தென்றல் வந்து என்னைத் தொடும் பகுதி-26

மாடிப்படிகளில் ஏறவும்கூட கால்களில் பலமின்றிப் போனவனாய் ஒவ்வொரு படியாய் மெல்ல மெல்ல ஏறினான் ஆதி.

‘தடதட’வென்று படிகளில் ஏறும் ஆதி முற்றிலுமாய் மனம் உடல் இரண்டிலும் பலமிழந்து போயிருந்தான்.

மனம் கனத்துப் போயிருந்தது. கேலியும் கிண்டலும் வேடிக்கையும் விளையாட்டுமாய் இருப்பவன் இப்போது முழுவதுமாய் மாறிப் போயிருந்தான்.

தன் அறைக்குள் நுழைந்தவன் கட்டிலில் விழுந்து கண்களை மூடிக் கொண்டான்.

‘இதுவரை அப்பாவும் அம்மாவும் இவ்வளவு கடுமையாய் நடந்து கொண்டதே இல்லை.

நான் ஆசைப்பட்ட எதையும் அவர்கள் வேண்டாமென்று சொன்னதே இல்லை.

ஆனா இன்னிக்கி? நா விரும்பும் வாழ்க்கைக்கு சம்மதம் சொல்லாம நம்ம புள்ள மகிழ்ச்சியா வாழட்டும்னு
சந்தோஷத்தோடு விட்டுக் கொடுக்காம, நிமிஷாவை மறந்துடுங்குறாங்க. எவ்வளவு எளிதா சொல்லிட்டாங்க.

நா நிமிஷாவை மறக்குறதா? நிமிஷா இல்லாத வாழ்க்கையை நெனச்சுக்கூட பார்க்க முடியாது.

நிமிஷாவ மறந்துவிட்டு அப்பா சொல்லும் பொண்ணுக்குத் தாலி கட்றதா? அதுக்கு நான் செத்துப் போயிடலாம்.

அப்பா நா அவரோட ஃப்ரெண்டு பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும், நிமிஷாவ மறந்துடணும் இல்லாட்ட தூக்க மாத்திரய முழுங்கி செத்துப் போயிடுவேங்கிறார்.

அம்மா..அம்மாகூட எப்பிடி இப்பிடி மாறிப் போனாங்க. அவுங்களும்னா அப்பாவோட சேந்துகிட்டு தானும் சாவேன்னு பயமுறுத்துறாங்க..

அப்பா, அம்மா நீங்க ரெண்டு பேரும் சாக வேண்டாம். நிமிஷா இல்லாம நீங்க விரும்புற பொண்ண கல்யாணம் பண்ணி நரக வாழ்க்க வாழுறதுக்கு நா செத்துப் போயிடலாம்.

ஒங்குளுக்குதான் தூக்க மாத்ர கெடைக்குமா எனக்கும் கெடைக்கும். நா போயிடறேன்!’

‘அய்ய! ஆதி! நீ ஆம்புளதானே?

காதலிக்கிற பொண்ண கட்டிக்க முடியாம வீட்டுல பிரர்ச்சன வந்தா ஒடனே சாகனும்னு முடிவுக்கு வந்துடுவியா?

போராடி ஜெயிக்கிறத பாரு.

நீ செத்துட்டா நிமிஷா இவம் போனா போகட்டும் இன்னூத்தன்னு நெனைக்குமா?

அது நீ போய்ட்டீன்னா உசிரோட இருக்கும்கிற?

த பாரு செத்துடுவேன் செத்துடுவேன்னு பயமுறுத்துறவங்கள்ளாம் ஒடனே செத்துட மாட்டாங்க! சும்மா பூச்சாண்டிதா காட்டுவாங்க.

கொஞ்சம் யோசன பண்ணி காய நகத்து! எல்லாம் சரியா வரும். அதவுட்டுப்புட்டு சாவுறேங்குற!’

மனம் சொல்லும் தைரிய வார்த்தைகளெல்லாம் எடுபடவில்லை. மொத்தமாய்த் தளர்ந்து போனான் ஆதி.

‘அப்பா எவ்வளவு அன்பா பாசமா இருப்பாரு. அப்பா மாரி இல்லாம ஜாலியா கிண்டலும் கேலியுமா ஒரு ஃப்ரெண்டாட்டம் பழகுவாரு.

நிமிஷா விஷயத்துல எப்பிடி ரிஜிட்டா நடந்துக்கிறாரு. நிமிஷாவ எவ்வளவு கேவலமா பேசுறாரு.

