தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 27

ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணிக்கெல்லாம் கோவர்த்தனுக்கு பத்ரியிடமிருந்து கால் வந்தது.

“குட்மார்னிங் கோவி!”

“வெரி குட்மார்னிங் பத்ரி!”

“கோவி! நீ இங்க வரத்துக்கு ரெடியாயிட்டயா?ஆதித்யா என்ன சொல்றாப்ல? தங்கச்சி என்ன சொல்றாங்க? நான் கார் எடுத்து வரவா?”

“பத்ரி! நீ கார்லாம் எடுத்து வரவேண்டாம். நாங்களே வரோம். சரியா! ரொம்ப அதிகமா அரேன்ஞ்மெண்ட்லாம்
பண்ணாத! சிம்பிளா போதும்.”

“ஓகே கோவி!” சிரித்தார் பத்ரி.

“எத்தன மணிக்கு வர கோவி?”

“ம்.. இன்னும் பத்து நிமிஷத்துல நானே சொல்றேனே!”

“ஓ.கே.கோவி! வரவேற்க காத்துக்கிட்ருக்கேன்!”

“விமலா!” மனைவியை அழைத்தார் கோவர்த்தன்.

முகம் வாடிப்போயிருக்க “ம்.. சொல்லுங்க!” என்றபடி வந்து நின்றார் விமலாதேவி.

“விமலா ஒம் புள்ளதா உம்முனு இருக்கான்னா நீயும் இப்பிடி இருக்க?”

“ப்ச்!” என்றார் விமலாதேவி.

மகன் சந்தோஷமின்றி இருப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“ஏங்க! நமக்கிருப்பது ஒரே புள்ள! அவன் சந்தோஷம்தானே நம்ம சந்தோஷம். அவனுக்கு விருப்பமில்லாத ஒன்ன நாம ஏன் செய்யணும்? அவன் விருப்பப்படியே அந்தப் பொண்ணே நம்ம வீட்டுக்கு மருமகளா வரட்டுமே?”

“விமலா! ஆதிக்கு நேர நீ இப்பிடி பேசாத! அப்புறம் ஒன்ன வெச்சு காரியம் சாதிக்கப் பாப்பான் ஆதி!

இப்பவும் சொல்றேன் அந்த நிமிஷாப் பொண்ண நா நிராகரிக்கில! ஆனா அந்த குடும்பம் எனக்குப் பிடிக்கல.
பிடிக்கிலன்னா விடு விமலா!

ஆதி கல்யாணம் ஆனா சரியாயிடுவான்.அப்பறம் நிமிஷாவாவது! கிமிஷாவாவது!” அலட்சியமாகப் பதில் சொன்னவர் அதற்கு மேலும் மனைவியிடம் பேசுவதைத் தவிர்க்க அந்த இடத்தைவிட்டு அகன்றார்.

“ஆதி! பத்ரி அங்கிள் எப்பவரீங்கனு கேட்டு ஃபோன் பண்ணாரு! .அப்பா நாலு மணிக்கு வரதா சொல்லிருக்குறாரு! மணி மூணு ஆகுது கெளம்புறியா?” கேட்ட அம்மாவை வெறித்துப் பார்த்தான் ஆதி.

ஆதி இரண்டே நாளில் சட்டென இளைத்துப் போயிருந்தான். கண்களைச் சுற்றிக் கருவளையமிட்டிருந்து.

லேசாய்த் தாடி வளர்ந்திருந்தது. முகத்தில் சோகம் அப்பியிருந்தது. ஆனாலும் அழகாவே இருந்தான் ஆதி

“ஆதி! கிளம்புறியா?” மீண்டும் அம்மா கேட்டபோது “முடியா”தென்றான்.

“முடியாதா?” அதிர்ந்து போனார் விமலாதேவி.

“ஆதி! அப்பா மாடி ஏறி வந்து கிளம்புன்னு சொல்றாப்புல வெச்சுக்காத!” கண்டிப்போடு சொல்லிவிட்டுக் கீழே இறங்கிப் போனார்.

