தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 28

சிரித்த முகத்தோடு மாடிப்படிகளில் இறங்கி வரும் ஆதியையும் மானஸாவையும் பார்த்த ஹாலில் இருந்த அனைவருக்கும் தாங்க முடியாத சந்தோஷம்.

கோவர்த்தனால் சந்தோஷத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

‘ஆதி மொகத்துலதான் எத்தன சந்தோஷம். இங்க பொண்ணு பாக்க வர்ர வரைக்கும் வீட்டுல எப்பிடி இருந்தான்? ஏ இங்க வந்தும் சோஃபாவுல சோகமாதானே ஒக்காந்திருந்தான்.

எப்பிடி இவ்வளவு சந்தோஷம் மொகத்துல? அப்பாடி வயத்துல பால வாத்தாப்லனுவாங்களே அதுமாரில்ல இருக்கு!’

விமலாதேவியும் கிட்டத்தட்ட கணவரின் மனநிலையில் தான் இருந்தார்.

பத்ரி சந்தோஷமிகுதியில் நண்பர் கோவர்த்தனின் கைகளைப் பிடித்துக் குலுக்கினார்.

மானஸாவும் ஆதியும் ஹாலில் வந்து நின்றார்கள்.

“என்ன ரெண்டு பேரும் பேசியாச்சா?” என்று பத்ரி கேட்க மானஸா வெட்கப்பட்டாள். ஆதி நாணிக் கோணினான்.

இருவருமே பேசி வைத்தபடி நடிக்க ஆரம்பித்தார்கள்.

பத்தே நிமிடத்தில் ஐயருக்கு ஃபோன்பண்ணி நிச்சயதார்த்த நாள் இருபதாம் தேதியென முடிவு செய்யப்பட்டது.

நடுவில் இன்னும் ஆறு நாட்களே இருப்பதால் ஏற்பாடுகளை தீவிரமாகச் செய்ய வேண்டுமென கோவர்த்தனும் பத்ரியும் பேசிக் கொண்டார்கள்.

ஸ்வீட்டும் காரமும் காபியுமாய் பெண் பார்க்கும் படலம் கலகலப்பாய் முடிந்தது.

ஆதியும் மானஸாவும் ஃபோன் நம்பரை அனைவருக்கும் நேராய் கொடுத்துக் கொண்டு கிண்டலுக்கு ஆளாகி வெட்கப்பட்டார்கள்.நடிப்பில் போட்டி போட்டார்கள்.

சந்தோஷமும் சப்தமுமாய் விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறினார்கள் கோவர்த்தன் குடும்பத்தினர்.

மானஸாவுக்கும் கையாட்டி விடைபெற்றான் ஆதி. அவளும் சிரித்தாள். அவனும் சிரித்தான். அவர்களின் நடிப்பை நிஜமென நம்பி அனைவரும் சிரித்தார்கள்.

காரில் ஏறியவன் வெகு இயல்பாய் இருந்தான். மகிழ்ச்சியாய் இருப்பதுபோல் காட்டிக் கொண்டான்.

ஆனால் மனதுக்குள் நிஜத்தில் நிமிஷா பற்றிய நினைப்பில் மகிழ்ச்சி பொங்கிப் பொங்கி வழிந்தது.

‘நிமிஷா! நிமிஷா! நம்மளப் பிரிக்க வந்த பிரச்சன தீந்து போச்சு நிமிஷா. இனிமே பாரேன்! எந்தப் பிரர்ச்சன வந்தாலும் எதிர்த்து நிப்பேன் நிமிஷா!

என்னப் பெத்தவங்க ஒன்னக் கல்யாணம் பண்ண சம்மதிக்காட்டி, அதப்பத்தி நா இனிமே கவலப்பட மாட்டேன் நிமிஷா! எதித்து நிப்பேன். இந்த விஷயத்துல மிஸ் மானஸாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்!’

ஒங்கிட்ட நெறையா விஷயம் பேசணும் நிமிஷா! எங்கிட்டேந்து ஃபோன் வல்லேன்னு நீ தவிச்சுக்கிட்ருப்பனு தெரியும்.

நா ஃபோன ஸ்விட்ச்சாஃப் பண்ணி வேற வெச்சிருந்தேன். நாப்பத்திரெண்டு தடவ நீங்க கால் பண்ணிருக்க பாத்தேன். மன்னிச்சுடு நிமிஷா!