நா பணக்கார வீட்டுப் பையன்னு கைக்குள்ள போட்டுகிட்டாங்களாம்.

பாவம் நிமிஷா!

நான் ஏழக் குடும்பத்தச் சேர்ந்தவ! ஒங்கள லவ் பண்ண எனக்குத் தகுதி கெடையாது.

எங்குடும்பத்துல அப்பா இப்பிடி, அம்மா இப்பிடி, தம்பி, தங்கைங்க இப்பிடி நா ஒங்க நிறுவனத்துல வேல பாத்து கைநீட்டி சம்பளம் வாங்குறவ.

எங்குடும்பம் எந்த வசதியுமில்லாத வாடக வீட்டுல குடியிருக்குற குடும்பம். நீங்க எப்பேர்ப்பட்ட பணக்காரவுங்க. நா ஒங்குளுக்குக் கொஞ்சம் கூட பொருத்தமில்லாதவ அப்பிடின்னு எவ்வளவு ஓபனா சொன்னாங்க.

அவுங்களா என்னை பணத்துக்காக கைக்குள்ள போட்டுண்டவுங்க. எவ்வளவு அபாண்டமான பேச்சு!’.மனம் வலித்தது ஆதிக்கு

வாழ்க்கையே சூனியமாகிப் போனதுபோல் தோன்றியது. மனம் மரவட்டையாய் சுருண்டு போனது.

‘நானும் நிமிஷாவும் சினிமா தியேட்டரில் இருந்த போதும் கடற்கரையில் அமர்ந்திருந்த போதும் தங்களை ஃபோட்டோ எடுத்து அப்பாவுக்கு அனுப்பியது யார்?’ என்ற கேள்வியும் மனதை அரித்தது.

மணி பதினொன்று. ஆபீஸ் போகப் பிடிக்கவில்லை.

‘நிமிஷா வந்திருப்பாங்க. நா ஆபீஸ்க்கு வராத காரணம் புரியாம தவிப்பாங்க.

நாளைக்கு நம்ம விஷயம் பத்தி அப்பா அம்மாட்ட பேசுறேன் நிமிஷான்னு நேத்து அவுங்ககிட்ட சொன்னப்ப எப்பிடி பயந்தாங்க.

ஆதி ஒங்க அம்மாப்பா என்ன ஏத்துக்குவாங்களான்னு எத்தன தடவ கேட்டுக்கிட்டே இருந்தாங்க.

நேத்து நைட்டுகூட நம்பிக்கையோட அவுங்ககிட்ட ஃபோன்ல பேசினப்போ எப்பிடி பயந்தாங்க! என்ன ஏத்துப்பாங்களா ஏத்துப்பாங்களானு கேட்டுக்கிட்டே இருந்தாங்க.

ஆஃபீஸ்கும் போகாம ஃபோனும் பண்ணாம இருந்தா என்ன நெனைப்பாங்க நிமிஷா! தவிச்சுப் போகமாட்டாங்க?’ மூடியிருந்த கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

‘ஆண் என்றால் அழக்கூடாதா என்ன?’ வாய்விட்டு அழவேண்டும் போல் இருந்தது ஆதிக்கு.

‘இனிமே ஆபீஸ்க்குலாம் போக்கூடாது. நிமிஷா மூஞ்சில எப்பிடி முழிக்கிறது? நா ஆபீஸ்க்கும் போகாம ஃபோனும் பண்ணாம இருந்தா நிமிஷா என்ன நெனைப் பாங்க?

ஆதியோட அப்பா அம்மா சம்மதம் குடுக்கலன்னுதானே முடிவுக்கு வருவாங்க?

ஆதி ஏன் ஆஃபீஸும் வல்ல, ஃபோனும் பண்ணலன்னு நெனச்சு அவுங்களே ஃபோன் பண்ணுவமேன்னு பண்ணினா? ஃபோன எடுத்து என்னனு சொல்லுவேன்?’ செய்வாதறியாது தவித்தான் ஆதி.

“ஆதி!” அருகில் நின்று அம்மா அழைப்பது காதில் விழுந்தது. கண்களைத் திறக்கவில்லை ஆதி.

“ஆதி!” என்றபடி அவன் நெற்றியில் கை வைத்தார் விமலாதேவி.

“ஐயோ! இதென்ன நெருப்பா சுடுது! ஆதி! ஆதி! அவன் தோள் தொட்டு அசைத்தார்.

“ஆதி கண்ணத் தொறந்து பாரு!”

‘ம்கூம்!’ ஆதி கண்ணைத் திறக்கவில்லை.