நிமிஷாவைப் பார்க்கவென்றால் பார்த்துப் பார்த்து ட்ரெஸ் அணியும் ஆதி கையில் கிடைத்த பேன்ட் ஷர்ட்டை அணிந்து கொண்டு ஏனோ தானோவென்று தலைவாரிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

செல்ஃபோனைக் கையிலெடுத்து ஆன் செய்தபோது நிமிஷாவிடமிருந்து நாற்பத்திரெண்டு கால்கள் வந்திருந்திருப்பது தெரிந்தது. கண்களைக் கண்ணீர் மறைத்தது.

மாடியிலிருந்து படிகளில் ‘தடதட’வென இறங்கிவரும் ஆதி ஒவ்வொரு படியாய் இறங்கி வந்தான். முகம் வறண்டு போயிருந்தது.

ஹாலுக்கு வந்து மௌனமாய் நின்றான்.

அப்பாவைப் பார்த்ததுமே ‘சடசட’வெனப் பேசுவதும்
கிண்டலடிப்பதும் ஜோக்கடிப்பதுமாய் சிரிக்கச் சிரிக்கப் பேசுவதுமாய் இருக்கும் ஆதி, யார் வீட்டு ஹாலிலோ நிற்பதுபோல் அமைதியாய் நிற்பது பார்த்து விமலாதேவியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. கணவரின் மேல் கோபம்கூட வந்தது.

தனது அறையிலிருந்து வெளியே வந்த கோவர்த்தனின் பார்வை ஹாலில் அமைதியாய் அந்நியன் போல் நின்றிருந்த ஆதியின் மேல் விழுந்தது.

அவர் இப்படி அமைதியாய் ஆதியைப் பார்த்ததே இல்லை. அவருக்கே மகனைப் பார்க்க குற்ற உணர்ச்சியாய் இருந்தது.

சாதாரணமாயிருந்தால் நிமிட நேரம் சும்மா இருக்க மாட்டான் ஆதி. அப்பாவை விளையாட்டாய் வம்பிழுத்து கிண்டல் செய்து சிரிக்க வைப்பவன் இப்போது மௌனமாய் நின்றிருந்தான்.

அடையாறு. பெரும் பணக்காரர்கள் மட்டுமே வாழக்கூடிய, தெருவைப் போல் பிரம்மாண்டமான தனித்தனி பங்களாக்கள்.

சுத்தமாய் துடைத்து வைத்தாற் போல் ‘பளிச்’சென்ற அகலமான தெரு.

பங்களா வாசலிலேயே நின்றிருந்தார் பத்ரி என்பதால் வீட்டைக் கண்டுபிடிப்பது சிரமமாக இல்லை.

வாசலில் வந்து நின்ற கோவர்த்தனின் காரருகே வந்து நின்றார் பத்ரி. முகமெல்லாம் சந்தோஷம்.

டிரைவர் இறங்கிக் கார்க் கதவைத் திறக்க காரை விட்டுக் கீழே இறங்கினார் கோவர்த்தன்.

பத்ரியும் கோவர்த்தனும் கட்டிப்பிடித்துத் தங்கள் நட்பை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.

விமலாதேவியும் ஆதியும் அமர்ந்திருந்த பின் சீட்டுக் கதவைத் தானே திறந்து விட்டார் பத்ரி.

கீழே இறங்கிய விமலாதேவியை வரவேற்றுக் கைகூப்பி வணங்கினார். “ஹாய்! ஆதித்யா!” என்று சொல்லி ஆதிக்குக் கை கொடுத்தார்.

பங்களாவின் உள்ளே நுழைந்ததுமே அதன் பளபளப்பும் பகட்டும் பத்ரியின் செல்வநிலையைப் பறை சாற்றின.

ஆனாலும் கோவர்தனும் பத்ரியின் அந்தஸ்துக்கு சற்றும் சளைத்தவரல்ல என்பதால் அவரொன்றும் பத்ரியின் செல்வச் செழிப்பைப் பார்த்து மிரண்டு விடவில்லை.

ஹாலில் இருந்த சில உறவுக்காரர்களை அறிமுகம் செய்து வைத்தார் பத்ரி. மூவரையும் அமரும்படி கூறினார்.

“ஒக்கார்ரது இருக்கட்டும் பத்ரி! மொதல்ல தங்கச்சி சுசித்ராவப் பாக்கணும்!”