என் நெலம அப்பிடியிருந்துது. இப்ப நா ஃப்ரீ யாயிட்டேன். இனிமே அப்பிடி நடக்காது. வீட்டுக்கு வந்ததும் மொதல் வேல ஒனக்கு ஃபோன் பண்ணுற வேலதான் நிமிஷா!

நிமிஷா! நிமிஷா! நிமிஷாவைத் தவிர வேறு சிந்தனையற்று காரில் அமர்ந்திருந்தவன் கார் வீட்டு வாசலில் வந்து நின்றதையும் அறியாது கீழே இறங்காமல் காருக்குள்ளேயே அமர்ந்திருந்தான்.

ஃபோன் அழைத்தது.

“மானஸா!

“ம்!”

“வீட்டுக்கு ஜஸ்ட் நௌ ரீச்சானோம். தேங்யூ மானஸா!” என்றான்.

வேண்டுமென்றே மானஸாவின் பெயரை உச்சரித்தான்.

கோவர்த்தனும் விமலாதேவியும் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டார்கள்.

வழக்கம் போல் ‘கிடுகிடு’வென மாடிப்படி ஏறினான். அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டான்.

‘தொப்’பென படுக்கையில் அமர்ந்து ஃபோனில் வெகு சந்தோஷமும் அவசரமுமாய் நிமிஷாவின் நம்பர் மீது ஆசையோடு விரல் வைத்து அழுத்தினான்.

மனம் பரபரத்தது. “ஸ்விச்ஆஃப்!” என்று பதிவுசெய்யப்பட்ட குரல் கேட்டது. நிமிடத்திற்கு இரண்டாய் பத்து நிமிடத்திற்கு இருபதுமுறை நிமிஷாவை அழைத்தான்.

பதிவுக்குரல் அதே பதிலை சளைக்காமல் சொன்னது. துவண்டு போனான் ஆதி.

அம்மா அழைக்கக் கீழே போனான்.அப்பாவும் அம்மாவும் மானஸா பற்றி பேசினார்கள்.

மானஸா ஆதியிடம் என்ன பேசினாள் என்று நாசூக்காய் கேட்டார்கள். ஆதியும் சிலவற்றை கற்பனை செய்து இட்டுக் கட்டிச் சொல்லி வெட்கப்படுவதுபோல் தடுமாறி தடுமாறி சொல்லி நடித்தான்.

‘அதெப்பிடி ஒரு பெண்ணைக் காதலித்தவன், அவளைத்தான் மணப்பேன் எனப் பிடிவாதம் பிடித்தவன், சட்டென மனம் மாறி வலுக்கட்டாயமாய்ப் பெண் பார்க்க அழைத்துப் போய், காண்பித்த பெண்ணை மணக்கச் சம்மதிப்பான் காதலித்த பெண்ணை மறந்து விட்டு என எப்படித்தான் கோவர்த்தனுக்கும் விமலாதேவிக்கும் சந்தேகம் ஏற்படாமல் போயிற்றோ?’

‘ஒருவேளை தூக்க மாத்திரை சாப்பிட்டு சாவோம்!’ என்றதால் மகன் மனம் மாறிவிட்டதாய் நினைத்திருப்பார்களோ?’ சிலவற்றிற்குக் காரணம் புரிவதில்லை.

அடுத்த அரைமணி நேரத்தில் நெருங்கிய உறவுகளுக்கு ஆதியின் திருமண நிச்சயதார்த்த விபரம் சொல்லப்பட, பல உறவினர்களும் நாளை நேரில் வருவதாகச் சொல்லி அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சொன்னார்கள்.

நிச்சயாதார்த்தம் வரை அலுவலகம் செல்ல வேண்டாமென ஆதியிடம் சொன்னார் கோவர்த்தன்.

‘எங்கே ஆதி அலுவலகம் செல்ல, அங்கே நிமிஷாவைப் பார்க்க மறுபடியும் வேதாளம் முருங்கைமரம் ஏறிவிட்டால், என்ன செய்வது?’ என்ற பயத்தில் ஆதி அலுவலகம் செல்வதைத் தடுத்தார்.

என்ன செய்வதென்று புரியாமல் தவித்தான் ஆதி.