“ஆதி மணி பன்னண்டு ஆகப் போவுது..ஒன்னுமே சாப்புடாம இருந்தா எப்பிடி? காலேலேந்து ஒருகாபிகூட குடிக்கில! காய்ச்சல் வேற அடிக்கிது.தோ நா போய் சாப்பாடு கொண்டு வரேன். புடிச்சத சாப்ட்டு காய்ச்சலுக்கு மாத்ர போடு!”

“அம்மா தயவு செய்து போய்டுங்க! என்னத் தனியா இருக்க விடுங்க!”

“ஆதி என்னடா இப்பிடிப் பேசற? போய்டுங்ககுற. நா ஒ அம்மாடா!”

விரக்தியாய் சிரித்தான் ஆதி.

“ஆதி நீ ஏ இப்பிடி இருக்கேன்னு தெரியிது..ஆனா அப்பாவ எதிர்த்து என்னால எதுவும் பேச முடியல. நா ஒம்பக்கமும் பேசமுடியாம அப்பா பக்கமும் நிக்க முடியாம தவிக்கிறேன் ஆதி!

நீ இப்பிடி கலங்கிப்போய் படுத்துக் கெடக்குறதப் பாத்தா பெத்த வயிறு தவிக்குது ஆதி!”

“தயவு செய்து நடிக்காதிங்க! போய்டுங்க!”

“ஆதி அம்மா நடிக்கில! அப்பாவும் நானும் ஒனக்கு நல்லததா சொல்லுவோம்; செய்யுவோம்..இப்ப எங்களப்பாத்தா ஒனக்கு எதிரியாதா தெரியும். ஆதி! மறுபடியும் சொல்றேன்

நிமிஷா! அதானே அந்தப் பொண்ணு பேரு! அந்தப் பொண்ணு ஏழையா இருக்குறதுல ப்ரர்ச்சனையே இல்ல..அந்தப் பொண்ணோட குடும்பம் நாம சம்மந்தம் வெச்சுகுற அளவுக்குத் தகுதியானதில்ல.

பாத்திரம் அறிந்து பிச்சையிடு.. கோத்திரம் அறிந்து பெண்ணைக் குடுன்னுவாங்க. கோத்திரம்னா குடும்பம்னு
நாம எடுத்துக்கணும்.

இது பொண்ண கல்யாணம் பண்ணிக் குடுக்குறதுக்கு மட்டுமில்ல; பொண்ணு எடுக்குறதுக்கும் பொருந்தும். அந்தப் பொண்ணோட குடும்பம் நமக்குத் தகுதியானதில்ல!”

அம்மாவின் பேச்சு ஆத்திரத்தைத் தந்தது ஆதிக்கு.

சட்டென எழுந்து அமர்ந்தான் ஆதி.

“நிமிஷாவோட அப்பா சீட்டாடுவாருங்குறது ஒங்களுக்கு குறையாருக்குல்ல.

அவுரு சீட்டு ஆடுறவாருன்னு அவுரு நெத்தியில எழுதியா ஒட்டிருக்கும் அவர கல்யாணத்துல பாக்குறவுங்க தெரிஞ்சிக்க. தண்ணியடிக்கிறவன் பொண்ணு புள்ளைக்கெல்லாம் கல்யாணமாகாமயா இருக்கு?

நிமிஷாவோட தம்பி மாற்றுத்திறனாளியா இருக்குறதுக்கும் தங்கச்சி மூள வளர்ச்சி இல்லாம இருக்குறதுக்கும் நிமிஷா என்ன செய்வாங்க? அவுங்க குடும்பம் வாழவே தகுதியற்ற குடும்பமா?

அப்பாவுக்கும் ஒங்குளுக்கும் நிமிஷா ஏழங்கறதுனால புடிக்கில. அதுனால தட்டிக் கழிக்க ஆயிரம் காரணம் சொல்றீங்க!

அப்பாவோட ஃப்ரெண்டு பணக்காரரு! அவுருகிட்ட இருக்குற பணம் அப்பாவுக்குப் பெரிசா தெரியுது. அதா அப்பா அவுரு ஃப்ரெண்ட சம்மந்தி ஆக்கிக்கணுனு துடிக்கிறாரு.

பணத்துக்காக பெத்த புள்ளையோட வாழ்க்கையே அடகுவைக்க நினைக்குற ஒங்கள அப்பா அம்மான்னு கூப்டக்கூட அப்பா அம்மான்னு நெனைக்கக்கூட புடிக்கில போய்டுங்க! போய்டுங்க!” கத்தினான்.