பத்ரியின் மனைவி சுசித்ரா படுக்கையில் எலும்பும் தோலுமாய்ப் படுத்துக் கிடக்க அவரைப் பார்த்ததுமே கண்கள் கசிந்தன கோவர்த்தனுக்கும் விமலாதேவிக்கும்.

பத்ரி மகளுக்கு உடனடியாய்த் திருமணம் நடத்த நினைப்பது ‘சரி’யென்றே பட்டது கோவர்த்தனுக்கு.

ஹாலில் சோஃபாவில் அமர்ந்து சம்பிரதாய வார்த்தைகள் பேசினார்கள்.

பத்ரியின் பார்வை மௌனமாய் அமர்ந்திருந்த ஆதித்யா மேல் படர்ந்தது.

“ஆதித்யா! நா ஒங்கள கடைசியா பாத்தபோது எட்டு வயசு இருக்கும் ஒங்குளுக்கு. இப்ப நல்லா வளந்துட்டீங்க!” என்றார் சிரித்தபடி. ஆதி கடனே என்று லேசாய்ச் சிரித்து வைத்தான்.

தொழில் சம்மந்தமாய் அவனின் விருப்பங்களைப் பற்றி கேட்டார். தன் பெண் மானஸாவைப் பற்றிப் பெருமையாய் பேசினார்.

விமலாதேவியிடம் நலன் விசாரித்து சிலவற்றைப் பேசி விபரங்கள் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

“மானஸாவ கூட்டிட்டு வாங்க கஸ்தூரி!” என்றார் தன் உறவுக்காரப் பெண்ணைப் பார்த்து.

“சரிங்க சித்தப்பா!” என்றபடி மாடியேறிச்சென்ற கஸ்தூரி என்ற அந்தப் பெண் பத்தே நிமிடங்களில் கீழே இறங்கி வர, அந்தப் பெண்ணுக்குப் பின்னால் ஜீன்ஸ் பேன்ட்டும் டீஷர்ட்டுமாய் இறங்கி வந்தாள் மானஸா.

ஆதியைத் தவிர ஹாலில் அமர்ந்திருந்த அனைவரின் பார்வையும் மாடிப்படியை அண்ணாந்து பார்த்தபடியே இருந்தது.

‘இதென்ன! இந்த பொண்ணு ஜீன்ஸ் பேன்ட்டும் டீ-ஷர்ட்டுமா வருது? பொண்ணு பாக்க வராங்க! தழையத் தழைய பொடவ கட்டி தலையப் பின்னி பூ வெச்சுக்கனும்னு இல்லாம! என்று தோன்றியது விமலாதேவிக்கு.

‘என்னதா டாக்டருக்குப் படிச்சிருந்தாலும் மேற்படிப்புக்கு அமெரிக்கா போயிருந்தாலும் பொண்ணு பாக்க வரும்போது இப்பிடியா ட்ரெஸ்ஸப் போட்டுகிட்டு வந்து நிக்கிறது?’ கோவர்த்தனும் கிட்டத்தட்ட அப்படித்தான் நினைத்திருக்க வேண்டும் என்பதை நொடி நேரம் அவர் முகம் மாறி பழைய நிலைக்கு மாறிய விதம் எடுத்துச் சொன்னது.

ஆதி குனிந்தபடி அமர்ந்திருந்தான்.

மானஸா! குறை எதுவும் சொல்ல முடியாத அழகு. முகத்தில் படிப்பின் களை தெரிந்தது. நல்ல உயரம். ‘நிகுநிகு’வென்ற தோற்றம். மருத்துவம் படித்திருப்பதால் அக்கறையோடு உடலை ‘சிக்’கென்று வைத்திருக்கும் பெண். தன்னம்பிக்கை தெரிந்தது தோற்றத்திலும் நின்ற தோரணையிலும்.

“மானஸா! இவர் என் பால்ய நண்பர் மிஸ்டர் கோவர்த்தன்!” என்று கோவர்த்தனைப் பற்றிச் சிலவற்றைப் பெருமையாகச் சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தார் தன் மகளுக்கு.