இரவு ஒன்பது மணி தொடங்கி பனிரெண்டு மணி வரை நிமிஷாவுக்குக் கால்செய்து கால்செய்து தோற்றுப் போனான்.

மறுநாள் காலை எட்டு மணிக்கும் இதே நிலைதான் நீடித்தது.

அலுவலகம்.

மணி பத்து ஐம்பது.

ஆதி வரவில்லை.

கணிணி முன் அமர்ந்து கொண்டு கணியின் திரையைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் கண்ணீர் திரையிட்டிருந்தால் திரையிலிருக்கும் விபரங்கள் சரியாகத் தெரியவில்லை.

கண்களின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் நிமிஷா. சனிக்கிழமை மட்டும் நாற்பத்திரெண்டு தடவை ஆதிக்கு கால் செய்தும் ஆதி எடுக்கவில்லை.

நேற்று ஞாயிறும் மாலை வரை ஆதியிடமிருந்து ஃபோன் இல்லை.

வெறுத்துப்போய் தன் ஃபோனை அப்போது ஸ்விட்ஆஃப் செய்தவள்தான் இதுவரை ஃபோனை ஆன் செய்யவே இல்லை.

அதனால் மானஸா வீட்டுக்குச் சென்று விட்டுத் திரும்பிய அடுத்த நொடி ஆதி தனக்குச் செய்த இருபது கால்களையும் பார்க்கவில்லை. விதியின் விளையாட்டை யார் தடுக்க முடியும்?

மணி பதினொன்று. அறையை விட்டு வெளியே வந்தார் மேனேஜர்.

“ஹலோ எவ்வரிபடி!” என்றார் கொஞ்சம் சப்தமாக.

குனிந்து ஃபைல் பார்த்துக் கொண்டிருந்த பணியாளர்கள் அனைவரும் நிமிஷா உட்பட நிமிர்ந்து குரல் வந்த திசையைப் பார்த்தனர்.

மேனேஜர் “டியர் ஸ்டாஃப்ஸ்! ஒங்குளுக்கெல்லாம் ஒரு குட் ந்யூஸ்!” என ஆரம்பித்தார்..

“நம்ம எம்.டி. மிஸ்டர் ஆதித்யாவுக்கு வர்ற இருபதாம் தேதி திருமண நிச்சயதார்த்தம். நம்ம எம்.டி. ஒரு மருத்துவர மணக்க இருக்கிறார்.

அவரின் வருங்கால மனைவி பெயர் மிஸ் மானஸா. அவுங்க அப்பாவும் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர்.

இப்பதா நம்ம பெரிய எம்.டி.கோவர்த்தன் சார் செய்திய சொல்லி உங்க எல்லாருக்கும் தெரிவிக்கச் சொன்னார்!” என்று சொல்லி முடிக்கவும் நிமிஷாவைத் தவிர அனைவரும் கைதட்டினர்.

அதிர்ந்து போனாள் நிமிஷா.

அடிவயிற்றிலிருந்து ஏதோ ஒன்று பந்து போல் கிளம்பி நெஞ்சை அடைத்தது. இதயம் சில்லுசில்லாய் நொறுங்கிப் போனது போல் தோன்றியது.

‘ஐயோ! இல்ல! இல்ல! இது பொய்! இது பொய்!’ என்று கத்த வேண்டும் போல் இருந்தது. அழுகை வெடித்து வரும்போல் இருந்தது.

ஆதியின் திருமண நிச்சயதார்த்தம் வரும் இருபதாம் தேதி நடக்கவிருப்பதாய் மேனேஜர் சொன்ன நொடி ப்ரியம்வதா சட்டென நிமிஷாவைத் திரும்பிப் பார்த்தாள்.

நிமிஷா இடது கையால் டேபிளை இறுகப் பற்றிக் கொள்வதையும் கண்களை மூடி பெருகும் கண்ணீரை வெளியே வராமல் தடுப்பதையும் பார்த்தாள்.

‘ம்.. ம்.. அழு! அழு! அளவுக்கு மேல ஆசப்பட்டீல்ல! பணக்கார பசங்க நெறைய பேர் நல்லவங்கதான்.

ஆனாலும் சில பணக்கார பசங்க பொண்ணுங்கள காதல் வலேல வீழ்த்தி காரியம் முடிஞ்சதும் இப்பிடித்தான் கை கழுவிடுவானுக.

