோட மகள கல்யாணம் பண்ண சம்மதிக்கிலன்னுவையி நேத்துதா ஒருபாட்டில் தூக்க மாத்திர வாங்கிருக்கேன். அப்பிடியே அத்தன மாத்தியையும் முழுங்கிடுவேன். நா செத்தப்புறம் அந்தப் பொண்ணு நிமிஷாவ நீ கட்டிக்க..சும்மா பயமுறுத்துறதா நெனைக்காத..நிச்சயமா எம் முடிவு அதாதான் இருக்கும்.”

“அய்யோ! என்னங்க பேசுறீங்க நீங்க?..நீங்க போனப்புறம் நா மட்டும் எதுக்குங்க உயிரோடு இருக்கணும். நானும் பாட்டில் நிறைய தூக்கமாத்ர வெச்சிருக்கேன்.

ஒங்களோடு சேர்ந்து நானும் சாப்புடறேங்க. ரெண்டு பேரும் ஒன்னாவே சாவோம்ங்க!” கதறினார் விமலா தேவி.

“ஞாயித்துக்கெழம பத்ரி வீட்டுக்குப் போவுறோம். அவம் பொண்ணப் பாக்குறோம்.நீயும் வர நிமிஷா கிமிஷாவெலாம் தூக்கிப் போடு. மறுத்தனு வையி என்னையும் அம்மாவையும் உசிரோட பாக்க முடியாது” சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டார் கோவர்த்தன்.

கேவிக்கொண்டே அந்த இடம் விட்டு நகர்ந்து சென்றார் விமலாதேவி.

டைனிங்டேபிளில் முழங்கைகளை ஊன்றி கைகளில் தலைவைத்து அமர்ந்திருந்தான் ஆதி. உடல் குலுங்கியது. ‘அவன் அழுகிறானோ?’

உடலில் தெம்பின்றி வற்றிப் போனதுபோல் தோன்றியது ஆதிக்கு. அதிக அளவு படபடப்பாய் இருந்தது.

எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தானோ? மெல்ல எழுந்து மாடிப்படி நோக்கி நடந்தவனின் கால்களில் படியேறக்கூட தெம்பில்லை.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

Comments

“தென்றல் வந்து என்னைத் தொடும் பகுதி-25” மீது ஒரு மறுமொழி

  1. […] தென்றல் வந்து என்னைத் தொடும் பகுதி-25 தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 24 தென்றல் வந்து என்னைத் தொடும் பகுதி-25 […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.