“வணக்கம் அங்கிள்!” என்றபடி கோவர்த்தனைக் கைகூப்பி வணங்கினாள் மானஸா.

“இவுங்க மிஸஸ் விமலாதேவி கோவர்த்தன்!”

“வணக்கம் ஆன்ட்டி!”

“மானஸா! இவர் மிஸ்டர் ஆதித்யா!” சொல்லிவிட்டு செல்லமாய்ச் சிரித்தார்.

“ஹலோ!” என்றாள் மானஸா. நிமிர்ந்து மானஸாவைப் பார்த்தான் ஆதி.

மானஸா புன்னகைத்தாள். ஆதி முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை; மீண்டும் குனிந்துகொண்டான்.

“ஆதித்யா! மானஸாகிட்ட தனியா எதுவும் பேசணுமா? விருப்பம்னா மாடிக்குப் போய் பேசிட்டு வாங்க!” என்றார் பத்ரி.

“பேச ஒன்னுமில்ல!” என்றான் ஆதி மெதுவான குரலில்.

“எனக்குப் பேசணுமே!” என்றாள் மானஸா.

“ஹோ! ஹோ! ஹோ!” சிரித்தார் பத்ரி.

“பாரேன் கோவி! ஆதித்யா பேச ஒன்னுமில்லனு சொல்றாப்புல! ஆனா எம்பொண்ணு பேசணும்கிறா!” அவர் சொல்லி முடிப்பதற்குள்

“அதானே! பொண்ணுங்க தல குனிஞ்சி வாய மூடி ஊமையா இருந்ததெல்லாம் அந்தக் காலம். இப்பல்லாம்” முழுவதமாய் சொல்லி முடிக்காமல் ஏதோ ஜோக்கடித்ததுபோல் தானும் சிரித்தார் கோவர்த்தன்.

அமைதியாய் அமர்ந்திருந்தார் விமலாதேவி.

“ஆதி! மானஸா ஒங்கிட்ட பேசணுமாம்.போய்ப் பேசிட்டு வா!” என்றார் கோவர்த்தன்.

அனைவருக்கும் எதிரில், வந்த இடத்தில் அப்பாவின் வார்த்தையை மறுப்பது அழகல்ல மரியாதையல்ல
என்று நினைத்தவனாய் எழுந்து நின்றான் ஆதி.

மொட்டை மாடி.

மௌனமாய் நின்றிருந்தான் ஆதி; அவனெதிரில் நின்றிருந்தாள் மானஸா.

இரண்டே நிமிடத்தில் மௌனத்தை உடைத்தாள் மானஸா.

“மிஸ்டர் ஆதித்யா! சேர் கொண்டு வரேன். ஒக்காருறீங்களா?”

“நோ.. வேண்டாம்!”

“என்னை உங்களுக்குப் புடிச்சிருக்கா மிஸ்டர் ஆதித்யா?” என்று எவ்விதத் தயக்கமுமின்றி கேட்ட மானஸாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நின்றான் ஆதி.

“மிஸ்டர் ஆதித்யா நா கேட்ட கேள்விக்கு ஒங்களால பதில் சொல்ல முடியாது. ஏன்னா நீங்க பொண்ணு பாக்குற எண்ணத்தோடு வரல. இந்த கல்யாண ஏற்பாடே ஒங்களுக்குப் புடிக்கில. சரியா?

ஃசோபாவுல தலகுனிஞ்சி சுவாரஸ்யமில்லாம ஒக்காந்திருந்த ஒங்களப் பாத்ததுமே, எனக்கு ஒங்குளுக்கு பொண்ணு பாக்குற நிகழ்ச்சியே புடிக்கிலன்னு புரிஞ்சிது!”

‘சடாரெ’ன நிமிர்ந்து மானஸாவைப் பார்த்தான் ஆதி.

“ஒங்களோட இந்த பார்வையே நா சொன்னது சரின்னு சொல்லுது மிஸ்டர் ஆதித்யா! மிஸ்டர் ஆதித்யா ஒங்களுக்கு மட்டுமில்ல; எனக்கும் இந்த பொண்ணு பாக்குற வைபவம், கல்யாண ஏற்பாடு இதெல்லாம் பிடிக்க!”