பொண்ணுங்கள்னா அவுனுகளுக்கு யூஸ் அண்ட் த்ரோ கப்புங்க. நீ என்ன கப்போ தெரியலியே!

ஆதித்யாவும் அந்த சிலபேர் க்ரூப்புல ஒருத்தன்தா போல! சினிமா தியேட்டர்ல, ஒங்கிட்ட அப்பிடி சிரிச்சு சிரிச்சு பேசினான்.

இப்ப ஒன்ன அம்போன்னு விட்டுட்டு பணக்கார வீட்டு பொண்ண அதுவும் டாக்டருக்குப் படிச்ச பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கப் போறாப்ல! ஒங்கதி அவ்ளவுதானா?’ நிமிஷாவின் நிலைமை ப்ரியம்வதாவை சந்தோஷப்பட வைத்தது.

இடத்தைவிட்டு எழுந்து நிமிஷாவை நோக்கி வந்தாள்.

“நிமிஷா! பாத்திங்களா? நம்ம எம்.டி. ஆதித்யாவுக்கு கல்யாண நிச்சயதார்த்தமாம். வர்ர இருபதாம் தேதியாம். நமக்கு அழைப்பு வரும். நாமல்லாம் போகணுமில்ல!

இருபதாம் தேதி ஞாயித்துக் கெழமதான். எந்த மண்டபத்துல நடக்குமோ? நீங்க நேரா வீட்டுலேந்து வந்துடுவீங்கள்ள!” வேண்டுமென்றே நிமிஷாவின் வாயைக் கிண்டினாள்.

நிமிஷாவால் என்ன முயன்றும் இயல்பாய் இருக்க முடியவில்லை.

“ப்ரியா காலேலேந்து கொஞ்சம் தலைவலியா இருக்கு அப்புறம்னா பேசலாமே!” என்றாள் நிமிஷா.

குரல் உடைந்து அழுகை நெஞ்சை அடைத்தது. ‘ம்கூம் ப்ரியாவுக்கு நேராய் அழக்கூடாதெ’ன்று மிகவும் சிரமப்பட்டு தன்னைக் கன்ட்ரோல் செய்தாள் நிமிஷா.

“நிமிஷா மேடம்! ஒங்கள மேனேஜர் கூப்புடறாரு!” ப்யூன் பாண்டி வந்து சொல்லவும் ப்ரியாவுக்கு பதிலேதும் சொல்லாமல் மேனேஜர் அறை நோக்கி நடந்தாள். நடக்கவும் தெம்பில்லை நிமிஷாவிடம்.

“சார் வரச் சொன்னீங்களாம்!”

ஏதோ ஃபைல் ஒன்றைப் பிரித்துக் காட்டி அது பற்றிய விபரம் கேட்டார் மேனேஜர்.

எப்போதும் எந்த ஃபைல் பற்றி விபரம் கேட்டாலும் தடுமாறாமல் சரியாக விபரம் சொல்பவள் தடுமாறினாள்.

“என்ன நிமிஷா ஒடம்பு சரியில்லயா ஒருமாதிரி இருக்கீங்க?”

“ஆமா சார். நேத்துலேந்து ஒடம்பு சரியில்ல!”

“அப்ப அரைநாள் லீவு போட்டுட்டு கிளம்ப வேண்டியதுதானே?”

கிளம்பினாள் நிமிஷா.

மதியம் மணி இரண்டு.

அந்த இரண்டு மணி மின்சார ரயிலின் நிமிஷா அமர்ந்திருந்த பெட்டியில் எண்ணி மூன்றே பேர் மட்டுமே அமர்ந்திருந்தார்கள்.

ஜன்னலோர இருக்கையில் சீட்டின் பின்புறம் கண்களை மூடித் தலை சாய்த்து அமர்ந்திருந்த நிமிஷாவின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருந்தது.

‘நம்ப முடியல ஆதி! நீங்க இப்பிடி துரோகம் செய்வீங்கன்னு! எப்பிடியெல்லாம் பேசினீங்க? எவ்வளவு ப்ராமிஸ் பண்ணீங்க? நிமிஷா நிமிஷான்னு நிமிஷத்துக்குப் பத்து தடவ கூப்டுவீங்க!