கணவருக்கும் பெற்ற பிள்ளைக்கும் நடுவில் மாட்டித் திண்டாடினார் விமலாதேவி.

கணவருக்குச் சாதகமாகப் பேசினாரே தவிர மகனின் நிலைமை அவரைத் தவிக்க வைத்தது.வேதனைப்படுத்தியது.

‘பெற்ற மகனுக்காக நிமிஷாவை ஏற்றுக் கொள்ளலாமே!’ என்று தோன்றியது. ஆனாலும் கணவரின் முடிவும் சரியாகவே பட்டது அவருக்கு.ஊசலாடும் மனதோடு தவித்தார் விமலா தேவி.

“ஆதி! நா போறேன். ஆனா சாப்டாம கெடந்து ஒடம்ப கெடுத்துக்காத பிடிவாதம் பிடிச்சு ஆகப்போவது ஒன்னுமில்ல!”

கீழே இறங்கிப் போனார் விமலாதேவி.

அவர் இறங்கிச்சென்ற மறுநிமிடம்.செல்ஃபோன் சிணுங்கியது.

‘நிமிஷா!’

மனதை இரும்பாக்கி நிமிஷாவின் அழைப்பை ஏற்காமலிருந்தான். அழைப்பு நின்றதும் ஸ்விட்ச்ஆஃப் செய்தான்.

“நிமிஷா!” என்றான் வாய்விட்டு. கண்கள் கலங்கிப் போயின. நெஞ்சை துக்கமும் வேதனையும் கொத்தாய் அடைத்தன.

அலுவலகம்.பணியில் மனம் ஈடுபடவில்லை நிமிஷாவுக்கு.

‘மணி பன்னண்டுக்கு மேல ஆயிடுத்து. ஆதிய இன்னும் காணும்.ஏ வல்ல? நேத்திக்கு நைட் ஃபோன்ல பேசும்போது நாளைக்கு காலேல நம்மளப் பத்தி அப்பா அம்மாகிட்ட பேசுவேன் நிமிஷா!

நிச்சயமா அவுங்க சம்மதம் குடுப்பாங்க! பயப்படாதீங்க நிமிஷா! எங்க அப்பா அம்மா ஒங்கள ஏத்துப்பாங்க நாளைக்கு நல்ல சேதியோட ஒங்கள ஆஃபீஸ்ல சந்திப்பேன்னு சொன்னாரு!

மணி பன்னண்டாகியும் இன்னும் வல்ல. பேசிருப்பாரா?

இல்ல இன்னும் பேசிக்கிட்ருப்பாரா?’

பயமாய் இருந்நது நிமிஷாவுக்கு.

‘ஆதியோட அப்பா அம்மா என்ன சொல்லுவாங்களோ? சொல்லியிருப்பாங்களோ தெரியலயே! கடவுளே முருகா! நீதான் தொண! முருகா! முருகா! என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டாள்.

அடிக்கடி வாசற்படி பக்கமே திரும்பித் திரும்பிப் பார்த்தாள். யாராவது நடக்கும் சப்தம் கேட்டாலும் ‘ஆதியாய் இருக்குமோ!’ என்று ‘விருக்’கென திரும்பிப் பார்ப்பதும் ஏமாறுவதுமாய் இருந்தாள்.

ஒருகட்டத்தில் ரொம்பவுமே பயமாய் இருந்தது நிமிஷாவுக்கு.

‘நாமளே ஆதிக்கு ஃபோன்னா செய்வமா?

இதுக்குமேல முடியல! ரெஸ்ட் ரூம் செல்வது போல் போனாள்.

ஆதியின் பெயர் தொட்டு கால் செய்யும்போது விரல் நடுங்கியது.

ஆதி சொல்லப் போகும் பதிலில்தான் தன் உயிரே இருப்பதாகத் தோன்றியது.

‘ம்கூம்’ ரிங் சவுண்ட் முழுவதுமாய் ஒலித்து ஓய்ந்தது. ஆதி எடுக்கவில்லை.

வியர்த்துப் போனாள் நிமிஷா. பயம் மனதைக் கவ்வியது.

திரும்ப இன்னொருமுறை கால் செய்தாள். ‘ஸ்விச் ஆஃப்!’ என பதில் கிடைத்தது. கால்கள் நடக்கவே தடுமாறின.

வந்த அழுகையை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள். திரும்ப தன்னிடத்தில் வந்து அமர்ந்தாள்.