‘இவுங்க என்ன சொல்றாங்க? என்ன சொல்றாங்க?’ குபீரென்று சந்தோஷம் அலையடித்தது. மகிழ்ச்சி வாரியடித்தது ஆதியின் மனதில்.

அலையடித்த சந்தோஷம், மனதோடு நிற்காமல் முகத்திலும் கட்டுப்பாடின்றி பரவியது.

சிரித்தாள் மானஸா. “அப்பாடின்னு இருக்குல்ல மிஸ்டர் ஆதித்யா?”

“ஆமாம்!” என்பதுபோல் மானஸாவைப் பார்த்தான் ஆதி.

“மிஸ்டர் ஆதித்யா! நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணணும். செய்வீங்களா?”

“சொல்லுங்க மிஸ்.மானஸா!” என்றான். முதல் முறையாய் மகிழ்ச்சியோடு வெளி வந்தன வார்த்தைகள்.

“நீங்க என்னைப் பிடிச்சிருக்கறதா சொல்லி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்!”

தூக்கிவாரிப் போட்டது ஆதிக்கு. “எ..எ..என்ன சொல்றீங்க?” அதிர்ச்சியோடு கேட்டான்.

“பயந்துட்டீங்களா?” சிரித்தாள் மானஸா.

“மிஸ்டர் ஆதித்யா நாம ஒரு டிராமா போடணும்!”

“டிராமாவா?”

“ஆமா மிஸ்டர் ஆதித்யா! டிராமாதா!”

“நா ஒரு உண்மைய ஒங்ககிட்ட சொல்லப் போறேன். அத கேட்டப்புறம் எனக்கு உதவுறதா வேண்டாமானு முடிவெடுக்குறது உங்க இஷ்டம்!”

“சொல்லுங்க மிஸ் மானஸா!”

“நா மருத்துவ மேல் படிப்புக்காக அமெரிக்காவுக்குப் போய் ரெண்டு வருஷம் ஆகுது. அப்பா அதுபத்தி சொல்லிருப்பாரு! ஒங்குளுக்குத் தெரியும்னு நெனைக்கிறேன்!

அம்மா படுத்த படுக்கையா இருக்குறதால அம்மாவ பாக்க வந்தேன்.. அம்மா தான் படுத்த படுக்கையா இருக்குறதால எனக்குக் கல்யாணம் பண்ணிப் பாக்கணும்னு ஆசப்படுறாங்க..

அதுனால எனக்கு சீக்கிரமே கல்யாணத்தப் பண்ணிடனும்னு அப்பா அவசரப்படுறாரு. தன்னோட ஃப்ரண்டான ஒங்கப்பா என்ன மருமகளா ஆக்கிக்க மறுக்க மாட்டாருன்னு செய்த முயற்சிதா இந்த பொண்ணு பாக்குற நிகழ்வு.

நிச்சயமா நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ண முடிவெடுத்துடுவாங்க. ஒங்க வீட்டுல இந்த கல்யாணத்துக்கு ஒங்கள நிர்ப்பந்தம் செஞ்சிருப்பாங்களே!”

“ஆமா!”

“எனக்கும் அப்பிடித்தான். ஆனா நிச்சயமா நா கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன். அப்பிடி நா சம்மதிக்கலன்னா நா மறுபடியும் அமெரிக்கா போகவிட மாட்டாரு எங்கப்பா. நீங்க சம்மதிக்கிலன்னா ஒங்க அப்பா அம்மா ஒத்துக்கு வாங்களா மிஸ்டர் ஆதித்யா?”

“உண்மையச் சொல்லனும்னா நா ஒரு பொண்ண விரும்புறேன். அந்தப் பொண்ணு பேரு நிமிஷா.

அவுங்க பணக்காரப் பொண்ணில்ல! அவுங்க குடும்பத்துல சில ப்ரர்ச்சனைங்க இருக்கு.

அது என்னப் பெத்தவங்களுக்குப் பெரிசா தெரியுது. அதுனால அவுங்களுக்குப் புடிக்கில.

அதுங் காரணமா அந்தப் பொண்ண ஏத்துக்க மாட்டேங்கறாங்க. நா ஒங்குள மறுத்தா அப்பாவும் அம்மாவும் சாவேங்கிறாங்க!” என்றான் ஆதி.