நிமிஷா ஐ லவ் யூ! வித் ஆல் மை ஹார்ட் நிமிஷானு! உருகி உருகி சொல்வீங்க.

பீச்சுல ஒக்காந்திருந்தப்ப என் கைய ஒங்க கைக்குள்ள வெச்சுகிட்டு என்ன சொன்னீங்க ஆதி ‘நிமிஷா இதோ ஒங்ககைய தொடுற எங்கையி வேற எந்தப் பொண்ணு கையயும் தொடாது. இது ப்ராமிஸ்னு சொன்னீங்களே!

அந்த ஒங்க வார்த்தையையும் ப்ராமிஸையும் எப்பிடி மறந்தீங்க ஆதி.

நீங்களும் ஆச காட்டி மோசம் செய்யிற ஆண்கள்ள ஒருத்தன் தான்னு நிரூபிச்சிட்டீங்கள்ள!’ கண்களிலிருந்து வழியும் கண்ணீரை கர்ச்சீஃபால் துடைத்தாள்.

கண்ணுல வழியிற கண்ணீரைக் கைக்குட்டயால தொடைச்சி அழிச்சிடலாம். மனசுலேந்து ஒங்க நினைப்ப எப்பிடி ஆதி அழிப்பேன்?’ வெடித்து வரத் துடிக்கும் விம்மலை கட்டுப்படுத்திக் கொண்டு மனதை ஆறுதல் படுத்த ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள் நிமிஷா.

பெட்டிக்குள் அமர்ந்திருந்த பயணிகளில் யாரோ செல் ஃபோனில் பதிவு செய்து வைத்திருந்த பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்க அதிலிருந்து ஒலித்த அமரன் படத்திலிருந்து

“ஹே..மின்னலே..

ஹே.. மின்னலே..

கண்ணிலே.. நெஞ்சிலே..

சொல்லொணா கன்னலே..

ஹே..மின்னலே..”

பாட்டு வந்து கடல் நீரில் கால் தடுமாறி ஆதி மீது விழுந்ததை நினைவில் கொண்டு வந்து நிமிஷாவை மனதுக்குள் கதற வைத்தது.

‘ஆதி!’ என்றது மனது.

‘நிமிஷா! இனிமே ஆதிய நீ நெனைக்கக் கூடாது! மறக்கணும்! அவன் ஒன்ன விட்டு வெகுதூரம் போயாச்சு..
இனிமே சந்திக்கவே முடியாத தூரமெ’ன்றது மனது.

“நீண்டதூரம் போனபோதும்

நீங்குமோ காதலே..”

அடுத்த பாட்டின் வரிகள் நிமிஷாவை மீண்டும் அழ வைத்தது.

‘ஆதி நீங்க என்னவிட்டு எவ்வளவு தூரம் போனாலும் ஒங்கமீது நா வெச்சுருக்குற காதல் நீங்காது ஆதி. ஆனா ஒங்குளுக்கு?

நெஜமா நீங்க என்ன விரும்பியிருந்தா நீங்கியிருக்காது. நீங்க என்ன காதலிக்கிறதா நடிச்சி ஏமாத்தியிருக்கீங்க!

அதா ரொம்ப ஈஸியா வேறொரு பொண்ண மணக்க சம்மதிச்சிருக்கீங்க!’ ரணமாகிப் போயிருந்த மனம் வலித்தது நிமிஷாவுக்கு.

என்ன தோன்றியதோ ஹேண்ட் பேக்கிலிருந்து செல் ஃபோனை எடுத்து ஆன் செய்த நிமிஷாவின் கண்களில் ஆதி முப்பது முறை கால் செய்திருந்தது பட்டது. கண்களில் கண்ணீர் திரையிட்டது.

‘ப்ச்! தனக்கு இருபதாம் தேதி கல்யாண நிச்சயதார்த்த மென்று சொல்லித் தன் சந்தோஷத்தைத் தெரிவிக்க ஆதி முப்பது முறை கால் பண்ணிருக்காரு!’ என்று நினைத்த நிமிஷாவுக்குத் துக்கம் நெஞ்சை அடைத்தது.

மறுபடியும் செல்லை ஸ்விட்சாஃப் செய்தாள்.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

Comments

“தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 28” மீது ஒரு மறுமொழி

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.