நிமிஷாவின் ஒவ்வொரு சின்ன அசைவையும் தன் இருக்கையிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த ப்ரியம்வதாவின் மனதில் சந்தோஷம் ப்ரவாகமெடுத்தது. இதழ்களில் குரூரச் சிரிப்பு.

‘நிமிஷா, எம்.டி.ஆதித்யா அதா ஒ ஆளு இன்னும் வரக்காணுமேன்னு நீ தவிக்கிறது அப்பட்டமா
தெரியுது.

ஒ! அந்தஸ்துக்கு ஒனக்கு ஆதித்யா போல பெரும் பணக்கார வீட்டுப்புள்ள அதும் கோடிக்கணக்கான சொத்துக்கு ஒரே வாரிசு கேக்குதா!

ஒ அழகாலதானே ஆதித்யாவ கைக்குள்ள போட்டுகிட்ட. அனுப்பிட்டேன்ல ஃபோட்டாவ ஆதித்யா அப்பாவுக்கு அதா நம்ம நிறுவன ஓனருக்கு. அதுதா அந்த ஃபோட்டோதா வேல செய்யிதுன்னு நெனைக்கிறேன்.

ஆதித்யா வீட்டுல ஃபோட்டோவால என்ன நடக்குதோ? அதா ஆதித்யா வல்லயோ?’ என்று நினைத்தவளுக்கு

‘சரி நாம அனுப்புன ஃபோட்டோவால ஒருவேள நிமிஷாவும் ஆதித்யாவும் லவ் பண்ணுறாங்கங்கறது தெரிஞ்சி ஆதித்யாவப் பெத்தவங்க இவுங்க காதலுக்குப் பச்சக்கொடிகூட காட்டலாம்!

யார் கண்டா என்ன நடக்கும்னு.கோடிஸ்வர வீட்டுக்கு மருமகளா ஆகப்போகுற அதிஷ்டம் நிமிஷாக்கு இருக்கோ என்னவோ?

இவுளுக்கு வந்த வாழ்வப் பாரு!

கடவுளே இவுளுக்கு அவ்வளவு பெரிய அதிஷ்ட்டத்த குடுத்துடாத!’ வேண்டிக் கொண்டாள்.

மனதில் பொறாமை கொழுந்து விட்டு எரிந்தது.

வீட்டுக்கு வந்தபோது அம்மா தீக்ஷிதா வீட்டிலிருந்து வந்திருந்தார்.

அம்மாவிடம் எது பற்றியும் விசாரிக்கவில்லை; சாப்பிடப் பிடிக்கவில்லை; ‘நிமிக்கா! நிமிக்கா!’ என்று கத்திக்கொண்டு தன்னிடம் ஓடி வந்த வைஷாலியிடம்கூட பேசவில்லை.

இரவு ஒன்பது மணிக்கெல்லாம் தன் அறைக்கு வந்து கதவைத் தாழிட்டுக் கொண்டு படுக்கையில் படுக்காமல் உட்கார்ந்தே இருந்தாள் நிமிஷா.

மனம் கனத்துப்போய் அழுதழுது கண்களும் முகமும் வீங்கிப் போய்க் கிடந்தன.

ஆதி ஃபோன் பண்ணவே இல்லை.

நிமிஷா காலை அலுவலகத்தில் ஆரம்பித்து வீடு திரும்பும்போது ஆட்டோவிலும் பஸ்ஸிலும் ட்ரெயினிலும் என்று ஆதிக்கு ஃபோன் செய்து செய்து ‘ஸ்ட்விட்ச் ஆஃப்’ என்ற பதிலைக் கேட்டுக் கேட்டு பயந்து போயிருந்தாள்.

‘இரவாவது ஆதி ஃபோன் செய்வார்!’ என்ற நம்பிக்கையோடு படுக்கையில் அமர்ந்திருந்தவள் ஆதியின் ஃபோனுக்காகக் காத்திருந்து காத்திருந்து ஏமாந்து ஏமாந்து தானே கால்பண்ணிக் கால்பண்ணி ஸ்விட்ச்ஆஃப் என்ற ரெகார்டட் வாய்ஸைக் கேட்டுக் கேட்டு ஏமாற்றம் தாங்க முடியாமல் ‘இனி ஆதி தனக்கில்லை என்ற முடிவுக்குவந்து சப்தமின்றி கைகளுக்குள் முகம் புதைத்து அழுதாள்.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

Comments

“தென்றல் வந்து என்னைத் தொடும் பகுதி-26” மீது ஒரு மறுமொழி

  1. […] தென்றல் வந்து என்னைத் தொடும் பகுதி-26 […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.