“இதா.. இதா.. நம்மள பணிய வைக்க அவுங்க எடுக்குற கடைசி ஆயுதம். நீங்க ரொம்ப உண்மையா இருக்கீங்க மிஸ்டர் ஆதித்யா! எல்லாத்தையும் வெளிப்படையா சொல்றீங்க!

நானும் அப்பிடி இருக்ணும்ல. நா அமெரிக்காவுல ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டேன் மிஸ்டர் ஆதித்யா!”

அதிர்ச்சியாய் மானஸாவைப் பார்த்தான் ஆதி.

“ஆமா மிஸ்டர் ஆதித்யா! என் கணவர் ஜேம்ஸ் வில்லியம் ஒரு ஷாப்பிங் மால்ல மேனேஜரா இருக்காரு. பெரும் பணக்காரர்லாம் இல்ல. நாங்க சந்தோஷமாதான் வாழுறோம்.

இது என் அப்பாக்குத் தெரியாது.தெரிஞ்சா படுத்த படுக்கையா இருக்கும் என்னோட அம்மாவ வந்து பாக்க அனுமதிக்க மாட்டாரு!

அப்புறம் அம்மாவ பாக்க முடியாமயே போய்டும். இன்னும் ஆறு நாள்தான் இங்க இருப்பேன். வர்ர இருபதாம் தேதி நம்ம நிச்சயதார்த்தத்த நடத்திடனும்னு எங்கப்பா சொல்லிக்கிட்டிருந்தாரு!

ஆனா நா பத்தொம்பதாம் தேதி நைட் அமெரிக்காவுக்கு ஃப்ளைட் ஏறிடுவேன். அது வரைக்கும் நா அம்மாவோட இருக்கணும்னு ஆசப்படுறேன்.

நா இந்தக் கல்யாணம் வேண்டாம்னு மறுத்தா எங்கப்பா நீ படிச்ச வரைக்கும் போதும்; இந்தியாவுலயே இருன்னு கண்டிப்பா சொல்லிடுவாரு!

நா படிக்ககிறதுக்கு அமெரிக்கா போகாட்டியும் பரவால்ல. இப்ப நா ஜேம்ஸோட மனைவி. கல்யாணம் ஆகிட்ட நான் கணவர விட்டுட்டு இந்தியாவுல எப்பிடி இருக்குறது?

அம்மாவுக்காகதான் நான் வந்தேன்; பாத்துட்டேன்; திரும்பி அமெரிக்கா போறேன்.

அப்பாவுக்கு மட்டும் எனக்குக் கல்யாணம் ஆனது தெரிஞ்சா அப்புறம் இந்த வீட்டுல எனக்கு இடம் இருக்காது. அம்மாவோட இருக்க முடியாத போயிடும்.

அதா ஒரு வாரமாவது அம்மாவோட இருக்கலாம்னுதா வந்தேன். எப்பிடியும் அப்பாக்கு என் காதல் திருமணம் பற்றித் தெரியாம போகாது. தெரிஞ்ச பிறகு இந்தியாவுல எனக்கு வேலையே இல்ல!”

“ஏன் அப்பாவுக்கு தெரிஞ்சு அவரோட சம்மதத்தோட கல்யாணம் பண்ணிருக்கலாமே!” என்றான் ஆதி.

சிரித்தாள் மானஸா.

“வேற்று மதம்; இந்தியன் கூட இல்ல; ஒரு அமெரிக்கன கல்யாணம் பண்ண அப்பா நிச்சயம் சம்மதிக்க மாட்டாரு!

எனக்கு என் காதலும் என் ஜேம்ஸும்தான் முக்கியம். பாசத்த காட்டி, எமோஷனலா பேசி, செத்துடுவேன்னு பயமுறுத்தி, என் வாழ்க்கைய நரகமாக்க பெத்தவங்களே ஆனாலும் நா அனுமதிக்க மாட்டேன்.

என் வாழ்க்கைய நான் வாழணும். யாருக்காகவும் அத இழக்கவோ விட்டுக் குடுக்கவோ மாட்டேன்!”

மானஸாவின் ஒவ்வொரு வார்த்தையும் ஆதியை புரட்டிப் போட்டது. எப்படி ஓர் உறுதி, தீர்மானம், தைரியம்!
மானஸாவைப் பார்த்து அசந்து போனான் ஆதி;தன்னை நினைத்து வெட்கப்பட்டான்.

“மிஸ்டர் ஆதி! இன்னிக்கி ஞாயித்துக்கிழம ஒருநாள் போயிடுத்து. மீதி ஆறு நாள் நா என் அம்மாவோட இருக்கணும்னா நம்ம நிச்சயதார்த்தம் நடக்க நாம ஓகே சொல்ணும். அதுக்கு ஒங்க உதவி வேணும்.

என்னைப் பிடிச்சிருக்கிறதா நீங்க சொல்லணும். ஆனா நிச்சயதார்த்தம் நடக்காது. அதுக்கு முதல்நாள் ராத்திரி நா அமெரிக்காவுக்கு ஃப்ளைட் ஏறிடுவேன்.

இந்தியாவுக்கு குட்பை சொல்ல வேண்டிய நிலை கொடுமைதான்னாலும் மகிழ்ச்சியான வாழ்க்கையை என் ஜேம்ஸ்ஸோட நான் வாழ்வேனே! அது போதும் எனக்கு

நா நிச்சயதார்த்தத்துக்கு முன்னாடி வீட்ட விட்டுப் போறதால என்னைத்தான் எல்லோரும் ஏசுவாங்க; பேசுவாங்க. ஒங்குளுக்கு எந்தப் பிரர்ச்சனையும் வராது. ஆனா அம்மாவ கடைசியா பாத்த நிம்மதி எனக்குக் கிடைக்குமே அதுபோதும்!”

பேச்சற்று மானஸாவைப் பார்த்தபடி நின்றிருந்தான் ஆதி.

“மிஸ்டர் ஆதி!”

“ஹ்ம்!” இயல்புக்கு வந்தான்.

“நீங்க ஹெல்ப் பண்ணுவீங்களா ஆதி? ஒங்குளுக்கு எதாவது ப்ரர்ச்சன வரும் போல தோணிச்சினா நா எல்லார் முன்னாடியும் உண்மையச் சொல்லி அதால வரும் ப்ரர்ச்சனைய ஃபேஸ் பண்ணுவேன். நிச்சயமா நிச்சயதார்த்தமோ கல்யாணமோ நடக்காது! இது உறுதி!”.தீர்மானமாய்ச் சொன்னாள் மானஸா.

தைரியமாய்ச் சம்மதம் சொன்னான் ஆதி.’ இப்போது எது வந்தாலும் தூசிபோல் தட்டிவிட்டு நிமிஷாவைத் திருமணம் செய்வது!’ என்று முடிவெடுத்தான். மனம் லேசாகிப் போனது.

‘இன்னிக்கி ஞாயிற்றுக் கிழமை! தேதி பதிமூணு. இன்னும் இருபதாம் தேதிக்கு ஏழே நாள்தான் இருக்கு. பத்தம்போதாம் தேதியே இவுங்க ஃப்ளைட் ஏறிடுவாங்க.

அப்ப ஆறே நாள்தா பாக்கி! வெறும் ஆறுநாள்தா! திருமணத்துக்கு சம்மதிக்கிறா மாரி நடிச்சிட்டுப் போய்டுவோம்!’ என முடிவெடுத்தான் ஆதி.

அந்த ஆறு நாட்களுக்குள் என்னவெல்லாம் நடந்து முடியப் போகிறது என்று அறியாதவனாய்.

“ஒத்துழைப்பு தர்ரதா ஒத்துகிட்டதுக்கு நன்றி மிஸ்டர் ஆதித்யா! நம்ம டிராமா ஸ்டார்ட்ஸ் நௌ!” என்றாள் மானஸா.

முகத்தில் பொய்யான சந்தோஷத்தைத் தேக்கி மாடிப்படிகளில் இறங்கி வந்தார்கள் மானஸாவும் ஆதியும்.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

Comments

“தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 27” மீது ஒரு மறுமொழி

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.